[இந்திய சமூகத்தில், சாதி விட்டு சாதி, மதம் விட்டு மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் வேறு மொழியைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்பவர்கள், தங்களது குடும்ப மானத்தை சீர்குலைத்து விட்டதாகக் கருதி, தங்களது குடும்ப உறுப்பினர்களால் “கௌரவ கொலை” என்ற பெயரில், படுகொலை செய்யப்படுகிறார்கள். மனிதத் தன்மையற்று, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் தொடரும், இதுபோன்ற “கௌரவ கொலை”களில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேரோடு பிடுங்கி எரிய முடியும்’’ என்று உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை பதிவுசெய்து வெளியிட்ட தீர்ப்பின் சுருக்கம்]:

****

                                           மாண்பு உச்ச நீதிமன்றம், புது டில்லி  

நீதிபதிகள்: அசோக் பான் & மார்கண்டேய கட்ஜு

மேற்கோள்: (2006) 5 SCC 475

லதா சிங்      ........ மனுதாரர்

- எதிர்

உத்திரபிரதேச மாநில அரசு ....... எதிர் மனுதாரர்

 

                            தீர்ப்புரை

1. இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 32ன் கீழ், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நீதிப்பேராணையானது, உத்திரபிரதேச மாநிலம், லக்னோவிலுள்ள சரோஜினி நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 366 மற்றும் 368 ஆகியவைகளை உள்ளடக்கி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை எண் 336/2000ஐயும், அதன் மீது லக்னோ விரைவு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அமர்வு வழக்கு எண். 1201/2001ஐயும் இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. மனுதாரர் 32 வயதுடைய ஒரு பட்டதாரி இளம்பெண் ஆவார். சம்பவ சமயத்தில், லக்னோ பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் மறைந்ததை தொடர்ந்து கான்பூரிலுள்ள அவரது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவரது கல்லூரி படிப்பை முடித்தார்.

3. கடந்த 02.11.2000 அன்று மனுதாரர் சொந்த விருப்பத்தில், தனது சகோதரரின் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு, டெல்லி பகுதியில் வியாபாரம் செய்து வந்த பிரம்மானந்த் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையும் பெற்றெடுத்தார்.

4. மனுதாரர் வெளியேறிய இரண்டாம் நாள், அவரைக் காணவில்லை என அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் காரணமாக, மம்தா, சங்கீதா குப்தா எனும், மனுதாரருடைய கணவரின் இரண்டு சகோதரிகளையும், ஒரு சகோதரியின் கணவரையும், உறவினர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். மம்தா அவரது ஒரு மாத கைகுழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

5. மேலும், மனுதாரர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார் என்ற கடுங்கோபத்தில், மனுதாரரின் சகோதரர்கள், மனுதாரரின் கணவரது தந்தையின் குடியிருப்புக்குச் சென்று, அவரது தாய் மற்றும் மாமாவை கடுமையாகத் தாக்கினார்கள். அங்கிருந்த பாத்திரங்கள், கட்டில், சேர்கள், துணிகளை சேதப்படுத்தினார்கள். மேலும், அந்த வீட்டையும் தாங்கள் கொண்டுவந்த பூட்டால் பூட்டி விட்டார்கள். மனுதாரரின் கணவரது ஒரு சகோதரர் உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்கப்படாமல் ஐந்து நாட்களாக அந்த வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டார். மனுதாரரின் கணவருக்குச் சொந்தமான வயல்களில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தையும் வெட்டி விற்றதுடன், அந்த நிலங்களையும், கடையையும், சட்டப்புறம்பான வழியில் வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டார்கள். மேலும் அவர்கள், மனுதாரரை அவரது கணவரும், கணவர் குடும்பத்தார்களும் கடத்திச் சென்று விட்டதாக பொய்யாக புகாரும் கொடுத்தார்கள். அதன் காரணமாகவே மனுதாரரின் கணவரது சகோதரிகளும், ஒரு சகோதரியின் கணவரும் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்கள். மனுதாரரின் கணவருக்குச் சொந்தமான கடைகளும் மனுதாரரின் சகோதரர்களால் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது.

6. மனுதாரரையும் அவரது கணவரையும் மற்றும் அவரது உறவினர்களையும் கடத்தி சென்று கொன்றுவிடுவோமென்றும், மனுதாரரின் சகோதரர்கள் மிரட்டினார்கள். மனுதாரரின் சகோதரர்களது வன்முறையின் காரணமாக குப்தா குடும்பத்தார்கள் லக்னோவிற்கு செல்வதற்கே பயந்து போனார்கள்.

