கவிதையே ஆதிமனிதனின் முதல் இலக்கியம் என்பார்கள். கு.ப.ராஜகோபலன், சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழி பெயர்ப்பு எனப் பல துறைகளில் தடம் பதித்தவர்.

kuparaகும்பகோணத்தில் 1902 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் கு.ப.ரா பிறந்தார். தந்தையார் பட்டாபிராமய்யர். தென்னக ரயில்வேயில் பணியாற்றியவர். தாயார் ஜானகி அம்மாள். கு.ப.ராவுக்கு ஆறு வயது ஆன போது அவரது குடும்பம் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றது. அங்குள்ள கொண்டையம்பேட்டைப் பள்ளியில் கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார்.

கு.ப.ரா. 1918 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பிறகு அவர் திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் வகுப்பினைப் படித்தார். இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது, தந்தையார் திடீரென்று இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவு கு.ப.ரா வின் வாழ்வில் நிகழ்ந்த முதல் துயரம் ஆகும். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்திற்கு மாறியது.

கு.ப.ரா. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். அப்போது வடமொழியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிஞர்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசன், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் எழுத்து வாழ்வில் ஒரு தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.

ஒரு முறை மகாகவி இரவீந்தரநாத் தாகூர், கு.ப.ரா படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது கவிஞர் தமது சில கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் வங்கக் கவிதைகள் கு.ப.ராவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. அதன் விளைவாக, அவர் வங்க மொழியைப் பயின்றார். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து ‘காளிதாசர்’ என்னும் பெயரில் ஒரு மாத இதழை கு.ப.ரா. நடத்தினார். மேலும், ‘ஷேக்ஸ்பியர் சங்கம்’ என்ற இலக்கிய அமைப்பிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

கு.ப.ராவும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து கும்பகோணத்தில் ‘பாரதி சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் பல ஆண்டுகள் பாரதி விழாவை நடத்தி, பாரதியின் பெருமையைப் பறைசாற்றினார்கள்.

கு.ப.ரா, தமது இருபத்து நான்காம் வயதில் அம்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அவர் மனதிற்கு, தாலுகா அலுவலகம் சிறிதும் பிடிக்கவில்லை. அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. கு.ப.ரா தமது முப்பத்திரண்டாம் வயதில் ‘கண்புரை’ நோயால் பார்வை பாதிப்புக்கு உள்ளானார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார்.

கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர் ‘மணிக்கொடி’ போன்ற இதழ்களுக்குக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். கண் பார்வை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர் சொல்லச் சொல்ல அவரது தங்கை கு.ப. சேது அம்மாள் எழுதினார். பின்னர், டாக்டர் ஆர். மகாலிங்கம் அளித்த சிகிச்சையின் பயனாய்க் கு.ப.ராவுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது.

பின்னர், கு.ப.ரா சென்னைக்குச் சென்றார். அங்கு, அவர் முழுநேர எழுத்தாளராகவே, தமது வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே தொழிலாகக் கொண்டு வாழ முற்பட்ட போது, கு.ப.ராவின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.

நிலையான வேலை எதுவும் கிடைக்காத போதும் அவர் மனம் தளராமல் ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘சுதந்திரச் சங்கு’, ‘சூறாவளி’, ‘ஹனுமான்’, ‘ஹிந்துஸ்தான்’ முதலான இதழ்களில் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் நாடகங்களும் எழுதி வந்தார்.

வ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரத தேவி’ என்னும் வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், ‘பாரத்வாஜன்’, ‘கரிச்சான்’, ‘சதயம்’ என்னும் புனைபெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர், கா.சீ. வேங்கடரமணி நடத்திய ‘பாரதமணி’ என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்திற்குத் திரும்பினார். அங்கு ‘மறுமலர்ச்சி நிலையம்’ என்னும் பெயரில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றைத் தொடங்கினார்.

