பழந்தமிழர்களின் வணிகத்தை, முக்கியமாக அவர்களின் கடல்வணிகத்தை அறிந்து கொள்ளவேண்டுமானால் தமிழ் அரசுகள் வெளியிட்ட நாணயங்கள் குறித்தும், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் குறித்தும் அறிந்துகொள்வது அவசியமாகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தமிழகத்தில் கிடைத்த நாணயங்கள் குறித்துப் பேசுகிறது. அத்துடன் வடநாட்டுடன் தமிழகம் நடத்திய வணிகம் குறித்தச் சில தரவுகளையும் இக்கட்டுரை தருகிறது.

தொன்மையான தமிழக நாணயங்கள்:

தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நாணய வியல் ஆய்வாளரும், தினமலர் ஆசிரியருமான இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ என்கிற நூலில்(முதல் பதிப்பு, ஏப்ரல்-2014) தந்துள்ள பல தரவுகள் குறித்துக் காண்போம். காசுகள் என்பது பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகும். சங்க நூல்களில் இச்சொல் பல முறை வருகிறது. அன்று இக்காசு ஒருவகை அணிகலனாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காசு வேப்பம் பழம் போன்றும், நெல்லிக்காய் போன்றும் இருந்ததாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. சிறியதாகவும் கோளவடிவிலும் இருந்த பொன்னாலான இக்காசுகள் அன்று வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொண்மையான நாணயங்கள் குறித்து வால்டர் எலியட் அவர்கள், “தொண்மையான தங்க நாணயங்கள் அனைத்தும் வழுவழுப்பான உருண்டை வடிவில் காணப்பட்டன. இன்னதென்று இனங் காண முடியாத ஒரு சிறு முத்திரைப் பதிவே அவற்றில் இருந்தது. இந்தத் தங்க நாணயங்கள் மிக நீண்ட நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வந்திருக்க வேண்டும். அலாவுதீனின் படைகளும் அவனுக்குப்பின் வந்தவர்களும் டெல்லிக்குக் கொள்ளையடித்துச் சென்றவற்றில் பெரும்பகுதி இந்த நாணயங்களாகவே இருந்திருக்கின்றன” என்கிறார் (1.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ நூல், பக்: 15; 2.வால்டர் எலியட் - தென்னிந்தியக் காசுகள், பக்: 53)

தமிழகத்தில் திருநெல்வேலியில் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாங்கிய தொகுப்பில் தொண்மையான ஆறு சிறிய கோள வடிவ முடைய செப்பு நாணயங்களும், ஒரு வெள்ளி நாணயமும் இருந்ததாகக் குறிப்பிட்டு அதன் முழுத் தரவுகளையும் தனது நூலில் அவர் வெளியிட்டு உள்ளார். இதன் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவை தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கிடைத்தவை. இந்தச் சிறிய கோளவடிவில் உள்ள நாணயங்களின் விளிம்புப் பகுதியில் ஒரு சிறிய சின்னம் உள்ளது. அதே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் முன்புறம் யானைச் சின்னம் உள்ள தொண்மையான ஐந்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் பின்புறம் எந்தச் சின்னமும் இல்லை. இந்த ஐந்து நாணயங்கள் குறித்தத் தரவுகளை இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது அதே நூலில் வெளியிட்டுள்ளார். இதன் காலம் சுமார் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவைபோக முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீயம், செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களால் ஆகிய 50 நாணயங்களின் தரவுகளையும் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிழற் படங்களோடு தனது அதே நூலில் வெளியிட்டு உள்ளார்கள். இவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என அவர் கருதுகிறார்(அதே நூல், பக்: 18-54).

