கி.பி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் தோற்றம் பெற்று கி.பி.12ஆம் நூற்றாண்டு வரையில் இந்திய உபகண்டம் முழுவதும் பரவி, படர்ந்து ஒரு பாதிப்பை ஏற்படுத்திய பக்தி இயக்கம் ஒரு மறுமலர்ச்சி இயக்கம் என்றும், இந்திய ஒருமைப் பாட்டை உருவாக்கிய, நிலமானிய பிற்போக்குக் கேடு கெடும்புகளுக்கும் அடுக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகத் தோன்றிய புரட்சிகர இயக்கம் என்றும் சில வரலாற்று ஆசிரியர்களாலும் புத்தி ஜீவிகளாலும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

பிரபல இந்தி இலக்கிய விமர்சகரும் தினகா ராஷ்டிரிய விருதினைப் பெற்றவருமான மனோகர பாண்டே என்கிற எழுத்தாளர் சாகித்ய அகாடெமி யால் நடத்தப்படும் ஆங்கில இலக்கியப் பத்திரிகையான இந்தியன் லிட்ரேச்சர் (Indian Literature) 206 Nov-Dec, 2001 இதழில் பக்தி இயக்கக் கவிதைகளின் முக்கியத்துவம் (Bakthi Poetry – Its Relevence and Signification) என்கிற கட்டுரையில் பக்தி இயக்க மானது நிலமானியப் பிற்போக்குக் கேடுகளுக்கு எதிராக இந்திய உபகண்டம் முழுவதும் பரவிப் படர்ந்த கலாசார மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிப்பிடுகிறார்.

சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய சனாதன மொழி இலக்கியங்களுக்கு எதிராக உரு வாகிய பிராந்திய மொழி எழுச்சி என்றும், நில மானிய அமைப்பினைப் பலவீனமடையச் செய்த வியாபார முதலாளித்துவ (Mercantile Capitalism) அமைப்பு உருவாக்கம் பெற்று, அரசியல், பொரு ளாதார, பண்பாட்டுத் துறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கம் என்றும், இந்திய ஒருமைப் பாட்டினை உருவாக்கிய இயக்கம் என்றும் பக்தி இயக்கத்தைக் குறிப்பிட்டதோடல்லாமல், இந்திய மக்கள் கலாசாரத்தை உருவாக்கிய முதல் புரட்சி கர இயக்கம் என்றும் இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தோன்றிய அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் இரண்டாவது இயக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

கி.பி.ஆறாம், ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களாலும், நாயன்மார் களாலும் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திய ஒருமைப்பாடு என்பது, இந்து மத ஒருமைப் பாடு என்கிற சனாதனச் சொல்லாக்கமாகும். ஆனால் பக்தி இயக்க மரபு என்று சொல்லப்படும் மரபில் இந்து மதம் என்கிற சொல்லாடலே இடம்பெற வில்லை. மாறாக, சிவ மதம், வைஷ்ணவ மதம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த இருமதங்களுக்கிடையில் ஒற்றுமையும் ஒருமைப் பாடும் நிலவியது கிடையாது. அல்லாமலும் காஷ் மீரத்துச் சைவத்துக்கும் தென்நாட்டுச் சைவத்துக்கும் சம்பந்தம் கிடையாது. அதே போன்று வங்காளத்து வைஷ்ணவம் வேறு, தென்நாட்டு வைஷ்ணவம் வேறு. தென்நாட்டு வைஷ்ணவத்தில் வடகலைக்கும் தென்கலைக்கும் ஒற்றுமை நிலவியது இல்லை. இந்து மத ஒருமைப்பாடு என்பது சனாதனச் சக்தி களால் உருவாக்கம் பெற்ற கற்பனையாகும். எனவே தான் பேராசிரியர் தொ.பரமசிவம் பக்தி இயக்கம் என்கிற சொல்லாடல் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஒரு பிரம்மையை (Illusion) ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

