"நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை"
"தேவதை அன்னம் பட்டாம்பூச்சி கொஞ்சும் தமிழ்க் குழந்தை"
உருது முகம் இவருக்கு. உருகும் பார்வை இவருக்கு. உயரப் பறக்கும் பேரழகு இவருக்கு.
கூர்நாசியா.... குளக் கண்களா... சாந்தம் படரும் அழகா.... இப்போது தான் ஏற்றி வைத்த சுடரின் நீல வெளிச்சத்தின் சாய்ந்த உருவமா... பத்மப்ரியா என்ற அழகியின் தோற்றம். இவர் சிரித்தால் பூ மலரும் என்று நான் நம்பிய தருணங்கள் மிக ஆழமானவை. உள்ளூர் உருதுக்காரி என்று தோன்றும் இயல்பு இவருக்கு வாய்த்திருக்கிறது. நடிக்கவும் தெரிந்த உயரமான அழகியின் தோற்றம் பார்க்கப் பார்க்கவே உருளும் மனங்களை எதிரே யாருக்கும் வாய்க்கச் செய்யும்.
"உங்களுக்கு கடிதம் எழுதும் இந்நேரம் கடவுள் மழைத்துளிகளால் என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்" என்று "அன்புள்ள மன்னா" பாடலின் இறுதியில் பேசும் பத்மப்ரியா என்னையும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புவது மழையோடு, கடவுளையும் நனைக்கும் செயல்.
பத்மப்ரியா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் கூட. தியேட்டரையே ஆட வைக்கும் ஆர்ட்டிஸ்ட் கூட. "நம்ம காட்டுல......மழை பெய்யுது" பாடல் பார்த்திருக்கிறீர்களா...?
"பொக்கிஷம்" படத்தில் இறுதிக் காட்சியில் வயதான தோற்றத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கும் பத்மப்ரியாவை கலைகளின் பொக்கிஷமாகவே தான் நான் காண்கிறேன். யாருக்காவது கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றினால் பத்மப்ரியாவுக்கு எழுதலாம் என்ற மாயம் எனக்குள் எழுத்துக்களாய் என்னைப் பொறித்துக் கொண்டே இருக்கும். சிரிக்கையில் பற்கள் பூப்பதை இவரிடம் கண்டிருக்கிறேன். பற்கள் தெரியாமல் சிரிக்கையில் நமக்கு கண்கள் பூக்கும் என்பதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தப் பாடலில் "அன்புள்ள உயிரே" என்று சொல்லி "அன்புள்ள அன்பே" என்று முடிக்கையில் ஒரு பாவனை வருமே.... அதில் அத்தனை அன்பு இருக்கும்.
சிண்ட்ரெல்லாவில் ஒரு சிற்பமெனத்தான் நான் பத்மப்ரியாவை யோசிக்கிறேன்.
முகம் மட்டும் தெரிய, நெற்றியோடு தலையோடு உடலோடு போர்த்திய புர்காவில் ஒரு சுடருக்கு முகம் முளைத்தது போல இருக்கும். சுடர் சிரிக்கும் சொப்பனங்களை பத்மப்ரியாவிடம் காணலாம். ஓர் உருதுப்பெண்ணின் உடலமைப்போடு இருக்கும் இப்பெண்ணை உருதுக் கவிஞர் உமர்கய்யாமும் வர்ணிப்பார், உடுமலை கவி இன்றிருந்தாலும் வர்ணிப்பார்.
"புயலடித்தால் கலங்காதே.......நான் பூக்கள் நீட்டுகிறேன்" என்று பாடும்போது புயலையே நீட்டலாம் என்று கூடத் தோன்றும்.
"எதை நீ தொலைத்தாலும் மனதை நீ தொலைக்காதே...." என்று முடித்து, "அடங்..கா...........மலே நீ அலை பாய்வதேன்......" என்று தொடங்கும் பாடல் வரியில் திரும்பும் பத்மப்ரியாவை திரும்பத் திரும்ப பாராமல் இருக்க இயலாது. பார்த்து முடியாத முகம் அது. நாய்க் குட்டிகளோடு கொஞ்சும் பாவனைக்கும் இவரைக் கொஞ்ச ஆசை முளைக்கும்.
"கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை......... கலங்காமலே......கண்டம் தாண்டுமே... " இவர் கூட எனக்கு ஒரு பறவை போலத் தான் தெரிகிறார். எந்த மரத்துக்கும் பொருந்தும் பறவை. எந்தப் பாத்திரத்துக்கும் நிரம்பும் பொறுமை. எத்தனை சீரியஸான சினிமாக்களில் நாயகி இவர். மலையாளத்தில் வாள் சண்டை போட்டு நடித்த படங்களும் உண்டு. "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" படத்தில் அரசி மாதிரியான கெட் அப்களுக்கும் மிக கச்சிதமாகப் பொருந்தும் நடிகை. கண்களுக்குள் கத்தி கொண்ட தொப்பி போட்ட பப்பாளி.
