சங்க இலக்கியத்தில் வணிகம்: பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியத்தில் வணிகம் குறித்தும், கடல் வணிகம் குறித்தும் சொல்லப்பட்ட தரவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆதலால் சங்க இலக்கியத்தில் வணிகம், கடல்வணிகம் முதலியன குறித்துப் பேசப்பட்ட விடயங்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

புகார் வணிகர்கள்:

  நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்

  வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி

  கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது

  . . . . . . . . . . . . . மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

  புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்    

    -பட்டினப்பாலை(வரிகள்: 206-217)

  shipசோழ வேந்தன் இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது தான் பட்டினப் பாலை. இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. “உழவர்களின், நீண்ட நுகத்தடியின் நடு போல, நடுவுநிலைமை தவறாத மனம் உடையவர்களாகவும், பழி அஞ்சி பொய்பேசாது மெய்யேபேசி, தம்மையும் பிறரையும், ஒன்றாக மதிப்பவர்களாகவும் இருப்பவர்கள் புகார் வணிகர்கள். தம்முடைய பொருட்களையும், பிறருடைய பொருட்களையும் ஒன்றாக மதிப்பவர் களாகவும் வாங்குகிறபோது அதிக அளவாக வாங்காமலும், கொடுக்கிறபோது குறைந்த அளவாகக் கொடுக்காமலும், பல பொருட்களையும் நியாயமான விலை கூறி விற்கின்றவர்கள் புகார் வணிகர்கள்.

  இவ்வளவு சிறப்புடைய வணிகர்கள் வாழுகின்ற தொண்மையான புகழையுடையது புகார் நகரம். புகழ் சிறந்த, பல நாடுகளில் இருந்து வந்துள்ள, பல மொழிகள் பேசுகின்ற, பல்வேறு மக்களும் ஒன்றுகூடி, உறவாடி மகிழ்ந்து, இனிதுறையும் பெரும்புகழ்ப் பேரூர் காவேரிப்பூம்பட்டினம்” என்கிறார் புலவர். நடுவு நிலைமையும், நேர்மையும், உண்மையும் உடையவர்களாய், நியாய விலைக்கு விற்கின்றவர்களாய் வணிகர்கள் இருக்கவேண்டும் என்கிறார் புலவர். தமிழ் வணிகர்கள் அப்படி இருந்ததால் தான் 500 வருடங்களுக்கும் மேலாக, மேற்கிலும் கிழக்கிலுமாகிய உலகளாவிய வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடிந்தது. கி.மு. 500க்கு முன் தொடங்கிய தமிழர்களது உலகளாவிய வணிகம் கி.பி 200 வரை இடைவிடாது தொடர்ந்து நடைபெற்றது எனலாம். பல நாடுகளில் இருந்து, பல மொழி பேசும் மக்கள் வந்து புகாரில் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தனர் என்கிறார் புலவர். வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்றது என்பதை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.

புகார் நகரம்:

 பல்வேறு பொருட்கள் நீரின் மீதும் நிலத்தின் மீதும் தமிழகம் வந்தன என்பதைப் பட்டினப்பாலை(வரி: 185-193) ஆசிரியர்,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும்

அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும்

காவிரிப்பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும்

பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

  -என்கிறார். அதாவது, “வெளி நாடுகளில் இருந்து கடல்வழி வந்த குதிரையும், உள்நாட்டில் இருந்து தரை வழி வந்த கருமிளகும், வடமலையில் இருந்து வந்து, இங்கு மெருகிடப்பட்ட பொன்னும், மணிக்கற்களும், மேற்கு மலையில் இருந்து வந்த சந்தனமும், ஆரமும், தென்கடலில் தோன்றிய முத்தும், கீழ்க்கடலில் விளைந்த பவளமும், கங்கைக்கரையில் இருந்து வந்த பொருட்களும், காவிரிக்கரை வழங்கிய வளங்களும், ஈழத்து உணவுப் பொருட்களும், கடாரம் தந்த பண்டங்களும், இன்னும் பல நாடுகளில் இருந்து வந்த பல பொருட்களும் கலந்து நிறைந்திருக்கும் அகன்ற பரந்த தெருக்களைக் கொண்ட புகார் நகரம்” என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

 இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், கிழக்கு மேற்கு நாடுகளில் இருந்தும் பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்குக் தமிழ் வணிகர்களால் கொண்டுவரப்பட்டு, மதிப்பு ஏற்படுத்தப்பட்டும், நேரடியாகவும் அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின எனலாம்.