கு.ப.ரா, வானொலியில் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலிக்குத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள விரும்பினர். ஆனால், அவர் வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தையே நம்பி வாழ்வது என்று முடிவு செய்து விட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.

கு.ப.ரா, தம் முழு நேர உழைப்பையும் இலக்கியத்திற்காகவே செலவழித்தார். “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்” என்னும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, இலக்கியத்தையே தம் வாழ்க்கைக்கு உரிய முழுமுதல் தொழிலாகக் கொண்டு அல்லும் பகலும் உழைத்தார். ஆனால், வழக்கம் போல இலக்கியம் அவருக்கு வறுமையையே பரிசாகக் கொடுத்தது.

“உத்தியோகம் என்பதில்லாமல் எழுத்துக்களை மட்டும் நம்பி உயிர் வாழ வேண்டி வந்த அவனுடைய நிலைமையைப் பார்த்து நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அவன் எழுதுவதில் சளைக்கவில்லை. வறுமை ஏற ஏறப் பத்திரிகைகளில் அவன் எழுத்துக்கள் அதிகப்பட்டன, இம்மனநிலை தான் அவன் துறவையும் லட்சியத்தையும் சாதனையையும் காட்டும் திறவுகோல்” – என்பது கு.ப.ரா பற்றிய ந.பிச்சமூர்த்தியின் முத்திரை வாசகங்கள்.

துறையூரிலிருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ என்ற இதழின் சிறப்பாசிரியராக 1943 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இடையிடையே ‘கலைமகள்’, ‘கலாமோகினி’ முதான பத்திரிகைகளுக்கும் எழுதி வந்தார். துறையூருக்குச் சென்று ‘கிராம ஊழிய’னின் ஆசிரியர் பொறுப்பை 1944 ஆம் ஆண்டு ஏற்றபோது ‘காங்க்ரின்’ (Gangrene) என்னும் கொடிய நோய் அவருடைய கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப்போனதால், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுத்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. உடல் நலிவுற்று, 27.04.1944 -ஆம் நாள் காலமானார் கு.ப.ரா.

“உருவ உள்ளடக்க இயைபுக்கு கு.ப.ரா. கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். கு.ப.ரா.வின் கதைகள் கு.ப.ரா. வின் முறைகளில் மட்டுமே சொல்ல முடியும். இன்னொரு விதத்தில் கண்டால், கு.ப. ராவின் முறைகள், கு.ப.ரா.வின் கதைகளுக்கே பொருந்தும்” – என இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கோ. கேசவன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தம் இறுதிக் காலத்தில் ‘வேரோட்டம்’ என்ற ஒரு நாவலை எழுதத் தொடங்கி, ஜந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். ஆனால், அந்நாவல் முடிவதற்குள், அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த முற்றுப் பெறாத நாவல், கு.ப.ராவின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

“ஒரு முக்கிய நிலைதிரி காலத்தின் நடுவே வாழ்ந்த கு.ப.ரா. தமக்கு முன் வாழ்ந்த சமுதாயம், தாம் காணும் சமுதாயம், காண விழையும் சமுதாயம் ஆகிய மூன்றையும் இந்நாவலில் காட்டியுள்ளார்” என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கு.ப.ரா.வின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘சிறிது வெளிச்சம்’ என்னும் நூலில் அவருடைய 21 கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புனைவியல் போக்கில் அமைந்த இக்கவிதைகளுக்குத் தமிழ் வசன கவிதை வரலாற்றில் ஓர் இன்றியமையாத இடம் உண்டு.

‘சுதந்திரச் சங்கு’, ‘மணிக்கொடி’, ‘பாரததேவி’ முதலிய இதழ்களில் கு.ப.ரா. ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார்.

