விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப் பொருளைக் கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் (திருவெம்பாவை-3), மருந்தினனே பிறவிப் பிணிபட்டு மடங்கினார்க்கே (நீத்தல் விண்ணப்பம்-18) போன்ற பாடல்கள் இறைவனே எல்லாம் என்றதனால் பக்தி இலக்கிய காலத்

திற்கு முன்பிருந்த சித்தர் மரபு காக்கப்படாமல் போயிற்று.  எனவே, அக்காலத்தில் நோய்கள் பற்றியும், அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் குறிப்புகள் அதிகமில்லாமல் போயிற்று எனலாம்.  மேலும் மருத்துவக் குறிப்புகளும், ஓலைச் சுவடி களில் பாட்டாக மருந்துகளும் மறைபொருளாக எழுதப்பட்டு, நவீன மருத்துவத்தைப் போலன்றி ஜனநாயகப்படுத்தப்படாது பிறர் எளிதில் புரிந்து நடைமுறைப்படுத்த முடியாததாகவே இருந்தது.

ஆய்வுகள் இல்லாத காரணத்தினாலே, சித்த மருத்துவம் வளரவில்லை என்பதை இந்திய மருத்துவப் பள்ளியின் இயக்குநராகப் பணிபுரிந்த மேலை மருத்துவ நிபுணரான டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார் இந்திய வைத்திய “எல்.ஐ.எம்.  மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பொழுது, எல்.ஐ.எம்.-களுக்கு பரம்பரை வைத்தியர் களே இடைஞ்சல். இத்துடன் மேல்நாட்டு முறையை அப்பியாசிப்பவர்களும் உங்களைக் குறைகூறி வருகின்றனர்.  இதற்கு நீங்கள் ஆராய்ச்சி அடிப் படையில் ஈடுபட இந்திய முறையை வெகு சீக்கிரம் விஞ்ஞான உலகம் வியக்கும்” என்று கூறினார்.  இதே போக்கு நீடித்து வருவதை கடந்த 10 ஆண்டு களில் 153 ஆய்வுக்கட்டுரைகளே வெளிவந்ததன் மூலம் அறியமுடிகின்றது.

சித்த மருந்துகளால் உடனடியாக நோய் களுக்கான அறிகுறிகளைக் குறைக்க முடியாது என்ற காரணத்தால், இன்று சில சித்த மருத்து வர்கள் அலோபதி மருந்துகளைக் கொடுப்பது வழக்கமானதாக உள்ளது. இதுபோலவே 60 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்ததைத் தமிழ்நாடு ஆயுர்வேத மகா சம்மேளனத்திற்குத் தலைமை வகித்த பண்டிட் பி.எஸ். ராமசர்மா தலைமை உரையால் அறிய முடிகிறது.  “சித்த மருத்துவர்கள் ஏன் அவர்கள் மருத்துவமுறையைக் கையாள் வதில்லை?” மேலும் பரம்பரை வைத்தியர்களுக்கு எவ்வித செல் வாக்கும் இல்லை.  இத்துடன் சித்த மருத்துவர்கள் எல்.ஐ.எம்.  (சித்தா) அம்மருத்துவம் தழைக்க ஏன் தங்கள் மருந்துகளையே கையாள் வதில்லை” என்று குறை கூறிப் பேசியதிலிருந்து சித்த மருத்துவம் வளர்ச்சியடையாததற்கான காரணத்தை மேலும் அறிய முடிகிறது.

காலனி அரசின் உள்நாட்டு மருந்துக் கொள்கையும் அதன் விளைவுகளும்:-

இந்திய மண்ணில் மேலை மருத்துவமும் ஹோமியோ மருத்துவமும் காலூன்றிய பிறகு, உள்ளுர் மருத்துவத்திற்கான மவுசு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, திரும்ப மீள முடியாத அளவிற்குச் சென்றது எனலாம்.

