தங்க மீன்கள் - இருண்ட சூழலில் நம்பிக்கையின் கிரணங்கள்.

மூச்சுத் திணறடிக்கும் மசாலா சினிமாவின் கறுத்த மன சாட்சிக்கு எதிராக இயக்குனர் ராமின் அழுத்தமான காலடிகள்.

தங்க மீன்களின் கதை ஓட்டமானது தனித்த ஒற்றையடிப் பாதையில் பயணிக்காமல் சமூகத்தின் பல இருண்ட வெளிகளை சரியாக குறி வைத்து நகர்ந்துள்ளது.

அன்பும் அரவணைப்பும் சினேகமும் ஆசையும் எதிர்பார்ப்பும் கற்பனையும் நிறைந்த எல்லையற்ற வெளியானது மண்ணில் பிறந்த செல்லம்மா என்ற மானுடப் பிஞ்சிற்கு மறுக்கப்படுகின்றது.

குழந்தையான செல்லம்மாவை சுற்றிலும் பணத்தை மட்டுமே மதிப்பீடாக கொண்ட சமூகமானது குதறிப்பிடுங்கும் வேட்டை நாயாக வளைய வருகின்றது.

செல்லம்மா படிக்கும் பணம் பிடுங்கி பள்ளிக் கூடம், மட்டம் தட்டும் அதன் ஆசிரியர்கள், முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் கற்பிக்கும் முறை, கிண்டல் செய்யும் சக மாணவியர்கள், பணத்தின் வழியாக மட்டுமே பாசம் காட்டத் தெரிந்த செல்லம்மாவின் தாத்தாவும் பாட்டியுமாக அனைவரும் வேட்டை நாய்களாக காட்சி தருகின்றனர்.

இங்கு செல்லம்மாவின் தாத்தாவையும் பாட்டியையும் வேட்டை நாய்கள் என குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் தங்கள் மகன் கல்யாணியை (செல்லம்மாவின் அப்பா) பணம் சம்பாதிக்க வக்கற்றவன் என குத்திக் காட்டியே வீட்டை விட்டு துரத்தியடிக்கின்றனர்.

தங்க மீனை பார்க்க குளக்கரைக்கு போகும் செல்லம்மாவை தலையில் முரட்டுத்தனமாக குட்டி அழைத்து வரும் தாத்தாவாக நடிக்கும் [பூ ராம்] ஒரு நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பதாக காட்சிகள் வருகின்றன. அவற்றைக் காணும்போது பண வெறி கல்வியோடு சேர்ந்த விருதும் எதையோ தின்னும் என்பது போல இருந்தது.

மொழி தெரியாத தொலை தூரத்தில் அன்பின் அடைக்கலமான தந்தை வீசப்படுகின்றான். தந்தை கல்யாணியயின் பாரத்தையும் சேர்ந்து சுமக்கின்றாள் செல்லம்மாளின் தாய் (வடிவு).

மூங்கில் தட்டி மீது எறியப்பட்ட பாறாங்கல் சரிவது போன்று அந்த பொறுப்பின் கனத்தை தாங்கவியலாமல் செல்லம்மாவின் மீது உடைந்து பாய்கின்றாள் வடிவு. பூட்டிய அறைகளுக்குள் தாயின் அடி பொறுக்க இயலாமல் செல்லம்மா கதறித் தவிக்கும் இடத்தில் இமைகளாலாயே கண்கள் குருடாக்கப்படுகின்றன.

தங்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றை பறித்தெடுக்க முயலும் வளர்ந்த மனிதர்களின் போராட்ட உத்திகள் எதுவும் குழந்தை செல்லம்மாவிற்கு தெரிந்திருக்க எந்த நியாயமுமில்லை. அப்படிப்பட்ட செல்லம்மா நீர்த் திரளில் உலாவும் மீன்களின் களங்கமற்ற தங்கமயமான உலகில் தனக்குரிய அந்த எல்லையற்ற வெளியை நாடுகின்றாள்.