 நீரினின்று நிலத்துஏற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

 அளந்தறியாப் பலபண்டம் வரம்புஅறியாமை வந்துஈண்டி

 அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்அணங்கினோன்

 புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிமண்டபம்

 பொதிமூடைப் போர் ஏறி  -பட்டினப்பாலை(வரிகள்: 129-137)

 “பல்வேறு நாடுகளிலிருந்தும் கடல் வழியாகக் கப்பல்கள் மூலம் வந்து இறங்கிய பொருட்களும் (இறக்குமதி), வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதற்காக உள்நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வந்துள்ள பொருட்களும் என, எண்ணமுடியாத அளவுக்கு பொருட்கள் குவிந்திருக்கும் புகார் நகரத்தில், காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருக்கும் சாலையில், சுங்கத்தீர்வையைப் பெற்றுக்கொண்டு, சோழப் பேரரசின் இலட்சினையான புலிச் சின்னத்தை அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலைபோல் தோற்றம் தரும்” என்கிறார் அவர்.

புகார்த் துறைமுகம்:

  ஒரு துறைமுகத்தின் செயல் திறனைக் குறிப்பிடக் கப்பல்கள் வந்து தமது ஏற்றுமதி இறக்குமதி வேலைகளை முடித்துவிட்டுத் திரும்ப ஆகும் நேரத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். அதனை “கப்பல் வந்து திரும்ப ஆகும் நேரம்(SHIP TURN ROUND TIME)” என்கின்றனர். இதற்கென இன்று நமது துறைமுகங்களில் ஒற்றைச் சாளார முறை(SINGLE WINDOW SYSTEM )கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் நரசய்யா அவர்கள். இதுபோன்ற ஒருமுறை புகாரில் கையாளப்பட்டது போலத் தெரிகிறது. பெருந்துறைகளுக்கு(BIG WHARF AND BERTHS) அருகிலேயே ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க நல்ல விசாலமான கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும், பொருட்களுக்குச் சுங்கத் தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டு, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டன என்றும் பட்டினப்பாலை தெரிவிக்கிறது என்கிறார் நரசய்யா அவர்கள்.(நரசய்யா-கடல்வழி வணிகம், பக்: 52,53)

 பலதரப்பட்ட வணிகச் சரக்குகள், வங்கம் என்ற பெருவகைக் கப்பல்களில் வந்திறங்குகையில் எழும் ஓசையை வருணிக்கும், மதுரைக்காஞ்சியின் பாடல், இன்றைக்கும் பெரும் ஓசையுடன் பொருள்களைக் கப்பல்கள் இறக்குவதையே நினைவு படுத்தும் என்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 49, 50). மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனார் கப்பல்களை நன்கு அறிந்திருக்காவிடில் இவ்வாறு எழுதி இருக்க முடியாது எனவும், கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்குதல் என்பது மக்கள் வாழ்வில் ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 49, 50). மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாரின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

  துறைமுகப் பணித்துறையையும், கப்பல்கட்டுதலையும் அறிந்திருந்த தமிழர், அவற்றை நன்முறையில் வைத்திருக்கவும் கற்றிருந்தனர். பெரும்பாணாற்றுப்படை, பிற நாட்டுக்கப்பல்கள் நம் துறைமுகங்களை அடைய வழிகாட்டியாய் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கங்கள் குறித்துக் கூறுகிறது எனவும், வெளிநாட்டு மாலுமிகள் ஓய்வு எடுத்து தங்குவதற்கு மாலுமி இல்லங்களும், கப்பல்களைச் செப்பனிட கப்பல்பணிமனைகளும், உலர்துறைகளும்(DRY-DOCKS ) இருந்தன எனவும் கூறுகிறார் நரசய்யா அவர்கள்(பக்: 51, 52)

“............கூம்பொடு மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழ வோய!” -புறம், 30, வரி: 10-15.

  “ஆற்றுமுகத்துவாரத்தில் புகுந்த பெருங்கப்பல்களை, கூம்புடன் மேற்பாயைச் சுருட்டாமலும், பொருட்களின் பாரத்தைக் குறைக்காமலும் இடைவழியில் கொண்டு செல்லும்பொழுது பெருங்கப்பலில் இருந்த பல பண்டங்கள் கடலில் கொட்டுகின்ற வளமிக்க நாட்டினை உடைய சோழ வேந்தனே” என்கிறார் சோழன் நலங்கிள்ளி குறித்துப் பாடிய உறையூர் முதுகண்ணன சாத்தனார். இவரது காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும்.

  வரலாற்று ஆராய்ச்சியாளர் இராதா குமுத் முகர்ஜி(Radha kumud Mukherji) அவர்கள், இந்தியக் கப்பலியல்(Indian Shipping) என்கிற நூலில் சங்க இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகையில், “ சங்க இலக்கியங் களிலிருந்து புகார்த் துறைமுகத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகுகின்றன. இத்துறைமுகத்தில் பெரிய பாய்மரக்கப்பல்கள், தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன” என்ற விபரத்தைத் தருகிறார். பாய்மரக் கப்பல்கள், தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழையும் பொழுது, அவற்றின் வேகம் அதிகமாக இருக்கும் சரக்குகளுடன் கப்பல்கள் பளுவாகவும், ஆழமாகவும் மிதக்கும். அவற்றைச் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியாது. அன்றே பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைய முடிந்ததெனின் அத்துறைமுகங்கள் நல்ல ஆழமும், பெரிய பரப்பளவும் கொண்டவையாக இருந்திருக்கவேண்டும். ஆகையால் பூம்புகார் மிகப் பெரியதொரு துறை முகமாகத்தான் இருந்திருக்கும் என்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 48, 49)

கங்கை ஆற்றில் வணிகப் பயணம்:

 சங்க இலக்கியங்களில் தமிழர் வெளி நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்ததைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன எனவும், இவை அயல் நாட்டுப் பயணிகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளன எனவும் அயல்நாடு மட்டுமின்றி தமிழர்கள் கடல்மூலமாக வங்க நாட்டில் கங்கை நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தாமரலிபதி(TAMRALIPTI) என்ற துறைமுகத்தை அடைந்து, கங்கைநதியில் தமது கலங்களைச் செலுத்தி, வட நாட்டிலுள்ள உள்நாட்டுத் துறைமுகங்களை அடைந்து அங்கும் தமது வணிகத்தை நிலை நாட்டினர் எனவும் தெரிவிக்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 59, 60).

  கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டினப்பாலையில் “கங்கைவாரியும் காவிரிப்பயனும்”(வரி: 190) என வரும் வரிகள் கங்கைப் பகுதியில் விளைந்த பொருட்கள் தமிழகம் வந்தன என்பதை உறுதிப் படுத்துகின்றன. அவைகளை நிலவழியாகக் கொண்டு வருவதைவிடக் கடல் வழியாகக் கொண்டு வருவது எளிது என உணர்ந்த தமிழர்கள் தங்கள் கப்பல்கள் மூலம் அதனைக் கொண்டு வந்தனர். கங்கை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இருந்த துறைமுக நகரமான தாமரலிபதி என்பதன் வழியே கங்கை ஆற்றில் நுழைந்து, கங்கை ஆற்றில் இருந்த பாடலிபுத்திரம், காசி போன்ற நகரங்களை தமிழர்கள் சென்றடைந்தனர் என்பதை நற்றினையின் பாடல் வரிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

