முந்தைய பகுதிகளில் AI என்றால் என்ன, அது எவ்வாறு வளர்ந்தது, அதன் நம்பகத்தன்மை, AI-யின் “கண்கள்”, அதன் பல்வேறு வகைகள், AI பாதுகாப்பு குறித்த உலகளாவிய கவலைகள் ஆகியவற்றைப் பார்த்தோம்.

AI குறித்து அச்சப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. தவறான தகவல்கள், தவறான பயன்பாடு, மனிதக் கட்டுப்பாட்டை மீறக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை குறித்து உலகம் தொடர்ந்து விவாதித்து வருகிறது.

ஆனால், AI-யின் கதை அதோடு முடிந்துவிடவில்லை. AI என்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல; மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவக்கூடிய ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் வளர்ந்து வருகிறது.ai in kitchen 700மருத்துவம் முதல் கல்வி வரை, விவசாயம் முதல் விண்வெளி வரை, எழுத்து முதல் சமையல் வரை — மனிதர்கள் செய்யும் பல்வேறு பணிகளில் AI ஏற்கனவே பயன்படுத்தப்படத் தொடங்கிவிட்டது.

அப்படியானால், AI என்ன செய்ய முடியும்? அது நம் வாழ்க்கையை எப்படியெல்லாம் எளிதாக்க முடியும்? அதைப் பார்ப்பதுதான் இந்தப் பகுதியின் நோக்கம்.

AI தொடரும் சர்ச்சைகளும்... மனித வாழ்க்கைக்குள் அதன் பயணமும்

ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தைப் பாருங்கள்.

நடிகர் ஷாருக்கான் இடம்பெறும் Google Gemini விளம்பரங்களில், அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு AI எவ்வாறு உதவக்கூடும் என்பது காட்டப்படுகிறது.

அவற்றில் ஒன்றில், குடும்பத்தின் வருமானத்திற்கு உதவ விரும்பும் ஒரு பெண், தன்னிடம் இருக்கும் கதக் (Kathak) நடனத் திறமையைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது குறித்து Gemini-யிடம் ஆலோசனை பெறுகிறாள். Gemini, அவளுடைய திறமையைப் புரிந்துகொண்டு, நடன வகுப்புகளைத் தொடங்குவது போன்ற ஒரு நடைமுறை வாய்ப்பை முன்வைக்கிறது.

அதே Google Gemini பிரச்சாரத்தின் மற்ற விளம்பரங்களில் வேலை நேர்காணலுக்குத் தயாராவது, கடையை இணையவழித் தொழிலாக மாற்றுவது, GST தொடர்பான வேலைகள், நிலையான வைப்புநிதி (Fixed Deposit) போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கும் Gemini உதவுவது காட்டப்படுகிறது.

இவை தனித்தனி விளம்பரக் காட்சிகளாக இருந்தாலும், அவை சொல்லும் செய்தி ஒன்றுதான்: AI என்பது பெரிய தொழில்நுட்ப ஆய்வகங்களில் மட்டும் இருக்கும் ஒன்றல்ல; நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எழும் சிறிய, நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் உதவக்கூடிய கருவியாக அது மாறிவிட்டது.

இதன் மூலம் ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. AI இனி ஆய்வுக்கூடங்களில் மட்டும் இருக்கும் தொழில்நுட்பம் அல்ல; அது மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால், அதே நேரத்தில் AI குறித்துத் தொடர்ந்து எச்சரிக்கைகளும் எழுகின்றன.

சமீபத்தில் Microsoft நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், AI தவறான கைகளில் சென்றால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். அவர் குறிப்பிட்ட “ஒரு பில்லியன்” என்ற எண்ணிக்கை ஒரு சாத்தியமான பேரழிவு குறித்த எச்சரிக்கையாகும்; AI நிச்சயமாக அவ்வளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்ற கணிப்பு அல்ல.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், AI நிறுவனங்கள் தங்களுக்குள் பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்கி, சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவதற்கான அணுகுமுறையை முன்னிறுத்தியுள்ளது. 2026 செப்டம்பரில், முன்னணி AI நிறுவனங்களுடன் சட்டரீதியாகக் கட்டாயப்படுத்தாத ஒரு சுயக்கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

