“பற பற பறவை ஒன்று” என துரித கதியில் ஷ்ரேயா கோசலின் குரலில் ஒலிக்கும் பாடலில் துயரும் மகிழ்ச்சியும் மெலிதாக இளங்காற்று போல் அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றது. மொத்த படத்தின் குறியீடாகவும் இந்த பாடல் விளங்குகின்றது.

neer_paravai_450மீனவர்கள் அல்லாத தமிழர்களாலும் ஏன் ராமேஸ்வரம், தஞ்சை மாவட்ட மீனவர்களைத் தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதி மீனவர்களாலும் பொது மக்களாலும் அவ்வளவாக சிந்திக்கப்படாத ஓர் அரசியலைத் துணிந்து வணிக சினிமாவாக எடுத்துக்காட்டிய சீனு ராமசாமியை பாராட்டத்தான் வேண்டும்.

“கடலுக்கு போய் பிழைக்கத் தெரியாதவன் ஊருக்குள்ள போய் ஓட்டல்ல எச்சி தட்டையா கழுவுவான்?” என்கின்ற லூர்துவின் கேள்வியில் கடல் மீதான அவரின் நம்பிக்கையின் ஆழமும் நகரத்தின் மீதான கசப்பும் பளீரென தெறிக்கின்றது. மனிதனின் இயல்புக்கெதிராக அவன் மீது வலிந்து திணிக்கப்படும் வாழ்வியல் வன்முறைக்கெதிரான அருவெறுப்பு அந்த கேள்வியில் கசிகின்றது. இது ஒன்றே இன்னொரு கதைக்கான கருவாகத்தான் படுகின்றது.

மகன் அருளப்ப சாமியின் குடிப்பழக்க சீரழிவினால் ஏற்படும் வேதனையில் நெஞ்சு நொறுங்கும் தந்தையாக நிற்கும்போதும், மகனுக்காக கட்டிய கணவனைக் கூட மண விலக்கு செய்யத் துணியும் மனைவியின் கொந்தளிக்கும் உணர்வுக்கெதிரே கணவனாக தளர்ந்து நிற்கும்போதும், அதே மகனின் சேட்டைகளினால் அன்றாடம் கூலிக்காக மீன் பிடிக்கும் வேலை பறிபோகும்போது ஏற்படும் அவமானத்தில் ஒரு வேலையாளாக உறைந்து நிற்குமிடத்திலும் கையாலாகாத உணர்வின் பல முகங்களை தகப்பன் லூர்துவாக நடிக்கும் ராம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனது மகனை குடிப்பழக்கத்திலிருந்து மீட்ட அந்த மருத்துவருக்கு நன்றிசெலுத்தும் முகமாக லூர்து தனது இரு கைகளிலும் பெரிய மீன் ஒன்றை எடுத்து மெதுவாக நடந்து செல்கின்றார். அதை மருத்துவ மனையின் படியில் கிடத்தும்போது கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவர் தனது கையில் ஏந்தியிருந்தது அவரது ஆன்மாவின் ஆக உயர்ந்த உன்னதமான நன்றிக் காணிக்கை.

மகன் அருளப்பசாமி சொந்தமாக ஒரு மீன்பிடி படகை வாங்கி அதில் தனது தகப்பன் லூர்து சாமியின் பெயரைப் பொறித்துள்ளான். அந்தப் பெயரை தனது கண்களை இறுக மூடிக்கொண்டு உழைப்பின் தழும்பேறிய தனது முதிய விரல்களால் மெல்ல வருடுகின்றார் லூர்து. அந்த வருடலில் அவரின் மன நொறுங்கல், தளர்ச்சி, அவமானம் அனைத்தும் மெல்ல அழிந்து போகின்றது.

கடவுளுக்கு அடுத்தபடியாக இந்த அளவிற்கு கடலையும் மீனையும் தனது ஆன்மாவோடு இரண்டறக் கலந்துள்ள அந்த மீனவர்களின் வாழ்வை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். அப்போதுதான் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் மீன்பிடித் தொழில், இந்திய அரசின் சிறப்பு கடலோர மண்டலச் சட்டம், கூடன்குளம் அணு உலை என கடலிலும் கரையிலும் மீனவர்களின் ஆன்மாவின் மீதும் வாழ்வின் மீதும் தொடுக்கப்படும் தொடர் தாக்குதலை தீவிரமாக எதிர்க்க முடியும்.