நீலகிரி வெண்கலக் கிண்ணம் (கி.மு. 500)

coins 211தாமிரபரணியில் கிடைத்த, கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீய நாணயம் ஒன்று கல்பாக்கம் அணுசக்தி ஆய்வு நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது எனவும், அதன்படி அந்நாணயத்தில் பெரும்பகுதி வெள்ளீயமும், இரும்பு, நிக்கல், செம்பு முதலியன தலா ஒரு விழுக் காட்டிற்கும் குறைவாகவும் இருப்பதாக அறியப் பட்டுள்ளது எனவும், இந்த வெள்ளீய நாணயங்களை கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறார் இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள். ஆதிச்சநல்லூரில் பல வெண்கலக் கிண்ணங்கள் கிடைத்துள்ளன. இதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் இவைகளின் காலம் கி.மு. 1000 ஆம் ஆண்டுவரை இருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளார். நீலகிரி அகழாய்வில் ஒரு அழகிய வெண்கலக் கிண்ணம் கிடைத்துள்ளது. அதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் அதன் காலம் கி.மு. 500 க்குள் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். (SRINIVASAN, S., HIGH TIN BRONZEBOWL MAKING FROM KERALA, SOUTH INDIA AND ITS ARCHAEOLOGICAL IMPLICATIONS IN SOUTH ASIAN ARCHAEOLOGY, 1993, PP.695, 705).

இந்த வெண்கலக் கிண்ணங்கள், இந்த வெள்ளீய நாணயம் முதலியவற்றுக்கான மூலப் பொருட்களான வெள்ளீயம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே நேரடியாகக் கொற்கை துறை முகத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்கு தாய்லாந்து, மலேசியா நாடுகளில் மிகப் பழங்காலத்தில் இருந்து இந்த வெள்ளீயம் மிக அதிக அளவில் கிடைத்து வருவதே காரணம் எனவும், கூறுகிறார் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்(அதே நூல், பக்: 54-57)

முதுகுடுமிப் பெருவழுதியின் நாணயம்:

பிரித்தானிய-ஜெர்மன் ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட இலங்கை அநுராதபுரம் அகழாய்வில் ‘பெருவழுதி’ நாணயங்கள் சில கிடைத்துள்ளன எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும், அந்நாணயங்கள் எல்லாம் சம காலத்தவை எனவும் யாழ்ப்பாணப் ப. புஸ்பரட்ணம் என்பவர் தமிழகக் கடல்சார் வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்(பக்: 24). இந்த நாணயங்கள் பெருவழுதி என்கிற பெயர் பொறித்த நாணயங்களாகும். அதாவது பெருவழுதி என்கிற பாண்டிய வேந்தனால் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். பெருவழுதி என்கிற பெயர் கொண்ட பாண்டியர்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலர் இருந்துள்ளனர். ஆனால் நாணயங்கள் எல்லாம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனும்பொழுது, கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெருவழுதி என்கிற பெயர் பெற்றவன் முதுகுடுமிப்பெருவழுதி மட்டுமே ஆவான். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இவனுக்கு முன் பெரும்பெயர் வழுதி என்கிற ஒருவன் பாண்டிய வேந்தனாக இருந்துள்ளான். அவனது பெயர் பெருவழுதி அல்ல. பெரும் பெயர்வழுதி. அவனுக்குப்பின் வந்தவனே இந்த முதுகுடுமிப் பெருவழுதி ஆவான். இவன் அதிக வேள்விகளையும் செய்தவனாகக் கருதப்படுகிறான்.

ஆதலால் இந்தப் பெருவழுதி நாணயங்கள் முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட நாணயங்களே ஆகும். முதுகுடுமிப் பெருவழுதி நாணயங்களைத் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தமிழகத்தில் கண்டறிந்துள்ளார். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள், ஆட்சியாளனின் உருவம் பொறிக்கப்படாததாலும், அதன் எழுத்தமைதியைக் கொண்டும் இந்நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிறார். நமது இலக்கியக் கணிப்புப்படி இவனது காலம் கி.மு. 320-280 ஆகும். அதாவது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம்(ஆதாரம்: 1.பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் – டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, டிசம்பர்-2013, பக்: 18, 2.Natana Kasinathanan-Tamils Heritage page: 45).

மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்:

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேல் இரும்பொறை என்பவன் தான் பத்தாவது பதிற்றுப்பத்தின் பாட்டுடைத்தலைவன் எனக் கருதப்படுகிறான். இவனுக்குப்பின் வந்தவன் பொறையர்களின் இறுதி வேந்தனாக இருந்த கணைக்கால் இரும்பொறை ஆவான். கணைக்கால் இரும்பொறைக்குப்பின் வாரிசுகள் இல்லை என்பதால், கோதைகுல வேந்தர்கள் சேர வேந்தர்களாக ஆகின்றனர். முதல் கோதை குல சேர வேந்தன் கோக்கோதை மார்பன் ஆவான். அவனுக்குப்பின் வந்தவன் தான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்கிற இரண்டாவது கோதை வேந்தன் ஆவான். இவன் தனது மனைவி இறந்தபின்பும் தான் வாழவேண்டிய துக்ககரமான சூழ்நிலை குறித்தும், உதியன் சேரலாதன் குறித்தும் புறத்தில் பாடியுள்ளான். நமது இலக்கியக் கணிப்புப்படி, கணைக்கால் இரும்பொறைக்கும், கோக்கோதை மார்பனுக்கும் பின் ஆட்சிக்கு வந்த இவனது காலம் சுமார் கி.மு. 135-100 ஆகும்.

coins 424

இவனுக்குப் பின் வந்தவன் தான் குட்டுவன் கோதை ஆவான். இவனே சங்ககால இறுதிச் சேர வேந்தன். இவன் முத்தொள்ளாயிரப்பாடலில் இடம் பெற்றவன். இவனது பெயரில் குட்டுவன், கோதை ஆகிய இரு சேர குலங்களும் சேர்ந்து வந்துள்ளன. நமது இலக்கியக்கணக்குப்படி, இவனது காலம் கி.மு. 100-70 ஆகும். கிரேக்கத் தலைவடிவ நாணயங்களின் மாதிரியில் ஆட்சியாளனின் உருவம் பொறிக்கப் பட்டிருப்பதாலும் அதன் எழுத்தமைதியைக்கொண்டும் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்களும் மாக்கோதை, குட்டுவன்கோதை நாணயங்களின் காலம் முறையே கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு, கி.மு. 1ஆம் நூற்றாண்டு என்கின்றனர்.( Source: 1.paper on Makkothai coins presented at the first oriented numismatic conference, held at Nagpur, date: 29.10.1990. 2.Natana Kasinathanan-Tamils Heritage page: 45).

தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்:

இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்” என்கிற தனது நூலில் (மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 2013), பல பெருவழுதி நாணயங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் குறித்தும் கூறியுள்ளார். தலைவடிவ நாணயங்களை முதன் முதலில் வெளியிட்டவர்கள் கிரேக்கர்களே எனவும்(பக்: 85), அயோனியன் என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் யவனர் என்கிற பெயர் வந்தது எனவும் கிரேக்கத்தொடர்பின் அடிப்படையில் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகக் கருதலாம் எனவும் கூறுகிறார்(பக்: 91). நமது இலக்கியக்கணக்குப்படியும், கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (கி.மு. 145-130), வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி(கி.மு. 115-105) ஆகியவர்களது காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலமே ஆகும். ஆகவே இந்த உக்கிரப் பெருவழுதியும், வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதியும் வெளியிட்டது தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் எனலாம்.

தமிழகத்தின் இதர நாணயங்கள்:

சங்ககாலப் பாண்டியரின் பண்டைய செப்பு நாணயங்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம். பாண்டியரது நாணயங்களில் ஒருபக்கம் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1990-91 ஆம் ஆண்டில் அழகன் குளத்தில் திமிலோடு கூடிய காளை உருவம் நின்ற நிலையில் உள்ள ஒரு நாணயம் கிடைத்துள்ளது. காளையின் முகத்திற்கு கீழே தொட்டி காணப்படுகிறது. இது சிந்துவெளி நாகரிகக் காளையின் உருவத்தோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளது. இதன் காலம் கிமு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம். பாண்டியர்களின் பெருவழுதி நாணயங்கள் குறித்து முன்பே பார்த்தோம். பாண்டிய அரசனது தலைவடிவ உருவம் கொண்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு எனலாம்(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:257-261)

