திறன் பேசிகளில் இப்போது பல தகவல்களைப் பரிமாறுகிறோம். நமது தாய் மொழியில் செய்தியைப் பகிர்வது என்பதற்கு இணையான இன்பம் வேறு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் உள்ளீடு செய்ய விரும்புபவர்களுக்கு உள்ள மிக நல்ல செயலி செல்லினம் மட்டுமே.

செல்லினத்தில் ஒரு நேர்த்தி (Perfection) இருக்கிறது. தமிழில் மிக நல்ல விசைப்பலகையான தமிழ்99. இதுவே உலக தமிழ் இணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை. இவ்விசைப்பலகையில் நீங்கள் தட்டச்சு செய்து பழகினால் விரைவுத்தட்டச்சு திறன்பேசியிலும் எளிதில் சாத்தியப்படும்.

சொற்பட்டியல்

இரண்டு அல்லது மூன்று எழுத்தினை தட்டச்சியவுடன் அதற்குரிய சொல் தேர்வு வந்து விடுகிறது. சொற்தேர்வு மூலம் நீங்கள் அடுத்த சொல்லிற்கு தாவுதல் எளிமையாக இருக்கிறது. இதில் மொத்தம் 1,00,000 (ஒரு லட்சம்) சொற்கள் இருப்பது நிறைவான நம்பிக்கையினை அளிக்கிறது.

குறைந்த முயற்சியே போதுமானது

‘கட்டிடம், வந்தான், அடுத்தஞ்..’ போன்ற சொற்களை தட்டச்சு செய்யும் போது இரண்டு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வரும் போது மேற்புள்ளியினை அதுவாக வைத்துக்கொள்ளும். ‘ந’ பிறகு ‘த’ வரும்போது ந-விற்கு மேற்புள்ளியையும் அதுவாக வைத்துக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. எனவே இது தட்டச்சு நேரத்தைக் குறைப்பதுடன் விசையை சொடுக்கும் முயற்சியும் குறைவாக இருக்கிறது. செல்லினம் முழுமையான இலக்கண விதிப்படியான எழுத்துணர் கருவியாக உள்ளது. Less tension more work என்பார்களே அதைப்போல இதை ஒரு  Brilliant Keyboard ஆக உணர்ந்தேன்.

சுருக்கு வழி உள்ளீடு

அவசர உலகத்தில் எதற்கும் நேரமில்லை, பட்டனைத்தட்டினால் ரெண்டு இட்டிலியும் தொட்டுக்க சட்டினியும் வரவேண்டும் என்ற கலைவாணரின் பாடலுக்கேற்ப செல்லினத்தில் இரண்டு தட்டெழுத்தில் சொற்றொடர்களை உருவாக்க முடிகிறது. Personal Dictionary என்ற சொல் வங்கி மூலம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லினைக் குறியீடு முறையில் சேர்க்க முடியும். பெரிய சொற்றொடர்களை எளிதில் தட்டச்சலாம்.

பொதுமறை தெரிந்த செயலி

‘சொல்லுக’ என தட்டச்சினால் போதும் அடுத்த பகுதியில் ‘சொல்லை’ என்றும், அதன் தொடர்ச்சியாக ‘பிறிதோர்சொல்’ எனவும் திருக்குறளை அழகாக எந்த எழுத்தையும் தட்டச்சு செய்யாமல் சொல் தேர்வு மூலமே உங்களால் நிறைவு செய்ய இயலும். கொன்றை வேந்தன் நம் கைக்குள்ளே குடி வந்துவிடுவார். ஊக்கமது என தட்டெழுத்து செய்த அடுத்த நொடியே. ‘கைவிடேல்’ என்ற சொல் வந்து விடுகிறது. இது நமக்கு ஊக்கமாக இருக்கிறது.

தகராறுக்கு எந்த ‘று’

‘சின்னத் தகராறுக்கு சின்ன ரு வும் பெரிய தகராறுக்கு பெரிய று வும் போடு’ என வேடிக்கையாகச் சொல்லுவார்கள். இனி இந்த தகராறே வேண்டாம். தவறாகத் தட்டச்சும் சொற்களைக்கூட அதுவாகவே திருத்திக் கொள்கிறது.

ஆங்கில வழியிலும் தமிழ்

ஆங்கிலத்தில் தட்டெழுதி தமிழில் வரவழைக்கும் பொனிடிக் முறையும் உண்டு. தமிழ் 99 பழகாத ஆரம்ப நிலை பயனர்களுக்கு இது வெகுவாக கைகொடுக்கும். ஒரே ஒரு விசையில் ஆங்கிலத்தத்திருந்து தமிழக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஒரே சொடுக்கில் மாறலாம்.

நெடுந்தொடர்

நிறைய தட்டச்சு செய்ய வேண்டும் என நினைக்கும் போது அது திறன் பேசி மற்றும் டேப்லட் எனப்படும் பலகை கணினியிலும் இயலுவதில்லை. செல்லினம் இதற்கு தீர்வு கண்டுள்ளது. External Keyboard மற்றும் ப்ளூ டூத் விசைப்பலகை கொண்டு எளிதாகத் தமிழ் தட்டச்சு செய்ய இயலும்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்குத் தகுந்தவாறு நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டே வரும் உயிர்ப்புள்ள செயலியாக இது இருக்கிறது.

இதன் நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து ஒரு மலர்க் கொத்து.

செயலியை டவுன்லோடு செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam