வைதீக பார்ப்பனியம், சாதியம் ஆகியவற்றுக்கு அடிப்படையாகவுள்ள மனு சுமிருதி, மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம், கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள், புராணங்கள் ஆகிய அனைத்துமே கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின் தான் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. இவை தற்செயலான நிகழ்ச்சி அல்ல. இரு பார்ப்பன அரச வம்சங்களின் காலத்தில் தான் வைதீக பார்ப்பனியத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் பல வகையிலும் வலிமை பெற்ற பார்ப்பனியம் அதன் பின்னர் தனது நோக்கத்தைச் செயல்படுத்தத், தெளிவாகத் திட்டமிட்டு இடைவிடாது பாடுபட்டு வந்து, இறுதியாக குப்தர் காலத்தில் அது தன்னையும் தனது சமற்கிருதமயமாக்கலையும், சாதியத்தையும் வட இந்தியாவில் உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. அதன் பின் இந்தியா முழுவதும் தனது வைதீக பார்ப்பனியத்தையும், தனது சமற்கிருதமயமாக்கலையும், சாதியத்தையும் கொண்டு சென்று நிலைநிறுத்துவதிலும் அது மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளைப் பெறுவதற்கு, இந்த பார்ப்பனிய இலக்கியங்கள் மிகப்பெரிய அளவில் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளன.

early india romila thaparஇரிக் யசூர், சாம, அதர்வண வேதங்களும் பிராமணங்களும் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்தான் எழுத்து வடிவம் பெற்றன. வைதீக பார்ப்பனியம் இரிக் யசூர், சாம வேதங்களில் தனது சிந்தனைக்கு ஏற்றவாறு சிறிய அளவில் மாற்றங்களைச் செய்தது. புருட சூக்தம் போன்றவை அப்பொழுதுதான் இரிக் வேதத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் அதர்வண வேதத்திலும், அதன் பின் வந்த பிராமணங்களிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு அவை பார்ப்பனிய மயமாக்கப்பட்டன.

பார்ப்பனியமயமாக்கல் - தேவி பிரசாத் சட்டோபத்யாயா:

சட்டோபாத்தியாயா பார்ப்பனியமயமாக்கல் குறித்து, “அதர்வண வேத சம்கிதையில் அவற்றிற்குரிய மூலவடிவம் இல்லை. அவை பிராமணிய மயமாக்கப்பட்டன... அதர்வண வேத சம்கிதையில் அவற்றின் உண்மையான தன்மை மறைந்து விட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் குருமார்களே இவற்றைத் தொகுத்தனர்; மேலும் இவற்றில் பல பாடல்களை அவர்களே இயற்றினர். அதர்வண வேதப் பாடல்களின் ஆசிரியர்கள், தொகுப்பாளர்கள் ஆகியோரது கண்ணோட்டம் இப்பாடல்களில் வெளிப்படுகின்றன…….அதர்வண வேதத்தின் ஒரு பகுதி முழுவதும் பார்ப்பனர்களது நலன்களைப் பற்றியதே” எனக் குறிப்பிடுகிறார்(23).

அதர்வண வேத சம்கிதையின் உண்மையான தன்மை மறைந்து விட்டது எனவும் அதனைத் தொகுத்தவர்களின் கண்ணோட்டம் அதில் வெளிப்படுகிறது எனவும் அதர்வண வேதத்தின் ஒருபகுதி முழுவதும் பார்ப்பன நலன்களைப்பற்றியே உள்ளது எனவும் அவர் கூறுகிறார். சட்டோபத்யாயா கூறுகிற இவ்விடயங்கள் மிக அதிக அளவில் பிராமணங்களுக்கும் பொருந்தும்.

பிராமணங்களைப் பற்றி சட்டோபாத்தியாயா, “பிராமணங்கள் காலத்தில் யக்ஞத்தினை மீட்டுருவாக்கம் செய்தது என்பது பிராமணியச் சார்பு உள்ளதாக இருந்தது”(24). எனவும், “பிற்காலத்தில் சாதிய வேறுபாடுகள் தோன்றிய பிறகு யக்ஞத்தை மீட்டுருவாக்கம் செய்தது இப்பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது”(25). எனவும் அவர் கூறியுள்ளார்.