சங்க கால சேரர்கள் ஐந்து முத்திரைகளைக்கொண்ட வெள்ளி முத்திரை நாணயங்களை வெளியிட்டுள்ளனர். சேரர்களின் நாணயங்களின் பின்புறம் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் இருக்கும். இந்த முத்திரைக் காசுகள் அச்சுக்குத்தப்பெற்ற காசுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. சேரர்கள் ஏராளமான பழங்காலச் செப்புக்காசுகளையும் வெளியிட்டுள்ளனர். இவைகளில் ஆறு வகைகள் உள்ளன. கரூரில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சேரரது செப்புக்காசுகளும், 200க்கும் மேற்பட்ட வெள்ளிக்காசுகளும் கிடைத்துள்ளன. சேரர்களது செப்புக்காசுகளிலும் காளை உருவம் பொறித்தவை உள்ளன. இவைகளின் காலத்தை பாண்டியர் காசுபோல் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு என்லாம். எழுத்து பொறிக்கப்படாத இவைபோன்ற செப்புக்காசுகள் முதல் வகையாகும். இவைபோக மாக்கோதை, இரும்பொறை, கொல்லிப்பொறை கொல்லிரும்பொறை, குட்டுவன் கோதை காசுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் தலைநகரான் கரூரில் சீனம், கிரேக்கம், உரோம், சிரியா, பொனிசியா போன்ற நாடுகளின் நாணயங்கள் கிடைத்துள்ளன.(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:265-269)

சங்க காலச் சேர, பாண்டியரைப் போன்று அதிக நாணயங்களைச் சங்ககாலச் சோழர்கள் வெளியிடவில்லை. இவர்கள் நாணயத்தின் ஒரு புறம் புலிச் சின்னம் இருக்கும். எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட சோழ நாணயங்கள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. பழங்காலச் செப்பு நாணயங்களே கிடைத்துள்ளன. அவைகளின் காலத்தை கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு எனலாம்(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:278-279)

தாய்லாந்தில் சோழர் நாணயம்:

சோழர்களின் சதுரச் செம்பு நாணயம் ஒன்று தாய்லாந்திலுள்ள இலுக்பாட் என்கிற பண்டைய துறைமுக நகரத்தில் கிடைத்துள்ளது. அதன் முன் பக்கத்தில் குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் ஒன்றும் யானை ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பின் பக்கத்தில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற நாணயம் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தமிழகத்தில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நாணயத்தின் காலம் கிமு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு ஆகும் என்கிறார், முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, p. 46 & Dr. P. Shanmugam, Avanam no: 111, p.82).

எகிப்திய டாலமிகளின் பதக்கம்:

எகிப்திய பதக்கம் (MEDALLION) ஒன்றும் அத்துடன் இரண்டு தங்க மோதிரங்களும், தங்க செயின் ஒன்றும், 6 இரோம நாண்யங்களும் 1932இல் நெல்லை மாவட்டத்தில் கிடைத்தன. இந்த பதக்கம் கி.மு. 284-81 வரை ஆண்ட கிரேக்க டாலமி அரச வம்சத்தார்களது என அதனை ஆராய்ந்து அறியப்பட்டுள்ளது. இதர பொருட்கள் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தது ஆகும். டாக்டர் சன்னாசு(DR.ZANNAS) என்பவர் எகிப்துக்கும் தென்னிந்தியாவிற்கும், ஆன வணிகத்தைத் தொடங்கியவர்கள் உரோமர்கள் அல்ல எனவும் அதற்கு முன்பே இந்த வணிகம் எகிப்திய டாலமிகளால் தொடங்கப்பட்டு நன்கு வளர்க்கப்பட்டிருந்தது எனவும் இதனை உரோமர்கள் பின் பற்றினார்கள் எனவும் தெவிவித்துள்ளார். ஆகவே எகிப்தியர்களோடு கொண்ட தமிழர்களின் வணிகம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து நேரடியாக நடந்து வந்துள்ளது எனலாம்( Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, P: 41, 42).