AI குறித்த விவாதம் தொழில்நுட்ப உலகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV-வும் AI-யின் வாய்ப்புகளோடு அதன் ஆபத்துகளையும் கவனமாக ஆராய வேண்டும் என்றும், AI மனித கண்ணியம் மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இதனால் AI பற்றிய விவாதம் இன்று விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மட்டும் இல்லை. அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக அமைப்புகள், ஆன்மிகத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் AI மனித வாழ்க்கையை எளிதாக்குகிறது. மறுபுறம், அதே AI தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கைகள் எழுகின்றன. அதனால் இன்று AI குறித்துக் கேட்க வேண்டிய கேள்வி, “AI நல்லதா? கெட்டதா?” என்பது மட்டும் அல்ல; “AI-யை மனிதகுலத்திற்கு நன்மை தரும் வகையில் எப்படிப் பயன்படுத்துவது?” என்பதுதான்.

அப்படியானால், மனித வாழ்க்கையின் எந்தெந்தத் துறைகளில் AI ஏற்கனவே உதவத் தொடங்கியுள்ளது?

1. மருத்துவம் – நோயைக் கண்டறிவதில் இருந்து மருந்து கண்டுபிடிப்பது வரை

மருத்துவத் துறையில் AI-யின் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. X-ray, CT Scan, MRI போன்ற மருத்துவப் படங்களை ஆய்வு செய்வது, நோயாளிகளின் பல்வேறு மருத்துவத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது, நோயின் அறிகுறிகளை அடையாளம் காண உதவுவது போன்ற பணிகளில் AI பயன்படுத்தப்படுகிறது.

இது மட்டுமல்ல, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் AI உதவத் தொடங்கியுள்ளது.

ஒரு புதிய மருந்தை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்படும். ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்களில் எந்த ஒன்று குறிப்பிட்ட நோய்க்குப் பயன்படக்கூடும் என்பதைத் தேடுவது மிகப்பெரிய பணியாகும். இந்தத் தேடலை விரைவுபடுத்த AI உதவுகிறது. குறிப்பாகப் புற்றுநோய் ஆராய்ச்சியில், எந்த உயிரியல் இலக்குகளை மருந்துகள் தாக்க வேண்டும், எந்த மருந்து எந்த வகையான புற்றுநோய் செல்களுக்கு எப்படி எதிர்வினையாற்றும் போன்றவற்றைக் கணிக்க AI பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். AI ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க உதவுவது ஒரு விஷயம்; அந்த மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது, பயனுள்ளது என்பதை நிரூபிப்பது வேறு விஷயம்.

எனவே, “AI புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டது” என்று சொல்வதைவிட, “புற்றுநோய்க்கான புதிய மருந்துகளையும் சிகிச்சைகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் AI முக்கியமான உதவியாளராக மாறி வருகிறது” என்று சொல்வதே சரியானது.

மருத்துவருக்குப் பதிலாக AI வருவது அல்ல; மருத்துவரின் ஆய்வு மற்றும் முடிவெடுப்பிற்கு உதவும் ஒரு புதிய கருவியாக AI உருவாகி வருகிறது.

2. கல்வி – ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட ஆசிரியரா?

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அனைவருடைய புரிந்துகொள்ளும் வேகம் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்குக் கணிதம் எளிதாக இருக்கலாம்; இன்னொருவருக்கு மொழிப்பாடம் எளிதாக இருக்கலாம். ஒருவர் ஒரு விஷயத்தை ஒருமுறை கேட்டாலே புரிந்துகொள்வார்; இன்னொருவருக்கு அதையே வேறு விதமாக விளக்க வேண்டியிருக்கும்.

இங்கே AI ஒரு உதவியாளராக இருக்க முடியும். ஒரு பாடத்தை எளிமையாக விளக்கலாம்; கடினமான கருத்தை உதாரணங்களுடன் சொல்லலாம்; மாணவருக்குப் பயிற்சிக் கேள்விகளை உருவாக்கலாம்; அவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்; ஒரே விஷயத்தை வேறு மொழியில் விளக்கலாம். இதனால் ஒவ்வொரு மாணவருக்கும் அவருடைய வேகத்திற்கு ஏற்ற ஒரு டிஜிட்டல் கற்றல் துணை கிடைக்கக்கூடும்.