பிராமணங்களில் பார்ப்பனிய மயமாக்கல்:

சாதிய வேறுபாடுகள் தோன்றிய பிற்காலத்தில், அதாவது பிராமணங்கள் எழுத்துருவம் பெற்ற காலத்தில்(கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு) பார்ப்பனியச் சார்பு கொண்டதாக இந்த பிராமணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. பிராமணங்கள் பார்ப்பனனை கடவுளுக்கும் மேலானவன் எனக் கூறுகின்றன. மனு சுமிருதியின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் நுட்பமாக பிராமணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பிராமணங்கள் உரைநடையில்தான் உள்ளன. அவை பண்டைய சுலோகங்கள் அல்ல. ஆகவே அவை முழுமையாக பார்ப்பனிய மயமாக்கப்பட்டன. 

சட்டோபாத்தியாயா அவர்கள் கூற்றுப்படி, அதர்வண வேத சம்கிதைகளே பார்ப்பனிய மயமாக்கப்பட்டது எனும் பொழுது உரைநடையில் இருக்கும் பிராமணங்களின் நிலை எந்த அளவு பார்ப்பனிய மயமாக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மூல பிராமணங்கள் உருவானதாக சொல்லப்படும் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வகுப்பு வேறுபாடுகள் உருவாகி இருக்கவில்லை. வட இந்தியாவில் நகரமயம் என்பதும் நாகரிகம் என்பதும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் தொடங்குகிறது என்பதை அகழாய்வு முடிவுகளும் இரோமிலா தாபர் போன்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றுகளும் உறுதி செய்கின்றன. வட இந்தியாவில் உபநிடத காலத்தில்தான், அதாவது கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில்தான் தொழில் பிரிவுகளும், வகுப்புகளும் உருவாகின. பிராமணங்கள் உருவான காலத்தில் புரோகிதர் தொழில் செய்யும் தனி வகுப்பு உருவாகியிருக்கவில்லை.. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கூட வட மேற்கு இந்தியாவிலுள்ள தட்ச சீலம் போன்ற பகுதிகளில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களே பல தொழில்களைச் செய்யும் நிலைதான் இருந்து வந்துள்ளது என்பதையும் அங்கு புரோகித வகுப்பு ஒரு தனி வகுப்பாக உருவாகி இருக்கவில்லை என்பதையும் முன்பே பார்த்தோம்.

ஆகவே கி.மு. 8ஆம் நூற்றாண்டில் புரோகிதர் என்ற தனிவகுப்போ, பார்ப்பனர் என்ற தனி வகுப்போ உருவாகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பிராமணங்கள் நால் வருண சாதிகளைப் பற்றிப் பேசுகிறது. அதனால்தான் சட்டோபாத்தியாயா சாதி வேறுபாடுகள் உருவானதற்குப் பிந்தைய காலத்தில் இந்த பிராமணங்களில் உள்ள யக்ஞங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும் இவைகள் பார்ப்பனியச் சார்பு கொண்டனவாக உள்ளன எனவும் கூறியுள்ளார். ஆகவே இந்த பிராமணங்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உரைநடையில் எழுதப்பட்டபொழுது பார்ப்பனிய மயமாக்கப்பட்டன. பிராமணங்கள் எந்த அளவு அறமற்ற, மனிதத் தன்மையற்ற, கொடுமையான நூல்களாக இருக்கின்றன என முன்பே பார்த்தோம். பிராமணங்கள் பெருமளவு மனு சுமிருதியின் கருத்துக்களை, அதன் பார்ப்பனியச் சார்பை அப்படியே பிரதிபலிக்கின்றன. இத்தரவுகள் இந்த பிராமணங்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் அதன் பின் இவை பண்டைய நூல்களோடு சேர்க்கப்பட்டு புராதன நூல்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும் உறுதி செய்கின்றன.