 “கங்கை வங்கம் போகுவர் கொல்லோ” – நற்றினை – 189, வரி: 5 இப்பாட்டின்படி, தலைவன் பொருள் தேட சூரைக்காற்றடிக்கும் கானகம் கடந்து தமிழகத் துறைமுகம் அடைந்து கடலில் செல்லும் வங்கம் என்ற பெரும் கப்பலில் ஏறி இனிய குரலை உடைய நாரைகள் வாழும் கங்கை ஆற்றுக்கு சென்றிருப்பார் எனவும் வேறு எதையும் செய்யாதவர் எனவும் வேறு இடத்துக்கும் போகாதவர் எனவும் அவர் விரைவில் வந்து விடுவார் எனவும் தோழி, THALAIVANPORUlTHAETAS SENrA KAnAVபொருள் தேடச்சென்ற தலைவன் உரிய காலத்தில் வந்து சேராததால் கவலையடைந்த தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இந்த கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த துறைமுக நகரமான தாமரலிபதி என்பது தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் இருந்து தோன்றியதாக இருக்கலாம். தம்பப்பண்ணி என்ற இலங்கைத் துறைமுக நகரம் தாமிர பரணியின் பெயரில் இருந்து தான் தோன்றியதாகும். தாமரலிபதி(TAMRALIPTI) என்கிற இந்த நகரம் அன்று கலிங்க நாட்டின் கீழ் இருந்து வந்தது.

   கலிங்கத்தில் பண்டைய காலத்தில் இருந்த கலிங்கப் பட்டினம், பாளூர், மாணிக்கப்பட்டினம் போன்ற பல துறைமுகங்கள் தமிழ் பெயரோடு தொடர்புடையவை ஆகும். ‘பண்டைய ஒரியாவின் கடல்வணிகப் பெருமை’ என்கிற கட்டுரையை ஒரிசா ரிவியூ என்கிற மாத இதழில் எழுதிய பாலபத்ர காதை என்கிற எம்.கே. கல்லூரியின் பேராசிரியர் அவர்கள், ‘தந்தபுர’ என சமண, புத்த நூல்களில் குறிப்பிடப்படும் பண்டைய கடற்கரை துறைமுகம் என்பது பண்டைய பாளூர் துறைமுகமாகும் எனவும், தமிழில் பல்+ஊர்= பாளூர் என்பதன் வடமொழிப்பெயர் தான் ‘தந்தபுர’ என ஆயிற்று எனவும், அதாவது தமிழில் பல் என்பது வடமொழியில் தந்த எனவும் தமிழில் ஊர் என்பது வடமொழியில் புரம் எனவும் ஆகியது எனவும் குறிப்பிட்டுள்ளார். (Maritime Heritage of Orissa – Orissa Review , July- 2009, Balabhadhra Ghadai, Principal M.K. College Khiching Mayurbhanj P. 62-64). gaghadai

  கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான பித்துண்டா நகரம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதைக் கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. (சிரீகாரவேலா-சதானந்தா அகர்வால்). ஆகவே தாமரலிபதி(TAMRALIPTI) என்கிற பெயர் தாமிரபரணியில் இருந்து தோன்றி இருக்கலாம். மேலே கண்ட தரவுகள் மூலம், கங்கை நதியில் இருந்த வட இந்திய நகரங்களுக்கு, தமிழர்கள தங்கள் சொந்த கப்பல்களில் சென்று வணிகம் செய்தனர் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது எனலாம்.

வணிகத்துக்கான நீண்ட கடல் பயணம்:  

 கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற புலவர் பொருள் தேடி ஆழ்கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த தலைவன் குறித்து அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார்(அகம்-255, வரி: 1-9).

“உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம், புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ, இரவும் எல்லையும் அசைவின்றி ஆகி, விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக், கோடூயர் திணிமணல் அகன்துறை, நீகான் மாடஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய, ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியாமையே, அழிபடர் அகல் வருவர் மன்னால்-தோழி!”

  ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, எங்கும் நிற்காது, வேகமாக அதனைக் கொண்டு செல்ல, அப்பெருங்கப்பலை இயக்குபவனாகிய நீகான், கடற்கரைத் துறைமுகத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தின் மீதுள்ள கலங்கரை விளக்கத்தின் ஒளிகண்டு திசை அறிந்து அதனைச் செலுத்த, பொருள் ஈட்டும் பணி காரணமாக அக்கப்பலில் நெடு நாட்களுக்கு முன்சென்ற நமது தலைவர் மேலும் அதிக நாட்கள் அங்கு தங்காது, நமது துன்பம் நீங்குமாறு விரைவில் திரும்பி வருவார்’ எனத் தனது தோழியிடம் கூறி ஆறுதல் பெறுகிறாள் சங்ககாலத் தலைவி. தலைவனின் இப்பிரிவு கடலிடைப் பிரிவு என்றே சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல் அன்று தமிழர்கள் மிகப்பெருங் கப்பல்களில் வெளிநாடுகள் சென்று வணிகம் புரிந்து பொருள் ஈட்டினர் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

  புறம் 400ஆம் பாடலில் கடல்வணிகம் குறித்துக் கோவூர்கிழார்,

“இருங்கழி யிழிதரும் ஆர்கலிவங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்துய்த்துத்

துறைதோறும் பிணிக்கு நல்லூர், உறைவின் யாணர், நாடுகிழ வோனே”

 என்கிறார். ‘ஆற்று நீர் கடலில் கலக்கும் துறைகளைச் செம்மை செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கரை நகர் தோறும் கடலில் செல்லும் வங்கம் எனப்படும் பெருங்கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் நல்ல ஊர்களையும் வணிகத்தையும் உடையவன் இவன் எனவும் அதன் மூலம் கிடைக்கும் புதுவருவாயை உடைய நாடு இவனுடையது எனவும் கூறுகிறார் புலவர். அதாவது கடலோரமாக இருக்கும் நகர்களில் எல்லாம் இவனது நாட்டுப்பெருங்கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெறுகிறது எனவும் அதனால் கிடைக்கும் வருவாயை உடையவன் இவன் எனவும் கூறுகிறார்’ புலவர். இவரது காலம் கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு ஆகும்.

கடற்படையெடுப்பு:

 பாண்டியன் முதுகுடுமிப் பெரு வழுதியைப் பாட வந்த காரிகிழார்,

  “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்

  கடற்படை குளிப்ப மண்டி” என்கிறார்(புறம்-6, வரி: 11, 12).

 இதற்குச் ‘செய்யும் தொழிலுக்கு எதிராக இருந்த பகைவர் தேயமே மூழ்கும் அளவு பெரும் கடற்படையை அனுப்பினான்’ எனலாம். பொதுவாக தமிழக வேந்தர்களை, பிற தமிழகச் சிறுகுறு ஆட்சியாளார்களை பகைவர் அல்லது எதிரி என மட்டுமே குறிப்பதுண்டு. அவர்களின் தேயத்தை, அது தமிழ் தேயமாக இருப்பதால், எதிரிகள் தேயம் எனக் குறிப்பதில்லை. சங்க இலக்கியங்கள் தமிழகம் தவிர பிற தேயங்களை மட்டுமே எதிரிகள் தேயம் எனக் குறிப்பிடுகின்றன. மேலும் தமிழரசுகளிடையே முதுகுடுமிப் பெருவழுதி காலத்தில் நல்ல ஒற்றுமை இருந்தது. ஆதலால் முதுகுடுமிப் பெருவழுதி இங்கு தமிழகம் அல்லாத பிற தேயத்து எதிரிகளின் மீது பெரும் கடற்படைகொண்டு தாக்குதல் நடத்தினான் என இப்பாடல் கூறுகிறது எனலாம். எதிரிகள் தேயமே மூழ்கும் அளவு அவ்வளவு அதிகமான கடற்படையை முதுகுடுமிப் பெருவழுதி அனுப்பினான் என்கிறார் புலவர். அன்று தமிழர்கள் வணிகத்தைப் பிற நாடுகளில் பெருமளவு மேற்கொண்டிருந்தனர். வணிகத்துக்கான அதிகப் பொருள் உற்பத்தியும், உயர் தொழில்நுட்ப மேன்மையும், வணிக மேலாண்மையும் கொண்டதாக அன்றைய தமிழகம் இருந்தது. இந்தப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

