அ. வரதராஜன்

17.08.1920 – 15.10.2009

“மற்றொரு விதமான பாரபட்சம் உள்ளது. இது நுட்பமானது என்றாலும் மிகவும் உண்மையானது. தகுதியும் திறமையும் உள்ள தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் குறைப்பதற்கு திட்டமிட்ட முயற்சி செய்யப்படுவதே இந்தப் பாரபட்சமாகும். இந்து தலைவர் ஒருவர் பெரிய இந்தியத் தலைவர் என்று வர்ணிக்கப்படுவார். அவர் காஷ்மீரி பார்ப்பனராக இருந்தாலும், அவரை காஷ்மீரி பார்ப்பனர்களின் தலைவர் என்று கூற மாட்டார்கள். ஆனால் தீண்டத்தகாதவரான ஒரு தலைவரைக் குறிப்பிடும்போது, அவரது பெயரைக் குறிப்பிட்டு, தீண்டத்தகாதவர்களின் தலைவர் என்று கூறுவார்கள். ஓர் இந்து டாக்டர் சிறந்த இந்திய டாக்டர் என்று வர்ணிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருந்தாலும், யாரும் அவரை அய்யங்கார் என்று குறிப்பிட மாட்டார்கள். ஆனால், ஒரு டாக்டர் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரை, இன்னார், தீண்டத்தகாதவரான டாக்டர் என்றே கூறுவார்கள். ஓர் இந்து பாடகர், பெரிய இந்தியப் பாடகர் என்று வர்ணிக்கப்படுவார். அவர் தீண்டத்தகாதவராக இருந்தால், அவர் தீண்டத்தகாதவரான பாடகர் என்றே வர்ணிக்கப்படுவார். இந்து மற்போர் வீரரை, பெரிய இந்திய பயில்வான் என்று வர்ணிப்பார்கள். அவர் தீண்டத்தகாதவராக இருந்தால், தீண்டத்தகாதவரான பயில்வான் என்றே வர்ணிக்கப்படுவார்.

இதுபோன்ற பாரபட்சத்திற்குக் காரணம், இந்துக்களின் மனதில் தீண்டத்தகாதவர்கள் தங்களைவிடத் தாழ்வானவர்கள் என்று ஊறிப்போயுள்ள எண்ணமாகும். தீண்டத்தகாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்பது, இந்துக்களின் எண்ணம். அவர்கள் இந்துக்களில் பெரியவர்களாக இருப்பவர்களைவிடப் பெரியவர்களாகவோ, அவர்களுக்குச் சமமானவர்களாகவோகூட ஒருபோதும் இருக்க முடியாது. இத்தகைய பாரபட்சம், சமூக ரீதியான பாரபட்சம் என்றாலும் பொருளாதாரப் பாரபட்சத்தைவிட எந்த வகையிலும் கொடுமையில் குறைந்ததல்ல.”

– டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி: 9, இயல்: 13

தனது 89 ஆவது வயதில் இயற்கை எய்திய அ. வரதராஜன் அவர்கள், தலித் மக்களைப் பெருமை கொள்ளச் செய்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 அன்று அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்த அப்பாஜி வரதராஜன், இந்திய வரலாற்றில் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல; இந்தியத் தலைமை நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதிலும் பெருமையைப் பெற்றவர்.

அவரது தந்தையார் விவசாயத்தையும் வியாபாரத்தையும் ஒருங்கே செய்து வந்திருக்கிறார். 1937 வரையில் திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்த அவர், 1939இல் வேலூர் ஊரிஸ் கல்லூரி இடைநிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அதன் பின்னர், சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தை 1941இல் பெற்றிருக்கிறார். 1943இல் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்திருக்கிறார். அப்போதிருந்த நடைமுறைப்படி, 1944இல் சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்குரைஞராகப் பதவி செய்யப்பட்டிருக்கிறார்.