வட இந்தியாவில் இனக்குழுக்களும் பார்ப்பனியச் சடங்குகளும்:

பண்டைய காலக் கண சமூகங்கள் – டாங்கே:

‘ஆசாரங்க சமண சூத்திரங்கள்’ ஆறுவகையான கணங்கள் இருந்ததாகக் கூறுகின்றன. அவைகளில் ஒன்று அராயணி என்ற கணம். அராயணி எனில் அராசகம் எனச் சொல்லப்படுகிறது. இதில் தனியுடமை கிடையாது, வர்க்கங்கள் கிடையாது, அடிமைகளும் சுரண்டலும் கிடையாது. எனவே அக்கணங்களை கௌல்டியர் வெறுத்தார், மகாபாரதமும் வெறுத்தது. அந்தக் கணங்கள் கூட்டு வேலை செய்தும், கூட்டாக உண்டும் வாழ்ந்தன. இத்தகைய சமூகத்தை அலெக்சாண்டருடன் வந்த கிரேக்க வரலாற்றாசிரியர் நேரில் கண்டார். அந்த மக்கள் சுகமாக வாழ்ந்ததாக அவர் குறிப்பிடுகிறார். கிரேக்கர்கள் கண்டது ‘முச்சிகர்னிகா’ என்ற பெயரிடப்பட்ட கணம்.

அடுத்த முக்கியத்துவமான கணம் வைராச்சிய கணங்கள். அரசும் முடியாட்சியும் இந்தக் கணங்களில் உருவாகவில்லை. ஆனால் வருண வேலைப் பிரிவினையும், சொத்து வேறுபாடுகளும் தந்தை வழி ஏற்பாட்டில் அடிமைத்தனமும் உண்டாகியிருந்தன. இதனை ஐதரேயப் பிரமாணமும், யசூர் வேதமும் குறிப்பிடுகின்றன. இதில் சனபதம் முழுவதும் ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டிருந்தனர். ஆனால் இங்கு அடிமைகள் இருந்தனர். அதனால் சுபிட்சமும் வளர்ச்சியும் கணக்கிட முடியாத அளவுக்கு பெருகியது என வைதீக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இமாலயப் பிரதேசங்களில் இத்தகைய கணங்களைச் சேர்ந்த குரு சமூகத்தினரும், மத்திரர்களும் இருந்தனர்.

அடுத்த முக்கிய கண அமைப்பு என்பது சுயராச்சிய அமைப்பு. வம்ச பரம்பரையான மூத்தோர்களைக் கொண்ட சபைகள் அங்கு இருந்தன. அவற்றில் கண உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இருந்தனர். உறுப்பினர்களைவிட மூத்தோர்கள் உயர்மதிப்பு கொண்டவர்களாக இருந்தனர். அந்த சபைதான் அனைத்து அதிகாரங்களையும், கொண்ட சுய ஆட்சி அமைப்பாக செயல்பட்டது. இதை தைத்திரிய பிராமணம் விவரிக்கிறது.

பாணினி கண அமைப்பு குறித்தும் கண அமைப்புகளின் கூட்டமைப்புகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். சில கண சங்கங்களை ஆயுதசீவின் சங்கங்கள் என அவர் அழைக்கிறார். இதில் அடிமைகளைத் தவிர அனைவரும் ஆயுதம் தரித்திருந்தனர். இந்த கணத்தில் உடமை வேறுபாடுகள் ஊடுருவியிருந்தன, பணம், செல்வம், தந்தைவழிச்சமூகம், அடிமை முறை ஆகியன இருந்தன. ஆனால் கணத்தில் அனைவரும் உழைத்தார்கள். ஆனால் இதன் தலைமைக்கு பணக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கங்கள் தங்கள் பாதுகாப்புக்காக கூட்டமைப்புகளை அமைத்துக் கொண்டிருந்தன. இந்த வகையான சங்கங்கள் பாஞ்சாலத்திலிருந்து சிந்து மாகாணம் முடிய சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தன என பாணினி கூறுகிறார். சூட்ரகர்களும், மாலவர்களும் சிந்துப் பிரதேசத்துக்கு அருகில் இருந்தனர். ஆறு திரிகர்த்தர்களும் இமாலயப் பிரதேசத்தில் சம்முவுக்கு அருகில் இருந்தனர். இந்தியாவின் மேல் பகுதி தென்மேற்குப் பகுதி முழுமையும், தெற்கே விந்திய மலைத்தொடர் வரையிலும் மேற்சொன்ன கண சங்கங்களின் இராணுவ சனநாயகங்களுடைய ஆதிக்கத்தில் இருந்தன. இந்த கண சங்கங்கள் பலம் வாய்ந்தனவாக இருந்தன. அலெக்சாண்டர் இந்த கண சங்கங்களோடு மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

