சங்க காலப் புலவர்களின் இயல்பும் அதன் வரலாற்றுப் பயனும்

       சங்ககாலப் புலவர்களும் சரி, பாணர்களும் சரி வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்த்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை, தங்கள் காலகட்டத்துக்கும் முந்தைய, பண்டைய காலகட்டத்துக்குரியவர்களை பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

       இதனால் நிகழ்காலப் புரவலர்களையும், நிகழ்கால நிகழ்வுகளையும் மட்டுமே அவர்கள் பாடினர் எனலாம். அதற்குரிய பரிசும் பெற்றனர். அவர்கள் புரவலர்களைப் புகழ்ந்து பாடுவதின் முக்கிய நோக்கம் பரிசு பெறுவதும், அதன் மூலம் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வதுமே ஆகும். சில புலவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், புகழ் பெறவும், மன்னர்களுக்கு அறிவுரை வழங்கவும் பாடினர். அவர்களும் நிகழ்கால அரசர்களையே, நிகழ்கால வேந்தர்களையே பாடினர். மறைந்தவர்களை, பழைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களைப் பாடுவது என்பது இல்லை எனலாம். ஆகையால் சங்ககாலப் புலவர்களால் பாடப்பட்ட புரவலர்களை, அந்தப் புலவர்களின் காலகட்டத்தைச் சார்ந்தவர்கள்தான் என உறுதிப் படுத்த முடியும். ஒரே புலவர் இரு புரவலர்களைப் பாடியிருந்தால், அந்த இரு புரவலர்களும் ஒப்பீட்டளவில் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் என அறிந்து கொள்ளலாம். அதுபோன்றே ஒரு புரவலரை இரண்டு மூன்று புலவர்கள் பாடியிருந்தால், அந்தப் புலவர்கள் அனைவரும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் என அறிய முடியும். உதாரணமாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்களே ஒழிய வேறு வழியில் பாடவோ, பரிசில் பெறவோ இல்லை. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

மாமூலனார்:

       சான்றாக மாமூலனார் என்ற வரலாற்றுப் பெரும்புலவரை எடுத்துக் கொள்வோம். இவர் சேர வேந்தர்களை மட்டுமே பாடினார் மற்ற வேந்தர்களைப் பாடவில்லை. இவர் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள் தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன எனலாம். தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவுமே பாடவில்லை.

பரணர்:

    மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர் என்ற வரலாற்றுப் பெரும் புலவரை எடுத்துக் கொள்வோம். மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர் இவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்செட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான இளஞ்செட்சென்னியையோ அல்லது பெரும்புட்சென்னியையோ அவர் பாடவில்லை.

    thennattu porkalangal 300பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

      பண்டைய நிகழ்வுகளை, பண்டைய புரவலர்களை சங்க காலப் புலவர்கள் பாடாததால், புலவர்களின் பாடல்களில் உள்ள புரவலர்களும், நிகழ்வுகளும் புலவர்களின் காலகட்டமே தான் என முடிவு செய்ய இயலும். புலவர்களின் காலத்தை நிர்ணயித்தால் அதனைக் கொண்டு அவர்கள் பாடிய புரவலர்கள் மற்றும் நிகழ்வுகளின் காலத்தை நம்மால் நிர்ணயம் செய்ய முடியும் என்ற முடிவு நமது சங்க கால வரலாற்றுக்கும், அதன் கால நிர்ணயத்துக்கும் பெருந்துணை புரிகிறது எனலாம். அந்த வகையில்தான் மாமூலனாரின் காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள புகளூர் கல்வெட்டு, அசோகரின் கல்வெட்டுக்கள், சம்பைக் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு போன்றவைகளின் காலத்தை, நமது சங்க கால இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு கணிக்கப்பட்ட கால அளவோடு பொருத்திப் பார்த்து, நமது கணிப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியாகக் கல்வெட்டுக்கள், இலக்கியக் கணக்கீடுகள், தொல்லியல் ஆய்வுகள், நாணயங்கள் முதலிய பல துறைகளின் காலக்கணிப்புகளும் இணைக்கப்பட்டுக் கால நிர்ணயம் வலுப்படுத்தப் பட்டுள்ளது. 

