சமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு இயக்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கின்றன. முழு நேர ஊழியர்களையும், பகுதி நேர ஊழியர்களையும் நியமித்து தொடர்ச்சியாக மாணவர்களை சந்திப்பது, அவர்கள் மத்தியில் அரசியல் உரையாடலுக்கான களம் அமைத்துக் கொடுப்பது என தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவுதான் முற்போக்கு இயக்கங்கள் முயன்றாலும் பெரும்பான்மையான இளைஞர்களை சமூக மாற்றத்தை நோக்கிய அரசியல் பாதையில் வென்றெடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகவே உள்ளது. காரணம் இன்றைய மாணவர்கள், இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசியல் அற்ற தக்கை மனிதர்களாய், விட்டேத்தியான வாழ்க்கை வாழ்பவர்களாய் தான் இருக்கின்றனர். அற்பத்தனமாகவும் குறுகிய மனம் படைத்தவர்களாகவும், எவன் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்று வாழும் சுயநலவாதிகளாகவும்தான் இருக்கின்றார்கள்.
இளைஞர்களை வென்றெடுத்து சமூக மாற்றத்தை நோக்கிய பெரும் போராட்டத்தில் அவர்களை அணிதிரட்டிச் செல்ல வேண்டும் என யாராவது முயன்றால், அவர்கள் கூடிய விரைவில் அரசியலும் வேண்டாம், ஒரு கருமமும் வேண்டாம் என தூக்கிப் போட்டுவிட்டு பிழைப்புவாத வாழ்க்கைக்கே மீண்டும் சென்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு இன்றைய இளைஞர்களின் மூளை செல்லரித்துப் போய் கிடக்கின்றது. இது போன்ற ஓர் இளைஞர் கும்பலை நீங்கள் உலகில் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சீரழிந்து, பெரும் குற்றக்கும்பலுக்குரிய எல்லாவித குணங்களையும் கொண்டிருக்கின்றார்கள். இப்படி தமிழ்நாட்டு இளைஞர்களை மாற்றியதில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற சினிமா நடிகர்கள் தான் முன்னணியில் நிற்கின்றார்கள். இன்றைய இளைஞர்களின் ஆன்மீக வழிகாட்டிகள் இவர்கள்தான். இவர்கள் பேசும் பஞ்ச் வசனங்களும், வேசித்தனமான பாடல்களுக்கு ஆடும் ஆபாசமான உடல் நெளிவுகளும், அபத்தமான சண்டைக் காட்சிகளும் தான் இன்றைய இளைஞர்களின் முழு நேர பேசு பொருள்.
ஸ்டெர்லைட் தமிழ்நாட்டை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி தமிழர்களை சோத்துக்கு கையேந்தவைக்க மத்திய பாசிச கார்ப்ரேட் அடிவருடிகள் செய்யும் சதிகள் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை, தமிழ்நாட்டில் துறைகள் தோறும் ஊழலால் புழுத்து நாறுவதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றியோ, கல்விக் கொள்ளை பற்றியோ, அரசு மருத்துவமனைகள் தரமற்று சீரழிக்கப்படுவதைப் பற்றியோ, மணற்கொள்ளை பற்றியோ, விவசாயிகள் பிரச்சினை பற்றியோ கவலைப்படாத அல்லது கவலைப்படத் தயாராக இல்லாத இன்னும் சொல்லப் போனால் எதற்காக உயிர்வாழ்கின்றோம் என்பதே தெரியாத ஒரு கூட்டத்தை இந்த சினிமா கழிசடைகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாத இந்த கேடு கெட்ட இளைஞர் கும்பல் எப்ப ‘தல’ படம் ரீலிஸ் ஆகும், எப்ப தளபதி படம் ரீலிஸ் ஆகும், எப்ப சூப்பர் ஸ்டார் படம் ரீலிஸாகும், தலைவர் இந்தப் படத்தை முடிச்சுட்டு அரசியலுக்கு வருவாரா என தினம் தினம் இதைப் பற்றியே பேசி பொழுதைக் கழிக்கும் தறுதலைகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். பொண்டாட்டி தாலி அறுத்து கட் அவுட்டு வைப்பது, வீட்டில் அப்பன் சம்பாதித்த காசை பிடுங்கிக் கொண்டு போய் பேனர் வைப்பது, தோரணம் கட்டுவது என ஆரம்பித்து, சினிமாக் கழிசடைகளை கடவுளுக்கு நிகராக நினைத்து பால் அபிசேகமும், பீர் அபிசேகமும் செய்வதுவரை நடக்கின்றது. இன்னும் சில முற்றிப்போன முண்டங்கள் ‘விஜய் கடவுளுக்கும்’, ‘அஜித் கடவுளுக்கும்’ மாலை எல்லாம் போட்டுக் கொண்டார்கள். இப்போது அது இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் ஓர் இளைஞன் அப்பன் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றான். இப்போது அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தீ வைத்த கழிசடையை காவல்துறை கைது செய்துள்ளது. அந்தக் கழிசடையின் பெயர் அஜித்குமாராம்!.