பாணினி, கிரேக்கர்கள், கௌல்டியர் ஆகியோரின் நூல்களில் நாம் இந்த கண சங்கங்களைச் சந்திக்கும்பொழுது அங்கு உடமை வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் தோன்றியிருந்தன. சுதந்திர மக்களும் அடிமைகளும் இருந்தனர். ஏழை பணக்காரன் வேறுபாடும் உருவாகி இருந்தன. அடுத்துப் பிரபலமாக இருந்த கணங்கள் இராசன் கணங்கள். லிச்சவி, மல்லர், சாக்கியர், குரு, பாஞ்சாலம், குதாரர் ஆகிய கணங்கள் இராசன் கணங்களில் புகழ் பெற்றவை. இந்தக் கணங்களில் சொத்து வேறுபாடு வெகுதூரம் முன்னேறியிருந்தது. வம்ச பரம்பரையான பெருமக்களின் குடும்பங்கள்தான் சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இராசன்கள் எனப்பட்டனர். இவற்றில் லிச்சாவி கணம் மிகவும் வளர்ச்சி பெற்ற கணம். இதில் 7707 இராசன்கள் இருந்தனர். இந்த இராசன்கள்தான் ஆட்சி புரியும் சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் பரம்பரையான பெருமக்கள் குடும்பங்கள். ஆனால் லிச்சாவி கணத்தின் மொத்த மக்கள் தொகை என்பது 168000. இதில் உள்குடிகள், புறக்குடிகள் என்ற இரு பிரிவினர் இருந்தனர். உள்குடிகள் தான் வைசாலியர்கள்.

குருக்கள், மத்திரர்கள் ஆகிய கணங்களில் பின் தங்கிய கணங்கள் இருந்தன. இக்கணங்களில் இருந்தவர்கள் வருணங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருந்தனர். ஒரு நாள் பார்ப்பனராகவும், ஒருநாள் சத்திரியராகவும், ஒருநாள் வைசியராகவும், ஒருநாள் சூத்திரராகவும், மீண்டும் பார்ப்பனராகவும் அவர்கள் மாறி மாறி இருக்கிறார்கள். அங்கு பெண்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. எல்லாரும் குடித்து, உண்டு களித்து வாழ்கிறார்கள். ஆகையால் இக்கணங்களின் இச்செயல்களை கிழக்கத்திய உடமை வர்க்கத்தார்கள் பாவகாரியம் என்றனர். இவை டாங்கே தரும் தரவுகள்(26).

இனக்குழுக்களும் பார்ப்பனியச் சடங்குகளும்:

டாங்கே அவர்களின் தரவுகள்படி கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்தியாவின் பெரும்பகுதியும் தமிழகம் தவிர தக்காணப் பகுதிகளிலும் இனக்குழுக்கள்தான் இருந்து வந்துள்ளன. சட்டோபாத்தியாயா பண்டைய கால இனக்குழுச் சமூகங்கள் குறித்து, “பண்டைய கால இந்தியாவிலும் ஏராளமான தொல்லியல் பழங்குடிச்சமூகங்கள் இருந்தன.  பண்டைக்காலத்தில் இந்தச் சமூகங்கள் இன்னும் அதிகமான இடங்களில் பிரபலமாக இருந்திருக்க வேண்டும். அரசதிகாரம் பெரும்பாலும் சிறிய எல்லைகளுக்கு உள்ளாகவே இருந்தது” எனக் கூறுகிறார்(27). குரு நிலப்பகுதியில் கி.மு. 5ஆம் நூற்றாண்டு வரை இனக்குழு அரசுகளே இருந்தன எனக் கூறுகிறார் கோசாம்பி. அவர் ‘உண்மையிலேயே கி.மு. 5ஆம் நூற்றாண்டுவரை குரு நிலத்தில் குருவம்சத் தலைவன் ஒருவனால் ஆளப்பட்ட பழங்குடி அரசு இருந்து வந்தது. பின்னர் அது வெகு விரைவிலேயே முற்றிலும் அழிந்துவிட்டது’ என்கிறார்(28).

