இந்தியா ஒரு குடியரசு நாடாக உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி “உணவுப் பாதுகாப்பு” என்ற சொல்லுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதம் தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை சலுகை விலையில் வழங்குவதை உறுதிப்படுத்துதல் என்று பொருள்.

இதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்திட்டங்களை தீட்டுவது குறித்தும், அவற்றை நிறைவேற்றுவது குறித்தும், நிறைவேற்றத் தவறுபவர்களை தண்டிப்பது குறித்தும் இந்த சட்ட முன்வரைவில் விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய ஆட்சியாளர்களும், மக்களும் “வல்லரசு” கனவில் மிதந்து கொண்டிருக்கும்போது தேர்தல் வாக்குறுதியைப் போன்ற இந்த சட்டத்தின் தேவை என்ன?

 “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” என்று இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடினார் சுப்ரமணிய பாரதி. சுதந்திரம் அடைந்த இந்தியாவை அவர் பார்த்திருந்தால் அவர் தற்கொலையே செய்து கொண்டிருக்கக்கூடும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 63 ஆண்டுகள் நிறைவடைந்த இன்றைய நிலையில், இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் தயாரித்துள்ள அறிக்கை பல கசக்கும் உண்மைகளை நம்முன் வைக்கிறது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 23 கோடிப்பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் இறப்பு வீதத்தை கணக்கிடும்போது அன்றாடம் உயிரிழக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகளும், 33 சதவீத பெரியவர்களும் பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக உயிரிழப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முப்பது நொடிக்கும் ஒரு குழந்தை உணவு கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் கிராமப்புற‌ங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம், ஆப்பிரிக்க நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைவிட பல மடங்கு மோசமாக இருப்பதாக ஐ.நா. அவை கூறுகிறது.

விவசாய நாடான இந்தியாவில் ஏன் இந்த நிலை? இந்தியாவின் விவசாயம் பொய்த்துப் போய்விட்டதா? இந்திய விவசாயிகள் வேறு தொழிலை நாட வேண்டிய நாள் நெருங்கிவிட்டதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முன் வேறொரு பழைய செய்தியை பார்ப்போம்.

அன்று: அடிமை இந்தியாவில்...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியான 1873ம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் கடும் உணவுப் பஞ்சம் நிலவியது. உணவு தானியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து இருந்தது.

அந்த தருணத்தில்தான் விக்டோரியா மகாராணி இந்தியாவின் அரசியாக முடிசூட்டிக்கொண்டார். இதைக் கொண்டாடும் விதத்தில் 1876ம் ஆண்டு இந்தியாவின் வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு ஒரு மாபெரும் விருந்தை நடத்தினார்.

ஒரு வார காலம் நடந்த அந்த விருந்து மனிதகுல வரலாற்றில் நடந்த மாபெரும் விருந்து என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் சென்னையிலும் பெரும் உணவுப் பஞ்சம் நிலவியது. அறிவியல் கண்டுபிடிப்புகளான தந்தியும், ரயிலும் மக்களுக்கு எதிராக வணிகர்களால் பயன்படுத்தப்பட்டது. உணவுப் பொருட்களுக்கு நாட்டின் எந்தப்பகுதியில் அதிக விலை கிடைக்கிறது என்பதை கண்டறிய தந்தி உதவியது. அந்தப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல ரயில் உதவியது. வணிகர்களின் இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த சென்னையின் கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் முயற்சித்தார். (அவரது நினைவாகவே பக்கிங்ஹாம் கால்வாய் என்று பெயர் சூட்டப்பட்டது) ஆனால் கவர்னர் பக்கிங்ஹாம் அவ்வாறு செய்துவிடாமல் முதலாளித்துவ பொருளாதாரவாதியான லிட்டன் பிரபு தடுத்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட உணவுப்பஞ்சத்தால் சென்னையில் சுமார் ஒரு லட்சம் பேர் தெருக்களில் இறந்து கிடந்தனர்.

இன்று: சுதந்திர இந்தியாவில்...

சுதந்திரம் பெற்ற இந்தியாவிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் அவை கூறும் புள்ளி விவரங்களை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே “தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்” போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

ஏன் இந்த நிலை? இந்தியாவில் உணவு உற்பத்தியின் அளவு குறைந்துவிட்டதா? இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களின் அளவு குறைந்துவிட்டதா? விவசாயிகள் அனைவரும் கல்வி அறிவு பெற்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு மென்பொருள் துறைக்கு இடம் பெயர்ந்து விட்டனரா? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் முன் மற்றொரு செய்தியை பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் பயன்படுத்தத் தகுதியின்றி வீணாகின்றன. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக்கழக கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் இந்த உணவு தானியங்கள் உரிய பராமரிப்பின்றி கெட்டுப்போகிறது. இவ்வாறு கெட்டு வீணாகும் உணவு தானியங்களை அப்புறப்படுத்துவதற்கும், அழிப்பதற்கும் மக்களின் வரிப்பணத்திலேயே சுமார் 2 கோடியே 60 லட்ச ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

