அன்றும் இன்றும் என்றும் மனிதனுக்கு அற்புத வான் காட்சிப் பொருளாக இருந்து வரும் நிலவு முன்பு எப்போதையும் விட இப்போது விஞ்ஞானிகளிடையில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. நீடித்த நிலையான வளர்ச்சியுடன் நிலவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தீவிர ஆய்வுகள் இன்று நடைபெறுகின்றன. நிலவின் மேற்பரப்பு மண்ணில் இருக்கும் கண்ணாடி மணிகள் பில்லியன் கணக்கான டன்கள் நீரைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மாதிரிகளை ஆராய்வது வருங்காலத்தில் அங்கு தளங்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் இருப்பதாகக் கருதப்படும் பில்லியன் கணக்கான நீரை எதிர்காலத்தில் அங்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பிரித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

விண்வெளி நிறுவனங்கள் தங்கள் கவனத்தை நிலவின்பால் செலுத்தி வரும் வேளையில் அவர்கள் அங்கு முகாம்களை அமைக்க இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம் நாளை நிலவுக்குச் செல்லும் மனிதர்களுக்கு நீர்வளத்திற்கான முக்கிய மூலமாக மட்டும் இல்லாமல் இது ஹைடிரஜன், ஆக்சிஜனின் மூலமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.moon 700மீண்டும் நிலவுப் பயணம்

“தங்கள் ஆய்வில் இது பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக கோளியல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர் மகேஷ் ஆனந்த் (Prof Mahesh Anand) கூறியுள்ளார். இதனால் நிலவின் சூழலிற்கு பாதிப்பு ஏற்படாமல் நீடித்த நிலையான வளர்ச்சியுடன் அதை ஆராய முடியும். மனிதன் நிலவில் கால் பதித்து, நடந்து அரை நூற்றாண்டிற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நாசா மற்றும் பிற விண்வெளி நிறுவனங்கள் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகின்றன.

நாசா விரைவில் தனது ஆர்டிமிஸ் திட்டத்தின் மூலம் முதல் பெண் வீராங்கனை மற்றும் வெள்ளையர் அல்லாத ஒருவரை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நாசா வெளியிட்ட ஆர்டிமிஸ் பயணிகள் பட்டியலில் ஒரு பெண் வீராங்கனையும் இடம் பெற்றுள்ளார். விண்வெளியில் அதிக நாட்கள் (320 நாட்கள்) தங்கி ஆய்வுகளை மேற்கொண்டவர் என்ற சாதனையைப் படைத்த 44 வயதான மின் பொறியியலாளர் கிறிஸ்டினா காஃப்க் (Christina Koch) நிலவிற்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஐரோப்பிய விண்வெளி முகமை நிலவில் கிராமம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. பூமிக்கு அப்பால் நிலவில் அமையவிருக்கும் இந்த ஆய்வு நிலையங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை நிலவில் இருந்தே பெற இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.

டிசம்பர் 2020ல் நிலவுக்குச் சென்று திரும்பிய சாங்’இ-5 (Chang’e-5) விண்கலன் பூமிக்கு எடுத்து வந்த நிலவு மண் மாதிரிகளில் கலந்திருந்த நுண் கண்ணாடி மணிகளை (glass beads) விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இந்த கண்ணாடித் துகள்கள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான குறுக்களவையே கொண்டிருந்தன. விண்கற்கள் நிலவின் மீது மோதியபோது மழை போல பெய்த உருகிய திவலைகளால் இந்த மணிகள் உருவாகியுள்ளன. இவை பிறகு திட நிலையை அடைந்து நிலவின் தூசுக்களுடன் கலந்தன.

கண்ணாடித் துகள்கள் ஆராயப்பட்டதில் நிலவின் பரப்பு முழுவதிலும் 300 மில்லியன் முதல் 270 பில்லியன் டன்கள் வரை நீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய நிலவுத் திட்டங்களைத் தொடங்குவதில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் இந்த நீர்வளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே வருங்கால நிலவுத் திட்டங்கள் அமையப் போகின்றன. நிலவு எதற்கும் உதவாத ஒரு பாழ்நிலப்பரப்பு இல்லை என்பதை முந்தைய கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டியிருந்தன.

