ptr book releasing4-3-2022 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்கள் எழுதிய ‘தணிக்கை தெளிவாக்கமும் செயல்முறைகளும்‘ (என்சிபிஎச்) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குனர் திரு. சண்முகம் சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பொது மேலாளர் தி.ரெத்தினசபாபதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கணக்காயர் இரா.அம்பலவாணன் IAAS, மண்டல பயிற்சி மைய தலைமை இயக்குனர் திருமதி ச.ரஜனி IAAS, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராஜேந்திரன், இரயில்வே தணிக்கைத் துறை தலைமை இயக்குனர் சி.நெடுஞ்செழியன், சுங்கத்துறை ஆணையர் க.பாலமுருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். ‘பனையடி‘ நாவலாசிரியரான இரா.செல்வம் ஐஏஎஸ் அவர்கள் தணிக்கை நூல் குறித்த திறனாய்வை வழங்கினார். நிறைவாக நூலாசிரியர் திருப்பதி வெங்கடசாமி நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நூலை வெளியிட்டுப் பேசிய மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தணிக்கை நூலின் அவசியத்தைப் பற்றி நிகழ்த்திய உரை வருமாறு.

இளநிலைப் பொறியாளர் பட்டம் பெற்றவுடன் எனது தந்தையாரிடம் போய்ச் சொன்னேன். எனக்குப் படிப்பு போதும். நமது பாரம்பரிய சொத்துகளைப் பார்க்க விரும்புகிறேன். கடந்த நூறாண்டாக யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. நீங்களும் தாத்தாவும் பொது வாழ்க்கையிலேயே இருந்து விட்டீர்கள். எல்லாம் பாழடைந்து போய்க் கொண்டிருக்கிறது. யார் யாரோ திருடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கணக்கு என்றே தெரியவில்லை. அதனால் நான் இனி படிக்கத் தேவையில்லை என்று சொன்னேன்.

ஆனால் எனது தந்தையார் அதற்கு சம்மதிக்கவில்லை. நீ வெளிநாடு போய் படித்தே ஆகவேண்டும். இந்த வயதில் உன்னுடைய பார்வையை விரிவாக்காமல் இருப்பது சரியல்ல. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வெளிநாட்டுக்கு விரட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு நான் திரும்பிப் பார்த்தேனென்றால் அன்றைக்கு எனது தந்தையார் எடுத்த முடிவு எனது திசையை மாற்றி என்னுடைய உலகப் பார்வையையும் மாற்றியமைத்ததை உணர முடிகிறது.

அதன்பின் நிறைய படித்தேன் வளர்ந்தேன் என்றாலும் அந்தத் தொடக்கம் இல்லையென்றால் இன்றைய அரசியல் பார்வையை வந்தடைந்திருக்க முடியாது.

அன்றைக்கு எனக்கும் என் தந்தைக்குமேகூட தெரியாது. எங்கு போய் படிப்பது? எப்படி படிப்பது என்று. அமெரிக்கா என்றால் அது மிகப் பெரிய நாடு, அன்றைக்கு இன்டர்நெட், ஈமெயில் எதுவும் கிடையாது. நான் கல்லூரியில் நல்ல மதிப்பெண் வாங்குவேனே தவிர சிறந்த மாணவன் என்று சொல்லமுடியாது. நான் விளையாடுவேன், பயணத்தில் ஆர்வமுண்டு. என்னுடைய நண்பர்கள் எங்கெங்கெல்லாம் விண்ணப்பம் செய்தார்களோ அங்கு விண்ணப்பித்தேன். உண்மையாகப் பார்த்தால் என்னுடைய மதிப்பெண்ணுக்கு பெரிய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்திருக்கும். ஆனால் அப்போது அது எங்களுக்குத் தெரியவில்லை. The lack of awareness தகவல் இல்லாததால் கிடைத்த மோசமான அனுபவம் எனக்கே இருக்கிறது என்பதை எனது அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்.

