தமிழ்நாட்டு கிராமங்களில் சாதியத்தின் கொடூர வடிவமான தீண்டாமை, பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுவதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் எடுத்த நேரடி நடவடிக்கைகள், பரப்புரை இயக்கங்கள், நல்ல தாக்கங்களை உருவாக்கி வருகிறது. இரட்டை தம்ளர் முறையைப் பின்பற்றும் தேநீர்க் கடைகளின் பட்டியலை கிராமம் கிராமமாக சேகரித்து, அவற்றை அகற்ற உரிய கால அவகாசம் தந்து இறுதியில் காந்தி பிறந்த நாளில் இரட்டை தம்ளர்களை உடைக்கும் போராட்டத்தை கழகம் நடத்தியது. இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுதும் ஒரு மாத காலம் தொடர்ந்து பரப்புரைப் பயணங்களை நடத்தி, சாதி தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்காகவே உள்ள காவல்துறை பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தை திருச்சியில் கழகம் நடத்தி, ஏராளமான தோழர்கள் கைதானார்கள். இந்த ஒடுக்குமுறைகள் தமிழக கிராமங்களில் இயல்பான வாழ்க்கை முறையாகவே பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கழகம் முன் வைத்த மனித உரிமைக் குரலின் நியாயத்துக்கு அண்மையில் வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வலிமை சேர்த்திருக்கிறது. மதுரை அருகே ‘ஜல்லிக்கட்டு’ நடந்தபோது ஏற்பட்ட சாதிக் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் ஏப்.19 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டயே கட்ஜு தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதே நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில்தான் பெரியார் திராவிடர் கழகம் இரட்டை தம்ளர் உடைப்புப் போராட்டத்தை நடத்தியது.
தமிழ்நாட்டில் - தலித் மக்களுக்கு தேநீர்க் கடைகளில் தனிக் குவளைகளில் தேநீர் வழங்கும் முறை நடைமுறையில் இருப்பதை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியதோடு கடுமையான கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை குற்றம் இழைத்தோர் மீது எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுமட்டுமல்ல; இன்னும் ஒரு படி மேலே சென்று, “குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. அதிகாரிகளின் நிர்வாக வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இந்தக் குற்றங்கள் நடப்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி கண்டிப்பான ஆணையாகவே தீர்ப்பில் கூறியுள்ளார். சாதி - தீண்டாமைக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைப் பிரிவை இழுத்து மூடுவோம் என்று பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்த அதே கோரிக்கையின் நோக்கத்தை உச்சநீதிமன்றமே இப்போது ஆணையாக தனது தீர்ப்பில் வலியுறுத்தியிருப்பது பெரியார் திராவிடர் கழக போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியேயாகும்.
அண்மையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் எனும் கிராமத்தில் பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகள் இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய அதிர்ச்சியான செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த கிராமத்தில் தலித் தோழர்கள் எவரும் சாதி இந்துக்கள் வீதி வழியாக, இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடாதாம். மீறிச் சென்றால் - ஊர்ப் பழக்கத்தை மாற்றக் கூடாது என்று, சாதி ஆதிக்க வாதிகள் தாக்குவார்கள்; அதே போல் தலித் மக்கள் பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகள் வாழும் வீதி வழியாக வேட்டி கட்டிக் கொண்டு போகக் கூடாதாம். மீறி வேட்டி கட்டிக் கொண்டு போனால், வேட்டியை உருவி விடுவார்களாம்; வேட்டி சட்டைகளை தலித் மக்கள் எந்த முறையில் எந்த வடிவில் அணிய வேண்டும் என்பதை சாதி ஆதிக்கவாதிகளே தீர்மானிப்பார்களாம். இரு சக்கர வாகனத் தில் தலித் ஒருவர் சென்றதற்காக சாதி ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தி, அது கலவரமாக மாறி, காவல்துறையினர் மீதே சாதி ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 53 பேர் மீது 8 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். தீண்டாமை எந்த வடிவத்தில் செயல்படுத்தப்பட்டாலும், காவல் துறை இரும்புக் கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெற்கு மண்டல காவல்துறை உயர் அதிகாரி எம்.என். மஞ்சுநாதா, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வில்லூரில் நடந்து வரும் இந்த சாதி தீண்டாமை ஒடுக்குமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மூடி மறைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவல்துறை கூடுதல் இயக்குனர் இராதாகிருஷ்ணன், கடந்த மே 3 ஆம் தேதி வில்லூர் வந்து கலவரம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு, குற்றத்தை மறைத்த மாவட்ட காவல்துறை ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல தாக்கத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தீண்டாமை வடிவங்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கடமையை பெரியார் திராவிடர் கழகம் ஆற்ற வேண்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகல், மாவட்டக் கழகக் கூட்டங்களில் கழகப் பொறுப்பாளர்களிடம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வருகிறார். நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளிடம் இத் தீர்ப்பின் நகல்களை வழங்கி, உச்சநீதிமன்ற ஆணையை நினைவூட்டி நடவடிக்கை எடுக்கச் செய்வது தோழர்களின் கடமையாகும்.
பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய சாதி தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் வீணாகிவிடவில்லை. நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. பார்ப்பனிய சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த அணியமாவோம்!