மௌரியப்பேரரசு காலம் வரையிலும் வட இந்தியாவின் பெரும்பகுதியிலும் இனக்குழுச் சமூகங்கள்தான் இருந்து வந்தன. இந்தப் பழங்குடிச் சமூகங்கள் சிதைக்கப்படவேண்டும் எனவும் அம்மக்கள் சின்னஞ் சிறிய சுயதேவை நிறைவு பெற்ற கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கிராமங்கள் ஒன்றோடொன்று தொடர்பின்றித் தனித்தனியாக இருக்குமாறு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கௌல்டியர் கூறுகிறார்(29). அவரது கொள்கையை மௌரிய அரசு முடிந்தவரை செயல்படுத்தியது. நமது பழங்கால வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இம்முறை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இருந்த போதிலும் மிக நீண்ட காலமாக இனக்குழுக்கள் இருந்து வந்தன.

கி.மு. 30இல் மகதம் சாதவாகனர்களால் முறியடிக்கப்பட்டபின் அதனைச் சில இனக்குழு அரசுகள்தான் கைப்பற்றிக்கொண்டன. சிந்துவெளிப்பகுதியில் முசுலீம் படையெடுப்புகள் வரையிலும் இனக்குழு அரசுகள் இருந்து வந்துள்ளன. எனவே கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வட இந்தியா முழுவதிலும் இனக்குழுச் சமூகங்கள்தான் இருந்தன எனலாம். கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் வட இந்தியா நகரமயமாகியது. அரசுகள் அப்பொழுதான் உருவாகின. அதுவரை இனக்குழு அரசுகள்தான் இருந்து வந்தன. அப்படியானால் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் பிராமணங்கள் உருவான காலத்தில் பூசாரி வகுப்போ, பார்ப்பன வகுப்போ உருவாகி இருக்கச் சாத்தியமில்லை. அன்று இனக்குழு அரசுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. மேற்கு இந்தியப் பகுதியில் இன்னும் மேய்ச்சல் நில வாழ்க்கைதான் இருந்து வந்தது. வேளாண்மையும், கைத்தொழில்களும் சிறிய அளவில் நடைபெற்று வந்தன. கங்கைப் பகுதியில் இரும்புப் பயன்பாட்டால் வேகமாக வேளாண்மையும், சிறுதொழில்களும் பெருகி வந்தன. கங்கைப்பகுதியில் நாக இனக்குழுக்கள் போன்ற பூர்வீகத் தமிழிய(திராவிட) இனக்குழுக்கள் வலிமையாக இருந்து வந்தன. கி.மு. 642 முதல் மௌரியப் பேரரசு வரையான மகத அரசு என்பது நாக இனக்குழு அரசுகளுடைய வாரிசுகளின் அரசுகள்தான் என அம்பேத்கர் கூறுகிறார்(30). இச்செய்திகள் மௌரியப் பேரரசின் காலத்திற்கு முன்வரை வட இந்தியாவின் பெரும்பகுதி இனக்குழுச் சமூகங்களைக் கொண்டதாகத்தான் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.

மௌரியப் பேரரசின் காலம் வரையிலும் மகதப் பேரரசு பார்ப்பனியச் சடங்குகளுக்கு ஆதரவான அரசாக இருக்கவில்லை. அதுபோன்றே லிச்சாவி, சாக்கியர் போன்ற இனக்குழுச் சமூகங்களும் பார்ப்பனியச் சடங்குகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை. பெரும்பாலான இனக்குழு அரசுகள் பார்ப்பனியச் சடங்குகளுக்கு எதிரானவையாகவே இருந்தன என்றுதான் சொல்லப் பட்டுள்ளது. வட மேற்கு இந்தியாவிலும், சிந்துவெளிப் பகுதியிலும் இருந்த இனக்குழு அரசுகளில் கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளில் கூட புரோகித வகுப்பு அல்லது பார்ப்பன வகுப்பு என்ற தனி வகுப்பு எதுவும் உருவாகி இருக்கவில்லை. ஆகவே கி.மு. 8ஆம் நூற்றாண்டுகளில் அவை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்திருக்க வேண்டும். அக்காலகட்ட குரு பாஞ்சால இனக்குழுக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்றனவாக இருந்திருக்கலாம். அங்கும் அப்பொழுது புரோகித வகுப்பு அல்லது பார்ப்பன வகுப்பு என்ற தனி வகுப்பு உருவாகி இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அங்கு மட்டுமே பிராமணங்கள் கூறும் சடங்கு நிகழ்வுகள் சிறிய அளவில் நடந்திருக்கலாம்.

