சாகித்திய அகாதெமி விருதாளர்  “தோல்” நாவலாசிரியர், தோழர் டி.செல்வராஜுடன் நேர்காணல்.

ஃபிரன்ட்லைன் சார்பில் பேட்டி கண்டவர் பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ். தமிழாக்கம்: நா.தர்மராஜன்

தமிழ்நாட்டு இடதுசாரி எழுத்தாளர்களில் இளைஞரான டி.செல்வராஜ் பாட்டாளிகளின், குறிப்பாக தலித்களான பண்ணைத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையைச் சித்திரிப்பதில் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறார்.

(- டாக்டர் கமில் ஸ்வலெபில் (செக்கோஸ்லோவேக்யாவைச் சேர்ந்த தமிழறிஞர்)

தமிழறிஞர் கமில் ஸ்வலெபில் மேற்கூறியபடி எழுதி சுமார் நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.  பழைய மதுரை மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் வட்டாரத்தில் தோல் பதனிடும் வேலை செய்கின்ற தலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்கள் மற்றும் போராட்டங்களைப் பதிவு செய்கின்ற “தோல்” என்னும் நாவலை டி.செல்வராஜ் எழுதினார்.  தமிழ்நாடு அரசாங்கம் 2010 இல் அதற்கு முதல் பரிசு அளித்தது.  2011-ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி பரிசு அதற்குக் கிடைத்திருக்கிறது.

திண்டுக்கல் வட்டாரத்தில் தோல் பதனிடுகின்ற சில தொழிற்சாலைகளில் மிகவும் பழமையான முறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதால் அந்த நாவல் காலப் பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது.  அது மட்டுமல்ல, தோல் பதனிடுகின்ற தொழிலாளர்களின் உயிரிழப்பு மற்றும் உடல்நலப் பாதிப்பும் இந்த நாவலை முக்கியப்படுத்துகின்றன.

தோழர் செல்வராஜ் இலக்கிய உலகத்தில் நுழைந்த காலத்திலிருந்து மார்க்சிய அரசியலையும் சோஷலிஸ்ட் எதார்த்தவாதத்தையும் ஊசலாட்டமின்றிக் கடைப்பிடித்துள்ளார்.  அவருடைய இலக்கியப் படைப்புகளை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்த முடியாது.  செல்வராஜ் எழுதிய எல்லா நாவல்களும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுடைய துன்பதுயரங்களையும் சமூக மாற்றத்துக்கு அவர்கள் நடத்துகின்ற போராட்டங்களையும் சித்திரிக்கின்றன.  எழுபத்து நான்கு வயதான டி.செல்வராஜ் தன்னுடைய முதல் நாவலை (மலரும் சருகும்) 1967-இல் வெளியிட்டார்.  நிலப்பிரபுக்கள் அளக்கும் படிகளில் மோசடி செய்து விவசாயிகளை ஏமாற்றுவது வாடிக்கையாக இருந்த சூழ்நிலையில் அதை எதிர்த்து விவசாயிகள் போராடுவது இந்த நாவலில் சித்திரிக்கப்பட்டது.  இரண்டாவது நாவலாகிய தண்ணீர் (1973) தேயிலை எஸ்டேட்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களுடைய துன்பகரமான வாழ்க்கைகளைச் சித்திரித்தது.  மூலதனம் (1977) என்ற நாவல் கூட்டுக் குடும்பங்கள் சிதைவுறுதலைச் சித்திரித்தது.

டி.செல்வராஜ் சுமார் 200 சிறு கதைகளை எழுதியிருக்கிறார்.  சாந்தி, சரஸ்வதி, தாமரை, செம்மலர், சிகரம், ஜனசக்தி, தேசாபிமானி (இலங்கை) ஆகிய இதழ்களில் அவை வெளியிடப்பட்டன.  பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் மற்றும் இலக்கிய விமர்சகர் சாமி.சிதம்பரனாருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை அவர் எழுதினார்.  “பாட்டு முடியுமுன்னே”, “யுக சங்கமம்” என்னும் தலைப்புக்களில் நாடகங்களை எழுதினார்.  சுமார் முப்பது ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.

தேயிலைத் தோட்டக் கங்காணியின் மகனாகப் பிறந்த செல்வராஜ் பிற்காலத்தில் சட்டம் படித்து, திண்டுக்கல் நகரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களினுடைய குடும்பத்தில், சிறையில் பிறந்த பாரதபுத்ரி என்ற பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

ஃபிரன்ட்லைன் (சென்னை) இதழ் சார்பில்  எஸ். துரைராஜ் அவரைப் பேட்டி கண்டார்.

உங்கள் இலக்கியப் பயணத்தின் சுமாராக ஐம் பதாம் ஆண்டில் தங்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருக்கிறது.  இது மிகவும் தாமதமான அங்கீகாரம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நான் 1950களின் இறுதியில் ம.தி.தா. கல்லூரியில் (திருநெல்வேலி) படித்துக் கொண்டிருந்தபொழுது ரகுநாதன், என்.வானமாமலை, தி.க.சிவசங்கரன் ஆகிய மூன்று இலக்கிய மேதைகள் மற்றும் மார்க்சிய விமர்சகர்களின் தாக்கம் எனக்கு ஏற்பட்டது.

“கலை கலைக்காகவே” என்னும் கருத்துடையவர்கள் சாகித்திய அகாதெமியில் நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  “கலை மக்களுக்காக” என்னும் குறிக்கோளைப் பின்பற்றியவர்களை அக்காலத்தில் சாகித்திய அகாதெமி மதிக்கவில்லை.  ஆனால் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் களின் சங்கம் ஆகிய முற்போக்கான அமைப்பு களின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக இந்த நிலைமை படிப்படியாக மாறியது.  சமீப ஆண்டுகளில் முற்போக்கு எழுத்தாளர்களை சாகித்திய அகாதெமி கௌரவித்திருக்கிறது.  எனக்கு அகாதெமி விருது தாமதமாகக் கிடைத்தால்கூட நான் எழுதிய “தோல்”நாவல் சம்பந்தப்பட்ட மட்டில் அதற்கு உடனடியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தோல் பதனிடுகின்ற தொழிற்சாலைகளில் பெரும் பான்மையாக தலித்துக்கள் வேலை செய்கிறார்கள்.  ஆகவே நீங்கள் இந்த நாவலை எழுதிய சூழ் நிலையைப் பற்றிக் கூறுங்கள்.

1960களின் தொடக்கத்தில் நான் சென்னையில் சட்டம் படித்தபொழுது, கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடாகிய ஜனசக்தி இதழில் எழுதிக் கொண் டிருந்தேன்.  அப்பொழுது தொழிற்சங்கத்தலைவர் களுடன், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மேயராக இருந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்பு ஏற்பட்டது.  குரோம்பேட்டையில் (சென்னை) வசித்த தோல் பதனிடும் தொழிலாளர் களுடைய மிகவும் பரிதாபகரமான வாழ்க்கைச் சூழலைக் கண்டேன்.  திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுடைய அவல நிலையைப் பற்றி தோழர் தங்கராஜ் என்னிடம் பேசினார்.  அவர் களுடைய போராட்டங்களில் உதவி செய்வதற்கு நான் திண்டுக்கல்லுக்கு வரவேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.  நான் 1975-இல் திண்டுக்கல்லில் குடியேறினேன்.

தொழிற்சங்க வக்கீல் என்ற முறையில் அவர் களுடைய போராட்டங்களுக்கு வழிகாட்டினேன்.  நீதி மன்றங்களில் வாதாடினேன்.  அவர்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் ஒடுக்கு முறைக்கு உட்பட்டிருந்தார்கள்.  அவர்களுடைய வீரமிக்க போராட்டங்களைப்பற்றி எழுத விரும் பினேன்.