என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் எல்லா பள்ளிகளுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கு நியூஸ் பேப்பர், வார, மாத இதழ்கள் எல்லாம் வாங்கி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாகக் கொடுக்கச் சொன்னேன். நேஷனல் ஜியாகரபிக், எகானமிஸ்ட் இதெல்லாம் கொஞ்சம் விலை அதிகம். என்னிடம் சிலர் கேட்டார்கள் இதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? நாம் தமிழ் புத்தகங்கள், தேர்வுக்கான புத்தகங்கள், உள்ளூர் செய்திகள் இவற்றைக் கொடுத்தால் போதும். இந்தப் புத்தகங்களெல்லாம் அவர்களைப் போய்ச் சேருமா என்று கேட்டார்கள். நான் அதற்காகத்தானே அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

தெரிந்தவற்றை அவர்களாகவே படித்துக் கொள்வார்கள் அல்லவா? அவர்கள் இதுவரைப் படிக்காதவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கொடுத்தாகவேண்டும். இந்த சிறிய வயதிலேயே உலகம் எவ்வளவு வியப்புடையதாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சுயமாக முடிவெடுக்கிற நிலையை அவர்கள் அடையவேண்டும் என்று சொன்னேன்.

என்னைப் போல் இருட்டில் முடிவெடுக்கிற நிலை இல்லாமல் வெளிச்சத்தில் முடிவெடுக்கிற நிலைக்கு அவர்கள் வரவேண்டும் என்று கூறினேன்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு ஆசிரியர் என்னை அழைத்தபோது உறுதியாக நான் பங்கேற்கிறேன் ஏனென்றால் இது மிக முக்கியமான தலைப்பு முக்கியமான நூல் என்பதால் விருப்பத்துடன் உறுதியாக நான் பங்கேற்கிறேன் என்று கூறினேன். ஆனால் சரியாக நேரம் ஒதுக்கமுடியாமல் இரண்டுமுறை மாற்ற வேண்டியதாகிவிட்டது. தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததாலும் முதலமைச்சர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாலும் சில மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நூலாசிரியர் அவர்கள் எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கமுள்ளவர். 2016ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினரானபோது என்னை சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு உறுப்பினராக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் அவர்கள் நியமித்தபோது அத்ற்கான கூட்டங்களில் தணிக்கை குறித்து நூலாசிரியருடன் அவ்வப்போது ஆலோசித்து செயல்பட்டிருக்கிறேன். ஐந்து வருடங்கள் பொதுக் கணக்குக் குழுவில் இருந்தது அரசாங்கத்தைப் பற்றி முனைவர் பட்டம் பெற்றது மாதிரி என்று பல இடங்களில் சொல்லுவேன், ஏனென்றால் எது சரி எது தவறு என்று கண்டுபிடிக்கும் மிகப் பெரும் வாய்ப்பு அது. அதிலும் இப்போது நிதியமைச்சராக இருக்கிறபோது அந்தக் குழுக்களை இன்னும் சிறப்பிப்பதற்கு மேலும் பல முயற்சிகள் எடுக்கிறபோது நிதி சார்ந்த குழுக்கள் பொதுக் கணக்குக்குழு, பொது நிறுவனக்குழு, மதிப்பீட்டுக் குழு இம் மூன்றையும் உட்கட்டமைப்பிலிருந்து தொழில்நுட்பம், விதிமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை சிறப்பாக செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். அந்த முயற்சிகளில் திரு ஜெய்சங்கர், திரு. அம்பலவாணன் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்

ptr palanivel rajan 433எப்போதும் மாநில அரசாங்கத்திற்கும் தணிக்கைத் துறைக்கும் ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் நான் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே சொன்னேன். அரசாங்கத்தோடு மிக நெருக்கத்தோடு செயல்பட வேண்டும். ஒவ்வொன்றிலும் அவர்களுடைய கருத்து கேட்கவேண்டும் அவர்களின் பணி மிக முக்கியமானது. ஏனென்றால் பல திருத்தங்கள் அரசாங்கத்திற்குத் தேவையானதாக இருக்கிறது. அவர்கள் கூறுவதை உள்வாங்கிக்கொண்டு செயல்படுவது அரசுக்குத் தேவையானதாக இருக்கிறது. அதனை செயல்படுத்துவது எங்களது கடமை. அதற்குத்தான் மக்கள் எங்களைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார்கள் என்றேன்.

இந்த நூலினுடைய முக்கியத்துவத்தை நான் அடிப்படையிலிருந்து கூறவேண்டுமென்றால் சில படிகள் வேறு திசையில் நான் நடக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஒரு புள்ளிவிவரம் கூறவேண்டும். வேறு எந்த மாநிலமும் அடையாத உயர்கல்விப் படிப்பு 52 சதவீதம் என்பதை முதல்முறையாகத் தமிழகம் தொட்டிருக்கிறது.