உண்மையில், தமிழகத்தில் நிறுவனப்படுத்தப் பட்ட இயக்கம் பக்தி இயக்கமாகும். இந்த இயக்க மானது அப்போது செல்வாக்கு பெற்றிருந்த அவைதிக மதங்களான பௌத்த, சமண மதங்களுக்கு எதிராகத் தோன்றிய நிலமானிய பலாத்கார இயக்கமாகும். எனவே பௌத்த, சமண மதங்கள் தமிழ்மண்ணில் கால் பதித்ததற்கான சமூக, பொருளாதார, அரசியல் பின்புலத்தையும், இம்மதங்கள் அழிவுற்று வைதிக மதங்களான சைவ, வைஷ்ணவ மதங்கள் நிலை பெறுவதற்கான சூழ்நிலையையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். பௌத்த, சமண மதங்கள் தமிழ் நாட்டில் வந்து சேர்ந்து செல்வாக்கு பெற்ற சூழ் நிலையைப் பேராசிரியர் கைலாசபதி ‘நாடும் நாயன்மார்களும்’ என்கிற ஆய்வுக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“சிறுசிறு குலங்களாகவும் குடிகளாகவும் குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழ்மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டதால் போர், படையெடுப்பு, ஊரழிவு ஆகியவற்றின் அடிப் படையில் சங்ககாலத் தமிழகத்தில் மெள்ள மெள்ள அரசுகள் தோன்றின. புராதன வாழ்க்கையிலேயே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையில் அளவு மாறுபாடு, குண மாறுபாடாக உருமாறியதே சங்க கால அரசியல் நிறுவனமாகும். ஆனால் தவிர்க்கமுடியாத அந்த மாற்றம் துன்பத்தின் மத்தியிலேயே நடந்தேற வேண்டி யிருந்தது. துன்பம் நிறைந்த அக்காலப் பகுதியிலே தான் சமணமும், பௌத்தமும் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.”

கி.மு.ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கங்கை நதி தீரத்தில் சமுதாயக் குழுக்களுக்குள் ஏற்பட்ட ஓயாத போர், அரசு அதிகாரம், வரி விதிப்பு, கடன் வட்டி, அதிகார வக்கிரக் கொடுமைகளால் மக்களுக்கு வாழ்க்கை வெறும் சுமையாக இருந்தது. என்றும் துன்பத்தின் பிரலாபமும் கேட்கலாயிற்று. இப்படிப் பட்ட காலத்தில்தான் கண வாழ்க்கையின் அடிப் படையில் பகவான் புத்தர் தனது போதனைகளை மக்களுக்கு வழங்கலானார். இந்த போதனையைப் பற்றிப் பேராசிரியர் சட்டோபாத்தியாயா இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தனது காலத்து மக்களின் பருப்பொருளான துன்பங்களை அரூபமாக்கிப் புலன்கடந்த நுண் பொருளாகியதோடல்லாமல், அதனை உலகப் பொதுவான முழு மொத்தமான கோட்பாடாக வகுத்து விளக்கமும் கொடுத்தார் புத்தர்.”

எனவே கி.மு.ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கங்கை நதி தீரத்து மக்களைப் போன்று துன்ப துயரங்களில் ஆழ்ந்து கிடந்த தமிழக மக்களுக்கு சமணமும், பௌத்தமும் ஆறுதல் தருவனவாகவும், சாந்தி தருவனவாகவும் இருந்தன. மேலும், பௌத்தமும் சமணமும் அறத்தையும், நல்லொழுக்கத்தையும் பிரசாரம் செய்ததன் காரணமாகவும் இந்த இரு அவைதிக மதங்களும் தமிழ் மண்ணில் வேர் பிடித்துச் செல்வாக்கு பெறலாயின. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இத்தகைய அறநெறியினைப் போதிப் பதனைப் பார்க்கலாம்.

நாட்டுப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும், நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்படவேண்டிய நிலைமை. எனவே, உற்பத்தியில் நேரடியாகப் பங்கு பெறாத வணிக வர்க்கம் வர்த்தகத்தில் ஈடுபட்டு நாளடைவில் செல்வாக்கு பெற்ற வர்க்கமாக உருவாயிற்று.

வணிக வர்க்கம் சமுதாயத்தில் முக்கியமான நிலையை வகித்த காலப்பகுதியில்தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சிறப்புமிக்க நூல்கள் தோன்றலாயின. வணிக வர்க்கத்தின் தோற்றத்தைப் பட்டினப்பாலையிலும் மதுரைக் காஞ்சி போன்ற நூல்களிலும் பார்க்கமுடியும் என்கிறார் கைலாசபதி. இந்த வணிக வர்க்கம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தின் வாயிலாக வேந்தர்களுக்கு ஈடாக - ஏன் வேந்தர்களுக்கும் மேலாக செல்வாக்கும், செல்வமும் பெற்ற வர்க்க மாக மாறிற்று. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற படைப்புகளில் இந்த உண்மை வெளிப் படுவதைப் பார்க்க முடியும். உதாரணமாக, சிலப்பதி காரத்தில் மாசாத்துவான்,

“பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த

ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கும் செல்வந்தன்”

என்று வர்ணிக்கப்படுகிறான். மட்டுமல்லாது வணிக வர்க்கத்திற்குத் தடையில்லாது வணிகம் நடை பெறுவதற்கு நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்பட்டன. எனவே, வணிக வர்க்கம் தனது வர்க்க நலன் கருதி பௌத்த, சமண மதங்களை ஆதரிக்கத் தொடங்கின. இவர்கள் இம்மதங்களின் புரவலர்களாகவும் இருந்தனர். வணிக வர்க்கம் செல்வாக்குப் பெற்றிருந்த காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சி மாநகரம் போன்ற நகரங்களில் உருவாக்கப்பட்டிருந்த சமணப் பள்ளிகளும் விகாரைகளும் இதைத்தான் காட்டு கின்றன.