Source: DR. ELKI LAS CARIDES-ZANNAS, GREECE AND SOUTH INDIA, PROCEEDINGS OF THE 5TH INTERNATIONAL CONFERENCE- SEMINAR OF TAMIL STUDIES (1981) VOL.1 SECTION 6, P-25.

DR. R.NAGASAMY SOUTH INDIAN STUDIES(1978) EDITED P-107.

உரோமக் குடியரசு நாணயங்கள்:

கி.மு. 195 முதல் கி.மு. 35 வரையுள்ள 8 உரோமக் குடியரசு நாணயங்களான வெள்ளி நாணயங்கள் நெடும்கண்டம் (NETUMKANDAM) என்ற இடத்தில் கிடைத்துள்ளன. அதுபோன்றே கேரளாவில் கி.மு.2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பல உரோமக் குடியரசு நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார் டாக்டர் பி.எல்.குப்தா (DR.P.L. KUPTA) அவர்கள். தமிழகத்தில் கி.மு. 79ஆம் ஆண்டு உரோம நாணயம் ஒன்று கிருட்டிணகிரியிலும், கி.மு. 46ஆம் ஆண்டு உரோம நாணயம் ஒன்று திருப்பூரிலும் கிடைத்துள்ளது என்கிறார் நடனகாசிநாதன் அவர்கள். கி.மு. 300-80 ஆம் காலத்தைச் சேர்ந்த சிசிலி நாட்டு செம்பு நாணயம் ஒன்று தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குக் கிடைத்துள்ளது எனக் கூறுகிறார், முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். இவைகளின் மூலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்துக்கும் உரோமுக்கும் நேரடி வணிகம் நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அகஸ்டஸ் காலத்திலும் அதன் பின்னரும் நான்குமுறை தமிழகத் தூதர்கள் உரோம் சென்று தமது வணிகத்தை விரிவு படுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

1.NETUMKANDAM HOARDS OF ROMAN ‘DINANRII’, PAPER PRESENTED AT V.ANNUAL CONFERENCE OF S.I.N.S HELD AT TRICHY ON 18-19 FEB. 1995 2.DR.P.L. KUPTA , THE EARLY COINS FROM KERALA P.4. DR.T. SATHYA MURTHY. GOLD COINS OF TRAVAN CORE STATE STUDIES IN SOUTH INDIA COINS VOL-2 P.117. DR. T. SATYAMURTHY 3. 3.STUDIES TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 44, 56

இதர வெளிநாட்டு நாணயங்கள்:

இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கரூரில் கிடைத்த கிரேக்க பொனீசியன் நாணயங்கள் குறித்து ஒரு ஆங்கில நூலை (ANCIENT GREEK AND PHOENICIAN COINS FROM KARUR, TAMIL NADU, INDIA.-R. KRISHNAMURTHY, CHENNAI-2009) வெளியிட்டுள்ளார். அதில் உள்ள நாணயங்கள் குறித்து இங்கு காண்போம்.

1. கி.மு. 300ஆம் ஆண்டைச் சேர்ந்த தெராசியன்(THRACIAN) செம்பு நாணயம் ஒன்றும், தெசாலியன் (THESSALIAN) செம்பு நாணயம் ஒன்றும் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன(பக்: 20-23).

2. கிரீட்(CRETE) நாட்டு இரு செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 25, 26). இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

3. நான்கு இரொடியன்( RHODIAN ) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 29-31). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 200ஆம் ஆண்டு ஆகும்.

4. 15 செலூசிட்(SELEUCID) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 36-45). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

5. 11 பொனீசியன்(PHOENICIAN) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 49-58). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு ஆகும்.

