1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
Pin It