   புறம் 382ஆம் பாடலில் கோவூர்கிழார், கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ வேந்தன் நலங்கிள்ளியின் கடற்படையெடுப்பு குறித்து, “கடல்படை அடல்கொண்டி” என்கிறார். இதற்கு, கடலில் படை செலுத்திப் பகைவரை அழித்துப் பெரும் பொருளைக்கொண்டு வந்தவன் எனப் பொருள் கொள்கிறார் அ.ப.பாலையன் அவர்கள். ‘கடலிற் படைகொண்டு சென்று பகைவரை அடுதலாற் கொள்ளலாகும் பெரும்பொருள்’ எனப் பொருள் கொள்கிறார் ஔவை துரைசாமிபிள்ளை அவர்கள்(புறநானூறு, இரண்டாம் பாகம் பதிப்பு-2010). மேலே உள்ள இரு பாடல்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதிக்கு முன்பிருந்தே சோழர்களும், பாண்டியர்களும், சேரர்களும் இந்த நலங்கிள்ளி வரை தமிழ் அரசுகள் பலவும் கடற்படைகொண்டு தமிழர் அல்லாத பிற தேயக் கடற்கரை நகரங்களைத் தாக்கித் திரையாகவும், வணிகம் செய்தலின் மூலமும் பெரும்பொருள் பெற்றுவந்துள்ளனர் என்பதையும், இந்தியாவின் மேற்குக், கிழக்குக் கடற்கரையின் கடல் வணிகம் சங்ககாலம் முழுவதும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதையும் இப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

தமிழர்களின் கடலாதிக்கம்:

  கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் என்கிற பெண்பாற் புலவர் சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்றதாலும், போரில் முதுகில் விழுப்புண் பெற்றதாலும் சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, ‘இப்பாடலில் தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவனும் புகழ் பெற்றவனும் ஆவான்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடியவர் இவர். இவர் ஒரு குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அதே சமயம் நேர்மையும், தைரியமும், புலமையும் உடையவர். அவர்,

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”

எனப் பாடலைத் தொடங்கிப் பாடியுள்ளார்(பு-66). “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” எனச் சோழ மரபின் கடலாதிக்கப் பெருமையைப் இவ்வரிகளில் பாடியுள்ளார் வெண்ணிக் குயத்தியார். அதன்மூலம் சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் நாம் அறிய முடிகிறது. பெருங்கடலில் வீசும் காற்றின் தொழில் நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி, பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவன் இந்தச் சோழன் என்கிறார் புலவர். இப்பாடலின் மூலம் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதைப் புலவர் தெரிவிக்கிறார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்தத் தனது பாடலில்(பு-126, வரி: 14-16), சேரர்களின் கடலாதிக்கம் குறித்து

“சினமிகு தானை வானவன் குடகடல்பொலந்தரு நாவாய் ஓட்டிய

அவ்வழிப்பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்.

 சங்ககாலப் பெரும்புலவன் கபிலன் அறிவில் சிறந்தவன். பெரும்புகழ் பெற்றவன். அவன் இனி யாரும் பாடமுடியாதபடி மலையமானைப் புகழ்ந்து உயர்த்திப் பாடியுள்ளான். மேற்குக்கடலில் சேரன் தனது பெருங்கப்பல்களை செலுத்தும்பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது. அதுபோன்று கபிலன் பாடிய பிறகு பிறர் யாரும் மலையமானை அந்த அளவு உயர்த்திப் பாட முடியாது என்கிறார் புலவர். மேற்குக்கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதும், மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதும் இப்பாடலின் அடிக் கருத்தாக உள்ளது எனலாம்.

  மேற்கண்ட இரு பெண்பாற் சங்ககாலப் புலவர்களின் பாடல்களும் சேரர்கள் மேற்குக்கடலிலும், சோழர்கள் கிழக்குக் கடலிலும் கடலாதிக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும், பருவக் காற்றையும், கடல் நீரோட்டத்தையும் பற்றிய தொழிநுட்பத்தை அறிந்து பெருங்கப்பல்களை கடலில் செலுத்தும் திறனைத் தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