கிரேக்க நாணயங்கள்:

கி.மு. 350 முதல் கி.மு. 100 ஆம் ஆண்டு வரை சுமார் 50 கிரேக்க நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன. அவை, கி.மு. KI3AAஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 செலூக்கசு-2 (SELEUKOS) நாணயங்களும், கி.மு. 350ஆம் ஆண்டைச் சேர்ந்த சுகைத்தாசு (SKIATHOS) நாணயம் ஒன்றும் (இதுவே மிகப் பழமையான நாணயம்), இவை போக 35 முதல் 40 வரையான கிரேக்க நகர அரசு நாணயங்களும், கிரேக்க அரசர்களின் நாணயங்களும் ஆகும். அதன்பின் கி.மு. 25 வரை கிரேக்க நாணயங்களோ, உரோம நாணயங்களோ தமிழகத்தில் கிடைக்க வில்லை. கி.மு.25க்குப்பின் மீண்டும் உரோம நாணயங்கள் தமிழகத்தில் நிறையக் கிடைக்கின்றன என்கிறார் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். கி.மு. 100க்குப் பிந்தைய உரோமக் குடியரசு நாணயங்களும் தமிழகத்தில் கிடைக்கவில்லை.

கி.மு. 100வரை கிடைத்த கிரேக்க, உரோம நாணயங்கள், அதன்பின் கி.மு. 25வரை கிடைக்காததற்குக் காரணம், கிழக்கு மத்தியதரைக் கடல் நாடுகளில் நடைபெற்றப் போர்களும், இதர அரசியல் பிரச்சினைகளும் சேர்ந்து அங்கு ஒரு நிலையற்ற சூழ்நிலை உருவாகி இருந்ததே ஆகும். அதனால் முறையான வணிகம் நடைபெறவில்லை. ஆதலால் அக்காலத்திய நாணயங்கள் கிடைக்கவில்லை. இவை இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தரும் தவல்கள் ஆகும்(பக்:67-69). தமிழகத்தில் அக்காலகட்ட கிரேக்க நாணயங்கள் கிடைக்கவில்லை, ஆனால் உரோம நாணயங்கள் ஒன்றிண்டு கிடைத்துள்ளன. இவ்விடயம் கி.மு. 100க்கு முன்பே, கி.மு. 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்ற நேரடி வணிகத்தை உறுதிப் படுத்துகின்றன எனலாம்.

வட இந்திய வணிகம்:

தலைவன் பொருள் தேடுவதற்காக தலைவியைப் பிரிந்து மொழிபெயர்தேயம்(இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள்) கடந்து வடநாடு சென்று பல மாதங்கள் தங்கி இருந்து, வணிகம் செய்தான் என்கிற தகவல் நூற்றுக்கணக்கான சங்ககால அகப்பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாகப் பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் போன்ற சங்ககால புலவர்கள் இச்செய்தியை மிக விரிவாகவும், விளக்கமாகவும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகதப் பேரரசு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்ககால அகப்பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாத்திரமும் உறுதி செய்கின்றன.

தமிழகத்திலிருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர்(இன்றைய வேலூர்) வழியாக அல்லது கொங்கு நாட்டில் உள்ள தகடூர்(இன்றைய தர்மபுரி) வழியாக வடக்கே சென்று, இன்றைய கர்நாடகத்தைக் கடந்து சாதவ கன்னர்களின் தலைநகராக இருந்த படித் தானம் போய்ச் சேர்ந்தனர். பின் படித்தானத்திலிருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையான வடநாட்டு நகரங்களுக்குச் சென்று வந்தனர். சங்ககாலத்தில் ஆந்திரம், கலிங்கம் வழியாக வடநாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகம்-61, 295, 311, 359, 393 ஆகிய பாடல்களில் புல்லி என்கிற குறுநில மன்னனின் வேங்கட மலையைக்(இன்றைய திருப்பதி) கடந்து மொழி பெயர் தேயம் வழியாக தமிழர்கள் சென்றது குறித்துப் பாடியுள்ளார்.