ஆயுர்வேதம், யுனானி அல்லது சித்த மருத்துவம் ஆகிய முறைகளில் புதிய தடுப்பு முறைக்கான ஊசிகள் அல்லது புதிய உத்தியில் நோயை அறியும் முறைகள் மேலை மருத்துவத்திற்கு இணையாக இல்லை. இத்துடன் அம்முறையில் தோன்று வதாகவும் இல்லை.  இதனால் உள்நாட்டு மருத்து வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மாகாண மருத்துவக் கவுன்சில் ஆரம்பிக்கப் பட்டபின் மேலை மருத்துவம் பட்டம் பெற்று தகுதியானவர்கள் அனைவரும் இதில் உறுப்பின ராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 1912, 1917-களில் சட்டம் இயற்றியது. இது சுதேசி மருத்துவர்கட்கு பேரிடியாகி இக்கவுன்சிலில் அங்கம் வகிக்க முடியாதபடி போய் உள்ளூர் வாசிகளிடமே மதிப்பிழந்து வாழ வேண்டிய தாயிற்று.  மேலும் அரசு வேலைகளுக்கும் மேலை மருத்துவம் கற்றவர்களே பணியில் அமர்த்தப் பட்டனர்.

மேலை மருத்துவத்தின் வருகையால் உள்நாட்டு மருத்துவர்களுக்கு நோயாளி வருகை மிகவும் குறைந்தது, மக்களிடமும் இருந்த மதிப்பும் குறைந்தது.  மக்களும் உடனடித் தீர்க்கும் மருத்துவம் தங்களுக்கு ஒரு புதிய வரவு என மேலை மருத்துவத்தை வரவேற்று, இதுபோல் தாங்கள் எப்போதும் கண்டதில்லை என வியந்தனர்.

சுதேசி மருத்துவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப் படுவதற்குக் காரணம், பிரிட்டிஷ் அரசே என்று குறை கூறினர்.  ஏனெனில் அரசு மேலை மருத்துவத்தை மட்டும் முறைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்குப் பேருதவி செய்தது.  இதனால் முன்னர் சுதேசி மருத்துவத்தை ஆதரித்த அரசர், ஜமீன்தார் உள்ளாட்சி (நகராட்சி) அமைப்பினர் ஆகியோர் மேலை மருத்துவத்திற்குத் துணை போயினர்.

உள்ளூர் மருத்துவத்தைப் பேண காலனி அரசு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.  சுதேசி முறைக்குப் புத்துயிர் அளிக்க சரியான நிதி உதவியும் செய்யவில்லை.  இதுவே, முஸ்லீம் பேரரசுகள் இந்தியாவில் அரசாண்டபோதும் நடைபெற்றன.  ஆகவே, இது ஒன்றும் புதிதில்லை என்றும் கூறப்பட்டது.  (Medicine and the Raj- P. 68)

இப்படியாக, உள்நாட்டு மருத்துவமுறை வலுவின்றி சென்றுகொண்டிருந்தபோதும், 19-ஆம் நூற்றாண்டு முழுவதும் வழக்கம் போலவே சுதேசி வைத்தியர்கள் பாரம்பரியமாகத் தங்கள் தொழிலை வளர்த்து வந்தனர்.  இந்நிலையில் காலனி அரசு சுதேசி மருத்துவத்தை உள்நாட்டு வழியில் போதிக்க முனைந்தது.  ஆனால் உள்ளூர் மொழியில் கல்லூரியில் படிப்பதை அக்காலத்தில் கல்வியில் சிறந்தவர்கள், “சுதேசி பைத்தியங்கள்” என்று குறை கூறினர்.  மேலும், இவர்களுக்கு மேலை மருத்துவ நூல்களை அரசு மொழி பெயர்த்து வைத்தியர்களின் வாரிசு களுக்கு, உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.  ஆனால், இதற்கு ஐரோப்பிய மருத்துவர் களும் மேலை மருத்துவம் கற்ற இந்தியர்களும் பெரும் தடையாய் இருந்தனர்.  இக்கால கட்டத்தில் சுதேசி வைத்தியர்களை அரசு கண்டுகொள்ளாது அவர்கள் வளர்ச்சிக்கு உதவாது இருப்பதை, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய மருத்துவ அலுவலர் கழகப் பிரிவை இந்தியாவில் செயல்பட வைக்க வேண்டும் (1893-1907) என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தியது.  மேலும், சுதேசி மருத்துவம் என்பது இந்திய கலாசாரத்தின் சின்னம்.  ஆகவே, இதனை உயிர்ப்பிப்பது அரசின் கடமை என்றும் கூறியது.  ஏனெனில், இந்த செயலும் இந்திய விடுதலைக்கு உதவக்கூடும் என்று அக் கட்சி நினைத்தது.  இதன் பயனாக அரசு, “ஹோம் ரூல் மூவ்மெண்டின் உச்சபட்ச வெளிப்பாடாக” முதல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை ஜாமினி ரோயால் 1916-இல் கல்கத்தாவில் தங்கள் ஆதர வாளர்களின் நிதி உதவியுடன் திறந்தது.  ( Medicine in India. Modern Period on Jaggi: P. 345)

