இளைஞர்கள் படித்து முடித்து பல்வேறு கனவுகளோடும் நம்பிக்கையோடும் இவ்வுலகை பார்க்கின்ற போது, அது சிதைந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 66 லட்சம் இளைஞர்களும் அடங்குவர்.

அரசாங்கத்தின் மீதும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மீதும் நம்பிக்கையிழந்து பதிவு செய்யாதவர்களையும் இணைத்தால் ஒரு கோடியை தாண்டுகிறது. நமது நாடு இளமையான நாடு என்கிறார்கள். ஆனால், இளைஞர்களின் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொட ரும் என பசப்பு வார்த்தைகளை வீசுகிறது அரசு.

“ஒடப்பராய் இருப்பவர்கள் உதையப்பராய் மாறிவிட்டால் ஓடப்பர் உடையப்பர் எல்லாம் ஒப்பப்பர் ஆகிவிடுவர் உணரப்பா நீ ! ” என்ற வரிகள் 1960களில் திராவிட இயக்க மேடைகளில் வலம் வந்தன. ஆனால், இன்று தி.மு.க அரசாங்கம் இதையெல்லாம் மறந்து மக்களை பிச்சைக்காரர்களாக்கி வருகிறது. இந்த அரசுக்கு அடித்தட்டில் உள்ள மக்களின் வாழ்நிலைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை கூலி விவசாயிகளுக்கு வழங்க மறுப்பது ஏன்? நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கினால். விவசாயிகள் வேலையில்லாமல் அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை செய்து பிழைக்க முடியுமல்லவா? இதனை ஏன் செய்ய மறுக்கிறார்கள். இதைச் செய்தால் வேலையில்லாதவர்களுக்கு சொந்த கிராமத்தில் வேலை கிடைக்கும், வாங்கும் சக்தி பெருகும், இதன் காரணமாக இடம்பெயர்தல் குறையும். இதன் விளைவாக நகர்ப்புறங்களில் படித்தவருக்கு தொழிற்சாலைகளில் வேலைகிடைக்கும் என்ற குறைந்த பட்ச சிந்தனை கூட இல்லையே ஏன்?

நாம் வேலையைப் பற்றி பேசினால், படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கொடுக்க ரூபாய் 50 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், இதற்காக அமைச்சர்கள் திருவள்ளூர், திருவாரூர், நாகை உள்பட 6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதாகவும், இதன் மூலம் 49,495 பேர் கலந்து கொண்டு 17,600 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர் என்று முதல்வர் அறிக்கை வாசிக்கிறார்.

இது மட்டுமல்ல, முதல்வரின் மகள் கனிமொழி மாவட்ட நிர்வாகத்துடனும், அமைச்சர்களுடனும் இணைந்து முகாம்களை சிறப்பாக நடத்தினார். அதில் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்றும் (2011 ஜனவரி 6) அவர் அறிக்கை நீள்கிறது.

முதல்வர் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு வழி சொல்கிறார் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் வேளாண்துறை, வணிக வரித்துறை, வருவாய் துறை போன்ற பல்வேறு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பாமல் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டியால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் வழக்கம்போல் காலப்போக்கில் காலாவதியாக்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் முறையான பணிநியமனங்கள் நடைபெறாத காரணத்தால் நிர்வாகப் பின்னடைவு ஏற்பட்டது. அதை சரிசெய்யவே ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசுப்பணி என 170 அரசாணையை அரசு வெளியிட்டது. அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல், 12 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, தொழிலாளர் நலன் மறுப்பு, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் தரகராக மாறி ஆள் எடுத்து கொடுத்தேன் என்று பல்லவி பாடுகிறார்.

கனிமொழி யார்? அவர் எப்படி அரசு நிர்வாகத்தோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடியும்? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடியுமா? நாங்கள் முகாம் நடத்தினால் மாவட்ட ஆட்சியரும், அமைச்சர்களும் பங்குபெறுவார்களா? அரசும் மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைக்குமா? இதைப்பற்றி பெருமையாகப் பேசும் முதல்வர் ஏன் காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறார். அரசு என்ன குடும்ப சொத்தா?

இதோடும் நில்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல முதல்வரின் பேச்சு உள்ளது. தமிழக அரசின் துறைகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் 4000, உதவியாளர் பணியிடங்கள் 2000 என ஆண்டுக் கணக் கில் காலியாக உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையில் 200 உதவியாளர் பணியிடங்கள், சுகாதாரத் துறையில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. 1980ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 1115 பேர் பணியாற்றினர். தற்போது 573 ஊழியர்களே உள்ளனர் என்றால் இந்த அரசின் சிந்தனை என்ன?

முதல்வர், நாங்கள் வேலை கொடுத்துள்ளோம் என்று தம்பட்டம் அடிப்பதன் ரகசியம் என்ன? தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள குறிப்பில் 3,02,517 ஊழியர்கள் காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னரே பணியமர்த்தப்பட்ட வர்கள். அப்படியென்றால் இவர்கள் யாருக்கு வேலைக் கொடுத்தார்கள்?

வேலையில்லாத இளைஞர்கள், மடியில் கட்டியிருக்கும் வெடி குண்டு என்றெல்லாம் வர்ணிக்கும் ஆட்சியாளர்கள் ஏன் அவர்களின் நலனில் அக்கறையில்லாமல் உள்ளனர். தேர்தல் சமயத்தில் மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை கொடும்போம் இலவச நிலம் கொடுப்போம் என வாக்குறுதி வீசி விட்டு ஆட்சிக்கு வந்தவுடன் வசதியாக மறந்து விடுகின்றனர்.

வேலை கொடுப்போம் என்றவர்களிடம் வேலைகொடுங்கள் என்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினால் காவல் துறையை ஏவி தடியடி நடத்தி சிறையில் அடைக்கின்றனர். மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடிக்கும் ஆட்சியாளர்களின் முகமூடி, வாலிபர் சங்கத்தால் அம்பலமாக்கும் போது தாங்க முடியாமல் தடி கொண்டு தாக்குகின்றனர்.

முதல்வர் தனக்குதானே தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் அரசுத்துறைகளில் உள்ள லட்சக் கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும். தற்போதுள்ள அரசு உள் கட்டுமானம் என்பது 1972 மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2010 மக்கள் தொகை அடிப்படையில் அரசு நிர்வாக உள்கட்டுமானம் வடிவமைக்கப்பட்டால்தான் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 லட்சம் இளைஞர்களுக்காவது வேலைவழங்க முடியும். எனவே இனியாவது ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

Pin It