‘தோல்’ நாவலை எழுதுவதற்கு முன்னால் தீவிர மாகக் கள ஆய்வு செய்தீர்களா?

நான் அவர்கள் வசித்த காலனிகளுக்குச் சென்றேன்.  குடிசைகளுக்குள் நுழைந்து அவர்களோடு பேசினேன்.   திண்டுக்கல்லில் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு வலிமையான சங்கங்கள் இருந்தன.  முதிய தொழிலாளர்களிடம் பேசினேன்.  போலீஸ் அடக்குமுறைக்கு எதிராகத் தொழிற்சங்கத்தைக் கட்டிய வரலாற்றை அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே., எம்.ஆர். வெங்கட் ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், வி.மதனகோபால், கே.பி.ஜானகி ஆகிய மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் களுடைய வாழ்க்கையை ஆராய்ந்தேன்.  தோழர் பாலசுப்பிரமணியத்தை மாடலாகக் கொண்டு தொழிற்சங்கத் தலைவர் சங்கரன் என்ற பாத்திரத்தைப் படைக்க ஆரம்பித்தேன்.  ஆனால் பல தலைவர் களுடைய பண்புகளின் கூட்டுச் சித்திரமாக சங்கரனுடைய பாத்திரம் வளர்ச்சி அடைந்தது.  தோல் நாவலை எழுதி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயிற்று.

krishnamoorthy_tholi_novel_450அதற்கு முன்பு நீங்கள் எழுதிய நாவல்களிலும் இதே முறையைக் கடைப்பிடித்தீர்களா?

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்கலம் என்ற எனது கிராமத்தில் சிறு விவசாயிகள் முத்திரை மரக்கால் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.  நான் அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தேன்.  விடுமுறை நாட்களில் கிராமத்தில் தங்கிய பொழுது போராட்ட விவரங்களைச் சேகரித்தேன்.  ‘மலரும் சருகும்’ என்ற நாவலை எழுதினேன்.  அந்த நாவலை எழுதுவதற்கு அதிகமான கள ஆய்வு தேவைப்படவில்லை.

“தேநீர்” நாவல் என் ரத்தத்தில் ஊறியது.  கேரளத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைக் கங்காணிகள் கூட்டி வந்தார்கள்.  ஒவ்வொரு குழு விலும், 300க்கு அதிகமான தொழிலாளர்கள் இருப் பார்கள். தொழிலாளியின் கூலியில் ஒரு பகுதி கங்காணிக்குத் தரப்படும்.  பிரிட்டிஷ் ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் இப்படிப்பட்ட சுரண்டல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

பழைய திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தேவிகுளம் பகுதியில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  அந்தப் பகுதிகளுக்குள் எவரும் நுழையமுடியாது.  இந்தியா சுதந்திரமடைந்தது கூட எஸ்டேட்டில் வசித்த தொழிலாளர்களுக்குத் தெரியாது.
கங்காணிகள் மற்றும் ஊழியர்களுடைய குழந்தைகளுக்காக மூணாறில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது.  அந்த உயர்நிலைப் பள்ளியில் தான் நான் படித்தேன்.  பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்டேட்டில் வேலை தரப்படும்.  சிலர் கல்லூரிகளில் சேர்ந்து படித்தார்கள்.  அவர்களில் நானும் ஒருவன்.

தீவிர எழுத்தாளனுக்குக் கள ஆய்வு அவசியம் என்பது என்னுடைய உறுதியான கருத்து.  யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவர்களோடு பேச வேண்டும்; அவர்களுடைய துன்பகரமான வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் எழுதிய தோல் நாவல் உள்பட எல்லா நாவல்களிலும் கதாபாத்திரங்கள் எல்லோரும் கற்பனை அல்ல.  அவர்கள் உண்மையான மனிதர்கள்.