பிராமணங்கள் பிற்காலத்தவை:

பிராமணங்களில் கூறப்படுபவை குறித்து, “வறட்டுத்தனமான சட்டங்கள், மனம்போன போக்கில் புனைவு செய்யப்பட்ட குறியீடுகள், வரையரையற்ற கற்பனைகள், யாக நடைமுறைபற்றிய விளக்கங்கள் இவைதான் பிராமணங்கள்” என டாக்டர் தாசுகுப்தா அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்(31). கி.மு. 8ஆம் நூற்றாண்டு அளவில் பிராமணங்கள் கூறும் சடங்குகள் எதுவும் நடைபெற்றதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதை வரலாற்றுத் தரவுகள் உறுதி செய்கின்றன. ஆகவே பிராமணங்களில் சொல்லப்படும் பெரும்பாலானவை ‘வரையரையற்ற கற்பனைகள்’ என்கிற டாக்டர் தாசுகுப்தா அவர்களின் கூற்று உண்மை என ஆகிறது. வரலாற்றில் நடக்காததை பிராமணங்கள் கூறுவதால் தான் அதனை ‘வரையரையற்ற கற்பனைகள்’ என தாசுகுப்தா கூறுகிறார். இதுவரையான வரலாற்றுத் தரவுகளும் அதனை உறுதி செய்கின்றன.

கி.மு. 8ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்தியச் சமூகம் என்பது இனக்குழு நிலையில்தான் இருந்தது. ஓரளவு வளர்ச்சி பெற்ற கங்கைச் சமவேளிப் பகுதியில் இருந்த இனக்குழு அரசுகள் பார்ப்பனியச் சடங்குகளுக்கு எதிரானவையாகவே இருந்தன. ஆகவே குரு பாஞ்சாலப் பகுதியில் இருந்த இனக்குழு அரசுகள் மட்டுமே பார்ப்பனியச் சடங்குகளைச் சிறிய அளவில் செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை. அங்கும் புரோகித வகுப்பு தனி வகுப்பாக இருக்கவில்லை. ஆகவே பிராமணங்கள் அந்த காலகட்டத்தில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். ஆகவே அவைகளில் பெரும்பாலானவை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டு, பின் முற்காலத்திய நூல்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

சாதி வேறுபாடுகள் உருவானதற்குப் பிந்தைய காலத்தில் இந்த பிராமணங்களில் உள்ள யக்ஞங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும் இவைகள் பார்ப்பனியச்சார்பு கொண்டனவாக உள்ளன எனவும் சட்டோபாத்தியாயா கூறுவதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சாதி வேறுபாடுகள் உருவாகிய பின், அதாவது கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப்பின் பிராமணங்கள் உரை வடிவில் எழுதப்பட்ட சமயத்தில் யக்ஞங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, இந்த பிராமணங்களில் உள்ள பெரும்பாலானவை ‘வரையரையற்ற கற்பனைகள்’ கொண்டு எழுதி முடிக்கப்பட்டன. ஆகவே இந்நூல்கள் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் உருவாகவில்லை. அதற்கு மாறாக இந்நூல்களில் பெரும்பாலானவை கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் உருவாகின எனலாம். அதனால்தான் அவை பிராமணர்கள் குறித்துக் கூறும்பொழுது மனு சுமிருதியின் கருத்துகளைப் பிரதிபலிப்பவனாகவே உள்ளன. பிராமணங்கள் பார்ப்பனியச் சார்பு கொண்டனவாக உள்ளன என சட்டோபாத்தியாயா கூறுவது என்பதும் அவைகளில் பெரும்பாலானவை பிற்காலத்தில் வைதீகத்தால் உருவாக்கப்பட்டு, பின் முற்காலத்திய நூல்களோடு சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்கின்றன.