ஆனால் கல்வியில் AI-யின் மிகச் சிறந்த பயன்பாடு, “விடையைச் சொல்லுவது” மட்டும் அல்ல; “சிந்திக்க வைப்பது.”

மாணவன் கேள்வி கேட்க வேண்டும்; பதிலை ஆராய வேண்டும்; கிடைத்த தகவல் சரியா என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் AI கல்விக்கான உண்மையான துணையாக மாறும்.

3. விவசாயம் – மண்ணிலிருந்து செயற்கைக்கோள் வரை

விவசாயம் என்பது மண், மழை, வெயில், நீர், பூச்சி, நோய் என்று பல காரணிகளோடு தொடர்புடையது. ஒரு விவசாயியின் அனுபவம் மிகவும் முக்கியமானது. அதனுடன் நவீன தொழில்நுட்பமும் இணைந்தால் என்ன ஆகும்?

தாவரத்தின் புகைப்படத்தை AI ஆய்வு செய்து, நோய் அல்லது பூச்சித் தாக்குதலுக்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவலாம். மண்ணின் ஈரப்பதம், வானிலைத் தகவல், முந்தைய விளைச்சல், பூச்சித் தாக்குதல் பற்றிய தரவு, செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல தகவல்களை ஒன்றாக ஆய்வு செய்யவும் AI பயன்படுகிறது.

இந்தியாவிலும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்திப் பயிர் பரப்பளவு, விளைச்சல் மதிப்பீடு உள்ளிட்ட பணிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் விவசாயத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாகிறது:

விவசாயியின் அனுபவம் + செயற்கைக்கோள் தரவு + AI ஆய்வு = இன்னும் துல்லியமான விவசாய முடிவுகள்.

4. விண்வெளி – பூமியைத் தாண்டியும் AI

AI-யின் பயன்பாடு பூமியில் மட்டும் நின்றுவிடவில்லை. செயற்கைக்கோள்களில் இருந்து வரும் அளவில்லாத தரவுகளை மனிதர்கள் மட்டும் ஆய்வு செய்வது மிகவும் கடினம். பூமியின் நிலப்பரப்பு, கடல், காட்டுத்தீ, வெள்ளம், வறட்சி, விவசாய நிலங்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதில் AI உதவுகிறது.

விண்வெளியிலேயே கணினி செயலாக்கத்தை மேற்கொள்ளும் முயற்சிகளும் உருவாகி வருகின்றன. இந்தியாவின் TakeMe2Space நிறுவனமும் சுற்றுப்பாதையில் AI மற்றும் தரவு செயலாக்கத்தை மேற்கொள்ளும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

இதன் பொருள், செயற்கைக்கோள் தரவைப் பூமிக்கு அனுப்பும் கருவி மட்டுமல்ல; விண்வெளியிலேயே அந்தத் தரவைப் புரிந்துகொள்ளும் கருவியாகவும் AI மாறக்கூடும்.

இதன் அடுத்த கட்டம் இன்னும் சுவாரசியமானது. சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற இடங்களுக்கு மனிதர்கள் செல்லும் எதிர்காலப் பயணங்களில், அங்குள்ள சூழலை ஆய்வு செய்வது, அபாயங்களை முன்கூட்டியே கணிப்பது, வளங்களை நிர்வகிப்பது, தகவல்களை விரைவாகப் பகுப்பாய்வு செய்வது போன்ற பணிகளில் AI முக்கியப் பங்கு வகிக்கலாம்.

ஒருநாள் பூமிக்கு அப்பால் மனிதர்கள் நீண்ட காலம் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அங்கு அவர்களுடன் செல்லும் முக்கியமான தொழில்நுட்பத் துணைகளில் AI ஒன்றாக இருக்கக்கூடும். பூமியைப் புரிந்துகொள்ள உதவும் AI, ஒருநாள் பூமிக்கு அப்பால் மனிதர்களின் பயணத்திற்கும் துணையாக இருக்கலாம்.

5. சுற்றுச்சூழல் – பூமியைக் கண்காணிக்கும் AI

பூமியின் பருவநிலை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. காட்டுத்தீ, வெள்ளம், வறட்சி, காற்று மாசுபாடு, கடல் வெப்பநிலை போன்ற பல மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.