‘தோல்’ நாவல் குறித்து நீங்கள் திருப்தி அடை கிறீர்களா?

இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்ட நாவலை எழுதி முடித்தேன்.  ஆனால் அதை வெளி யிடுவதற்கு முயற்சி செய்யவில்லை.  என்.சி.பி.எச்.  நிறுவனம் அதை வெளியிட முன்வந்த பொழுது மொத்த நாவலையும் மறுபடி எழுதினேன்.

1930-1958-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் நாட்டில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி எழுதப்பட்ட இப்படிப்பட்ட நாவலை அடுத்த பத்து ஆண்டுகளில் யாரும் எழுத முடியாது என்பது என் உறுதியான கருத்து.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்கப் பட்டது.  தலைவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு தொழிலாளர்கள் மற்றும் விவசாயி களை அமைப்புரீதியாகத் திரட்டினார்கள்.  வர்க்கப் போராட்டத்தையும் சாதி ஒழிப்புப் போராட்டத் தையும் இணைத்து நடத்தினார்கள்.  அவர்களது போராட்ட முறைகளை ஆய்வு செய்யவேண்டும்.  அவை இன்றும் கடைப்பிடிக்கும் தகுதியைக் கொண் டிருக்கின்றன.  என் ‘தோல்’ நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது என் தனிப்பட்ட சாதனைகளுக்குக் கொடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை.  இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற் சங்கத் தலைவர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப் புடைய போராட்டங்களை அங்கீகரித்துத் தரப் பட்டதாக நான் கருதுகிறேன்.

சுமார் 700 பக்கங்களைக் கொண்ட நாவலில் 117 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.  அவர்களில் பலர் மெய்யாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.  அக்காலத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்குப் போராடிய தலைவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அக்காலத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் மிகக் கேவல மான தொழில்களைச் செய்பவர்களாகக் கருதப் பட்டார்கள்.  அவர்கள் திண்டுக்கல் நகரத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது.  சேரிகளின் நாற்றத்தைச் சுமந்து கொண்டு காற்று நகரத்துக்குள் வராத முறையில் நகரம் வடிவமைப்புச் செய்யப் பட்டிருந்தது.  பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஏ. பாலசுப்பிரமணியம் தொழிலாளர்களோடு தன்னை இணைத்துக்கொண்டு அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டார்.  சேரித் தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வைப் போதித்தார்.  அவர்கள் கூலி உயர்வுப் போராட்டத்திலும் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்கள்.  தோல் பதனிடும் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்ட வி.மதனகோபால் காவல்துறையினரால் கடுமை யாகத் தாக்கப்பட்டார்.  இப்படிப்பட்ட தலைவர் களுடைய தியாகங்களை நான் நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

உழைக்கும் மக்களுடைய போராட்டங்களை மையமாகக் கொண்டு எழுதப்படுகின்ற நாவல்கள் ‘பிரச்சார நாவல்கள்’ என்று சொல்லப்படுகின்றன.  இதைப் பற்றி உங்களுடைய கருத்தைக் கூறுங்கள்.

நான் எழுதிய எல்லா நாவல்களையுமே பிரச் சார நாவல்கள் என்று ஒரு கோணத்தில் கூற முடியும்.  ஒரு எழுத்தாளன் வாழ்க்கையைத் தத்ரூபமாக வர்ணிக் கின்றபொழுது அது வெறும் பிரச்சாரம் என்று கூற முடியாது.  டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ என்னும் பேரிலக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.  நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த மனிதர்களும் பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த ஹோமருடைய கற்பனையான மனிதர்களும் அந்த நாவலில் ஒன்றிணைந்து காணப்படுகிறார்கள்.  என்னுடைய நாவலில் இந்தப் பாணியை நான் கடைப்பிடித்தேன்.

நீங்கள் பின்பற்றிய எழுத்தாளர் (மாடல்) யார்?