இந்த இருபெரும் சமயங்களின் தலைமை, துறவிகளின் கையில் இருந்தது. இவர்கள் மக்களின் வாழ்விடங்களுக்குப் புறம்பான வணிகப் பெருவழி களுக்கு அருகாமையில் தங்களது உறைவிடங்களை அமைத்துக் கொண்டனர். அதற்கு அவர்களது நிர்வாகம் ஒரு காரணம். இவர்கள் திகம்பரர்கள் - அதாவது, திக்கினை மட்டுமே ஆடையாகக் கொண்டனர். அம்மணம் (நிர்வாணம்) என்ற சொல் அமணர் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவம். சமணர்கள் மழைக் காலங்களில் ஊருக்கு வெளியே பாழிகளில் தங்குவதல்லாது ஏனைய நாட்களில் தொடர்ந்து ஓரிடத்தில் தங்குவது கிடையாது. அப்படித் தங்கு வதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது. போகும் இடங்களில் பிற மதத்தவரோடு வாதிடுவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர்.

சமண மதத்தின் வீழ்ச்சிக்கு வேறொரு காரணம் அதில் பொதிந்து கிடந்த ஆணாதிக்க மனப்பான்மை யாகும். ‘அணி’ என்ற பற்றினைக் கைவிட்டனரே அல்லாமல் அது சமூக உளவியலுக்கு மாறானது என்பதைப் பார்க்க மறுத்தனர். உதாரணமாக, திகம்பரத் துறவிகள் பிச்சையெடுக்க வரும்போது பெண்கள் வீட்டுக் கதவுகளை மூடிக்கொண்டனர் என்பது அப்பர் தரும் செய்தியாகும்.

“காவி சேங்கண் மடவார் கண்டோடிக்

கதவடைக்கும் கள்வனானேன்”

(இவர் சமணராக இருந்து பின்னர் சைவர் ஆனவர்)

சங்கம் மருவிய காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த, சமண மதங்கள் பலவீனமடை வதற்கும் சண்டகாரமாக அழிக்கப்படுவதற்குமான சமூகப் பொருளாதார, அரசியல் சூழலைப் பார்ப்போம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதற்கொண்டே உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் பலவீனமடையத் தொடங்கிற்று. நிலக்கொடைகளின் காரணமாக இனக்குழுக்கள், குடிகள் என்று இருந்த தமிழ்ச் சமூகம் பரம்பரை முறையை அடிப்படையாகக் கொண்ட அரசு என்கிற நிலமானிய அமைப்பாக மாறுதலடைய ஆரம்பித்தது என்று பேராசிரியர் செண்பகலட்சுமி பக்தி இயக்கத்தைப் பற்றிய தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இவ்வாறு மாறுதல் ஏற்பட்ட போது சனாதன மத அடிப் படையில் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் பிரமதேயம், தேவதானம் என்று அரசுகளால் நிலக் கொடை வழங்கப்பட்டதன் காரணமாக வணிக சமுதாய அமைப்பு நிலமானிய அமைப்பாக மாறுதல் பெறத் தொடங்கியது.

நிலக்கொடை காரணமாக விவசாய வளர்ச்சி ஏற்படத் தொடங்கிற்று. இதன் காரணமாக வேலைப் பிரிவினை அதிகமாயிற்று. அவை சாதிகளாக உருப் பெறத் தொடங்கின. அதுமட்டுமல்லாது, கோயில் களுக்கும் புரோகிதர்களுக்கும் நிலம் வழங்கியதன் காரணமாக, கோயில்கள் அம்மக்களுடைய அரசியல், பொருளாதார, சமுதாயத் துறையிலுள்ள பல இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவன மாகப் போய்விட்டது. கோயில்கள் நிலவுடைமை யாளராக, நிலவுடைமை சமூகத்தின் சகல தன்மை களும் கொண்ட நிறுவனமாக உருப்பெறத் தொடங்கின. இந்த அமைப்பின் முன்னணியில் வேளாளர்களும் பிராமணர்களும் இருந்தனர். அக்காலக் கல் வெட்டுகள் இந்தச் செய்தியைத் தெரிவிக்கின்றன. எனவே நிலவுடைமை வர்க்கத்தினர்களாக இருந்த சைவ வைஷ்ணவர்களுக்கும் வணிக வர்க்கத்தினர் களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றுவது இயற்கை. வணிக சமூகம், நிலமானிய சமூகமாக மாற்றம் பெறும் நிலைமையில் வைதிக மதங்களுக்கும் அவைதிக மதங்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டம் ஒரு வர்க்கப் போராட்ட மாகும்.

