சங்க கால வரலாற்றுக் கட்டத்தில், தமிழகம் மௌரியப் பேரரசோடு தொடர்பு கொண்டிருந்தது. அதனால் மௌரியப் பேரரசு குறித்தும் தமிழகம் சார்ந்த அதன் தரவுகள் குறித்தும் உலகப் புகழ் பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர் வின்சென்ட் சுமித் அவர்களின் ஆய்வுக்கருத்துகள் சில இங்கு தரப்பட்டுள்ளன. அசோகர் குறித்தும் பௌத்த மதம் இலங்கையில் பரவியது குறித்தும் இலங்கை நூல்கள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் பல உண்மையற்றவை என வின்சென்ட் ஆர்தர் சுமித் (Vincent.A.Smith) அவர்கள் தாம் எழுதிய ‘அசோகர்-இந்தியாவின் பௌத்தப் பேரரசர்’ (Ashoka – The Budhist Emperor of India ) என்கிற நூலில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொய்க்கதைகள் :

 இலங்கைக் கதையின் படி அசோகர் தனது 99 சகோதரர்களைக் கொன்றபின் ஆட்சிக்கு வந்தது பொய்யான தகவல் எனவும்(பக்:18), கி.மு.273இல் ஆட்சிக்கு வந்த அசோகர் 4 ஆண்டுகள் கழித்தே முடிசூடிக் கொண்டார் என்பது உண்மை எனவும்(பக்:19), பௌத்தவராக மாறுவதற்குமுன் அசோகர் தீயவராகவும், கொடூரமானவராகவும் இருந்தார் என்று சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை எனவும்(பக்:21) வின்சென்ட் சுமித் கூறுகிறார். அசோகரை மதமாற்றம் செய்தவர் அவரது குருவான உபகுப்தர். இலங்கை மரபுப்படி உபகுப்தரின் இடத்தில் மோகாலி என்பவரின் புதல்வர் திஸ்ஸா இருக்கிறார். இவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என கர்னர் வாடல் கருத்து தெரிவித்திருப்பதாக வின்சென்ட் சுமித் தெரிவிக்கிறார்(பக்:34).

 பாறை ஆணை-2, மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளுக்கெல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன. இந்தத் தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்ட காலம் கி.மு. 258 என்று நம்ப இடமுள்ளது என்கிறார் வின்சென்ட் சுமித்(பக்:350). ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிட்சுகளால் எழுதப்பட்ட குறிப்புகளில் கிரேக்கம் சார்ந்த நாடுகளும், தமிழர்களின் நாடுகளும் விடப்பட்டுள்ளன.

 தமிழ் வழங்கும் பகுதியில் உள்ள நாடுகள் விடுபட்டதற்கு சிங்களர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பகைமை உணர்ச்சியே காரணம் எனவும், தாங்கள் வெறுக்கும் தமிழர்களிடமிருந்து பவுத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைக் கூறிகொள்ள அவர்கள் விரும்ப வில்லை எனவும், தமிழர்கள் அரசாண்ட தென்பகுதி நாடுகளுக்கு அசோகர் சமயத் தூதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகப்பட இடமில்லை எனவும் வின்சென்ட் சுமித் கூறுகிறார்(பக்:36,370). அசோகரின் ஆணைகள்(Edicts) இலங்கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை எனவும் எனவே அந்தத் தீவில் பேசப்படும் கதைகளுக்கு அசோகரின் ஆணைகளைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இலங்கைக் கதைகள் வரலாற்றை அறிந்து கொள்ள நம்பகத்தன்மை உள்ளவையாக இல்லை எனவும் கூறுகிறார் வின்சென்ட் சுமித் அவர்கள்.

 அசோகரின் மகள் எனக் கருதப்படும் சங்கமித்ரா பற்றிக் கல்வெட்டுகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனவும், அது போன்ற மகள் இருந்தாள் என்பதும் சந்தேகத்துக்குரியது எனவும், ஆனால் அசோகனின் சகோதரர் ஆன மகேந்தரர் ஓர் உண்மையான பாத்திரம் எனவும் சீனப் பயணிகளின் குறிப்புகளின்படி தமிழ் நாட்டில் இருந்து தான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின எனவும் வின்சென்ட் சுமித் தெரிவிக்கிறார்(பக்:38,39).