தொடக்க காலத்தில் நான் மாப்பசான் மற்றும் சார்லஸ் டிக்கென்ஸை வழிகாட்டிகளாகக் கொண் டேன்.  பிறகு புதுமைப்பித்தன் மற்றும் சிதம்பர ரகுநாதன் எனக்கு மாடலாக இருந்தார்கள்.  பின்னர் கோர்க்கி கிருஷன் சுந்தர், தகழி ‘சிவசங்கர பிள்ளை’ ஆகியோரைப் பின்பற்றி என் எழுத்துப் பாணியை உருவாக்கினேன்.

தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர்களுடன் உங்கள் தொடர்புகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

தோழர்கள் ரகுநாதன், வானமாமலை, தி.க.சிவ சங்கரன் ஆகியோருடன் நெருங்கிப் பழகினேன்.  அவர்கள் பண்டைக் காலத் தமிழ் இலக்கியத்தை மார்க்சிய நோக்கில் மதிப்பீடு செய்தார்கள்.  அவர்கள் திருநெல்வேலியில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவினார்கள்.  எனக்கும் என் சமகால எழுத்தாளரான சுந்தர ராமசாமிக்கும் அவர்கள் அக்கறையோடு எழுத்துப் பயிற்சி கொடுத்தார்கள்.  ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ என்ற மாத இதழில்தான் எங்கள் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தோம்.  அதே காலத்தில் ஜெயகாந்தன் மற்றும் கிருஷ்ணன் நம்பி எழுதத் தொடங்கினார்கள்.

நான் சட்டக் கல்லூரியில் (சென்னை) படித்த பொழுது கம்யூனிஸ்ட் தலைவரும் பேச்சாளருமான ஜீவானந்தத்துடன் நெருங்கிப் பழகினேன்.  அவர்கள் மேதைகள்; ஆனால் என்னைத் தங்களுக்குச் சமமாக நடத்தினார்கள்.  சென்னையில் தொழிற்சங்கத் தலை வராக இருந்த ஏ.எஸ்.கே.  ஆங்கில இலக்கியத்தில் புலமைமிக்கவர்.  சிறந்த கவிஞரான தமிழ் ஒளி ஏழை மக்களுடைய துன்பகரமான வாழ்க்கையைப் படம் பிடித்த முன்னோடிக் கவிஞர்.

முற்போக்குக் கலாசார இயக்கத்தின் வீரியம் குறைந்துவிட்டது என்று பேசப்படுகிறது.  ஜன நாயக உணர்ச்சியுள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அது இனியும் எழுச்சியூட்டுமா?

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், 1936இல் நிறுவப்பட்ட பொழுது கம்யூனிஸ்டுகள் அதில் முக்கியமான பங்கு வகித்தாலும்கூட, நேரு, அபுல்கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு ஆகிய ஜனநாயக உணர்ச்சியுள்ள எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் உத்வேகப்படுத்தியது.  ஆனால் தமிழ்நாட்டில் அப்படி நடக்கவில்லை.  கம்யூனிஸ்ட் வார ஏடாகிய ஜனசக்தி கம்யூனிஸ்ட் அல்லாத எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர் களுடைய கட்டுரைகளைப் பிரசுரித்தது.  எனினும் மனிதநேய, எதார்த்தவாத எழுத்தாளர்களை ஜன சக்தியில் எழுதுமாறு தூண்டியிருக்கவேண்டும்.

நாம் கலாசாரத் துறையில் அதிதீவிரவாதப் போக்கிலிருந்து இன்னும் விடுபடவில்லை.  தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத் தாளர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகியவை நிறுவப்பட்ட பிறகுகூட இந்த நிலை நீடிக்கிறது.  தமிழ்நாட்டில் கலாசார வெற்றிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது.  அதைத் தடுப்பதில் இடது சாரிச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் முக்கியமான பங்காற்றவேண்டும்.

சோவியத் யூனியன் மற்றும் சோஷலிஸ்ட் முகாம் தகர்ந்த பிறகு சோஷலிஸ்ட் எதார்த்தவாதம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார்கள்.  இது உண்மையா?