15 வருடங்களுக்கு முன்னால் வங்க மொழியில் வெளியான பழைய கறுப்பு வெள்ளைத் திரைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது. அதில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் நதியானது ஒரு நாள் வறண்டு காணாமல் போய் விடுகின்றது. நிர்க்கதியாக நிற்கும் அந்த மக்களை கந்து வட்டி மூலம் மார்வாடி பனியாக்கள் சுரண்டுகின்றனர். வாழ்வில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தையும், திட்டமிட்ட சுரண்டலையும் அந்த உழைக்கும் மக்கள் ஹிந்து – முஸ்லிம் என்ற மத பேதமின்றி தங்களுக்குள் உதவிகள் செய்து கொள்வதின் மூலம் கடந்து செல்கின்றனர்.

அந்தப் படத்தை பார்த்ததும் சிறுபான்மையினரை குறி வைத்து ஏவப்படும் கேமிரா&வெள்ளித்திரையின் வன்முறைக்கு எதிரான தமிழ்ப் படங்கள் என்பது வெறும் கனவுதானா? என்ற ஏக்கம் நிலைத்தது. அந்த ஏக்கத்தின் விடையாகத்தான் நீர்பறவையில் உதுமான் கனியின் பாத்திரத்தைக் காண முடிகின்றது.

உதுமான் கனியாக நடிக்கும் சமுத்திரக்கனி சிறுபான்மை அரசியலை தர்க்க நியாயத்தோடு சொல்லிடும்போது சீருடையில் நிற்கும் காவலரைப் பார்த்து நீயும் சம்பளம் வாங்கும் ஓர் உழைப்பாளிதான் என்பதையும் சேர்த்து நினைவூட்டுகின்றார். அத்துடன் பொது மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள்தான் காவலர்கள் என்ற உதுமான் கனியின் வசனம் மூலம் காவல்துறையின் வானாளாவிய வரம்பற்ற அதிகாரத்திற்கு ஒரு எல்லைக்கோடு வரையப்படுகின்றது.

காவலர்களை அதி மனிதர்களாக உயர்த்திப் பிடித்திடும் மாய பிம்பத்தைக் கட்டமைத்து அதன் வழியே ஒரு கெடுபிடி பாணியிலான ஃபாஸிச ஆட்சிக்கு முன்னுரைக்கும் விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோரின் நுண்ணரசியலுக்கு மாற்று இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

உப்பள முதலாளி இமான் அண்ணாச்சியின் தங்கையாக நடிக்கும் மனோ சித்ரா, அருளப்ப சாமியின் மீதான தனது காதலை பூரிப்புடன் வெளிப்படுத்துகின்றார். அந்த காதல் மறுக்கப்படும்போது முகத்தில் வாட்டத்தைக் காட்டுகின்றார். அவன் வேறொருத்திக்கு உரிமையானவன் என்பதை சட்டெனப் புரிந்து கொண்டு இயல்பாக பழகுகின்றார். மூன்று வகையான முரணான உணர்வுகளை அவர் இயல்பாக வெளிப்படுத்துகின்றார்.

உப்பளத்திற்கு புதியதாய் வேலைக்கு வந்த இரண்டு மீனவ வாலிபர்களும் வேலையில் தாக்குபிடிப்பார்களா? என்பதை சோதித்தறிய முதலாளி வேடத்தில் உள்ள இமான் “ உப்பள தொழிலாளிகளுக்கு காலில் ரத்தமொழுகும். உப்பளத்தின் வெண் நிற எதிரொளியில் கண் பார்வை மங்கி விடும்” என்கின்றார்.

neerparavai_650

உடனேயே குண்டு பையனும், அருளப்ப சாமியும் “ஏற்கனவே உப்பளத்தில் வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன?” என எதிர் வினா எழுப்பும்போது அவர்களுக்கு பழகி விட்டது என முதலாளி அசடு வழிகின்றார். கறுப்புக் கண்ணாடியும், கனத்த காலுறையுமின்றி வருடக்கணக்கில் பணிபுரியும் உப்பள தொழிலாளர்களின் அவலமும் அங்கே உடைந்து வெளியாகின்றது.

எஸ்தரின் காதலும், மனோ சித்திராவின் காதல் தோல்வியும், திருமணமும் படத்தின் கருவான அரசியலை மிகைத்து விடாமல் இருக்க அது தொடர்பான கட்டங்களை அளவோடு நகர்த்துகின்றார் இயக்குனர். நகைச்சுவையும் அதே அளவில்தான் கையாளப்பட்டுள்ளது.

அருளப்ப சாமி, எஸ்தர் தம்பதியரின் பிரிவிற்கு முந்தைய காட்சியில் காமம் சொற்களில் வழிந்தோடுகின்றது. சொற்கள் பரப்பும் நெடியைத் தாள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் கண்ட இடத்திலும் காமமிருக்காது. ஒரு காட்சியில் மொத்த படத்திற்கும் போதுமான காமத்தால் நிரப்பி விடுவார்கள். அது போல்தான் இங்கும் உள்ளது.