“கதையம்சத்திலோ, கட்டுக் கோப்பிலோ, ஓரங்க நாடகத்திற்கான உத்தியைச் சரிவரச் கையாண்டு பாத்திரங்களின் உரையாடல்களை அழுத்தமாக, சிக்கனமாக, உணர்ச்சி தீவிரம் மிகுந்ததாக, பொருத்தமான விவகாரம் பேசுவதாக அமைத்து - உச்ச நிலையை (ஊடiஅயஒ) இயல்பாக ஏற்றித் தந்து தம் நாடகங்களைக் கு.ப.ரா, படைத்திருப்பதாக” - கருத்துரைக்கின்றார் சி.சு. செல்லப்பா.

கு.ப.ரா எழுதிய பதிமூன்று ஓரங்க நாடகங்களின் தொகுப்பான ‘அகலியை’ அவர் மறைந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது.

‘இலக்கியத் திறனாய்வு’ என்னும் நோக்கில் கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் ‘கண்ணன் என் கவி’ என்பதாகும். ‘பாரதியார் மகாகவி அல்லர்’ என்னும் கல்கியின் கூற்றை மறுத்து, ‘பாரதி மகாகவியே’ என்பதை நிலைநாட்டும் நன்முயற்சியாக இந்நூலைக் கு.ப.ராவும் சிட்டியும் சேர்ந்து படைத்தளித்தனர்.

மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க.கைலாசபதி தம் ‘திறனாய்வுப் பிரச்சினைகள்’ என்னும் நூலில், பகுப்புமுறைத் திறனாய்வைத் குறிப்பிடத்தக்க அளவு திறமையாகக் கையாண்டிருப்போரின் பட்டியலில் கு.ப.ரா.வின் பெயரையும் சேர்த்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

“எதிர்கால உலகம்’ என்பது கு.ப.ராவின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியார்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார்.

ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் ‘டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்’ (Dr. Jekyll and Mr. Hyde) என்னும் நாவலை தமிழில் ‘இரட்டை மனிதன்’ என்ற தலைப்பில் கொண்டு வந்தார், ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

வங்க மொழியில் பெரும்புகழ் பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் முதலியவர்களின் நாவல்களை அவர் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். ‘துர்க்கேச நந்தினி’, ‘தேவி சௌது ராணி’ என்பன பங்கிம் சந்திரரின் நாவல்கள் ஆகும். சரத் சந்திரரின் ‘அனுராதா’ ‘ஹரி லட்சுமி’ என்னும் இரண்டு கதைகளையும் கு.ப.ரா. தமிழில் மொழி பெயர்த்தள்ளார்.

“படிப்பவர் ஒவ்வொருவரும் மொழி பெயர்ப்பு என்று எண்ண முடியாது. புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியது முதல் முடியும் வரையில், கீழே வைக்க முடியாதபடி அவ்வளவு அழகாக உணர்ச்சி ததும்ப, செவ்விய நடையில் இதை கு.ப.ரா மொழி பெயர்த்துள்ளார்” என்று அன்றைய ‘தினமணி’ தன் பதிப்புரையில் கு.ப.ராவின் ‘தேவி சௌது ராணி’ மொழி பெயர்ப்பினைப் போற்றிப் பாராட்டியுள்ளது.

சரத் சந்திர சட்டர்ஜி, ஸியாராம் சரண குப்தர், வி.ஸ. காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் முதலிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் ஆறு புகழ் பெற்ற நாவல்களை ‘ஆறு நவயுக நாவல்கள்’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளார் கு.ப.ரா. இந்நூலுக்கு, தாம் எழுதிய முன்னுரையில், “இந்த மொழிபெயர்ப்புகளின் மூலம் தமிழிலும் முதல் தரமான நாவல்கள் தோன்றும்படியாக ஓர் ஊக்கம் ஏற்பட வேண்டும்; தமிழ் ஆசிரியர்கள், இவற்றைக் கண்டு, நம் தாய் மொழியிலும் பெரிய நாவல்களை எழுதத் துhண்டுதல் பெற்றால், இந்த நவீனங்களை வெளியிட எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி வீணில்லை” - எனத் தம் மொழிபெயர்ப்பு முயற்சியின் நோக்கத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

‘ ஸ்ரீ அரவிந்த யோகி’, ‘டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’ என்னும் இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களை கு.ப.ரா. படைத்துள்ளார்.