இந்தப் போராட்டம் - மாற்றம் - அமைதியான ஒரு போராட்டமாக இருக்கவில்லை; பலாத்காரம் நிறைந்த போராட்டமாக இருந்தது என்பதை நாயன் மார்களுடைய பாடல்களிலும் ஆழ்வார்களது பாடல்களிலும் காணக்கிடப்பதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக,

“மத்த யானையின் ஈருரி மூடிய

அத்தனேயணி ஆலவா யாய் பணி

பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண

சித்தரை யழிக் கத்திரு வுள்ளமே”

என்று சமணர்களை அழிக்க வேண்டும் என்று சம்பந்தரும்,

“வெறுப்பொடு சமணரு முண்ட

விதியிலாச் சாக்கியர் நின்பால

பொறுப்பதி யானைகள் பேசில

போவதே நோயதாகி

குறிப்பெனக் கடையு மாகில

கூடுமேல் தலையை யாங்கே

அறுப்பதே கருமம் கண்டா

யரங்க மாநகருளானே”

அதாவது, சமணர்கள் தலையைக் கொய்வதே தனது கருமம் என்று தொண்டரடிப் பொடி யாழ் வாரும் பாடுவதைப் பார்க்கலாம். “அன்பே சிவம்” என்ற வார்த்தைக்குள் பலாத்காரமும் கொடூரமும் புதைந்து கிடப்பது சாதுர்யமாக மறைக்கப்பட்டிருக் கிறது. அதுதான் பக்தி இயக்கத்தின் வரலாறு. இந்த இயக்கத்தினரால் பௌத்த, சமண மதங்கள் வளர்ந்தோங்கிய பல ஊர்கள், பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டு சைவ, வைஷ்ணவ ஆலயங்களாக மாற்றப்பட்டன. சமணச் சார்பு கொண்ட இலக் கியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அரசுகளின் துணையோடு இந்த அநியாயம் நடந்தேறியது.

பாடலிபுத்திரம் (திருப்பாப்புலியூர்), என்ற இடத்தில் இருந்த சமண மடத்தை அப்பர் தரும சேனர் என்கிற பெயரில் நிர்வகித்து வந்தார். புகழ் பெற்ற அந்த மடத்தில் பல காலம் அறிவாராய்ச்சியும் சமயங்களைப் பற்றிய விவாதமும் நடைபெற்று வரலாயிற்று. ஆனால் தர்மசேனன் என்ற பெயரில் பள்ளியை நிர்வகித்து வந்த அவர் சைவ மதத்தைத் தழுவி அப்பர் ஆன போது, சமண மத வளர்ச்சிக்கு உதவியாக இருந்த மகேந்திரவர்மன் மடத்தை அழித்ததோடல்லாமல் பல பாழிகளையும் அழித்து அந்தப் பொருட்களையும் செல்வத்தையும் கொண்டு குணபர சுவரம் என்கிற சைவக் கோயிலைக் கட்டினார் என்று பேராசிரியரும் ஆய்வாளரு மான செண்பகலட்சுமி குறிப்பிடுகிறார்.

நாகப்பட்டினம் புத்தமதச் செல்வாக்குமிக்க துறைமுகப்பட்டினமாக இருந்தது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்தில் இருந்த தங்கத்தாலான புத்தர் சிலையைக் கொள்ளை யடித்துக் கொண்டு போய் வைஷ்ணவத் தலமான திருவரங்கக் கோயிலின் வெளிப் பிரகாரத்தைப் பழுதுபார்த்தார் என்று செண்பக லட்சுமி தனது நூலில் குறிப்பிடுகிறார். அதே போன்று மதுரை மாநகரைச் சுற்றியிருந்த பல சமணப் பாழிகள் சைவ, வைஷ்ணவ ஆலயங்களாக மாற்றப்பட்டன.

இக்காலகட்டத்தில்தான் நிலமானிய அமைப்பில் ஏற்பட்ட வேலைப் பிரிவின் காரண மாக பல சாதிகள் உருவாயின என்பது வரலாற்று உண்மை.

எனவே, பக்தி இயக்கம் என்பது மறுமலர்ச்சி இயக்கமே அல்ல. பேராசிரியர் தொ.பரமசிவம் சொல்வது போல் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு பிரமையை ஏற்படுத்தியுள்ளது. மாறாக, பௌத்த, சமண அவைதிக மதங்களை அழித்து வைதிக மதமும் சாதிகளும் நிலமானிய அமைப்பும் உருவான காலமே பக்தி இயக்க காலம்.

(உங்கள் நூலகம் ஆகஸ்ட் 2012 இதழில் வெளியான கட்டுரை)

Pin It