மாமூலனார் பாடல்கள்:      

       பொதுவாகப் பெரும்பாலான சங்ககாலப் புலவர்கள் தங்கள் காலகட்ட நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு பாடல்களை இயற்றி உள்ளனர் எனவும், வரலாற்றுக் கண்ணொட்டத்தில் இது மிகுந்த பலன் தரக்கூடிய ஒன்று எனவும் முன்பே பார்த்தோம். ஒரு சில புலவர்கள் ஆட்சியாளர்களின் இயற் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களின் குலப்பெயரை அல்லது வம்சப்பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர்; ஓரிரு ஆட்சியாளர்களை மட்டுமே பாடியுள்ளனர். இவை வரலாற்றுக் காலகட்டத்தை நிர்ணயிப்பதில் குழப்பத்தைத் தருபவனாக உள்ளன. எனினும் சங்ககாலப் பாடல்களை எழுதிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட புரவலர்கள் குறித்த ஆழ்ந்த ஆய்வு இக்குழப்பங்களைக் கடந்து தெளிவுபெற உதவுகிறது எனலாம்.

     முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றினையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இல்லை. மாமூலனார் தனது பாடல் ஒன்றில்

  " பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

   சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை

   நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ! "   (அகம் - 265) என்கிறார்.

     மகதத்தை ஆண்ட நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும் இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார். நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும். நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில் நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து,

      “தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்

   இன் இசை முரசம் கடிப்பித்து இரங்கத்                            

     தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்,

   பணியா மையின், பகைதலை வந்த

     மாகெழு தானை வம்ப மோரியர்

     புனைதேர் நேமி உருளிய குறைத்த"  (அகம் - 251)    எனவும்

                                        

     "முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்

     தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

     விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து,

     எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281)    எனவும்

          பாடியுள்ளார். அதில் அகம் 251ஆம் பாடலில், ‘தெம்முனை சிதைத்த ஞான்றை’ என்கிறார் மாமூலனார். தெம்முனை என்றால் போர்க்களம், பகைமுகம் எனவும், சிதைத்த என்றால் அழித்தல் எனவும்பொருள் தருகிறது கழகத்தமிழ் அகராதி. இதன்படி போர்க்களமான வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப் பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைகாவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற, வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது மௌரியர் என்பதன் பிராகிருதச் சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

      அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு, மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர் களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.

இதர புலவர்கள்:

      மாமூலனார் தவிர வேறுசில சங்கக் புலவர்களும், மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளனர். வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த கள்ளில் ஆத்திரையனார்,

    "விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்        

    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த"(புறம் - 175)  என்கிறார்.                          

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில், காதலன் கடந்து சென்ற பாதை குறித்து,

    "விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்

    பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த(அகம் - 69)  என்கிறார்.

        இவர்களின் இச்சங்கப் பாடல்களும், மௌரியர்கள் தங்களின்  தேர்படை முதலான பெரும்படைகளைக் கொண்டு வர மலைக்குன்றுகளை வெட்டிப் பாதையமைத்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன. எனவே மாமூலனார் மற்றும் இதர சங்கப் புலவர்களின் பாடல்கள், வடுகர்கள் வழிகாட்ட மௌரியர்கள் பெரும்படைகொண்டு தமிழகத்தைத் தாக்கினர் என்பதை உறுதி செய்கின்றன.                                                        

மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு :

       நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற மௌரியர்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின் தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை அவர்கள் தங்கள் படையெடுப்பை நடத்தியதும் குறித்து வரலாறு பேசுகிறது. ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு தமிழகத்தைத் தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள் தரும் நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது. இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(1).

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

    மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(2). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள் தனது நூலில், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(3). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

டி.டி. கோசாம்பி:

          மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(4). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

மகத அரசில் ஆட்சி மாற்றம்:     

       ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில் இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை நிர்ணயிப்பதே சரியானதும் முறையானதும் ஆகும். அதனைத்தான் நாம் செய்துள்ளோம்.

     நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் மிகவும் புகழ் பெற்றவனாக இருந்தான். அவனால் நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர் என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும் மாமூலனார் மிக நீண்ட காலம் வாழ்ந்தார். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 25 எனக் கொள்வோம் எனில் அவர் கி.மு. 355 வாக்கில் பிறந்தார் என முடிவு செய்யலாம்.

சோழர்களின் முதன்மை:

      மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. மெகத்தனிசு, சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும் அசோகரின் கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை அறிய முடிகிறது. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

பெரும்தோல்வி:

        சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப் பிறகு அது தீவிரப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்குகிறார்-(5).

       தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப் பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப் பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

(தொடரும்)

பார்வை:

1.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப் பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப் பாடல்: 336.

2.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

3.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH வெளியீடு, ஜூன்-2004, பக்:180.      

4. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

5.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்:57-63.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It