இங்கேயும் AI உதவுகிறது. வானிலைத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள், கடல் தரவுகள், நிலப்பரப்பு மாற்றங்கள் போன்ற மிகப்பெரிய அளவிலான தகவல்களை AI வேகமாக ஆய்வு செய்ய முடியும்.

எந்தப் பகுதியில் வறட்சி அதிகரிக்கிறது? எந்த இடத்தில் காட்டுத்தீ பரவுகிறது? எந்தப் பகுதியில் வெள்ள அபாயம் அதிகம்? போன்ற கேள்விகளுக்குத் தரவுகளின் அடிப்படையில் விரைவான தகவல்களை வழங்க AI உதவலாம்.

அதாவது, AI தொழில்நுட்பம் மனிதர்களை மட்டும் காப்பாற்றுவதற்கான கருவி அல்ல; இயற்கையைப் புரிந்துகொண்டு பாதுகாப்பதற்கும் பயன்படலாம்.

6. மொழி மற்றும் எழுத்து – ஒரு புதிய எழுத்து உதவியாளர்

எழுத்தாளர்களுக்கு AI ஏற்கனவே ஒரு புதிய வகையான உதவியாளராக மாறிவிட்டது.

ஒரு கட்டுரைக்கான தலைப்புகளைத் தேடலாம்; ஒரு நீண்ட தகவலைச் சுருக்கலாம்; கடினமான விஷயத்தை எளிய தமிழில் விளக்கச் சொல்லலாம்; மொழிபெயர்க்க உதவலாம்; எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டலாம்; ஒரு கட்டுரையின் அமைப்பைச் சீரமைக்க உதவலாம்.

ஆனால் இங்கேயும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. AI எழுதியதை அப்படியே வெளியிடுவது ஒரு வகை; AI-யை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி, அதில் நம்முடைய அனுபவத்தையும் சிந்தனையையும் சேர்த்து எழுதுவது இன்னொரு வகை. இரண்டாவது முறையில்தான் மனிதனின் சிந்தனையும் அனுபவமும் எழுத்தின் தனித்தன்மையும் காப்பாற்றப்படும்.

AI எழுதலாம்; ஆனால் எதற்காக எழுத வேண்டும் என்பதை முடிவு செய்வது மனிதன்தான்.

7. சமையல் – சமையலறைக்குள்ளும் AI

AI நம் சமையலறைக்குள்ளும் வரத் தொடங்கிவிட்டது. வீட்டில் இருக்கும் பொருட்களைச் சொன்னால், அவற்றைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று AI யோசனை சொல்லும். ஒரு குறிப்பிட்ட உணவுக்கான செய்முறையைக் கேட்கலாம்; வாரம் முழுவதற்கும் உணவைத் திட்டமிடலாம்.

இன்னும் சுவாரசியமானது என்னவென்றால், ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை உருவாக்கவும் AI உதவ முடியும். காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், புரத உணவுகள் போன்றவற்றைச் சமநிலைப்படுத்தி வார உணவுப் பட்டியலை உருவாக்கலாம். அதிக உப்பு, அதிக எண்ணெய் போன்றவற்றைக் குறைத்துச் சமைப்பதற்கான பொதுவான ஆலோசனைகளையும் பெறலாம். ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலையும் AI உருவாக்கித் தரலாம்.

ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான குறிப்பிட்ட உணவுமுறையில், AI வழங்கும் தகவலை மருத்துவ நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அதனால் சமையலில் AI என்பது வெறும் “ரெசிபி சொல்லும் கருவி” அல்ல; உணவைத் திட்டமிடவும், நேரத்தைச் சேமிக்கவும், ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கவும் உதவும் ஒரு டிஜிட்டல் துணையாகவும் இருக்க முடியும்.

8. அன்றாட வாழ்க்கை – ஒரு டிஜிட்டல் உதவியாளர்

AI-யின் பயன்பாடு பெரிய நிறுவனங்களிலும் ஆய்வகங்களிலும் மட்டும் இல்லை; நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் அது சிறிய உதவிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது.

