ஸ்டெதஸ்கோப் எனும் கருவியைக் கண்டுபிடித்து, இதயத் துடிப்புகளை துல்லியமாகக் கேட்டு, நோயாளியின் நோய் என்ன என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை மருத்துவ உலகிற்கு அளித்தவர் ரீன் தியோஃபில் ஹயாஸினித் லோனக்!

Rene Theophile Hyacinthe Laennecஃபிரான்ஸ் நாட்டில் 1781 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மாமா ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கினார். அவரது உதவியாளராகச் சேர்ந்தார் லேனெக். மருத்துவத் துறையின் மீது தீராத நமது பத்தொன்பதாவது வயதில் ஆவல் கொண்டு, பாரீஸ் நாட்டில் முதன்மை பெற்று விளங்கிய மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவ கல்வியினை முடித்தார்.

மருத்துவம், அறுவை சிகிச்சைகள் முதலிய துறைகளை மையமாக வைத்து பல மருத்துவக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார். பண முடிப்புகளையும் பெற்றார். அவருடைய கல்லூரிக் கட்டணங்களைக் கட்ட, வெற்றிப் பணங்கள் பேருதவியாய் அமைந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டில், மருத்துவத் துறை எவ்வித நவீன முன்னேற்றங்களும் அடைந்திருக்கவில்லை. நோயாளியைப் பிடித்துள்ள நோய் என்ன என்பதை, அவருடைய இதயத் துடிப்பினை ஆதாரமாய் வைத்க் கண்டுபிடிப்பார்கள் மருத்துவர்கள்; இன்றும் அப்படித்தான் ஸ்டெதஸ்கோப் உதவியோடு இதைச் செய்கிறார்கள். ஆனால், அன்றைய கால கட்டத்தில், ஸ்டெதஸ்கோப் போன்ற கருவிகள் எதுவுமே இல்லை. நோயாளியின் நெஞ்சில் மருத்துவர் தன்னுடைய காதினை ஆழப்பதித்து வைத்து, அப்போது கேட்கும் நோயாளியினுடைய இதயத் துடிப்பின் ஒலியை வைத்து என்ன நோய் எனக் கண்டறிய முயற்சி செய்வார்கள்; நோய் என்ன என்பதைப் பிரித்தறிய மருத்துவர்களுக்கு உதவி வந்த ஒரே வழி இதுவாகத்தான் இருந்தது.

ஆனால், இதிலும் ஓர் இடையூறு இருந்தது. மிகவும் குண்டான சதை மலையாய் இருக்கும் நோயாளிகளின் நெஞ்சில், மருத்துவர் எப்படித்தான் காது பதித்துக் கேட்டாலும் இதயத் துடிப்பே கேட்காது. மிகுதியாயிருக்கும் நெஞ்சகத்து தசைச் சுவர்கள், இதய ஒலியைத் துல்லியமாகக் கேட்கவிடாது தடுத்துவிடும்.

அப்போது, மருத்துவ மாணவராக விளங்கிய லேனெக், நபருக்கு நபர், நோய்க்கு நோய் மாறுபடும் இதயத்துடிப்பினை, நோயாளியின் நெஞ்சில் காது பதித்துக் கேட்ட மாத்திரத்தில் துல்லியமாகக் கணித்துச் சொல்லிவிடுவார். தமது இந்த அனுபவத்தை மருத்துவ உலகத்துக்குக் தெரியப்படுத்தும் நோக்கில், சிறந்த மருத்துவக் கட்டுரைகளை எழுதி அளித்தார் லேனெக்! காய்ச்சல், வலிப்புநோய், நுரையீரல் நோய், உடல்வலி எனப் பல்வேறு நோய்களுக்கும் எப்படி இதயம் துடிக்கிறது என்பதை பல்வேறு உடலமைப்பு கொண்ட மனிதர்களை ஆய்வு செய்து 1819 ஆம் ஆண்டு பல மருத்துவக் கட்டுரைகளை எழுதி அளித்தார்.