நீர்த்துப்போன நீரியல் கோட்பாடு:

இக்கால கட்டத்தில் சுதேசி மருத்துவம் உடல்கூறு, வேதியல், மகளிர் மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய துறைகளில் மிகப் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.  மேலும் ஆய்வுகளும் மிகக்குறைவானதே என்பது பொதுவான கருத்தும், உண்மையும் கூட.  காலரா, பெரியம்மை, மலேரியா, பிளேக் ஆகிய நோய்கள் கொள்ளை நோயாக வரும்பொழுது அவற்றிற்கான தடுப்பு முறையோ அல்லது மருத்துவமோ இல்லை என்பதும் பெரும் பான்மையான உண்மையாக இருந்தது.  மேலை மருத்துவக் கண்டுபிடிப்பான பாக்டீரியா இவர்கள் கூறும் உடம்பிலுள்ள நீரியலான தாதுக்களின் நிலை சார்ந்ததென்ற கருத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இல்லாது, பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தி அடிப்படைத் தத்துவத்திற்கே வேட்டு வைப்பதாக இருந்தது.  மேலும் சுதேசி மருத்துவம் குணமாவதைக் குறிப்பிடுகிறதே தவிர எப்படி, நோய் ஏற்படுகிறது? என்பதற்கான காரணங் களைக் கூறுவதில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது மற்றும் நோயை வகுத்துக்கூறும் முறை (Nosology) சுதேசி மருத்துவத்தில் இல்லாததும் பெரும் குறையாக இருந்தது.

நுண்நோக்காடி (Microscope) மற்றும் பாக்டீரியாக் களுக்கான ஆண்டிபயாடிக் என்பவைகளுக்குச் சுதேசி மருத்துவம் பதில் சொல்ல இயலவில்லை.  சுதேசி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புத்தன்மை மற்றும் நோயின் குணப்பாட்டைக் குறித்து மருத்துவம் அளிக்கப்பட்டதே தவிர அந்நோயை உருவாக்கிய கிருமிகளை அழிப்பது என்ற கொள் கைக்கு ஈடான மருத்துவம் இல்லை என்பதும் ஒரு பெரும் குறைபாடாகக் கருதப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு, மேலை மருத்துவத்திற்கு ஒப்ப சுதேசி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  அதை ஒருபோதும் விஞ்ஞான அடிப்படையிலான ஒன்று என்று அதன் நூல்களைப் பார்த்தும் ஏற்றுக் கொள்ள மறுத்தது.  அதன் குணப்பாடு மற்றும் நவீன மருத்துவத்திற்கான அதன் பங்களிப்பு ஆகியவைகள் இல்லாமையால் கேலி பேசுவதாக இருந்தது.  மேலும், அரசு கொள்ளை நோயின் தாக்குதலின்போது சுதேசி மருந்துகள் பயனற்று இருந்ததால், அரசு இதன் மேல் கவனம் செலுத்த வில்லை.  ஆகவே, சுதேசி மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வளர்க்கவும், கல்லூரிகளைத் தொடங்கவும் அரசு விரும்பவில்லை.  ( Medicine in India Modern Period P. 342)

சாதியத்தில் தலையிடாதே - அரசு கவனம்:

மருத்துவக் கல்வியைப் பொறுத்த மட்டில், 1850-51 ‘Board of Education’ அறிக்கையின்படி என்ன கற்பிக்க வேண்டும்? எப்படிக் கற்பிக்க வேண்டும்? என்பது 1835-ஆம் ஆண்டில்தான் தெளிவானது.  ஆனால் 1835-இல் யாருக்குக் கற்பிக்க வேண்டும்? ஏன் கற்பிக்க வேண்டும்? என்பது காலனி அரசிற்கு விடுவிக்கப்படாத கேள்வியாகவே இருந்தது.