பயணத்திற்கான திட்டத்தை உருவாக்கலாம்; செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலைத் தயாரிக்கலாம்; ஒரு கடிதத்தை எழுத உதவலாம்; குடும்பச் செலவுகளை வகைப்படுத்தலாம்; ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும் திட்டத்தை உருவாக்கலாம்; ஒரு புகைப்படத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ள உதவலாம்; குரலை எழுத்தாக மாற்றலாம்; மொழிபெயர்க்கலாம்; ஒரு தகவலை எளிமையாக விளக்கலாம்.

இவ்வாறு பார்க்கும்போது AI என்பது அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம் மட்டும் அல்ல; அது மெதுவாக நம்முடைய தொலைபேசி, கணினி மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களுக்குள்ளும் நுழைந்துகொண்டிருக்கிறது.

ஆனால்... இந்த AI-க்கு ஒரு விலை இருக்கிறது

இவ்வளவு பயன்பாடுகளைப் பார்த்த பிறகு ஒரு கேள்வி எழுகிறது: AI இவை அனைத்தையும் எப்படிச் செய்கிறது?

அதற்குப் பின்னால் மிகப்பெரிய கணினி அமைப்புகள் இருக்கின்றன. AI மாதிரிகளை உருவாக்கவும் இயக்கவும் தரவு மையங்கள் (Data Centres) எனப்படும் மிகப்பெரிய அமைப்புகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான கணினி சில்லுகள் (Chips) தொடர்ந்து இயங்குகின்றன. அதற்கு மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. அந்தக் கணினிகள் அதிக வெப்பத்தை உருவாக்குவதால் அவற்றை க் குளிர்விக்கவும் தண்ணீர் உள்ளிட்ட வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச எரிசக்தி முகமை (IEA), AI வளர்ச்சியுடன் தரவு மையங்களின் மின்சாரத் தேவையும் வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறுகிறது. AI சார்ந்த தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு குறிப்பாக வேகமாக உயர்ந்து வருகிறது. இதனுடன் தரவு மையங்களின் குளிரூட்டலுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்த கவலையும் அதிகரித்து வருகிறது.

அதனால் AI குறித்து நாம் பேசும்போது, “AI நமக்கு என்ன தருகிறது?” என்பதை மட்டும் கேட்கக் கூடாது; “AI-க்காக நாம் எவ்வளவு மின்சாரத்தையும் தண்ணீரையும் பிற வளங்களையும் பயன்படுத்துகிறோம்?” என்ற கேள்வியையும் கேட்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கவனிப்பது அவசியம்.

AI – கருவியா? துணையா?

மருத்துவருக்கு AI உதவலாம்; ஆசிரியருக்கு உதவலாம்; விவசாயிக்கு உதவலாம்; விண்வெளி விஞ்ஞானிக்கு உதவலாம்; சுற்றுச்சூழலைக் கண்காணிக்க உதவலாம்; எழுத்தாளருக்கு உதவலாம்; சமையலறைக்கும் உதவலாம்.

அப்படியானால் AI-யின் உண்மையான சக்தி எங்கே இருக்கிறது?

AI தனியாக என்ன செய்கிறது என்பதில் மட்டும் இல்லை; மனிதன் அதை எதற்காகவும் எப்படியும் பயன்படுத்துகிறான் என்பதில்தான் அதன் உண்மையான சக்தி இருக்கிறது.

ஒரு கத்தி சமையலறையில் பயன்படும்; அதே கத்தி தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஆபத்தாகவும் மாறலாம். AI-யும் அதுபோலத்தான்; அது ஒரு கருவி, அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

AI நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கலாம்; ஆனால் அது நம்முடைய சிந்தனையை மாற்றிவிடக் கூடாது. AI நமக்கு உதவலாம்; ஆனால் அது நமக்குப் பதிலாக வாழ முடியாது.

எனவே, AI-யைக் கண்டு பயப்படாமல் புரிந்துகொள்வோம். AI-யைப் பயன்படுத்துவோம்; ஆனால், சிந்திப்பதை நிறுத்திவிடாமல் பயன்படுத்துவோம்.

AI நம் வாழ்க்கையின் பெரிய பிரச்சினைகளுக்கு மட்டும் உதவ வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சிறிய வேலைகளில்கூட அது எவ்வாறு உதவ முடியும்? அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

- அ.தமிழ்ச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.