இந்திய உணவுக்கிடங்குகளில் தேவையான கட்டிட வசதி இல்லாதிருத்தல், இருக்கும் கட்டிடங்களை பராமரிப்பின்றி வைத்திருத்தல், கூரைகளை பராமரிக்காமல் இருத்தல், கையாளுதலில் பொறுப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெருமளவு தானியங்கள் வீணாவதாக கண்டறியப்பட்டாலும், இந்தத் தவறுகளை செய்வோரைத் தண்டிக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. வேளாண்துறை அமைச்சரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையில் அரசு இது குறித்து கவலையின்றி இருப்பதும், பிரசினையை திசை திருப்பும் வகையில் நடந்து கொள்வதும் மனித உரிமை மீறலின் உச்சங்களாக பொருள் கொள்ளப்படவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த தானியங்களின் உற்பத்தி விலையைவிட மிகக்குறைவான விலைக்கு இந்த உணவு தானியங்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மனித சமூகத்திற்கு உணவளிக்கும் வேளாண் குடிமக்கள் பட்டினியாலும், கடன் பிரச்சினையாலும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்ச்சி இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய அம்சமாகும்.

மத்திய அரசின் நிறுவனமான “தேசிய குற்ற ஆவண மையம்” (National Crime Record Bureau) ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. கடந்த 2008ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொண்டவர்களின் சமூகச் சூழ்நிலைகளை ஆராயும்போது அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் சிறுவிவசாயிகளாகவோ, விவசாயக் கூலிகளாகவோ இருப்பதற்கான வாய்ப்பே அதிகம்.

இது குறித்து சிறிதும் கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் மீதமுள்ள விவசாயிகளையும் தற்கொலைக்கு தூண்டும் விதத்திலேயே நடந்து கொள்கின்றன. அதற்கேற்ற திட்டங்களையே தீட்டுகின்றன.

வேளாண் நிலங்களை, சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பன போன்ற பெயர்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, நீர் நிலைகளை பராமரிக்காமல் திட்டமிட்டு அழிப்பது, நீர் நிலைகளை தனியார் மயமாக்குவது, வேளாண் இடு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் இருப்பது, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கொள்முதல் விலை நிர்ணயிக்காமல் இருப்பது, உரம் – பூச்சி மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற ஆளுகைக்குள் விவசாயிகளை ஆழ்த்துவது, விதை மீதான உரிமைகளை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் மரபணுத் தொழில்நுட்பத்தை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிப்பது போன்ற பல்வேறு தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகளும், விதை ரகங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இந்த பொதுவான போக்கிலிருந்து கேரள மாநிலம் தனித்து நிற்பதைப் பாராட்ட வேண்டும். அம்மாநிலத்தில் வேளாண் நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றுவதை தடை செய்யும் சட்டம் இருக்கிறது: மரபணு போன்ற சர்ச்சைக்குரிய வேளாண்முறைகளுக்கு தடையும், இயற்கை வேளாண்மைக்கு அம்மாநில அரசின் ஆதரவும் இருக்கிறது: மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி அளவிலேயே இயற்கையின் மீதும், வேளாண்மையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் செயல் திட்டங்கள் அமலில் உள்ளன.

கேரளா போன்ற சில விதிவிலக்கான மாநிலங்களைத் தவிர தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வேளாண் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நிலத் தரகுத் தொழிலை அரசே முன்னின்று செய்கிறது. அரசின் இந்தப் போக்கால் பாதிக்கப்படும் மக்கள் போராடத் துணிந்தால் அவர்களை அடக்கும் கூலிப்படையாக காவல்துறையை பயன்படுத்தி மக்களைக் கொன்று குவிப்பதற்கு அரசுகள் வெட்கப்படுவதில்லை.

விதைகள் மீது இதுவரை விவசாயிகள் கொண்டிருந்த உரிமையைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் வகையில் “மரபணு தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையம்” போன்ற சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைந்து நிற்கிறது. மாநிலங்களின் இறையாண்மையையும், உரிமைகளையும் பறிக்கும் இந்த சட்டங்களை கூட்டணி தர்மம், சுயலாபம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மாநில கட்சிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றன.

இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பக்கூட வாய்ப்பிருக்காது. அவ்வாறு கேள்வி எழுப்புபவர்களுக்கு சிறைத்தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமுமே பதிலாக கிடைக்கும் என்பது போன்ற அபாயங்கள் கூட விவாதத்திற்கு இடமின்றி கடந்து போய் விடுகிறது.