அதே போல வேலூரில் அலங்கார் திரையரங்கில் இரண்டு ‘தலை’ கோஷ்டிகளுக்கு இடையே டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட சண்டை கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது. இதே போல விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் தல ரசிகர்கள் 20 அடி கட்அவுட்டருக்கு பாலபிசேகம் செய்யும்போது அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள். தல ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது, தாங்களும் ஒரு தேர்ந்த கழிசடைக் கும்பல்தான் என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். ரஜினியின் கட் அவுட்டர்களுக்கு பால் அபிசேகம் செய்வது, காவடி தூக்குவது, கோயில்களில் படம் வெற்றிபெற பிராத்தனை செய்வது, திரையரங்கின் முன் திருமணம் செய்வது என தங்கள் தலைவரின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மத்தியில் இதே பேச்சாகவே உள்ளது. அங்கே பாராளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அசிங்கம் செய்து வைத்திருக்கின்றார், இங்கே ஒரு கும்பல் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் வெற்றிபெற வழிபாடு செய்துகொண்டு இருக்கின்றது. ஆட்சியாளர்கள் இருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அதைப் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாத கேடு கெட்ட முட்டாள் கூட்டம் அம்மணமாக நின்றுகொண்டு தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டு இருக்கின்றது.
இளைஞர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கின்றார்களே, இவர்களை “அப்படி எல்லாம் செய்ய வேண்டாம், நானும் உங்களைப் போல சாதாரண மனிதன் தான். எனக்கும் மலம் வரும், சிறுநீர் வரும், வயிற்றுக்கு சோறுதான் தின்கின்றேன், எனவே என்னை கடவுள் போல நினைத்து வழிபடுவதை நிறுத்துங்கள்” என எவனாவது ஒரு யோக்கியன் வாய் திறக்கின்றானா எனப் பாருங்கள். இந்த முட்டாள் கூட்டத்தை கேவலத்தில் இருந்து கழிசடைக்குக் கொண்டுபோவதில்தான் ஒரே குறிக்கோளாக இருக்கின்றார்கள். பல கோடிகளை சம்பளமாக பெற்றுக்கொண்டு ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழும் இந்தக் கழிசடைகளை, உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் பிரித்துப் பார்க்கத் திராணியற்ற, பிம்ப வழிபாட்டில் மூழ்கிப்போன முட்டாள் கூட்டம் கடவுளைப் போல நினைத்து வழிபடுவதால்தான் கொழுப்பேறிய இந்தப் பன்னாடைகளுக்கு எல்லாம் அரசியலுக்கு வரப் போகின்றேன் என சொல்லும் தைரியம் வருகின்றது.
‘எங்க தலைவர் அது செஞ்சாரு,’ ‘எங்க தலைவர் இது செஞ்சாரு’ என எப்போதே எங்கோ அவன் போட்ட பிச்சையை பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்கும் மூளை மழுங்கிய முட்டாள் இளைஞர்களுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி, எந்தவித ஊதியமும் இன்றி, மக்கள் நலன் ஒன்றே பெரியது என தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து, போராட்டமே மகிழ்ச்சி என வாழும் நூற்றுக்கணக்கான தோழர்களைப் பற்றி எதுவும் தெரியாது. அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, சிறைபட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, காயம் ஆறுவதற்கு முன்பே களத்தில் வந்து நின்ற தீரர்களைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. அரசியல்வாதிகள் யோக்கியவாதிகளாய் இருந்தால் இது போன்ற கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அவர்களோ தன்னுடைய கட் அவுட்டர்களைப் பார்த்து தானே மகிழ்ச்சி அடையும் சுய மோகிகளாய், தன்னையே கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் அற்ப சிந்தனை படைத்த பேர்வழிகளாய் இருக்கும்போது இதை எல்லாம் தடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. என்ன செய்வது இந்த போன்ற மனிதர்கள் மத்தியில்தான் நாம் வாழ்கின்றோம், இங்கே தான் பணி செய்தாக வேண்டும். நோய் இருக்கும் இடத்தில் தானே மருத்துவர்களுக்கு வேலை.
- செ.கார்கி