பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மருந்துகள் மூலமாக மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சை செய்தவன் மூலமும் நோய்களை சரிசெய்யலாம் என்ற கருத்து உருவானது. அறுவை சிகிச்சைகளும் பரவலாக செய்யப்பட்டது. ஆனால், கத்திகளைக் கொண்டு உடலைக் கிழித்து செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின்போது நோயாளிக்கு உண்டாகும் சொல்லொணாத வலியின் காரணமாக, விரைவாக அறுவை சிகிச்சையை செய்து முடித்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Joseph Lister 1902அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளில் கிருமிகள் தங்கிவிடும் அபாயத்தால் அறுவை சிகிச்சையினாலேயே நோயாளி மரணத்தைத் தழுவ நேரிடும் நிலை நிலவியது.

கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணியக் கிருமிகள், மருத்துவக் கருவிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கைகளில் மறைந்திருந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியின் காயத்தினுள் சென்று காயத்தை ஆறவிடாமல் சீழ்பிடிக்கச் செய்து புரையோடி, நோய்க் கிருமிகளின் தாக்குதலால் நோயாளி பரிதாபமாக இறந்துபோகும் துர்பாக்கியம் அக்காலத்தில் ஏற்பட்டது. இதற்கு காரணமென்ன என்பதை கண்டறிய மருத்துவ வல்லுநர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். முடிவில் நுண்ணியக் கிருமிகள் தான் காரணம் என்பதைக் கண்டறிந்தனர்.

உலக அளவில் 1850களில் அறுவை சிகிச்சையின் பிதாமகனாக விளங்கிய ஜோஸப் லிஸ்டர் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இங்கிலாந்து நாட்டின் பிரபலமான எஸ்ஸெக்ஸ் நகரில் 1827 ஆம் ஆண்டு பிறந்தார் ஜோஸப் லிஸ்டர். தமது பதினாறாவது வயதிலேயே, ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக ஆகவேண்டுமென முடிவு செய்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயின்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கினார். இவரது மருத்துவ அறிவைப் பெரிதும் அங்கீகரித்து பாராட்டின லண்டன் பல்கலைக் கழகங்கள். இவரை, அறுவை சிகிச்சைத் துறையில் மேல் படிப்புக்காக லிஸ்டருக்கு அனுமதி வழங்கின. இவர், அறுவை சிகிச்சைத் துறையில் நிபுணராக விளங்கிய ஜேம்ஸ் ஸைமின் மேற்பார்வையில், அறுவை சிகிச்சை முறைகளின் அனைத்து நுட்பங்களையும் கற்றார். மருத்துவத் துறையின் பட்டப்படிப்பும், அறுவை சிகிச்சை நிபுணத்துவத்துக்கான மேல் படிப்பும் முடித்தார். லண்டனில் உள்ள எடின்பர்க் ராயல் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

பணத்துக்காக மட்டும் அறுவை சிகிச்சை செய்யாமல், மருத்துவரானதே மனிதர்களின் நோய்களைத் தீர்க்கும் தொண்டு ஆற்றுவதற்குத்தான் எனும் உயரிய சிந்தனை கொண்டவராக விளங்கினார் ஜோஸப் லிஸ்டர்!

காற்று மூலமாகத்தான் நுண்ணிய நோய்க் கிருமிகள் பரவுகின்றன என்ற கருத்தும் நிலவியது. ஆனால், காற்று அகற்றப்பட்ட அறைக்குள் நோயாளியைத் தங்க வைத்தபோதும், அறுவை சிகிச்சை முடிந்தபிறகு ஏற்படும் நுண்ணிய நோய்க் கிருமிகளால் தாக்குண்டு நோயாளிகள் மடிந்தனர்.

எனவே, காற்று மட்டுமே நோய்க் கிருமிகளை பரப்பவில்லை என அறிந்தார் லிஸ்டர். அறுவை சிகிச்சை முடிந்ததும் தைக்கப்படும் சதை இணைப்புகள் தொற்று நோய் கண்டு, குணமாக்க இயலாத அளவுக்கு அழுகி, முடிவில் நோயாளி இறக்க நேரிடுகிறது. இதை தடுப்பது எப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

பொருட்களை அழுகுவதிலிருந்து தடுக்கவும், அழுகிய பொருட்கள் மேற்கொண்டு அழுகி துர்நாற்றம் வீசாமல் காக்கவும் அக்காலத்தில் ‘கார்போலிக் அமிலம்’ பயன்படுத்தப்பட்டடை அறிந்தார் லிஸ்டர்.

இவர், அறுவை சிகிச்சையின்போது, கார்போலிக் அமிலத்தைப் பயன்படுத்தி தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்க முயற்சி செய்யலாம் என முடிவு செய்தார்.

ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, தமது கைகள், தம்முடன் உதவி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் கைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என அனைத்தையும் கார்போலிக் அமிலத்தில் தோய்த்தெடுத்த பிறகே பயன்படுத்தினார். தொற்று நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் குணமடைந்தான் அச்சிறுவன்.

இவரது அணுகுமுறை, அறுவை சிகிச்சையின்போதும் அதற்கு பிறகும் ஏற்படும் தொற்று நோய்களை அழிக்கவல்ல கிருமிநாசினியை எளிதாக உருவாக்கி, உயிரைக் காத்திட முடியும் என்ற கருத்து மருத்துவ உலகில் மிகப்பெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது.

“அறுவை சிகிச்சை என்பது, வெறும் கத்தி, கத்திரி முதலிய ஆயுதங்கள் கொண்டு நோயாளியின் உடலில் இருக்கும் நோயைச் சரி செய்யும் முறை மட்டுமல்ல. அந்த முறையை, அணு அளவுகூட தூசு இல்லாத மிக மிக சுத்தமான சூழலில் நடத்து முடித்து பிறகு சிறிது நாட்கள் நோயாளிக்கு சுத்தமான பாதுகாப்புத் தந்து காப்பாற்றுவதே ஆகும்”. இதற்கு அவர், பயன்படுத்தி வெற்றி கண்ட கார்போலிக் அமிலம்தான் முறையான கிருமி நாசினி என்பதை 1867 ஆம் ஆண்டு மருத்துவ உலகிற்கு அறிவித்தார் ஜோஸப் லிஸ்டர்! இதே முறையில் துளியும் தொற்று அற்ற சீழ் கட்டி அறுவை சிகிச்சையை, 1871 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவின் உள்ளங்கையில் செய்து நிரூபித்தார் என்பது வரலாற்றுப் பதிவு.

கார்போலிக் அமிலம் ஒரு கிருமிநாசினி என கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்து பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றிட வழி செய்தவர் ஜோஸப் லிஸ்டர். இவர் லண்டன் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.

“மிக சுத்தமான சூழலே, நுண் கிருமிகள் அத்தனையும் ஒழிக்கப்பட்ட சூழலே, ஓர் அறுவை சிகிச்சையின் மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும்” என்பதை தமது ஆய்வுகள் மூலம் மருத்துவ உலகிற்கு உணர்த்தினார்.

கிருமி நாசினிகளின் தந்தையாக போற்றப்படும் ஜோசப் லிஸ்டர், 1912 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது மருத்துவ கண்டுபிடிப்பு மக்களின் உயிரை பாதுகாத்து வருகிறது!

Pin It