“மனிதனை மனிதன் கொல்லுவது கொடூரமானது; சகித்துக் கொள்ளவும் முடியாதது. ஆயுதம் ஏந்த விரும்பாத இதயங்களையும், இனத்தையுமே நாங்கள் விரும்புகிறோம். அதையே உலகத்தில் உள்ள அனைவரும், எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் இளைய சமுதயாத்தின் அமைதிக்காகப் பாடுபடுவேன். வன்முறையற்ற உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்! மனித குலம் கொன்றழிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்புவோம். மதிப்புமிக்க, அமைதியான மனித வாழ்வு மட்டுமே நமது எதிர்கால இலட்சியமாக அமையட்டும்” இக்கொள்கையை மக்கள் மத்தியில் உணர்த்தி, உலக அமைதிக்காகப் பாடுபட்டவர் அயர்லாந்து பெண்மணி ‘மைரீடு கோரிகான்’.

mairead corrigan maguire‘மைரீடு கோரிகான்’ 1944 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27- ஆம் நாள், வடக்கு அயர்லாந்தில், உள்ள ‘பெல்பாஸ்ட்’ என்னுமிடத்தில் ஒரு ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். தமது பள்ளிக் கல்வியைப் புனித வின்சென்ட் துவக்கப்பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை, பெல்பாஸ்ட்டிலும் முடித்தார். குடும்ப வறுமையின் காரணமாகத் தமது பதினாறாவது வயதிலேயே, தட்டச்சு அறிந்த சுருக்கெழுத்தர் பணியில் சேர்ந்தார்.

பணிக்குச் சென்ற நேரம் போக, மீதி நேரத்தைக் கத்தோலிக்க அமைப்பின் தன்னார்வத் தொண்டில் கழித்தார். உடல் ஊனமுற்றோரும், ஏழைக் குழந்தைகளும் கல்வி கற்க உதவி செய்தார்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட்டில் ஒரு கோர நிகழ்வு நடந்தது; இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஐரிஸ் குடியரசின் இராணுவப் படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன், தமது காரைக் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஓட்டிச் சென்று ஏற்படுத்திய விபத்தில், இவரது சகோதரியின் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அக்குழந்தைகளின் தாயான தம் சகோதரி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின் அவரும் உயிரிழந்தார். அந்தத் தீவிரவாதி, பிரிட்டிஷ் இராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டான். இந்நிகழ்வையடுத்து வடக்கு அயர்லாந்து முழுவதும் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் கத்தோலிக்க – புரோட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களுக்கு இடையே மதக்கலவரமாக மாறியது. கலவரத்தில் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். பொதுமக்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வுகளைக் கண்டு நெஞ்சம் பதறினார் கோரிகான். அமைதியை எற்படுத்திட வேண்டுமென உறுதி பூண்டார். பீட்டி வில்லியம்ஸ் என்பவருடன் இணைந்து 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ‘மக்களுக்கான அமைதி இயக்க’த்தைத் தோற்றுவித்தார்.

பயங்கரவாதத்தின் மூலமும், கலவரத்தின் மூலமும் சமூகப் பிரச்சனைகளுக்கு எவ்விதத் தீர்வும் ஏற்படுத்த முடியாது என்பதை வடக்கு அயர்லாந்து மக்களிடையே கோரிகானும், பீட்டி வில்லியம்சும் இணைந்து தீவிரமாகப் பரப்புரை செய்தனர்.

தியாகமும், துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டு, மனித நேய உணர்வுடன் மக்களிடம் அமைதிக்கான பணியை செய்தனர் அதிஅற்புதமாகச் செய்தனர். அவர்களது சேவையில் பங்கேற்கப் பல ஆயிரக்கணக்கானவர்கள் அணி திரண்டனர். அமைதிக்கானப் இவர்களது பணி ‘இருளை அகற்றும் ஒளி’ எனப் போற்றப்பட்டது.

கத்தோலிக்க – புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கிட பேரணிகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்கள் பலவற்றை நடத்தினார்.

இவருடைய அமைதிக்கான சேவையைப் பாராட்டி, பல பரிசுகளும், பட்டங்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. ‘பெர்லின் சர்வதேசிய மனித உரிமைக் கழகம்’ இவருக்கு துணிவிற்கான விருதையும், அமெரிக்காவில் உள்ள ‘யேல்’ பல்கலைக் கழகம் சட்டத்திற்கான டாக்டர் பட்டத்தையும், வழங்கிப் பாராட்டியது. மேலும், இவருக்கு நார்விஜியன் மக்களின் ‘அமைதிப்பரிசு’ 1976 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 1976 ஆம் ஆண்டு இவரது ‘சமூக அமைதி’ பணிக்காக வழங்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு வயது முப்பத்து இரண்டு மட்டுமே. உலகில் மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் நோபல் பரிசை பெட்டி வில்லியம்ஸ் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், ஆஸ்திரியா, குரோஸியா மற்றும் ஸ்லோவினிய உள்ளிட்ட இருபத்து ஐந்து நாடுகளுக்கு மேல் இவர் சுற்றுப் பயணம் செய்து ‘அமைதி’யை வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.

பெட்டி வில்லியம்ஸ், bஷிரின் எபாடி, வங்கரி மாதாயி, ஜோடி வில்லியம்ஸ், ரிகோபெர்டா மென்சு முதலியோர், சமூக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள்; அவர்களுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு அமைதி, நீதி, சமத்துவம் முதலியவற்றுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் உலக அளவில் ஆதரவு திரட்டினார்.

இரண்டாம் போப் ஜான்பால், இரண்டாம் எலிசபெத்ராணி மற்றும் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் என உலகின் மிகவும் பிரபலத் தலைவர்களை நேரில் சந்தித்து உலகில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் பல இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்தன. இவருக்கு 1978 ஆம் ஆண்டு ‘பெண் சாதனையாளர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ‘டெரிஸ் விருது’ (பூவுலகில் அமைதி) 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இஸ்ரேல் நாட்டிற்கு 2004 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; அங்கு, அணு ஆயுதத்திற்கு எதிராகப் போராடியவரும், பதினெட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின், விடுவிக்கப்பட்டவருமான ‘மோர்டீச்சை வாணு’ என்பவருக்கு வரவேற்பு அளித்தார்.

பாலஸ்தீனத்தில், ‘வெஸ்ட் பேங்க் பாரியர்’ (தடுப்பு) - கட்டப்படுவதற்கு எதிரான இயக்கத்தில் ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு கலந்து கொண்டனர். அப்போது, ‘கோரிகான்’ காவலர்களால் தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார்.

அணு ஆயுதமற்ற உலகின் அமைதிக்காகவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், அரசின் ஒடுக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். கொள்கையில் உயர்ந்த குன்றுமணி விளக்கு - பெண்மணி ‘மைரீடு கோரிகான்’ என்பதைச் சரித்திரம் இன்றும் பேசுகிறது.

- பி.தயாளன்

Pin It