இந்த அறிக்கையின்படி ஒரு சிறிதளவே கல்வி அளிக்க அரசு முனைந்துள்ளது என்பது தெளிவாகிறது.  அதுவும் உயர்சாதியினருக்கு ஐரோப்பிய அறிவியலைக் கற்பிப்பது என்பது மேலை இலக்கியங்களை அவர்கள் நாட வழி அமைக்கவே ஆகும் என்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது.

இந்நிலையில் மிஷினரிகள் கீழ்த்தட்டு வர்க்கத் திற்குக் கல்வி அளிக்க முன்வந்தாலும், அரசு முன் வரவில்லை.  இதைப்பற்றி எல்பின்ஸ்டன் குறிப்பிடு கையில் கவனமாக நாம் கல்வியை ஒரு புதிய வகுப் பினருக்கே அளிக்க வேண்டும், இதை பிராமணர் அல்லது பிராமணர்களை ஒத்தவர்களுக்கே அளிக்க வேண்டும்.  அரசு, எல்லோருக்கும் கல்வி என்பதை விதியாகக் கொள்ளத் தேவையில்லை.  ஜாதி பாகுபாட்டில் நாம் தலையிடத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்றார்.  ஆக, அரசு சமூகத்தினூடே தலையிடாக் கொள்கையைக் (Social Non Interference Policy) கடைப்பிடித்தது.  இது போலவே, மருத்துவக் கல்வி என்பதும் ஒரு சமூக மாற்றத்திற்கு என்பதற்குப் பதிலாக, காலனி அரசை மேலும் வலுப்படுத்தக் கூடிய விதத்தி லேயே அமைந்தது.

முதல்முறையாக ஆயுர்வேத மருத்துவமனை பண்டிட் கோபாலாச்சார்லும் - ஆயுர்வேதமும்:

1898-ஆம் ஆண்டு மைசூரில் பிறந்து சென்னையில் குடியேறிய பண்டிட் கோபாலாச்சார்லுவே முதன் முதலாக “மதராஸ் ஆயுர் வேதிக் ஆய்வுக் கூடத்தை” ஆரம்பித்து, பிறகு மருந்தகத்தையும் “ஆயுர் வேதாஸ்ரமம்” என்ற பெயரில் ஆரம்பித்தார்.  இதுவே சுதேசி முறையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகும்.  பிறகு இது கல்யாண பரமேஸ்வரி அறக்கட்டளை உதவியால் கல்லூரி ஆனது.

1901-1929 வரை 167 மாணவர்கள் இக் கல்லூரியில் படித்துள்ளனர்.  இவர்கள் தங்கள் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகள் பயின்றனர்.  அரசால் ஆயுர்வேத மகத்துவம் உணரப்பட்டது.

ஆரம்ப காலங்களில் காலனி அரசு சுதேசி மருத்துவமுறைகளைப் பயன்தரும் கேடுகளற்ற மருத்துவம் எனக் கொள்ளாது, மதிப்பளிக்காது, சலுகைகள் அளிக்காது அதை ஒரு ஆய்வுகளற்ற நாட்டுப்புற மருத்துவம் என்றே கருதியது.  அதன் காரணமாக அரசு ஆதரவு இன்றி சலுகைகள் கிடைக்காமல் இருந்தது.  ஆனால் கோபாலாச் சார்லுவின் மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்த பின், ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக்கொண்டு, ஆதரவு தெரிவித்ததன் காரணமாக மதராசில் 1905-இல் கிருஷ்ணசாமி அய்யரால் வெங்கட்ட ரமணா மருந்தகமும், ஆயுர்வேதக் கல்லூரியும் தொடங்கப் பட்ட பின் ஆண்டுக்கு 40 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்தனர்.