கு.ப.ரா. தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளையும், மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பாகும்.

“கு.ப.ராவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதி. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிலே அவருக்குச் சிறப்பான ஒரு பங்குண்டு. பல சிறுகதைகளில் அவர், முன்னரோ பின்னரோ பலரும் தொடாத பல சிகரங்களைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்” – என்று க.நா. சுப்ரமணியம் அவரது சிறுகதைகளின் சிறப்பைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

சிறுகதை எழுதியவர்களில் புதுமைப் பித்தனுக்கு இணையான நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் கு.ப.ரா. அவரது சிறுகதைகள் ‘புனர் ஜன்மம்’, ‘கனகாம்பரம்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘காணாமலே காதல்’ என்னும் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

கு.ப.ரா.வின் சிறுகதைகள், பெண்ணின் மனோபாவங்களை, உணர்ச்சி முனைப்புகளை ஆழமாக, அகலமாக, நுட்பமாக, கூர்மையாக வெளிப்படுத்துபவைகளாகும். “இந்துப் பெண்ணினத்தின் சார்பில் கு.ப.ரா.வை விட வலுவானதும் திண்மையுடையதுமான போர்க்குரல் தமிழ் இலக்கியத்தில் இவ்வளவு உயர்ந்த கலைத்திறனோடு எழுப்பப்படவில்லை” - என அசோகமித்திரன் கு.ப.ரா.வின் சிறுகதைகளை மதிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களைக் கு.ப.ரா. தம் சிறுகதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். அவரது எழுதுகோல் புறக்கணிக்கப்பட்ட விலைமகளிரையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலாக்களான விதவையரையும் ஆதரித்துள்ளது. உரிமையோடு தனிவாழ்வு வாழ முற்படும் படித்த பெண்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. படிப்பு வாசனையே இல்லாத எளிய கிராமத்துப் பெண்களையும் ஓசைப்படாமல் உலாவரச் செய்துள்ளது.

“வாழ்க்கையின் உண்மையான விஷயங்களைப் பற்றிப்த் தைரியமாக எழுதுவதும்-எடுத்துக் காட்டுவதுமே சிறுகதை” என நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கொஞ்சுத்தமிழ்ச் சிறுகதைகளைப் படைத்தார் கு.ப.ரா!

கு.ப.ராவின் சிறுகதைகள், தமிழ்ச் சிறுகதையின் தொடக்க கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றன; அதே நேரத்தில் ஒரு புதிய பாணியையும் தமிழ்ச் சிறுகதை உலகில் தோற்றுவித்தன.

கு.ப.ரா. இவ்வுலகில் வாழ்ந்தது நாற்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே. தம் வாழ்வின் இறுதி மூச்சு உள்ள வரை உள்ளும் புறமும் கலந்த ஒருவராக, எண்ணம், சொல், செயல் இவற்றிற்கு இடையே வேறுபாடு இல்லாத உயர்வானவராக வாழ்ந்தார்.

கு.ப.ரா. போன்ற ஓர் உண்மைக் கலைஞனுக்கும் உடலைத் தின்னும் வறுமைக்கும் இடையே நிகழும் போரில் இறுதியில் தோற்பது வறுமைதான்; ஏனெனில் வறுமை கலைஞனின் மறைவோடு செத்தொழிகிறது: கலைஞனோ தன் உயர்ந்த எழுத்தால் என்றென்றும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்!. உண்மைக் கலைஞனுக்குக் கிடைக்கும் சத்திய வெற்றி இது. கு.ப.ராவின் வாழ்வில் இவ்வெற்றி வாய்த்தது. தமிழ்ச் சிறுகதை இலக்கிய நந்தவனத்தில் மணம் மிகுந்த மலராகக் கு.ப.ரா என்றென்றும் நினைவு கூரப்படுவார்.

- பி.தயாளன்

Pin It