மார்க்சுமுல்லர்:

பேராசிரியர் மார்க்சு முல்லர் பிராமணங்கள் குறித்து, ‘பிராமணங்கள் மந்திரங்களைவிடக் காலத்தில் மிகவும் பிற்பட்டவை. இவை சுருதி என்ற வகையில் இடம்பெற அனுமதிக்கப்பட்டன என்றால் அதற்குக்காரணம், பார்ப்பனர்கள் பேராசையுடன் கொண்டாடப்படும் பல உரிமைகளுக்குத் தெய்வீக ஆதாரமாகக் காட்டுவதற்கு எளிமையான பழைய கவிதைகளைவிட இந்த இறையியல் நூல்களே பொருத்தமாக உள்ளன என்பதே. மந்திரங்களும், பிராமணங்களும் ஒரே காலத்தில் தோன்றியவையே என்று நிறுவுவதற்குப் பார்ப்பனர்கள் கூறுகின்ற வாதங்களுக்கு நாம் அதிகமாக மதிப்பளிக்க வேண்டியதில்லை…. என்றாலும் இவை காலத்தால் முற்பட்டவை எனப் பொதுவாக நிலவும் கருத்தைப் புறந்தள்ளக் கூடாது. மத சம்பந்தமான புத்தகத் தொகுப்புகளில் பிற்காலத்திய நூல்களும் புராதன நூல்களுடன் சேர்த்துத் தொகுக்கப்படுவது எளிதில் நடக்கக் கூடியதே. பிராமணங்கள் இவ்வாறுதான் சேர்க்கப்பட்டுள்ளன’ என மார்க்சு முல்லர் கூறுவதாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்(32).

ஆகவே பிராமணங்கள் மந்திரங்களைவிடக் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பதோடு அவை பிற்காலத்தில் உருவானவை எனக் கூறுகிறார் மார்க்சு முல்லர். பார்ப்பனர்களின் உரிமைகளுக்கு ஆதாரங்களாகக் காட்டுவதற்குப் பயன்படும் என்பதால் பிற்காலத்திய பார்ப்பன நூல்களும், புராதன நூல்களுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளன என மார்க்சு முல்லர் கருதுகிறார். பிராமணங்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் அவை தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதால், இந்தப் பிராமணங்கள் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டு முற்காலத்திய நூல்களோடு சேர்க்கப்பட்டுள்ளன என்கிற மார்க்சு முல்லர் அவர்களுடைய கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

வேதகாலம் ஒரு பொற்காலம் என்ற புனைகதை:

பார்ப்பனர்கள் வரலாற்றைப் புதைப்பதில் மறைப்பதில் அதனைத் திரித்துப் புராணக்கதைகளாக, மதம் சார்ந்த புனைவுகளாக குழப்புவதில் எவ்வளவு திறமையானவர்கள் என்பதற்கு கேரள வரலாறு ஒரு மிகச் சிறந்த சான்றாக இருக்கிறது. கி.மு. 600க்கு முன்பிருந்து தொண்டி, முசிறி, வஞ்சி போன்ற பல நகரங்களைக் கொண்டிருந்த, தமிழக மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களால் ஆளப்பட்ட, பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த சேர நாட்டிற்கு, அதாவது இன்றைய கேரளாவுக்கு கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன் வரலாறே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி அதில் பார்ப்பனர்கள் வெற்றியும் பெற்றிருந்தார்கள். கேரளாவில் உள்ள வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் அதன் வரலாற்றை புராணக்கதைகளின்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தொடங்குகின்றன. ஆனால் பண்டைய சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகமாக இருந்த முசிறி நகரில் பத்து ஆண்டுகளாக நடந்து வருகிற அகழாய்வு கேரளாவின், பண்டைய சேர நாட்டின் பழம்பெருமையை வெளிக்கொண்டு வருவதோடு, 2000 வருடங்களுக்கு முன்பே உலகப் புகழ் பெற்ற நகரங்களுக்கு இணையாக இருந்து வந்த அதன் வரலாற்றுச் சிறப்பை, அதன் வளர்ச்சி பெற்ற உயர் நாகரிகத்தைப் பறைசாற்றி வருகிறது.

பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் இன்றைய கேரளம் என்ற உண்மையையும், அவர்களின் மொழியான மழையாளத்தின் தாய் மொழி சமற்கிருதம் அல்ல தமிழ்தான் என்பதையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. இருந்த போதிலும் இன்றும் கேரளப் பொதுமக்களில் பலருக்கு கேரள வரலாறு என்பது புராணக் கதைகளின்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தொடங்குகிறது. அவர்களின் மூலமொழி என்பது தமிழ்தான் என்பதை ஏற்கும் மனநிலை அவர்களிடம் இன்றுவரை இருக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. நவீன காலத்திலும் பார்ப்பனர்களின் புராணங்களும், கற்பனையான மதம் சார்ந்த  கதையாடல்களும் கேரள மக்களின் மன ஆழங்களில் ஆழமாகப் புதைந்து போயுள்ளது என்பது பார்ப்பனர்களின் வெற்றியை பறைசாற்றுகிறது எனலாம்.