சிறப்பு வாய்ந்த மருந்துகளும், அதன் பயனாகக் குணமடைந்த மக்கள் ஆதரவும், நம்பிக்கையும் இருந்தும் பிரிட்டிஷார், அலோபதி மருத்துவம் தெரியாத சுதேசி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பது பாதுகாப்பானவை அல்ல என்றே எண்ணினர்.  ஆகவே, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காலனி ஆதிக்கத்தில் அலோபதி மருத்துவமே நோய்களைக் குணமாக்க முக்கிய அங்கம் வகித்தது.  இதனை முழுவதும் நிறைவேற்ற பிரிட்டிசார் எடுத்த முயற்சியால் 1900 ஆண்டு வரை இந்திய மருத்துவ சேவைக்கு 200 மருத்துவர் களையே பிரிட்டனிலிருந்து அனுப்ப முடிந்தது.  ஆகவே, பற்றாக்குறையைச் சரிக்கட்ட, இந்தியர் களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.

சட்டசபையில் ஆயுர்வேத வளர்ச்சிக்கே குரல்

ஆரம்ப காலத்தில் அலோபதி மருத்துவத்திற்கு அரசு மிகுதியாக ஆதரவு அளித்து வந்ததால், சுதேசி மருத்துவ வளர்ச்சி தடைபட்டது.  ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் சுதேசி மருத்துவம் மருத்துவர் களால் கையாளப்பட்டு மீட்டுயிர் பெற்றது.

இதற்குக் காரணம் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டில் வெளிவந்த பல மருத்துவ சஞ்சிகைகள் சுதேசி மருத்துவ மேம் பாட்டுக்கு ஆதரவாக தீவிரமாக எழுதின. எ.கா ‘வைத்திய கலாநிதி’ மருத்துவ இதழ் ஆசிரியர் பண்டிட் எம். துரைசாமி அய்யங்கார் காலனி அரசின் சரியாகப் பயன்தராத பொது மக்களுக்கான நல் வாழ்வுத் திட்டங்களையும், மேலை மருத்துவத் திற்கான மிகையான ஆதரவையும் சுட்டிக் காட்டி கட்டுரைகளை எழுதினார்.  மேலும் இவர் சட்ட சபை விவாதங்களில் கலந்து கொண்டு முதல் வேண்டுகோளாக ஆயுர்வேதப் பள்ளிகளைத் திறந்து அதன் வளர்ச்சிக்கான பணிகளை (சித்த மருத்துவம் குறித்து பேசாது) மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.  இத்துடன் 1914 நவம்பர் 23, ஏ.எஸ். கிருஷ்ணாராவ், உள்நாட்டு மருத்துவத்திற்கு ஊக்கமளிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.  இவரும் ஆயுர்வேதம் குறித்தே பேசினார்.  இதன் பயனாக சர்ஜன் ஜெனரல் கிப்போர்ட் (Gifford) டாக்டர் எம்.சி. கோமேன் (Dr. Mc. Koman) என் பவரை 1918 ஜூலை 12-ஆம் தேதி சுதேசி மருத்துவ முறையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்படி டாக்டர் கோமேன் 1918 அக்டோபர் 31-இல் உள்நாட்டு மருத்துவம் குறித்த அறிக்கையைத் தயாரித்து 1918 டிசம்பரில் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.  இதை அரசு நிராகரித்தது.  பிறகு உஸ்மான் கமிட்டியை உருவாக்கி அதன் பரிந் துரையின் பேரில் இந்திய மருத்துவப்பள்ளி 1924-இல் ஆரம்பிக்கப்பட்டது.  இதில் சுதேசி மருத்துவத் துடன் மேலை மருத்துவமும் கற்பிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரியாகி எல்.ஐ.எம், ஜி.சி.ஐ.எம் ஆனது:

1946-இல் சென்னை மாகாண முதல்வர் பிரகாசம், சுகாதார அமைச்சர் திருமதி ருக்மணி லட்சுமிபதியும் உஸ்மான் குழு, சோப்ரா குழு மற்றும் பண்டிட் குழு போன்ற ஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகளைச் செயல்படுத்த ஓய்வு பெற்ற மைசூர் சட்டத்துறைச் செயலர் திரு. நாராயண சாமி நாயுடுவை தனி அலுவலராக நியமித்தனர்.  பின்னர் கல்லூரிக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டு இந்திய மருத்துவம் பள்ளி, கல்லூரி ஆகி கல்லூரியின் பெயர் (College of Integrated Medicine) என்று மாற்றமடைந்தது.