யுவான் சுவாங் பயணக் குறிப்புகள் – சுமித்:

 சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இருந்த தூபங்கள் அசோகரோடு தொடர்புடையவை என யுவான் சுவாங் (Huen Tsang) என்கிற சீனப் பயணி குறிப்பிடுகிறார். அவர் கி.பி 640ல் மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த மக்களின் சமய நிலை குறித்து, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை. வியாபார நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர்” என்கிறார்a.(பக்:39)

 மேலும் அச்சீனப் பயணி நூற்றுக் கணக்கான பிராமணக் கோயில்கள் இருந்தன எனவும், மதுரையில் அசோகரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்ட ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி ஒன்று காணப்பட்டது எனவும் அதன் தலைவாயிலும், கூடமும், அடித்தளமும் மட்டுமே எஞ்சியுள்ளன எனவும் அதில் புதர்கள் மண்டி இருந்தது எனவும், அதன் கிழக்கில் உள்ள அசோகரால் கட்டப்பட்ட தூபம் மண்ணில் புதைந்துள்ளது எனவும் சொல்கிறார்(பக்:39,40). யுவான்சுவாங் கருத்துப் படி மகேந்திரர் அசோகரின் மகன் அல்ல, சகோதரர் ஆவார். வட இந்தியா, தென் இந்தியா, பாடலிபுத்திரம், காஞ்சி ஆகிய இடங்களில் நிலவி வரும் கதைகள், 5ம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த பாகியானின் அறிக்கை, கி.பி 640ல் இந்தியா வந்த யுவான்சுவாங் என்பவரின் அறிக்கை ஆகிய அனைத்தும் இலங்கைக்கதைக்கு எதிராகவே உள்ளன என்கிறார் வின்சென்ட் சுமித் அவர்கள்(பக்:40).

 கி.மு.325-322 வரையான காலங்களில் “இந்தியப் பிரதேசங்களில் கலகம்” நடந்து வந்ததாக ஆசிரியர் வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்(பக்:56). இந்தியாவின் தெற்குப் பகுதிகள் பிம்பிசாரர் காலத்தில் மௌரியப் பேரரசோடு இணைக்கப் பட்டிருக்கலாம் எனவும், துளுவ நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த கல்யாணபுரி ஆற்று முகத்துவாரம் பேரரசின் மேற்கு எல்லையாகவும் பெண்ணாற்றின் கரையில் உள்ள நெல்லூர் கிழக்கு எல்லையாகவும் இருந்தது எனவும் கூறுகிறார் சுமித் அவர்கள்(பக்:64). எனவே துளுவ நாடு எனப்படும் ஏழிற்குன்ற பாழி நகர் நன்னனின் கொண்காண நாடு மௌரியப் பேரரசில் இருக்கவில்லை என ஆகிறது.

மௌரியப் பேரரசின் ஆட்சி முறை:

 பெண் காவலர்கள் மன்னரை நெருங்கிப் பணிவிடை செய்வது இந்தியாவில் ஒரு பழக்கம் எனவும், மன்னர் காலையில் எழுந்தவுடன் ஒரு பெண் வில்லாளியின் முகத்தில்தான் விழிக்க வேண்டும் எனவும், அது ஒரு நல்ல சகுனம் எனவும் சாணக்கியர் தெரிவிக்கிறார் (பக்:70).

 மௌரியப் பேரரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தையும் அரசின் அதிகாரிகளே நிர்வகித்து வந்தனர். தட்சசீலம், உச்செயினி, கோசாலி, சுவர்ணகிரி ஆகிய நான்கு மாகாணங்களின் இளவரசர்களும் வைசுராய்களாகச் செயல்பட்டனர். இந்த வைசுராய்கள் அதிகார வர்க்கத்தின் தலைவர்களாக இருந்தனர். அரசு ஒரு எதேச்சதிகார அரசாகவே செயல்பட்டது. மன்னரின் விருப்பமே மேலோங்கி நின்றது. ஆணைகளைச் செயல்படுத்தும் உயர்நிலை அதிகாரிகள் மகாமாத்திரர்கள் எனப்பட்டனர். கீழ்நிலை அதிகாரிகள் யுக்தர்கள் எனப்பட்டனர். பேரரசின் மையப் பகுதிகள், தலைநகரில் நேரடியாக நியமிக்கப் பட்ட அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன. யுக்தர்கள், உபயுக்தர்கள், எழுத்தாளர்கள் போன்ற சார்நிலைப் பணியாளர்களும் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மேலே இருந்த அதிகாரிகளின் கட்டளைகளைச் செயல்படுத்தினர். மௌரிய அரசு கீழிருந்து மேல்வரை படிப்படியான அதிகாரவர்க்க முறையில் ஆளப்பட்டது.