இதற்கு நூறு வருடம் திரும்பிப் பார்க்கவேண்டும். நீதிக்கட்சிக் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயக் கல்வி என்று சட்டம் இயற்றப்பட்ட­திலிருந்து இதன் தொடக்கத்தைக் காணமுடியும். இது காங்கிரஸ், திமுக அதிமுக என எல்லா கட்சி அரசாங்கங்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை வழிநடத்தியிருக்கின்றன.

ஆனால் தகுதியான திறமையான பணியாளர்கள் பல நிறுவனங்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்கான மாற்றாகத்தான் ஒரு படியாக முதலமைச்சர் அவர்கள் தனது பிறந்தநாளில் ‘நான் முதல்வன்‘ என்றொரு பயிற்சித் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார்.

நான் 1987ல் ரீஜினல் இஞ்சினியரிங் கல்லூரியில் பொறியியல் படித்து வெளியேறியபோது அந்த ஆண்டில் சுமார் நாலாயிரம் பேர் தமிழ்நாடு முழுமைக்குமாகப் படித்து வெளியேறியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேராக இருக்கிறார்கள். சுமார் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குள் இத்தனை மாற்றம் நடந்துள்ளது.

என் காலத்தில் என் அப்பா, தாத்தா எல்லாம் படித்தவர்கள். எங்களுக்கு ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஒன்றரை லட்சம் பேரில் பலர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். அவர்களுக்கு யார் ஆலோசனையோ அறிவுரையோ சொல்வது? அவர்கள் எந்தத் துறையை தேர்வு செய்வது? எந்தத் துறையில் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும்? என்பது தெரியவில்லை.

இதையெல்லாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது மிக முக்கியமானதொரு கடமை. அதில் அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. சமுதாயத்தில் பலருக்கும் பங்கு இருக்கிறது.

அந்தவகையில் மிக முக்கியமான இதுபோன்ற நூல்கள் அதிலும் இந்தத் துறையில் தமிழில் மிகத் தெளிவாக தணிக்கையின் அடிப்படை அதனை எப்படி செயல்படுத்த வேண்டும், அதன் நிறை குறை, அதன் சிறப்பு அம்சங்கள், எந்தெந்த வகையில் இதனைப் பார்க்கலாம் என்பதை எல்லாம் இந்த நூல் எடுத்துரைக்கிறது. உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் ஆங்கிலத்தில் இதனைச் சொல்வது போதாது.

காரணம் சென்னையிலோ அல்லது மதுரை­யிலோ ஏதேனும் கல்லூரிக்குச் சென்று தமிழில் பேசினால்தான் அனைத்து மாணவர்களுக்கும் புரிகிறது. இதுதான் உண்மை. தமிழில் அந்தந்த துறையிலிருக்கிற நுட்பத்தோடு இருக்கிற நூல்கள் மிகவும் முக்கியம். அவ்வகையில் தமிழில் தணிக்கை நூல் மிகமிக முக்கியமானது.

அதனால் நூலாசிரியருக்கு நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் வங்கியாளராக, நிதி மேலாண்மையில் இருந்ததனால் தணிக்கையின் முக்கியத்துவத்தை நன்கறிவேன். இந்த அரசாங்கத்திலும் தணிக்கையின் முக்கியத்துவத்தையும் உணரமுடிகிறது.

முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தணிக்கை நூலின் ஆசிரியரை அவரது அலுவலகத்திற்கு வந்து நானே பலமுறை அவரது ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவத்தால் அவரது ஆளுமையை நன்கு அறிந்தவன் நான் என்பதால் சொல்கிறேன். அவரது குறிப்பிட்ட சில பங்குதான் இந்நூலில் வெளிவந்திருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. (கைதட்டல்)

இந்த நூலை எங்கெங்கெல்லாம் என்னால் கொண்டு சேர்க்க முடியுமோ குறிப்பாக என் சட்டமன்றத் தொகுதியில், மாவட்டத்தில், நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டு செல்வேன். அதேபோல் கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து அரசாங்கம் மூலமாக தமிழகமெங்கும் கொண்டு செல்வதற்கு உண்டான வழிவகை செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

- மாண்புமிகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

எழுத்தாக்கம்: ஜி.சரவணன்

Pin It