மெல்லிய மனித உணர்வுகள் பூத்து குலுங்க வேண்டிய இடம்தான் குடும்பமும் கல்விக்கூடமும். அங்கும் கூட பணம் என்ற மதிப்பீட்டு முறையினால் மனித உறவுகளானது எரிமலைக் குழம்பிற்குள் சிக்கிய மலரிதழ் போல வெந்து நீறுகின்றது.

ஊடக விளம்பரங்களினால் ஊதி ஊதி பரவலாக்கப்படும் நுகர்வுத் தீயின் பொறியானது சமூகம் புழங்கும் வெளி எங்கும் பறக்கின்றது. காண்பதை வாங்கி விட வேண்டும். வாங்குவதற்கு பணம் வேண்டும். அந்த பணத்தை எதை தொலைத்தாவது பெற வேண்டும் என்ற மன நிலையானது சமூகத்தின் மன ஆழத்தில் கனிந்து வெடிக்கின்றது .இந்த நச்சுக் கனியை தின்று துப்பப்படும் விதைகளானது பணம் பறிக்கும் பள்ளிக்கூடங்கள் வழியாக மீண்டும் மீண்டும் முளைத்து கிளைத்துக் கொண்டே இருக்கின்றது.

இந்த முடிவற்ற நச்சு வளையத்தை கிரமமாக திரை மொழியாக்கியுள்ளார் இயக்குனர் ராம்.

இன்று நாம் காணும் நிலை குலைந்த சமூக மன சாட்சியை அனைவரும் குறை கூறுகின்றோம்.ஆனால் அந்த சமூக மன சாட்சியானது குமிழ் விட்டு பிரவாகித்து பாயும் மூலப் புள்ளியை யாரும் கைவைக்க துணிவதில்லை.

ஆனால் இயக்குனர் ராம் அதை துணிந்து செய்துள்ளார். சமூகத்தின் மன சாட்சி அழுகத்தொடங்கும் மூலப்புள்ளியாக வீட்டையும், பள்ளிக்கூடத்தையும் அடையாளங்காட்டுகின்றார்.

.TOTTO CHAN – The little Girl At The Window by Tetsuko Kuroyanagi என்ற நூலானது “படிப்பினை தரும் பாட சாலை “என தமிழாக்கம் செய்யப்பட்டு வெளி வந்துள்ளது. அந்த நூலானது ஜப்பானில் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கை மாற்றுக் கல்வியை பற்றி உரையாடுகின்றது .

அந்த இயற்கை பாட சாலையின் வகுப்பறை என்பதே கைவிடப்பட்ட பேருந்துதான். அதில் பயிலும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தும் பாடத்திட்டங்களும், விளாசித்தள்ளும் பிரம்புகளும் இல்லை. மரம்,செடி,கொடி வண்ணத்துப் பூச்சி, குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியரின் உணவுப் பரிமாறல், கதைகள் வாயிலாக கற்பித்தல் நடக்கின்றது.

நமது நாட்டில் பணத்தையும் மதிப்பெண்ணையும் மனப்பாடத்தையும் அடிப்படையாக கொண்ட பிராய்லர் கோழி கல்வி முறையின் மூலம் மாணவர்களிடையே இடைவிடாத போட்டியை உண்டாக்கும் ஆசிரியர்கள்.

இந்த குருட்டு ஓட்டத்தில் இடறி விழும் குழந்தைகளிடையே துளிர் விடும் மன நெருக்கடி, ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மை,விரக்தி போன்றவை அவர்களின் குழந்தை தன்மையை கொலை செய்து விடுகின்றன.

இப்படி மனதளவில் கொலை செய்யப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்தான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சென்னை ஜார்ஜ் டவுணில் தனது ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றான்.

“ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வார்ப்பு அச்சுக்களில் பிள்ளைகளைப் பொருத்தாதீர்கள். அவர்களை இயல்பாக வளர விடுங்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை நசுக்காதீர்கள். அவர்களுடைய கனவுகள் உங்களை விடப் பெரியவை” என அந்த ஜப்பானிய இயற்கைப் பாடசாலையின் நிறுவனர் கொபயாஷி கூறுவார்.

தனது தங்க மீன் படத்தின் வாயிலாக மனன பொம்மைகளையும், கார்ப்பரேட் உலக சேவகர்களையும், சைபர் அடிமைகளையும், நுகர்வு தாசர்களையும் குமாஸ்தாக்களையும் உண்டாக்கும் நமது பணம் பிடுங்கி கல்வி முறையின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் ராம். 

“நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகின்றேன்“ ( மத்தேயு 18:3 )

மனித தொன்மங்களும் வலியுறுத்தும் தூய குழந்தை மன ஆன்மாவை கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை அப்படி கொலை செய்யும் சமூகம் குற்றங்களின் கனிகளை சுவைத்தே தீர வேண்டும் என்பதை உரத்து சொல்லியாக வேண்டியுள்ளது. அது இப்படத்தின் வாயிலாக சாத்தியப்பட்டுள்ளது.

சமூகத்தின் அவலங்களை மட்டும் காட்டும் எதிர்மறைப் படமாக குறுக்கி விடாமல் W, M என்ற ஆங்கில எழுத்துக்களை குழந்தையின் பாணியிலேயே செல்லம்மாவிற்கு கல்யாணி கற்பிப்பது, கற்பித்தலின் இலக்கணமான ஆசிரியை எவிட்டா, மரக்கடை பாய் என்ற மொழி, மதம் கடந்த மானுட நேசியின் பாத்திரம் வழியாக நம்பிக்கையூட்டுகின்றார் ராம்.

கல்யாணி – செல்லம்மாவிற்கு இடையே உள்ளே அன்பையும் பிரிவுத்துயரையும் சொல்லும் காட்சிகள் கூடுதலாக இடம் பெறுவதை தவிர்த்திருக்கலாம்.

பள்ளியில் செல்லம்மா தந்தைக்காக திருடுகின்றாள் என்ற காட்சியும் மிகையாகவே படுகின்றது. கல்யாணிக்கு கைவினை விற்பனையகத்தை கேரளத்தின் மரக்கடை பாய் கை காட்டுவதும் அதற்காக மலைக்கு கல்யாணி ஓடுவதும் கதையின் தலையாய ஓட்டத்தோடு சேராமல் தனியாக தொங்குகின்றது.

கொலைகார கல்வி முறைக்கு மாற்றாக காட்டப்படும் அரசு பள்ளிகளில்தான் தீர்விற்கான புள்ளி தொடங்குகின்றது. அதை கோடாக்கி சித்திரமாக்கும் பொறுப்பு சமூகத்திற்கும் அரசிற்கும் உள்ளது.

படத்திற்கான இடத்தேர்வும் ஒளிப்பதிவும் கதை ஓட்டத்திற்கு கனம் சேர்க்கின்றது. தங்க மீன்கள் நீந்தும் குளம் உள்ளிட்ட பசுமையான இடங்கள் மனதில் தங்கி விட்டது.

தங்க மீன் குளக் காட்சிகளின் மூலம் சமூகத்தின் குற்றவாளி மன நிலையை குளத்தங்கரையின் இறுதி படிக்கட்டில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றார் இயக்குனர் ராம்.

செல்லம்மா மீண்டு வரும் அந்த கட்டத்திற்குப் பிறகு மானுட மதிப்பீடுகளற்ற சமூகமானது அதே குளத்தில் மூழ்கி மடியும் வரை ராம்களின் கலைப்பயணம் தொடரவேண்டிய தேவை இருக்கின்றது.

- பகல் நிலவன்

Pin It