இவ்வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பின் கலிங்கத்திலிருந்து வடநாடு செல்லப் பாதைகள் இருந்தன. ஆனால் கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வடநாடுகள் போகும் பாதையே புகழ் பெற்றத் தக்காணப் பாதையாக இருந்துள்ளது. இந்த ஆந்திர, கன்னட நாடுகளைக் கொண்ட தக்காணப் பகுதியும், இந்த வணிகப் பாதைகளெல்லாம் தமிழகத்தின் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தது என்றும், இந்தத் தக்காணப் பகுதியில் கொடுந்தமிழே மக்கள் மொழியாக இருந்தது என்றும், தமிழகத்தின் வட எல்லைக்கு அப்பால் வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொடுந்தமிழாக மாறியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

மெகத்தனிசும் சாணக்கியரும் :

சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா வந்திருந்த கிரேக்க தூதர் மெகத்தனிசின் காலம் கி.மு.350 முதல் கி.மு.290 வரை எனக் கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில்(கி.மு.350 முதல் கி.மு.283 வரை) வாழ்ந்தவர் தான் நந்தர்களிடமிருந்து மகத அரசைக் கைப்பற்ற சந்திரகுப்த மௌரியருக்கு உதவிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர். மெகத்தனிசு மற்றும் அர்ரியன் என்பவர்கள் எழுதிய தகவல்களைக் கொண்டு 1877ல் “மெகத்தனிசு மற்றும் அர்ரியன் அவர்களால் விவரிக்கப்படும் பழமை இந்தியா” (Ancient India as described by Megasthenes and Arrian” By J.W. Mccrindle, M.A.,) என்kகிற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

அந்நூலில் “எராக்கிளிசு”(Herakles) என்பவருக்குப் பல மகன்களும், பாண்டைய் (Pandai) என்கிற ஒரு மகளும் இருந்தனர் என்றும், தனது அன்புக்குரிய மகளுக்கு தென்பகுதியிலுள்ள முத்து விளைகிற பாண்டிய நாட்டைக் கொடுத்து விட்டு, இந்தியாவின் வேறு சில பகுதிகளைத் தமது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, தான் பாடலிபுத்திர அரசை வைத்துக் கொண்டார் என்றும், மெகத்தனிசு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாண்டிய அரசின் சந்ததிகள் 300 நகரங்களும், 1,50,000 காலாட் படை வீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட அரசை ஆண்டு வருகின்றனர் என்றும், அங்கு முத்து விளைகிறது என்றும், பாடலிபுத்திர அரசு 6,00,000காலாட்படைகளும், 30,000 குதிரைப் படைகளும், 9000 யானைகளும் கொண்டு ஆண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். (நூலின் பக்கங்கள் : 39, 114, 147, 156, 158, 201 to 203)

“மெகத்தனிசும், இந்திய மதமும்” (Megasthenes and Indian Religion) என்கிற நூலை எழுதிய ஆலன் (Allan Dahlaguist) என்பவர் தனது நூலில் மெகத்தனிசு குறிப்பிட்டுள்ள எராக்கிளிசு என்பவன் இந்திரனே என்றும், பாண்டைய் என்ற இளவரசிக்கு வழங்கப்பட்டது பாண்டிய நாடே என்றும், அது கி.மு.400க்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றும், அன்று அங்கு இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது என்றும் விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார். மேலும் இந்திய வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் மெகத்தனிசு பயணம் செய்த இந்தியப் பகுதிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் பாண்டிய அரசின் தலைநகர் மதுரைக்கு பயணம் செய்ததற்கான தகவல் குறிப்புகள் உள்ளதாகவும் (மதுரை அப்பொழுது வளர்ச்சி பெற்ற விறுவிறுப்பான நகரமாக இருந்தது) விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அர்ரியன், மெகத்தனிசு, ஆலன் ஆகியவர்களின் மேற்கண்ட பல ஆதாரக் குறிப்புகள் இந்தியாவில் கி.மு.4 ஆம் நூற்றாண்டளவில் மகதப் பேரரசுக்கு அடுத்த நிலையில் பாண்டிய அரசு இருந்தது என்பதையும், கி.மு.4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டிய அரசு இருந்து வருகிறது என்பதையும் உறுதி செய்கின்றது.