காதைக் கொண்டு போய் நோயாளியுடைய நெஞ்சில் புதைத்து வைத்து நோயின் தன்மையை அறிந்திட வேண்டும். ஒரு நாளைக்கு நூறு நோயாளிகள் வந்தால், காது வைத்துக் கேட்கும் வேலையை எத்தனை முறை செய்ய வேண்டியிருக்கிறது? அதற்கு விடை காண வேண்டுமென தீவிரமாகச் சிந்தித்தார் லேனெக்!

ஒருமுறை லேனெக் ஓய்வாக அமர்ந்திருந்தபோது, சில குழந்தைகள் குறும்பாய் ஒரு செய்கையை செய்து விளையாடிக் கொண்டிருந்ததையும், அந்த செய்கை தரும் வெற்றி கண்டு குழந்தைகள் களித்துக் கொண்டிருந்ததையும் பார்த்தார்.

வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த, ஓரிரு மரக் கதவுகள், அவற்றின் ஒரு பக்கத்தில் ஒரு குழந்தை தன் கை விரலால் ‘கொர் கொர்’ரென்று சீறியது; மறு பக்கத்தில், மரக் கதவோடு கதவாய் காதினைப் பதித்து நின்றுக் கொண்டிருக்கும் வேறொரு குழந்தை, இப்படிக் கீறுவதால் உண்டாகும் ஒலியைக் கேட்டுக் குதூகலித்தது. இதுதான் அந்த விளையாட்டு.

குழந்தைகளின் இந்த விளையாட்டு, மருத்துவ உலகின் உன்னத கண்டுபிடிப்பினை உருவாக்கித்தர வாய்ப்பாக அமைந்தது.

குழந்தைகள் கண்டுபிடித்த வழியினையே, இதய நோய் என கண்டறியப்பட்டு தன்னிடம் வந்து சேர்ந்த ஒரு கொழுத்த பருமனான நோயாளியிடம் பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தார் லேனெக். சுமார் இருபத்தைந்து தாள்களை ஒன்றாக அடுக்கி, அவையனைத்தையும் அப்படியே சேர்த்து ஒரு சிறு உருளையாக, சிலிண்டராக உருட்டி, நீண்ட அந்த குறுகிய உருளையின் திறந்த ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறுபக்கத்தைத் தன்னுடையக் காதிலும் பொருத்தினார். நோயாளியின் நெஞ்சில் தனது காதைக் கொண்டு போய் பதித்து வைத்து, தன்னுடைய கவனம் முழுவதையும் கேட்கும் இதயத் துடிப்பின் மீது குவித்தபோது கிடைக்காத, உருளையின்மூலம் இதயத் துடிப்பு துல்லியமாக கிடைத்தது. முதன் முதல் ஸ்டெதஸ்கோப் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உருளைகளைக் கொண்டு தமது ஆய்வுகளைத் தொடர்ந்தார் லேனெக். நோயாளியின் இதயத் துடிப்பினைத் துல்லியமாக மருத்துவரின் காதுக்கு ஒலி அலைகளாய் அனுப்பும் புதிய கருவியை கண்டுபிடித்தார். அக்கருவியை ‘ஸ்டெதஸ்கோப்’ என்று அழைத்தார்.

முழுமையான ஸ்டெதஸ்கோப் கருவியை 1819 ஆம் ஆண்டு மருத்துவ உலகிற்கு அளித்தார் லேனெக்! இக்கருவி இதய மற்றும் நெஞ்சக நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கருவியாக அங்கீகரித்து உலகளாவிய மருத்துவக் கழகங்கள் அறிவித்தன.

ஸ்டெத்ஸ்கோப், பலவிதமான நோய்களை பரிசோதிக்க உதவியது. ஓலி அலைகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்கும் கருவியாக ஸ்டெதஸ்கோப் விளங்குகிறது.

ஸ்டெதஸ்கோப் ‘லேனெக்கின்’ பெயரை மருத்துவ உலகில் என்றென்றும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்!

- பி.தயாளன்

Pin It