தனது வழக்குரைஞர் பயிற்சியை வி. ராஜகோபாலாச்சாரியார் என்ற மூத்த வழக்குரைஞரிடம் தொடங்கிய அவர், உரிமையியல், குற்றவியல் வழக்குகளையும் மற்றும் மேல்முறையீடுகளையும் நடத்தியிருக்கிறார். சென்னையில் 5 ஆண்டுகளாக வழக்குரைஞர் தொழில் புரிந்த திரு. வரதராஜன், 1949 இல் நீதித்துறைப் பணியில் உரிமையியல் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 1957இல் சார்பு நீதிபதியாக மீண்டும் பதவி உயர்த்தப்பட்டார். அந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும், சென்னை மாநகரத்திலும் பணியாற்றி உள்ளார். மாவட்ட நீதிமன்ற அந்தஸ்திலான மதுரை தொழிலாளர் நீதிமன்றத்திலும், சென்னை தொழில் தீர்ப்பாணையத்திலும்கூட நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார்.

1970இல் அவர், தென்காசியில் நடைபெற்ற காவல் துறையின் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதியாகச் செயல்பட்டுள்ளார். அதன் பின்னர், 11 டிசம்பர் 1970 முதல் 31 டிசம்பர் 1972 வரை, தமிழகத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் ஆள்வரை (Jurisdiction) குறித்து ஆய்வு செய்த குழுவின் நீதித்துறை உறுப்பினர் என்ற முக்கிய நிலையில் பணியாற்றி இருக்கிறார் நீதிபதி வரதராஜன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 15 பிப்ரவரி 1972 அன்று பணிநியமனம் செய்யப்பட்ட அவர், ஓராண்டு கழிந்தபின், 27 பிப்ரவரி 1974 முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1980 இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 16 ஆகஸ்டு 1985 அன்று பணி ஓய்வு பெற்றார். நீதிபதி திரு. வரதராஜன் அவர்களின் துணைவியார் திருமதி கமலா வரதராஜன், தனது 80 ஆம் வயதில், 12.1.2009 அன்று காலமாகியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய சற்றேறக்குறைய 8 ஆண்டுகளில் பெரும்பாலும் இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்திலேயே (Division Bench) பங்கேற்றிருக்கிறார். குற்றவியல் வழக்குகளைக் கையாண்ட ஆயத்தில் பங்கேற்று பல தீர்ப்புரைகளை வழங்கியுள்ளார். தனி நீதிபதியாக உரிமையியல் வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். அவருடைய தீர்ப்புகளில் அந்தந்த வழக்குகளின் பொருண்மைகள் (Facts) தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்தது குறித்து, இன்றும் மூத்த வழக்குரைஞர்கள் நினைவு கூர்கின்றனர். அது அவர் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக ஏறத்தாழ 24 ஆண்டுகள் பணிபுரிந்ததன் தாக்கம் என்றும் சொல்லலாம். அந்தந்த வழக்கின் தன்மைக்கேற்றவாறே சட்டப்பொருள் விளக்கம் செய்யப்பட்டிருந்தமையால், அவர் வழங்கிய தீர்ப்புகள் பிற்காலங்களில் பெரிய அளவில் முன் தீர்ப்புகளாக மேற்கோள் காட்டப்படாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

நீதிமன்றத்தை பகட்டுத் தன்மையின்றி நடத்தியிருக்கிறார். வழக்குரைஞர்களில் மூத்தவர், இளநிலையர் என்ற அடிப்படையிலான பாகுபாடு எப்போதும் அவரிடம் இருந்ததில்லை. அதிலும், இளம் வழக்குரைஞர்களை அவர் பெரிதும் ஊக்குவித்திருக்கிறார். அவருடைய பதவிக் காலம் முழுவதும், அவர் ஓர் அப்பழுக்கற்ற நீதிபதி என்ற புகழுடையவராகத் திகழ்ந்தார். உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதிவு உயர்வு பெற்றபோது எழுதப்பட்ட குறிப்பில், “அரசமைப்புச் சட்டப் பிரச்சனைகள் குறித்து கையாள அவருக்குப் போதிய வாய்ப்பு ஏற்படவில்லை என்ற போதிலும், அவற்றைக் கையாள்வதற்கான திறமையை அவர் பெற்றிருக்கிறார் என்பதை அவரது பயணம் உணர்த்தும்” என்று ‘மெட்ராஸ் லா ஜர்னல்' என்ற தீர்ப்புத்திரட்டுப் பத்திரிகை குறிப்பிட்டது பின்னர் உண்மையானது.

உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்ற உடன், 1981 ஆம் ஆண்டிலேயே அவர் தனி நீதிபதியாக அரசுப்பணி தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வகையான வழக்குகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட விதிகள் தொடர்புடையவை. பின்னர், அரசமைப்புச் சட்ட ஆயம் (Constitution bench) எனப்படும் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய ஆயத்திலும் பங்களித்திருக்கிறார். மனித நேயத் தீர்ப்புகள் பலவற்றை வழங்கிய நீதிபதி ஓ. சின்னப்ப (ரெட்டி)யுடனும் இணைந்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறார்.

குறிப்பாக, 1983இல் மிது –எதிர்– பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில், “சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஒரு சிறைவாசி கொலைக் குற்றம் புரிந்தால், அந்நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறிய 1860 ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 303, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயத்தால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதெனக் கூறி சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. அந்த ஆயத்திலும் நீதிபதி வரதராஜன் பங்கேற்றுள்ளார்.

கணவன் – மனைவிக்கிடையே நடைபெறும் குடும்பத் தகராறின் காரணமாக, மனைவியின் மதிப்புறு பொருள் கணவனிடம் இருப்பதால் மட்டுமே கணவன் நம்பிக்கையுறு மோசடி (Criminal Breach of Trust) குற்றத்தை செய்ததாகக் கொள்ள முடியாது என்று மூன்று நீதிபதிகள் ஆயத்தில் பங்கேற்றபோது, பிரதீபா ராணி –எதிர்– சூரஜ்குமார் (1985) 2 குஇஇ 370 என்ற வழக்கில் தனியான, மாற்றுக் கருத்துடைய தீர்ப்பை வழங்கியுள்ளார். அதேசமயம், வேறொரு வழக்கில், (ஷம்பு சரண் சுக்லா [1985] 2 SCC 524) ‘கணவனை இழந்த ஒரு பெண் தனக்கு கணவன் வழியாகக் கிடைக்கப் பெற்ற பூஜை செய்யும் உரிமையை, தன்னால் தத்தெடுக்கப்பட்ட மகனுக்கு உயில் மூலம் உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளது' என்ற வகையான முற்போக்கான தீர்ப்பையும் வழங்கியுள்ளார்.

மேலும் ஒரு வழக்கில், (ரதி காந்தசாரி உத்யோக் – எதிர் – உ.பி.மாநில அரசு [1985] 2 SCC 485) பாராம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் வெல்லம் போன்ற பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிலக்கு, தொழிற்சாலை அமைத்து தயாரிக்கப்படும் அதே பொருளுக்குப் பொருந்தாது என்று பாரம்பரிய பொருள் தயாரிப்பு முறைகளை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் தீர்ப்பு மாற்றுக் கருத்துடன் அமைந்தது. இவ்வாறான மாற்றுக் கருத்து தீர்ப்புகள் அரிதானவை மட்டுமல்ல; அவற்றை முன்வைக்க மிகுந்த ஆய்வுக் கண்ணோட்டம் தேவை. பல நேர்வுகளில், மாற்றுக் கருத்து தீர்ப்புகள் பின்வரும் காலங்களில் சட்டப் பொருள் காண்பதில் வழிகாட்டியாகவும் முன்னேõடியாகவும் திகழ்கின்றன.

எல்.வி. ஜாதவ் –எதிர்– ஷங்கர்ராவ் (1983) 4 எதிர் 231 என்ற மற்றொரு வழக்கில், “திருமணத்திற்கு முன், திருமணத்தை நடத்தும் பொருட்டு சொத்தோ அல்லது மதிப்புறு பொருளோ கேட்பதுகூட வரதட்சணைக் குற்றமாகும்” என்று அவர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இன்றுவரை மாற்றத்திற்குள்ளாக்கப்படாமல் பின்பற்றப்பட்டு வரப்பட்டுள்ளது.