இந்நிலையில்தான் இந்தியாவின் உணவு இறையாண்மை குறித்தும், விவசாயிகளின் அவல நிலை குறித்தும், வறுமையில் வாடும் மக்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையும், அது குறித்த விவாதங்களும் வல்லரசு கனவில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசை தட்டி எழுப்புகின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசோ, இந்தியாவின் வேளாண்மையை காப்பாற்றுவதற்கோ, வேளாண் விளை பொருட்களை காப்பாற்றுவதற்கோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக, “தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்” என்ற பெயரில் மேலும் ஒரு கண்துடைப்பு சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. வேளாண் விளை நிலங்களைப் பாதுகாத்தல், இயற்கை வேளாண்மையைப் பாதுகாத்தல், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், இடுபொருட்களை வழங்குதல், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல், இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்தல், மரபணுத் தொழில்நுட்பம் போன்ற பெயர்களில் விதைமீதான காப்புரிமை மற்றும் கட்டுப்பாட்டை பன்னாட்டு நிறுவனங்கள் அநியாயமாக கவருவதைத் தடுத்தல் போன்ற எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாமல் இந்த சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்கும் திட்டங்களை ஆய்வு செய்யாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவுப்பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும் குறுகிய நோக்கத்திலேயே இந்த சட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

நடைமுறையில் யாருக்கும் எந்தப் பயனையும் தரவியலாத இந்த சட்டத்தை நிறைவேற்றுவதாக விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் சத்தமின்றி “உயிரித்தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையம்”, “அணுவிபத்து இழப்பீட்டு சட்டம்” போன்ற மக்களுக்கு எதிரான சட்டங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறது, மத்திய அரசு. தனிநாடு, மாநில சுயாட்சி பேசிய கட்சிகள் எல்லாம் சுயலாபம் கருதி வாய்மூடி மெளனிகளாக இருப்பதோடு, இந்த மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்து வாக்களித்துக் கொண்டும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் வறுமையில் வசிப்போருக்கு ஒரு ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானத்துறை உள்ளிட்ட பல உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதில்லை. எனவே இவர்கள் அரசின் ஒரு ரூபாய் அரிசியைப் பெற இயலாது. மொழி புரியாத தமிழ்நாட்டில் மிகக்குறைந்த கூலியில் வடமாநில தொழிலாளர்கள் படும்பாடு மிகக்கொடுமை.

இவற்றைப் பார்க்கும்போது, பிரேசில் நாட்டில் வாழ்ந்து மறைந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஹெல்டர் கமரா என்பவரின் புகழ்பெற்ற மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது: “நான் ஏழைகளுக்கு உணவளித்தேன்: நான் மிகச்சிறந்த துறவி என்று அனைவரும் பாராட்டினார்கள்! ஏழைகளுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினேன்; நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அனைவரும் ஏசுகின்றனர்!”

***

என்ன செய்ய வேண்டும்?

உயிரித் தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையத்தைவிட இன்றைய உடனடி முக்கியத் தேவை, உயிரித்தொழில்நுட்ப பாதுகாப்பு ஆணையமே! ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்களால் திணிக்கப்படும் உயிரித்தொழில் நுட்பத்தால் ஆபத்துகள் ஏற்படலாம் என்று சூழலியலாளர்களும், அறிவியலில் அறத்தை வலியுறுத்துவோரும் எச்சரிக்கின்றனர். இதற்கான பதிலை எந்த உயிரித்தொழில்நுட்ப நிறுவனமும் உரிய முறையில் வழங்கவில்லை. எனவே மக்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டரீதியான அமைப்பு “உயிரித்தொழில்நுட்ப பாதுகாப்பு ஆணையமே”!

அதேபோல இந்தியாவின் இறையாண்மைக்கும், விவசாயிகளின் சுயசார்புத் தன்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத, விவசாயிகளை கடன் பொறிக்குள் தள்ளாத இயற்கை வேளாண்மையை இந்தியாவின் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களை, நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும், வேளாண் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றியமைப்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

விவசாயத்தை முன்னுரிமைத் தொழிலாக அங்கீகரித்து உண்மையான விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குறிப்பாக விதைகள், மற்றும் வேளாண் இடு பொருட்கள் மீது விலைக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். வேளாண் விலை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வேளாண் பொருட்களை பாதுகாப்பதற்கும், பதனிடுவதற்கும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த கட்டமைப்புகளில் சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவற்றைச் செய்தால் இந்திய வேளாண்மையும் பாதுகாக்கப்படும். இந்திய இறையாண்மையும் பாதுகாக்கப்படும். இவற்றை உறுதி செய்யாமல் “தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்” போன்ற அரைகுறை சட்டங்களை கொண்டுவருவது என்பது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி வழங்குவது போன்ற போலித்தனமான செயலே.

இந்த விவகாரங்கள் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வதும், விவாதிப்பதும், அனைத்துத் தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

- சுந்தரராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It