அருளப்ப சாமியை எஸ்தர் நிரந்தரமாக பிரியப் போகின்றாள் என்ற நிகழ்வின் மேல் கனத்தை கூட்டுவதற்காகவும், பிரிவை முன்னறிவிக்கும் முகமாகவும் மசாலாவை விரும்பும் தமிழ் மனதை நிறைவுபடுத்துவதற்காகவும் காமம் மிகையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற சமாதானத்தை இயக்குனர் சொல்லக்கூடும். இனி வரும் படங்களில் இந்த நெருடும் நிகழ்வை இயக்குனர் கடந்து வருவார் என நம்புவதற்கான சான்றுகள் இந்த படத்தில் நிறைய உள்ளது

வயதான எஸ்தரை விசாரணை செய்யும் பெண் காவல் அலுவலராக நடிப்பவரோடு அந்தப் பாத்திரம் ஒட்டவேயில்லை. அவரது நடிப்பிலும் உடல் மொழியிலும் காவல்தன்மை மிகக்குறைவாகவே இருந்தது.

கோபத்திலும், நேசத்திலும் இரு எதிர் துருவ முனைகளை கண நேரத்தில் மாறி மாறித் தொடுவதில் மீனவர்களுக்கு நிகர் மீனவர்கள்தான். இந்த குணாம்சமும் மீனவர் வாழ்வின் மேல் தேவாலயத்தின் ஆதிக்கம், மீனவரிடையே உள்ள உள்முரண்கள் ஆகியனவும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடல் உள்ளிட்ட இயற்கை வடிவங்களை நாம் கண்ணில் காண்பது போல் கேமிராவிற்குள் உள்வாங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அது இங்கு சாத்தியப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ் காணும் காட்சிகளில் கடலும், காயலும், கரை மணலும் மாறி மாறி நிகழ்த்தும் வண்ணக் கலவை மனதில் நிற்கின்றது

படப்பிடிப்பு நடந்த தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு, கூடுதாழை, பெரிய தாழை உள்ளிட்ட கிராமங்களில் தாரங்கதாரா வேதியியல் ஆலைக் கழிவுகளினால் கடல் ரத்த சிவப்பில் மாறியிருந்தது. பச்சையும் நீலமுமாக எழிலூட்டும் கடல் சிவந்து போயிருந்தது என்பது மீனவர் வாழ்வின் துயரத்தை சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தது.

மகன் அருளப்ப சாமியின் படகை தந்தை லூர்து நெருங்கும்போது மகனின் படகிலிருந்த பல துளைகளின் வழியே கடல் நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. அருளப்ப சாமியின் உயிரற்ற உடலை நாம் திரையில் காணும் முன்னரே இந்த படிமம் அந்த துயரை நமக்கு முன்னறிவிப்பு செய்கின்றது. படிமங்கள் காட்சிகளோடும் நிகழ்வுகளோடும் இயல்பாக ஒட்டியிருந்தது.

எளிய கிராமக் காட்சிகளும் அங்கு வாழும் நிஜ மனிதர்களும் திரைப்படத்தை அவர்கள் பங்கிற்கு செழுமைப்படுத்துகின்றார்கள். மீதி பங்கு செழுமையை தொழில் முறை கலைஞர்களிடமிருந்து சீனு ராமசாமி கறந்துள்ளார்.

இயற்கை வளங்களுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு, விளிம்பு நிலை மனிதர்களுக்கும், சமூகச்சீரழிவில் உழல்வோருக்கும் மதத்தின் ஆறுதல், வர்க்க அரசியல், ஒடுக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிரான போரில் அடித்தள மக்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை என திரைப்படம் நெடுக கதையாடல் நிகழ்த்தப்படுகின்றது.

படத்தைப் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது பரபரப்பான அண்ணா சாலையின் ஓரத்தில் 65 வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய மூதாட்டி சரிந்து விழுந்து கிடந்தார். அவரின் உதடுகளில் உயிர் தனது இறுதித் துளிகளில் துடித்துக் கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் உலகம் எந்த நெருடலுமின்றி தனது போக்கில் போய்க்கொண்டே இருந்தது.

வங்காள விரிகுடாவிலோ அண்ணா சாலையிலோ அல்லது மனிதர்கள் கூடும் பொதுவெளிகளிலோ நிகழ்த்தப்படும் மரணங்கள் மனித நேயம் வறண்ட மனிதர்களால் எளிதில் கடக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை கலை வடிவிலும் களச்செயற்பாட்டின் உருவிலும் ஆவணப்படுத்துபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வறண்ட பாலை நடுவில் உள்ள சோலை போன்றவர்கள்.

- பகல்நிலவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It