கங்கை முகத்துவாரத்தில் இருந்த தாமரலிபத(Tamaralipta) எனப்பட்ட துறைமுக நகரம் பண்டைய கலிங்க அரசில் இருந்தது. அதன் பெயர் தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பெயரில் இருப்பது போலிருக்கிறது. இந்த ஆற்றின் பெயரில் இலங்கையின் வடமேற்கே அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தத் தாமிரலிபத(Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். oriyaaஒரியா இரிவியு(ORISSA REVIEW) என்கிற மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி(DR.PRAFULLA CHANDRA MOHANTY) என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரிசாவில் உள்ள பாளூர் என்கிற பண்டைய துறைமுகத்தின் பெயரானது தந்தபுரா என்ற வடமொழிப் பெயருக்கு இணையான தமிழ் பெயராகும் என PAEபேராசிரியர் எஸ். இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார். SOURCE: MARITIME TRADE OF ANCIENT KALINGA –DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW, NOV-2011, PAGE: 41.

 அதுபோன்றே அதே மாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் பாளூர் என்பது தமிழர்கள் தந்த பெயர் எனச் சில விமர்சகர்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காரவேலன் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியிடம் இருந்து கைப்பற்றிய கலிங்கத்தின் முக்கியத்துறைமுக நகராக இருந்த பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மீண்டும் அது தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனப் பொருள் கொள்ளலாம். SOURCE: MARITIME HERITAGE OF GANJAM- DR.KARTIK CHANDRA ROUT, ORISSA REVIEW, NOV-2013, PAGE: 42, 43.

  மேற்கண்ட இரு தரவுகளின் படி, பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய துறைமுகம் ஆன ‘பாளூர்’(PALUR) என்பது தமிழ் பெயர்(பல்+ஊர்= பாளூர்) என்பதும், அதன் வடமொழிபெயர் தான் தந்தபுரா என்பதும் இந்தப் பாளூர் என்பது தமிழர்கள் வைத்த பெயர் எனச் சில ஒரியா அறிஞர்கள் கருதுகின்றனர் என்பதும் தெரிய வருகிறது. பாளூர் மட்டுமல்ல கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ் பெயரோடு தொடர்புடையனவாகும். MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய இரு ஆங்கிலக் கட்டுரைகளில் சொல்லப்பட்ட பண்டைய கலிங்க நகரங்கள் தான் இந்த 5 நகரங்களும் ஆகும். இந்நகரங்களில் ‘தாமிரலிபத’ தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் ‘பட்டினம்’ என்கிற தமிழ் பெயரைக் கொண்டுள்ளன.

 பொதுவாகத் தமிழில் நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம் என்கிற பெயரைப் பெரும். தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப் பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ் பெயராகும். ஆகவே கலிங்கத்தில் உள்ள பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய பெயர்கள அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன எனலாம்.  அதுபோன்றே தாமிரலிபத(Tamaralipta) என்பது இலங்கையின் தம்பப்பண்ணி போன்று தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயராகத் தோன்றுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லியதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகளாகும்.

  சங்க இலக்கியத்தரவுகளும், வெளி நாட்டினரின் குறிப்புகளும், நவீன எழுத்தாளர்களின் நூல்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், தொல்லியல் சான்றுகளும், இன்னபிறத் தரவுகளும் தமிழர்கள் கிமு. 6ஆம் நூற்றாண்டு முதலே உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்தனர் என்பதை, அவ்வணிகத்தைப் பாதுகாக்கத் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தன என்பதை, தமிழகம் கி.மு. 600 முதல் கி.பி.200 வரை இடைவிடாத உலகளாவிய வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்பதை, இவ்வுலக வணிகத்தால் தமிழகம் பெரும் செல்வத்தைப் பெற்றது என்பதை உறுதி செய்கிறது எனலாம். பண்டையச் சங்ககாலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழிநுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும் வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாகவும் தமிழரசுகள் இடையே இருந்த ஐக்கியக் கூட்டணியின்(தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த-மாமூலனார், அகம்-31, வரி: 14,15) காரணமாகவும் தான், உலகளாவிய வணிகத்தில் 800 வருடங்களாக இடைவிடாது, தமிழகம் உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருந்தது எனலாம்.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It