சோஷலிஸ்ட் எதார்த்தவாதம் காலாவதி ஆகி விட்டதாக நான் கருதவில்லை.  சோஷலிஸ்ட் எதார்த்தவாதம் இன்னும் செயல்திறனுடன் இருப் பதற்கு நான் எழுதிய ‘தோல்’ நாவல் ஒரு உதாரண மாகும்.  மாந்திரிக எதார்த்தவாதம் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம்.  பின் நவீனத்துவம் வாழ்க்கையைத் திரித்து வெளியிடு கிறது.  ஆனால் சோஷலிஸ்டு எதார்த்தவாதம் தனி மனிதன், சமூகம் மற்றும் இயற்கை மாற்றங்களை இயங்கியல் தன்மையோடு புரிந்துகொள்கிறது.  அது ஒரு விஞ்ஞான அணுகுமுறை.

சித்தாந்தம் என்பது கைவிலங்கு; எழுத்தாளர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதுவதை அது தடுக்கிறது என்று சில தலித் சிந்தனை யாளர்கள் கூறுகிறார்கள்.  இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பெரும்பாலான தலித் எழுத்தாளர்கள் மத்திய வர்க்க அறிவு ஜீவிகள் என்பதால் இத்தகைய கட்டுப் பாடில்லாத சிந்தனை ஏற்படுகிறது.  தலித்துகள் மீதுள்ள அவமதிப்புகள்,  ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர்கள் எழுதுகிறார்கள்.  ஆனால் அதற்கு மேல் போவதற்கு அவர்கள் முயற்சி செய்வதில்லை.  தலித்துகள் அமைப்பு ரீதியாகத் தமது விடுதலைக்குப் போராடுவதை அவர்கள் சித்திரிப்பதில்லை.  சாதிச் சங்கங்கள்- தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.  அவர்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றி லொரு பகுதியாக உள்ளனர்.  இந்தியாவில் சமூக மாற்றத்துக்கு நடைபெறும் போராட்டத்தில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும்.  இல்லாவிட்டால் இந்தியா முன்னேற முடியாது.  1958க்கு முன்பு வர்க்க ரீதியான தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வெற்றியடைந்தன.  அந்தப் போராட்ட வரலாற்றிலிருந்து நாம் படிப் பினைகளைப் பெற வேண்டும்.

வர்க்கம் சாதியைப் படைத்தது.  இதை மறக்கக் கூடாது.  வர்க்கப் போராட்டம் தீவிரமடைகின்ற பொழுது சாதி ஒழிப்புப் போராட்டம் அதனுடன் ஒன்றிணையும்.   சோஷலிச சமூகத்தில்கூடப் பழைய சமூக அமைப்பின் எச்சங்கள் நீடிக்கும்.  எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை இன்று நாம் சொல்ல முடியாது.

தலித்தியமே பின்நவீனத்துவம் என்று கருதக் கூடாது.  தலித்தியம் காலப் போக்கில் சோஷலிஸ்ட் எதார்த்தவாதத்தை ஏற்றுக்கொண்டு அதன் உட் பகுதியாக மாறும் என்று நான் நம்புகிறேன்.

தலித் எழுத்தாளர்கள் மட்டுமே தலித்தியப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று சிலர் கூறுகிறார்கள்.  உங்கள் கருத்து என்ன?

சமூக மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கின்ற எழுத்தாளனால் அதைப்பற்றி எழுத முடியும்.  அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால் தலித் எழுத்தாளர் மாதர் அல்லது குழந்தைகளுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுத முடியாது.

இன்னும் ஒருபடி மேலே சென்றால் குழந்தைகளுடைய பிரச்சினைகளைப் பற்றி குழந்தைகள் மட்டுமே எழுத முடியும் என்று கூறினால் அது பொருந்துமா?

Pin It