1948-இல் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம் படிப்பில் சித்தா ஆயுர்வேதம், யுனானி ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை அலோபதி மருத்துவத்துடன் படிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

College of Indian Medicine, (1953) (G.C.I.M- Graduate of the College of Integrated Medicine ) என்ற 4-5 ஆண்டு பட்டப்படிப்பு துவங்கப்பட்டு, பிறகு ஓர் ஆண்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது.  முதலில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  அதன் பிறகு, இது படிப்படியாக 125 மாணவர்களாக அனுமதி உயர்த்தப்பட்டது. இச்சமயத்தில் அரசு இக்கல்லூரியைச் சென்னைப் பல்கலைக்கழகத் துடன் இணைக்க முயற்சித்தது.  ஆனால் டாக்டர் ஏ.எல். முதலியாரை துணை வேந்தராகக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதற்கு இசை வளிக்கவில்லை.  ஆனால் ஜி.சி.ஐ.எம்.  படித்த வர்கள் உள்ளூர் மருத்துவம் மற்றும் மேலை மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளி களுக்கு மருத்துவம் அளிக்க அரசு இசைவளித்தது.  ஜி.சி.ஐ.எம் படிப்பு முடித்து வெளியேறியவர் களுக்கு, ஒரு வாய்ப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால டி.எம்.எஸ் (னு.ஆ&ளு) படிப்பும் அதை முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால எம்.பி.பி.எஸ்.  படிப்பும் படிக்க அரசு அனுமதி அளித்தது.

சுதேசி மருத்துவம் கற்க ஆர்வமில்லை

ஆகவே உள்ளூர் மருத்துவம், மேலை மருத்துவம் ஆகிய இரு மருத்துவங்களிலும் ஆலோசனை வழங்க தொடங்கப்பட்ட மருத்துவப்படிப்பில் மேலை மருத்துவம் படித்தவர்கள் மருத்துவரானார்கள்.  இதன்படி நாட்டு மருத்துவமுறையுடன் மேலை மருத்துவத்தையும், இணைத்துப் படிக்கும் வாய்ப்பைத் தமிழ்நாடு இழந்தது.  இது நீடித்திருந்தால், சுதேசி மருத்துவம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு களுடன் வளர உதவி இருக்கக்கூடும்.  தற்பொழுது சுதேசி மருத்துவமுறை சித்தா, யுனானி ஆயுர்வேதம் சென்னை அரும்பாக்கத்தில் 1970-இல் திறக்கப் பட்டு, சுதேசி மருத்துவம் மட்டுமே கற்பிக்கப் படுகிறது.  ஆனால் பாளையங் கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி மட்டுமே நடைபெறுகிறது.

சுதேசி மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது

1965-இல் கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய இந்திய மருத்துவக் கல்லூரி மூடப்பட்டு மகளிர் மேலை மருத்துவம் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியாக மாறி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது.  1967இல் கல்லூரி மாணவிகள் தங்களுக்குத் தனிக் கல்லூரி தேவை இல்லை.  ஆண்களுடன் சேர்ந்து படிக்க விரும்புவதாகப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, 1967 இலேயே ஆண்களும் இக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1960-இல் மாணவர்கள் சுதேசி மருத்துவம் கற்க ஆர்வம் காட்டாததனால் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம். 1-2 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடரவும் 3, 4, 5-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு டி.எம்.எஸ் படிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சுருங்கச் சொன்னால் சுதேசி மருத்துவராக ஆகவேண்டியவர்கள் சித்த அலோபதி மருத்துவத் துறையினராக மடை மாற்றமடைந்தனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் இந்திய மருத்துவக் கல்லூரி நினைவுச் சின்னங்களாக டாக்டர் வைத்தியரத்தினம் கேப்டன் சீனிவாச மூர்த்தியின் மார்பளவு நினைவு உருவச் சிலையை திருமதி ருக்மணி லட்சுமிபதி 1947-இல் திறந்து வைத்தார்.  இக்கல்லூரியின் இடத்தை அன்பளிப்பாக அளித்த பனகல் அரசர் நினைவாக பனகல் ஹால் என்று அறிவுசார் கூட்டங்கள் நடத்தும் கூடம் உள்ளது.  மேலும் இவ்வளாகத்தில் இன்றைய நிலையில் நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலமரமும் நிழல் தந்து கொண்டிருக்கிறது.  ஆனால் இந்திய மருத்துவக் கல்லூரிதான் இல்லை.