தனது பணிக்காலத்திற்குப் பின்னரும் நீதிபதி வரதராஜன், சமூக அக்கறையுடனேயே செயல்பட்டுள்ளார். அவரும், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் பிரகாஷ் அம்பேத்கரும் இணைந்து குடியரசுத் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதில், தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகள் குறித்து தீர்வு நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் கோரியுள்ளனர். தவிரவும், இடஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகளால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாமை குறித்தும் குறிப்பிட்டு, அது குறித்தும் நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளனர் (PUCL, Bulletin-Oct, 1993). அவரது உணர்வை தலித் இயக்கங்கள் முழுமையாக வெளிக்கொணராதது மிகப் பெரும் இழப்பே.

இருப்பினும், அவரது ஆளுமை முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. எத்தனையோ நீதிபதிகளின் உருவப்படங்கள் ஓவியங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நடைக்கூடத்தில் வைக்கப்பட்டிருப்பினும், நீதிபதி வரதராஜனுக்கு அவ்வாறான ஓர் அங்கீகாரம் இன்றைய நிலையில் செய்யப்படவில்லை. அதற்கான கோரிக்கையை முன்வைக்க ஓர் ஆதரவுக் கூட்டத்தைக் கூட ஏற்படுத்திக் கொள்ளாத ஒரு கண்ணியமான கனவான் நீதிபதி அவர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 57 ஆண்டுகள் கடந்த பின்னரும் உச்ச நீதிமன்றத்தில் இன்றுவரை நான்கு தலித் நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்திலுள்ள 35 நீதிபதி பதவிகளில் அய்ந்தில் ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தாலும் குறைந்தபட்சம் 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மட்டுமே உள்ளார். அவரது பதவிக் காலமும் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. தகுதியும், திறமையும் வாய்ந்த நேர்மையான தலித் வழக்குரைஞர்கள் / நீதிபதிகள் உயர்நீதித் துறையில் நியமனம் செய்யப்பட்டால் மட்டுமே அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமூக நீதி கைவசமாகும்.

சமூக ஆற்றலை இழந்தோம்

அகில இந்திய அஞ்சல் துறை எஸ்.சி./எஸ்.டி. பணியாளர் நலச்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளரும் ‘அம்பு' அமைப்பின் பொதுச்செயலாளருமான இ. செல்வராஜ், 12.10.2009 அன்று பரமக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரோடு அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் எஸ். சக்கரவர்த்தியும் மற்றுமிரு தோழர்களும் உயிரிழந்தனர். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக டாக்டர் அம்பேத்கர் வழியில், தமது சிந்தனை, பொருள், நேரம், திறன் அனைத்தையும் சளைக்காமல் வழங்கியவர் இ. செல்வராஜ்.

1955 ஆம் ஆண்டில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஏழுமலை சகுந்தலா இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். 1990களில் அஞ்சல்துறை தேர்வெழுதி அஞ்சல்துறைக்குள் நுழைந்த இவர், கடந்த 18 ஆண்டுகளில் தனது தொடர்ச்சியான தீவிர செயல்பாடுகளால், எஸ்.சி./எஸ்.டி. பணியாளர் சங்கங்களுக்கு முன்னுதாரணமாக, அகில இந்திய அஞ்சல் துறை எஸ்.சி./எஸ்.டி. பணியாளர் நலச்சங்கத்தின் தமிழ்நாடு பிரிவை உருவாக்கிக் காட்டினார்.

‘சாதி ஒழிப்பு' நூல் உள்ளிட்ட அம்பேத்கர் சிந்தனைகளையும், பவுத்தக் கருத்துக்களையும் தொகுத்து, பத்துக்கும் மேற்பட்ட நூல்களை சங்கத்தின் சார்பாக வெளியிட்டார். ஓர் அரசு அலுவலர் நலச் சங்கத்தின் செயலாளர் என்ற வரையறைகளைக் கடந்து, புத்தர் – அம்பேத்கர் வழி நின்று ஆழமான சமூக அரசியல் சிந்தனையுடன் செயலாற்றி வந்த செல்வராஜ், உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக சக்தியாகத் திகழ்ந்தார். அவருடைய மறைவு, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் களத்தில் ஏற்படும் பின்னடைவாகவே அமையும். அவருக்கு நம்முடைய வீரவணக்கம்!

Pin It