அதுபோன்றே சிந்துவெளி நாகரிகத்துக்கு பிந்தைய காலத்தில், கி.மு. 1200 முதல் கி.மு. 800 வரையான வட இந்திய வரலாறு என்பது இனக்குழு மக்களின் அநாகரிக வரலாறாகத்தான் இருந்து வந்தது. அன்று வட இந்திய ஆரிய இனக்குழு மக்கள் பெரும்பாலும் மேய்ச்சல் நில வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர். மிகச்சிறிய அளவில்தான் வேளாண்மையும் கைத் தொழில்களும் நடந்து வந்தன. கி.மு. 800இல் இரும்பு உலோகம் பயன்பாட்டுக்கு வந்தபின் கங்கைச் சமவெளிக்கு இடம் பெயர்ந்த அவர்கள் ஓரிடத்தில் தங்கி வேளாண்மையில் ஈடுபட்ட பின்னரே அங்கு வேளாண்மையும் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. அக்காலகட்டம் வரை வட இந்தியாவில் நாகரிகம் என்பதே உருவாகவில்லை. மேய்ச்சல் நில இனக்குழு வாழ்க்கைதான் இருந்து வந்தது.

கி.மு. 800 வரை வட இந்தியா முழுவதும் இனக்குழுச் சமூகங்கள்தான் இருந்து வந்தன. அதன்பின் வேளாண்மையும் தொழில்களும் வளர்ச்சியடைந்த பின்னர், கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்தியாவில் உள்ள கங்கைச் சமவெளிப் பகுதி மட்டும் நகரமயமாகத் தொடங்கியது. அகழாய்வு முடிவுகள் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை நகரங்கள் எதுவும் வட இந்தியாவில் உருவாகவில்லை என்பதை உறுதி செய்கின்றன. கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் அரசுகள் உருவாகத் தொடங்கின. அதுவரை இனக்குழு அரசுகள்தான் இருந்து வந்தன. ஆனால் கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையான காலத்தில் வேத கால நாகரிகம் என ஒன்று இருந்ததாகவும் அது பொற்காலகட்டமாக இருந்தது எனவும் புனைகதை கட்டப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் புனைகதையான இப்பொற்காலம் குறித்து, கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையான வேதகாலம் பொற்காலமாக இருந்தது என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இது திறனாய்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தத்தைத் தருகிறது எனவும் தனது முற்கால இந்தியா என்ற நூலில் வரலாற்று அறிஞர் இரோமிலா தாப்பர் வருத்தப்படுகிறார்(33).

புனைகதைகளை உருவாக்க புராணங்கள், இதிகாசங்கள் எழுதப்பட்டன. கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1000க்குள் 18 புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் காலத்தை அம்பேத்கர் பட்டியலிட்டுள்ளார். மகாபாரதம், இராமாயணம், கீதை முதலியன கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குள் இன்றைய அடிப்படை வடிவத்தைப் பெற்றன. ஆனால் அவைகளில் கி.பி. 1200 வரை தொடர்ந்து மாற்றங்கள் நடந்து வந்தன. வைதீக பார்ப்பனிய மதத்துக்கான அனைத்து அடிப்படைகளும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் உருவாகின. அதற்கு முன் வைதீகப் பார்ப்பனியம் இருக்கவில்லை. சாதியமும் கி.பி.க்குப்பின் தான் தோன்றி வலுப்பெறுகிறது. அதற்கு முன் சாதி இருக்கவில்லை. ஆகவே, எப்பொழுதெல்லாம் வைதீகப் பார்ப்பனியம் செல்வாக்கோடு இருக்கிறதோ அங்கு சமற்கிருதமயமாக்கமும் சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பல வகைகளிலும் உறுதி செய்கிறது.

பார்வை:

23. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 802.
24, 25. பக்: 790, 791.
26. பண்டைக்கால இந்தியா, எசு.ஏ. டாங்கே, அலைகள் வெளியீட்டகம், சூன் 2003, பக்: 159 - 171
27. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 225
28. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 166.
29. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 226
30. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 161.
31. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 61.
32. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 8, பக்: 71.
33. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 253.

Pin It