சந்திராயன்1 கண்டுபிடித்தது

1990களில் நாசாவின் க்ளமெண்ட்டைன் (Clementine) ஆய்வுக்கலன் நிலவின் துருவப்பகுதிகளுக்கு அருகில் இருக்கும் செங்குத்தான பெரும் பள்ளங்களின் ஆழமான பகுதியில் நீர் உறைந்த நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியிருந்தது. 2009ல் இந்தியாவின் சந்திராயன்1 விண்கலன் சந்திரனின் தூசுப்பரப்பில் நீர் மெல்லிய படலமாக இருப்பதைக் கூறியது. இயற்கை புவி அறிவியல் (Nature Geoscience) ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் நுண் கண்ணாடித் துகள்களில் நீர் பொதிந்துள்ளதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

சந்திரனில் நிரந்தர நிழல் பிரதேசமாக இருக்கும் பள்ளங்களில் பதுங்கியிருக்கும் உறைந்த நிலை நீரைக் காட்டிலும் கண்ணாடித் துகள்களில் இருந்து நீரை மனிதன் அல்லது இயந்திர மனிதனால் சுலபமாகப் பிரித்தெடுக்க முடியும். இத்துகள்களை குலுக்குவதால் அவற்றில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வெளிவராது. ஆனால் இப்பொருட்களின் வெப்பநிலையை 100 டிகிரிக்கும் அதிகமாக உயர்த்தும்போது இவற்றில் இருந்து நீர் வரத் தொடங்கும். இதை நம்மால் அறுவடை செய்ய முடியும் என்கிறார் ஆனந்த்.

பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நீர்த்துளிகள்

உயர் ஆற்றல் துகள்களைக் கொண்ட சூரியப் புயற்காற்று (Solar wind) உருகிய நிலையில் இருந்த நீர்த்திவலைகள் மீது மோதியது. சூரியக்காற்று ஹைடிரஜன் உட்கருக்களைக் கொண்டது. திவலைகளில் இருந்த ஆக்சிஜனுடன் இது இணைந்து நீர் அல்லது ஹைடிராக்சில் அயனிகளை உருவாக்கியது. இவ்வாறு உருவான நீர் பின் கண்ணாடித் துகள்களில் அடைபட்டது. இத்துகள்களை சூடுபடுத்தினால் அடைக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றலாம்.

இந்த பொருட்கள் மேலும் ஆராயப்பட்டபோது சில குறிப்பிட்ட ஆண்டுகளில் நீர் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவில் செழுமையான நீர்ச் சுழற்சி இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது. சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கோள்களில் உள்ள காற்று இல்லாத பாறைகள் நீரை உறிஞ்சி வைக்கும் மற்றும் வெளியேற்றும் ஆற்றல் பெற்றவை என்று சீன அறிவியல் அகாடமியின் பீஜிங் பிரிவு விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த இணை ஆசிரியர் பேராசிரியர் சென் ஹூ (Prof Sen Hu) கூறுகிறார்.

நீர்வளத்தின் செழுமை

முன்பு நினைத்திருந்ததை விட நிலவு நீர்ச்செழுமை மிக்கது என்பதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது என்று பெர்க்பெக் (Birkbeck) லண்டன் பல்கலைக்கழக கோள் மற்றும் வானியல் துறை பேராசிரியர் இயான் க்ராஃபர் (Ian Crawfor) கூறுகிறார். அதிக நீர்வளம் இருப்பதாக முன்பு கருதப்பட்ட தொலைதூர துருவப்பகுதிகளை விட தரைப்பரப்பில் இருக்கும் நிலவின் நீர்வளம் வருங்கால மனிதகுல ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும். என்றாலும் இந்த வளத்தை நாம் உயர்த்தி மதிப்பிடக்கூடாது. நிலவின் ஒரு கன சதுர மீட்டர் மண் பரப்பில் 130 மில்லி லிட்டர் நீரே உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

நிலவின் செழுமையான நீர்வளம் பற்றிய இக்கண்டுபிடிப்பு மனிதன் நாளை நிலவுக்குச் சென்று காலனிகளை அமைத்து குடியேறி அங்கிருந்து சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களுக்குப் பயணம் செல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/mar/27/glass-beads-on-moon-surface-hold-billions-of-tonnes-of-water-scientists-say?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It