கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பித்தவறிகூட மக்களுக்கு நல்லதை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்குவதில் கொடுக்கிற ஆலோசனைகளும் அறிவிப்புகளும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகளை பிரதமர் நியமித்த ஆர்.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்குழு ஏற்பது சிரமம் என்று கூறியுள்ளது. ஏதோ சோனியாகாந்தி மக்களுக்கு உணவளிக்க முயற்சி எடுப்பதாகவும் அதிகாரிகள் அதற்கு தடையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு ஆப்பை இரண்டும் களண்ட ஆப்பை என்ற கிராமத்து சொலவடை போலத்தான் இதுவும். அடிப்படையில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை ஏற்பதாக இல்லை. அப்படி சிந்திக்கக்கூட தயாராக இல்லை.

சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு கீழ்கண்ட பரிந்துரைகளை கொடுத்துள்ளது. இந்திய மக்களை முன்னுரிமைப் பிரிவு என்றும், பொதுப்பிரிவு என்றும் கிராமப்புறத்தில் பத்து சதம் நகர்புறத்தில் ஐம்பது சதம் விலக்கல்பிரிவு (மேல்தட்டு) மக்கள் என்றும் பிரித்துள்ளது. இதில் முன்னுரிமை பிரிவில் கிராமப்புறத்தில் 46 சதம் மக்களுக்கும், நகர்புறத்தில் 28 சதம் மக்களுக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவுதானியங்கள் அரிசி ரூ3/= கோதுமை ரூ2/= திணைவகைகள் (கேழ்வரகு/கம்பு) ரூ1/= என்ற விலைக்கு கொடுக்கப்படும்.

பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு கிராமப்புறத்தில் 44சதம் மக்களுக்கும் நகர்புறத்தில் உள்ள 22 சதம் மக்களுக்கும் அரசு விவசாயிகளுக்கு வழங்குகிற குறைந்தபட்ச ஆதாரவிலையில் ஐம்பது சதம் விலையில் மாதம் 20 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்குள் 75சதம் மக்கள் இந்த திட்டத்தால் பயன் அடைவார்கள் என்று பரிந்துரை கூறப்பட்டுள்ளது. இதற்காக 79931 கோடி மான்யம் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தான் சாத்தியமில்லை என்று ரங்கராஜன் கூறியுள்ளார்.

இருந்ததும் ! இருப்பதும் என்ன?

ஏற்கனவே இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அனைவருக்குமான பொது வினியோகமுறை நடைமுறையில் உள்ளது. 1996ஆம் ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்குத்தான் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தானியங்களை குறைத்தது. இருந்தும் பல மாநிலங்கள் தங்களது சொந்த வருவாயில் பெரும்பகுதி மக்களுக்கு பொதுவினியோக முறையை அமல்படுத்திவருகின்றனர். தற்போது சோனியாவின் ஆலோசனை இருப்பதைவிட மோசமாக உள்ளது. அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பு என்று இந்தக்குழு விவாதிக்காமல் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதற்கு மேல உள்ளவர்கள் என்று விவாதிப்பதே இந்தச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை.

ஏற்னவே இந்தக்குழு வறுமை கோட்டிற்கு கீழே ஏழைகளிலும் ஏழையாக இருந்து அந்தோதயா அன்னதான திட்டத்தில் இருந்த 2.05கோடி குடும்பங்கள் 35 கிலோ உணவுதானியங்களை ரூ2/க்கு பெற்றுவந்ததை மாற்றி 25கிலோ ரூ3/க்கு கொடுப்பது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 5.92 குடுப்பங்களுக்கு கொடுப்பது என்று பரிந்துரைத்தது. இதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்று கூறியது. கடுமையான விமர்சனமும் எழுந்தது. உணவுப் பாதுகாப்பா? உணவுப் பறிப்பா? என்ற கேள்வியும் வந்தது. கேலிக்கூத்தாகவும் பார்க்கப்பட்டது. மாற்று ஆலோசனைகளும் வந்தன. மாற்று ஆலோசனைகளில் முக்கியமானது குழந்தைகளின் வளர்ச்சித்திட்டங்கள், முதியோர் உணவுப் பாதுகாப்பு முக்கியமானது தற்போது இந்த பரிந்துரைகளில் இவையிரண்டும் சேர்க்கப்படவில்லை.

