அவர் பேரழகியா என்றால் ஆம் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
அந்த சந்துப் பல்லில் இருந்தே என் பார்வை அவர் முகத்தைப் பிரித்தெடுக்கும். கண்களில் இரண்டு வண்டுகள் எப்போதும் மென் சோகத்தில் பனித்திருக்கும்.
"சொன்னது நீ தானா...?" என்று பாட்டையும் தாண்டி கண்கள் கேள்வி கேட்கையில் தேவிகாவைப் பிடிக்காமல் என்னதான் செய்வது? அவரை முதன் முதலில் "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில்தான் பார்த்தேன். எனக்கும் கூட முன் ஜென்ம நினைவுகளோ என்று நான் நம்பியபோது எனக்கு வயது 17 தான்.
சற்று பெரிய முகம். முகம் முழுக்கப் படர்ந்திருக்கும் இனம் புரியாத சோகத்தை நான் எப்போதுமே குரூர கண்களோடு ரசித்திருக்கிறேன். அந்த முகத்தில் சிரிப்பதில் கூட கொஞ்சம் அழுகை கலந்தே இருந்ததை உணரும் காலத்தில் நான் கவிதை எழுத ஆரம்பித்திருந்தேன். தேவிகாவை என்னால் 'கல்யாண்குமா'ரோடு எல்லாம் சேர்த்துப் பார்க்கவே முடியவில்லை. தேவிகாவுக்கு சிவாஜியோ, முத்துராமனோதான் ஜோடியாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இன்னமும் இருக்கிறது.
தேவி என்ற பெயர் எல்லாருக்கும் எதோ ஒரு வகையில் பழக்கமாக இருக்கும். ஆனால் தேவிகா என்ற பெயரை தேவிகாவைப் பார்த்த பிறகு தான்... எனக்குத் தெரிய வந்தது.
சிறுவயது முதல் மரணிக்கும் வரை நமக்கு சில பெண்களைப் பிடிக்கும். அப்படி எனக்குப் பிடித்த சில பெண்களில் தேவிகா கருப்பு வெள்ளையில் ஜொலிப்பதை இங்கே பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் எனக்குள். நம்மில் நிறைய பேர் ஆழ்மன ஆசைகளை....... ஆழ்மன வரைவுகளை யாருக்கும் காட்டாமல் பொக்கிஷமாக கருதிக் கொண்டு..... தன்னோடே சாக விட்டு விடுவார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" வகையறா தான் நான்.
தேவிகா என்றொரு தேவதையை கொண்ட சினிமாக்கள் என்னில் சாகாவரம் பெற்றவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு ஒரு நட்சத்திரப் பெண் பிடிக்கும். சினிமாவின் தாக்கம் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. சினிமாவைப் பார்த்து பார்த்து தான் எனக்கு உலகம் தெரிந்தது. அப்படி சினிமா என் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட பிறகு அங்கிருக்கும் சில முகங்களை நம்மால் நம்மையும் அறியாமல் விரும்பியிருப்போம். அப்படி நான் எப்போதும் நேசிக்கும் தேவிகாவை இப்போது நினைத்தாலும் இதழோரம் புன்னகை வந்து விடும். மிகப்பெரிய ஆலமரத்தில் அவர் ஊஞ்சலாடுவது போன்ற பிரமை எனக்குள் எப்போதும் இருக்கிறது.
'ஆண்டவன் கட்டளை' படத்தில் "அமைதியான நதியினிலே ஓடம்" பாடல் வேறொரு சமயத்தில் நினைவு மீட்டெடுக்கும் யுக்திக்காக மீண்டும் வரும்போது... உள்ளே பெருவெள்ளம் சூழ சிவாஜியோடு சேர்ந்து நானும் கதறியிருக்கிறேன். தேவிகாவைப் பிரிவது அத்தனை கொடிது. கண்ணை கசக்கிக் கொண்டு சிறுபிள்ளை போல கேவி..... அழுகையோடு சிரிக்கும் அந்த முகம் தான் எத்தனை விதமான பாவனைகளை உள்ளடக்கி இருக்கிறது. முகம் முழுக்கப் பிரகாசிக்கும் எதுவோ ஒன்றுக்குத்தான் தேவிகா கிடைத்திருக்க வேண்டும். தேவிகா எப்போதுமே ஓர் அரூப சாயலோடு இருப்பதாகவே எனக்கு ஒரு நம்பிக்கை.
எல்லா வயதுக்கும் ஒரே முகத்தைக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். பார்த்து தீரவே முடியாத முகத்தில் பார்க்கும் போதெல்லாம் பௌர்ணமிதான். தேவிகாவைக் காதலிக்காமல் இருந்தால் தான் அது இயல்புக்கு எதிரானது. அந்த புதிர் புன்னகைக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். பேராசை என்னுள் பித்து பிடித்து அலையும் போதெல்லாம் கண்கள் பெரிதாகி, மீனாகி பொசுக்கென்று சிரித்து காணாமலே போய் விடும் ஒரு கடற்கன்னியின் அச்சில் அவர் வார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பெருங்காதலின் அனுபவத்தோடு அலாதிப் பிரியங்களை தேவிகாவுக்குத் தருவதை எப்போதுமே விரும்புகிறேன்.
தேவிகாவுக்கு வயதானதையோ, மரணம் வந்ததையோ நான் வன்மையாய்க் கண்டிக்கிறேன். அது மாயங்களால் பூசப்பட்ட மெழுகு தர்க்கங்கள். உருகி விடும்.
தேவிகாவுக்கு காலம் இல்லை.
சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்...
- கவிஜி