சாணக்கியன் தனது அர்த்தசாத்திரம் என்கிற நூலில் பாண்டிய நாட்டிலிருந்து பாண்டிய கவாடகா, தாமிரபரணிகா எனப்படும் பல்வேறு வகை முத்துக்களும், பல்வேறு வகை கல்மணிகளும், முசிறி துறையிலிருந்து சௌர்ணியா என்கிற கல்மணிகளும், முத்துக்களும் மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெண்மையும், மென்மையும் உடைய ‘துகுளா’, ‘வங்கா’ (துகில், வங்கம் ஆகிய தமிழ் சொற்களுக்கு துணி என்பது பொருள்) என்கிற பலவகைப் போர்வைத் துணிகளும்(Wool Fabrics), கருப்பாகவும் மதிப்பு மிக்க நவரத்ன கல்மணிகளின் மேற்பகுதி போன்று மிகவும் மென்மையாகவும் உள்ள “பாண்ட்ரகா” என்கிற போர்வைகளும், கசௌமா, பாண்ட்ரகா, சௌர்ணா குடியகா என்கிற பல்வேறு வகையான ஆடை வகைகளும் (Garments) தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகவும் சாணக்கியர் தனது நூலில் குறிப்பிடுகிறார் (ஆதாரம்: ஆங்கில நூல் கௌடில்யரின் அர்த்த சாத்திரம் (Kautilya’s Arthashastra), ஆங்கில மொழிபெயர்ப்பு திரு. R.சாம சாத்திரி அவர்கள் பக் : 101, 107, 109, 110)

ஆகவே, கி.மு.4-ம் நூற்றாண்டு அளவிலேயே பல்வேறு வகையான முத்துக்களும், நவரத்ன கல்மணிகளும், பல்வேறு வகையான போர்வைத் துணிகளும், பல்வேறு வகையான ஆடை வகைகளும், பல்வேறு வகையான வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து முக்கியமாக பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் உற்பத்தியாகி மகதப் பேரரசின் சந்தைகளுக்கு விற்பனைக்கு போயின என்பதை சாணக்கியரின் அர்த்தசாத்திரம் தெரிவிக்கிறது. எனவே, சங்க இலக்கியங்கள் மகத அரசு மற்றும் அதன் தலைநகர் பாடலிபுத்திரம் குறித்தும், அதன் அரச வம்சங்களான நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும் பேசுகின்றன. அசோகரின் கல்வெட்டும், சாணக்கியரின் அர்த்தசாத்திரமும், மெகத்தனிசின் இண்டிகாவும் தமிழரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. அன்று வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்குமிடையே மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்து வந்துள்ளது என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

மேற்கண்ட தரவுகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகம் மேலைநாடுகளோடும், கீழை நாடுகளோடும், வட இந்தியாவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆசிரியர் குறிப்பு: வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனார் அவர்கள் நந்தர்கள் காலத்திலும், அதன்பின் ஆட்சிக்கு வந்த மௌரியர்கள் காலத்திலும் வாழ்ந்து வந்தவர் ஆவார். அவரது காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு ஆகும். அவரது காலத்தை அடிப்படையாகக் கொண்டும் கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வு முடிவுகள் ஆகியனவற்றைக் கொண்டும் சங்க இலக்கிய நூல்களை ஆதாரமாகக் கொண்டும் கணிக்கப்பட்ட காலமே இங்கு இலக்கியக் கணிப்புக் காலமாகச் சொல்லப்பட்டுள்ளது. சங்ககாலச் சமுதாயமும் அதன் வரலாற்றுக் காலமும் என்கிற எனது ஆய்வு நூலில் இவை குறித்த விரிவான தரவுகள் தரப்பட உள்ளன.

Pin It