 மன்னரின் கீழ் ஒரு தலைமைச் செயலகம் இருந்தது. இதில் லேக்கர்கள் என்ற செயலர்கள் பணியாற்றினர். உள்நாட்டு விவகாரம் மிக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது என்பதற்கு நிறையச் சாட்சியங்கள் உள்ளன. அரசில் பல துறைகள் இருந்தன. நீர்ப்பாசனத் துறை என்னை மிகவும் கவர்ந்தது என மெகத்தனிசு தெரிவிக்கிறார். இருத்ரதாமனின் கிர்னார் கல்வெட்டுகள் இத்துறை எவ்வாறு செயல்பட்டது எனச் சுருக்கமாக விவரிக்கிறது. நிலவரியே கருவூலத்தை நிரப்பும் முக்கிய வருவாயாக இருந்தது. அனைத்து விவசாய நிலங்களும் அரசுச் சொத்தாகவே கருதப்பட்டது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி நான்கு அல்லது ஆறில் ஒரு பங்காக இருந்தது. அதுபோகத் தண்ணீர்த் தீர்வையும் இதர வரிகளும் இருந்தன. அதிகார வர்க்கத்தில் இன்று காணப்படும் ஊழல் அன்றும் இருந்தது எனவும், 40 வழிகளில் ஊழல் புரிய முடியும் எனவும், ஒரு அரசு ஊழியன் அரசரின் வருமானத்தில் ஒரு சிறிய அளவாவது சாப்பிடாமல் இருக்க முடியாது எனவும் சாணக்கியரின் அர்த்தசாத்திரம் குறிப்பிடுகிறது(பக்:72-75).

 உரோமானிய வரலாற்று ஆசிரியர் ஜஸ்டின், சந்திரகுப்தரின் அரசு மிகவும் கடுமையாக இருந்தது எனவும், மக்களை அடிமைகளாகவே அவர் வைத்திருந்தார் எனவும், தண்டனைச் சட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்தன எனவும் சிறப்பு ஒற்றர்களை வைத்து உயர் அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கிறார்(பக்:77).

 தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன எனவும் அதனால் மௌரியர்களிடமும் கடற்படை இருந்திருக்கலாம் எனவும் ஆனால் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கருதுகிறார் சுமித் அவர்கள்(பக்:83). அசோகருக்குப்பின் அவரது ஒரு மகன் ‘தசரதர்’ கி.மு.232ல் பேரரசின் கிழக்குப் பகுதியையும், இன்னொருவர் ‘சம்ப்ரதி’ மேற்கு பகுதியையும் பிரித்து அரசாண்டனர் (பக்:172). மௌரிய பேரரசு அமைவதற்கு முன் இந்தியா பல குறுநில மன்னர்களாலும், இனத்தலைவர்களாலும் நிர்வகிக்கப்பட்டு எண்ணற்ற சிறு அரசுகளைக் கொண்டிருந்தது என்பதை அலெக்சாண்டர் காலப் பதிவுகள் தெரிவிக்கின்றன எனவும், அந்த நாட்களில் மகதம் ஒரு பிரதான இடத்தை வகித்தது உண்மையெனினும் அதனை ஆண்ட நந்தவம்ச அரசன் தன்னை இந்தியாவின் சக்கரவர்த்தி என அறிவித்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கிறார் வின்சென்ட் சுமித் அவர்கள்(பக்:81,82).

அசோகர் ஆணைகளில் தமிழக அரசுகள் (கிர்னார் வாசகம்):

ஆணை-2: மனிதர்கள், விலங்குகள் நோய் தீர்த்தல் - கி.மு.256

 “தனது நாட்டிற்கு அருகிலுள்ள சோழ பாண்டிய சேர நாடுகளிலும், சத்யபுத்ராவிலும், தாமிரபரணி ஆறு வரையிலும் அதேபோன்று கிரேக்க அரசர் ஆண்டியோகாசின் ஆட்சிப்பகுதியிலும் மற்றும் அவரது அண்டைய நாடுகளிலும்” (பக்:123)

ஆணை-13: தர்ம நெறி பரப்ப வேண்டிய நாடுகள் – கி.மு.256

 “ஆண்டியோகாஸ் ஆட்சி செய்ய்யும் கிரேக்க நாட்டிலும், மன்னர்கள் டாலமி, ஆண்டிகோனஸ், தெற்கே சோழர், பாண்டியர் ஆளும் பகுதிகளிலும் தாமிரபரணி நதிக்கரை வரையிலும் “ (பக்:139,140)

மேலே தரப்பட்டுள்ள அசோகரின் இரு கல்வெட்டு ஆணைகளிலும் ‘தாமிரபரணி ஆறு வரையிலும்’ என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. இலங்கை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

(தொடரும்)

- கணியன் பாலன்,  ஈரோடு

Pin It