பெருமாள் பெத்தபெருமாள் ஆனார்

தற்போது தேசிய ஆலோசனைக்குழு முன்னுரிமைப்பிரிவு என்று கொடுத்துள்ளது புதிதல்ல. சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையை ஏற்கனவே திட்டக்குழுவிடம் கொடுத்துள்ளது.இதன்படி கிராமப்புறத்தில் 41.8சதம் மக்களும் நகர்புறத்தில் 25.7சதம் மக்களும் வறுமைக்கோடுடிற்கு கீழே இருப்பதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே புதிய விஞ்ஞானப்பூர்வமான கணக்கு என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஒருநாளைக்கு கிராமப்புறத்திற்கு ரூ. 15 நகர்புறத்திற்கு ரூ19 என்றுதான் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவாகப் போட்டு கணக்கெடுத்தாலும் இந்த அளவு வறுமை உள்ளது. 35கிலோ ரூ3/க்கு கொடுக்கவேண்டும் என்று சோனியாகாந்தி கொடுத்துள்ள பரிந்துரையும் இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களைத்தான். அவர் இதற்கு முன்னுரிமைப்பிரிவு என பெயர் மற்றி உள்ளார். பெருமாள் பெத்தபெருமாளாக மாறியது போன்றுதான் இதுவும். இந்த வறுமைக்கோட்டை ஏற்கனவே உணவுஅமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்குமேல் உணவுப் பாதுகாப்பு என்ற பம்மாத்து வேறுதேவையா?என்று கேட்கவேண்டியுள்ளது.

ஒருமதிப்பீட்டின்படி தற்போது சுமார் 11 கோடியே 30 லட்சம் (பி.பி.எல்.) வறுமைக் கோட்டிற்கு கீழ் குடும்ப அட்டை உள்ளது. இதுவே ஏறக்குறைய 65 சதமான மக்கள் தொகையை உள்ளடக்கியது. தே.ஆ.குழு பரிந்துரைத்துள்ள முன்னுரிமைப்பிரிவில் கிடைப்பது 9 கோடியே 80லட்சம் மட்டுமே. ஏற்கனவே இருப்பதில் பெயர் மாறியதைத் தவிர இதுஒன்றும் மாறுபட்டதல்ல. கணக்கு எடுப்பதா? கணக்கு பண்ணுவதா?

கிராமப்புறத்தில் 10 சதம் மக்களை விலக்க வேண்டும். நகர்புறத்தில் 50 சதம் மக்களை விலக்க வேண்டும். மற்றவர்களில் முன்னுரிமையை தனியாகவும் பொதுப்பிரிவை தனியாகவும் பிரிக்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமா? இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வோர் கணக்கிலேயே பலமாறுபாடுகள் உள்ளது. மத்திய அரசு, தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், ஊரகவளர்ச்சித்துறை, அர்ஜூன்சென் குப்தா குழு என ஒவ்வொன்றும் ஒருகணக்கு கொடுத்துள்ளது. சிறிய வேறுபாடு அல்ல முறையே 28சதம் 40சதம் 50சதம் 77சதம் என பெரும் எண்ணிக்கையிலான வேறுபாடுகள் உள்ளது. இவையெல்லாம் தெரிந்தும் இந்த தே.ஆ.குழு இத்தனை பிரிவாக பிரிக்க காரணம் என்ன? 25 சதமான மக்களை மட்டும் விலக்கல் செய்து என்னவிதமான மாற்றத்தை காணப்போகிறார்கள். இவை அனைத்தும் பெரும்பகுதி மக்களை உணவு பாதுகாப்பிலிருந்து வெளியேற்றுவதற்காகத்தான். பொதுப்பிரிவில் வருவோர் நடைமுறையில் சந்தைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

ஏன் அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பு தேவை? இந்தியா விவசாய நாடு பெரும்பகுதி மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கின்றனர். பெரும்பகுதி மக்கள் வறுமையில் வாழும் ஒரு நாட்டில் அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பு திட்டம்தான் தீர்வாகும். பலபிரிவுகளாக பிரிப்பதன் முலம் வறுமையில் உள்ள அதிக மக்களை விலக்கி வைக்கத்தான் உதவும். அனைவருக்கும் என்று அமலாக்கினால் தேவையற்றவர்கள் வாங்கமாட்டார்கள். இதற்கு கேரளம் தமிழகம் உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம். கேரளத்தில் அனைவருக்குமான பொதுவினியோக முறையில், மிகமிக குறைந்த வருமானம் உடையவர்கள் 71 சதம் மக்கள் பொருட்களை வாங்கினர். அப்போதே மாதம் ரூ.3000க்கு மேல் வருமானம் உடையவர்கள் 6 சதம் மட்டுமே பொருட்களை வாங்கினர். தமிழகத்தில் அரிசி வாங்க அட்டை வைத்திருந்தாலும் சர்க்கரை மட்டும் வாங்குவோர்கள் அதிகம்.(வாங்காதவர்கள் பெயரில் அரிசியை கணக்கிட்டு கடத்துபவர்களுக்கு வறுமையில் வாழும் மக்கள் எப்படி பொறுப்பாக முடியும்) பொதுவினியோக முறைமூலமாக மாதத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்யமுடியாது. எனவே இம்மக்கள் இதர தேவைக்காக சந்தைக்கு செல்லவேண்டும். எனவே பொதுச்சந்தையை நிலையாக வைத்திருக்கவும் இந்த அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பு அவசியமானது.