7. மனுதாரர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் என்பதற்காகவே, மனுதாரரின் சகோதரர்களால், மனுதாரரின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது பொய்யாக வழக்கு தொடரப்பட்டது. மனுதாரரின் மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் கைது செய்யப்பட்டார்கள். மனுதாரரை திருமணம் செய்ய தூண்டினார் என்பதைத் தவிர வேறு எந்த குற்றத்தையும் செய்யாமலேயே மனுதாரரின் கணவரது மூன்று உறவினர்கள் பிணை கிடைக்காமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மனுதாரர் தனது கணவர் மற்றும் உறவினர்களை தனது சகோதரர்களின் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாவதிலிருந்து தடுக்க வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஜெய்பூரில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தை அணுகினார். தனது கணவரது மற்றும் தனது உயிரைப் பாதுகாக்க வேண்டி ஜெய்பூரில் பதுங்கி வாழ ஆரம்பித்தார். மாநில மகளிர் ஆணையம் மனுதாரரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டு அதுதொடர்பான தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி, அதனை லக்னோ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தது. இதில் தலையீடு செய்ய வேண்டி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும், உத்திரபிரதேச மாநில தலைமை செயலாளருக்கும், மாநில மகளிர் ஆணைய தலைவர் அவர்கள் கடிதம் ஒன்றினை அனுப்பினார்.

8. இந்த நிகழ்வு தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், லக்னோ சரோஜினி நகர் காவல்துறை ஆய்வாளர் இறுதி அறிக்கையினை தாக்கல் செய்தார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளான மனுதாரரின் சகோதரர்கள் எந்த குற்றத்தையும் புரியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, லக்னோ மாவட்ட அமர்வு நீதிபதி, அவர்களை, அவர்களது சொந்த பிணையின் பெயரில் விடுவித்ததோடு, அவர்கள் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்பதையும் பதிவு செய்தார். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக, லக்னோ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

9. அதனைதொடர்ந்து, புலன்விசாரணை அதிகாரி மனுதாரர் லதாசிங்கிடம் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் அவருக்கு ஆயுத பாதுகாப்பும் கொடுத்தார். வழக்கு தொடர்பான மனுதாரரின் கருத்தை, தலைமை குற்றவியல் நடுவர் பதிவு செய்துகொண்டார். அந்த அறிக்கையில் மனுதாரர் லதாசிங் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, பிரம்மானந் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், தலைமை குற்றவியல் நடுவர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை தள்ளுபடி செய்தார்.

10. இதனை தொடர்ந்து, மனுதாரர் மனநலம் சரியில்லாதவர் என்று கூறி, காவல்துறையினர் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக எதிர்மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். இதனால் மனுதாரர், ஜெய்பூரில் உள்ள மன நல மருத்துவ குழும மருத்துவர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவாக, மனுதாரர் எவ்விதமான மன நோய்க்கும் உள்ளாகவில்லை என அந்த குழுமத்தால் அறிக்கை வழங்கப்பட்டது.

11. தங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட பிணையில் விடமுடியா பிடியாணைக்கு எதிராக குற்றவாளிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனுதாக்கல் செய்தனர். குற்றவாளிகள் உண்மையில் குற்றமிழைத்தவர்களா? இல்லையா? என்பதைக் குறித்து விசாரித்திட வேண்டி அந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கானது இன்றளவும் நிலுவையில் உள்ளது.

12. மனுதாரர் தனக்கும், தனது கணவர் மற்றும் குழந்தை ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் லக்னோவிற்கு செல்ல அச்சப்பட்டார். மேலும் மனுதாரர் தனது சகோதரர்களால், தனது கணவர், அவரது உறவினர்கள், தூரத்து சொந்தங்கள் கூட கொலை செய்து விடுவதாக மிரட்டப்பட்டு, தாக்குதலுக்கும், மனிதத் தன்மையற்ற இழிவு படுத்துதலுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் தனது கணவரது குடும்ப சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தனது கணவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கடைகள் மற்றும் குடியிருப்பு போன்றவைகள் தனது சகோதரர்களால் வலுக்கட்டாயமாக பிடுங்கிகொள்ளப்பட்டதுடன், தனது சகோதரர்களின் மிரட்டலால் தனது கணவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 13. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டுக்கொண்டதோடு, மேலே கூறப்பட்ட வழக்கு நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டுள்ளோம்.

 14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட இவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காககொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

 18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானபடத்தக்க, கொடூரமான, நிலபிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எரிய முடியும்.

19. இந்த சூழலில் இந்த மனுவானது ஏற்றுக்கொள்ளப் படுகிறது. மனுதாரரின் கணவரது குடும்பத்தினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும், அதன் மீது லக்னோ விரைவு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கும், இது தொடர்பாக அனுப்பப்பட்ட அழைப்பாணைகளும் இரத்து செய்யப்படுகிறது. மனுதாரரோ, அவரது கணவரோ அல்லது கணவரது உறவினர்களோ எவ்விதமான துன்புறுத்தலுக்கோ, மிரட்டலுக்கோ அல்லது அவர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை சம்பவங்களுக்கோ ஆளாகாத வகையில், அவர்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும். அது போன்ற சம்பவங்களில் எவராவது ஈடுபட முயற்சிப்பார்கள் எனில், அவர்கள் சட்டப்பூர்வ வழியில், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காப்பட வேண்டும்.

20. மேலும், மனுதாரரின் மனுவில் கூறப்பட்டுள்ள குற்ற செயல்களில் ஈடுபட்ட, அவரது சகோதரர்கள் மீதும், அவருடன் இணைந்து செயல்பட்ட அவரது உறவினர்கள் மீதும், சட்டப்பூர்வமான வழிகளில் குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்.

தமிழாக்கம்: இராபர்ட் சந்திரகுமார் & சபிதா

Pin It