ஒரு காட்சியில்...."பப்பாளி" என்று பத்மப்ரியாவை கூப்பிட்டு, "அன்னைக்கு உடைஞ்சது மண்டை மட்டும் இல்லைன்னு சொன்னீங்களே.......வேற என்ன...?" என்று வெட்கப்பட்டுக் கொண்டே கேட்பார் லாரென்ஸ். அதற்கு களுக்கென்று சிரிப்பை ஆரம்பித்து உள்ளுக்குள்ளேயே களுக்கை ஓட விட்டு, தலை சாய்த்து வாய் வரை வரும் களுக்கை கை கொண்டு பொத்தி, படக்கென்று ஓடி விடுவார். நமக்கு மனதும் உடையும் இடம் இது.
நான் எப்போதும் விரும்பும் அதே மென்சோகம் இவர் முகத்திலும் இருக்கும். நமது தூரத்து சொந்தக்காரப் பெண் போன்ற ஒரு பார்வை இவர் மீது விழும். மலையாளக்கரையில் அந்தி சாயும் நேரத்தில் தோன்றும் அந்திவான வண்ணம் இவர் சிரிப்புக்கு உண்டு. நம்பாதோர் படத்தை ஒரு முறை பாருங்கள்.
கண்களில் கதகளி வைத்திருக்கும் பத்மப்ரியா "மிருகம்" படத்தில் நடித்த நடிப்பெல்லாம்....படைப்பூக்கத்தின் பரிணாமம். கதைக்குத் தேவை எனில் நடிப்பில் சமரசம் செய்து கொள்ளாத நடிகை. இன்னும் கொஞ்ச நாள் வலம் வந்திருக்க வேண்டியவர். ஏதோ சூழலில் சினிமா அவரை ஒதுக்கி விட்டதைக் கண்டிக்காமல் இருக்க முடியாது.
மூக்குத்தி குத்தி இருக்கும் பத்மப்ரியாவை எப்படி கொண்டாடாமல் இருக்க?
கிராமமோ நகரமோ... எல்லா கதாபாத்திரங்களும் பொருந்தும் உடல்வாகு. "தவமாய் தவமிருந்து" படத்தில், "உன்னை சரணடைந்தேன்.....உன்னுள்ளே நான் பிறந்தேன்" பாடலில்... நாம் காணும் பத்மப்ரியா நமக்கு அத்தனை நெருக்கத்தை தரும் கதாபாத்திரம். நம் வீதியில் இப்படி ஒரு பெண்ணை எல்லா ஊரிலும் பார்க்கலாம். காதலும், கனிவும் கலந்த ஒரு முகம் அது. யாருமில்லா வாழ்வில் கணவனோடு குழந்தையை வைத்திருக்கும் ஒரு பாவப்பட்ட முகத்தின் அச்சு. சிக்கலான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் பத்மப்ரியா கதாபாத்திரங்களின் தன்மையை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறவர். தமிழை விட மலையாளப் படங்களில் இன்னும் இயல்பாக இருக்கும் அது .
அடூர் கோபாலகிருஷ்ணனின் "நாலு பெண்ணுகள்" படத்தில் முதல் பாத்திரமாக ப்ராஸ்டியூட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மப்ரியா நிஜமாலுமே அப்படி ஒரு தோற்ற மயக்கத்தை நமக்குள் ஏற்படுத்தி விடுவார். முதல் காட்சியில் கணவனாகப் போகும் கதாபாத்திரத்தைப் பார்த்து... "ப்போ...." என்று அலட்சியமாகக் கத்தும் ஒரு ரீ -ஆக்சன் போதும். அந்த பாத்திரம் எப்படி என்று நாம் புரிந்து கொள்ள.
அதிலுருந்து மீண்டு கூலி வேலைக்குச் செல்லும் அவரை முன்பு செய்த தொழிலின் நீட்சி, அவரையும் அவர் கணவனையும் சிறைக்கு அனுப்புவதாக அந்த சாப்டர் முடியும். வசனங்கள் அதிகம் இல்லாத காட்சிகளினால் நகரும் அற்புதத் திரைக்கதையில் பத்மப்ரியா அணிந்திருக்கும் பாவாடையும், சட்டையும், பார்வையும், பேச்சும்.. இயலாமையும், இருப்பும் 1946 ல்-கேரளாவில் நிலவிய காட்சி இருப்பை நமக்குக் காட்டி விடுகிறது.
பத்மப்ரியா போன்ற சிண்ட்ரெல்லாக்களை காலத்துக்கும் ரசிக்கலாம். அது தான் அவர்கள் சேர்த்து வைத்த கலையின் உச்சம். "புயலடித்தால் கலங்காதே.......நான் பூக்கள் நீட்டுகிறேன்....."
சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்...
- கவிஜி