கரப்பன் புண் என்று எக்ஸீமா சிரங்கை தமிழில் சொல்வார்கள். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் முழங்கால்களில் நீர் வழிந்தபடி புண் இரணமாக இருக்கும். சீக்கிரத்தில் ஆறாது. பிளாஸ்ட்டிக், காஸ்மட்டிக் பொருள்களால் இப்படி ஏற்படலாம்.

புண்ணில் பக்கு கட்டிக்கொள்ளும். வெடிப்புகளிலிருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும். உடையெல்லாம் நனைந்துவிடும். அரிப்பு தாளாமல் குழந்தை அடிக்கடி சொரிந்துகொண்டே இருக்கும். இரவில் தூக்கம் வராமல் அவஸ்த்தைப்படும். இதற்குமேல் இதை வருணித்தால் பெற்றவர்கள் மனது துன்பப்படும்.

ஃபெய்ன் பர்க் பல்கலைக்கழக மருத்துவக்குழு எக்ஸீமாவைச் சமாளிக்க ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறது. துணி துவைத்து முடித்ததும் வெள்ளைத்துணிகள் பளிச்சென்று இருக்க வேண்டி பிளீச் என்ற ஒரு திரவத்தை வீட்டில் பயன்படுத்துவார்கள். இந்த திரவத்தை குளிக்கும் நீரில் சிறிது போட்டு கால்களை அதில் 10 நிமிடம் ஊறவைத்தால் படிப்படியாக எக்ஸீமா ஓரிரு மாதங்களில் குறைந்து விடும் என்று சொல்கிறார்கள். வாரம் இரண்டு முறை தொடர்ந்து 3 மாதங்கள் செய்துவந்தால் போதுமாம். 

எக்ஸீமாவை வளரவிட்டால், அதில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு மசியாத ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் பேக்டிரியாக்கள் வளர்ந்து சிகிச்சை மிகவும் சிக்கலாக மாறிவிடும் என்பதால், முடிந்தவரை எக்ஸீமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு துணி வெளுக்கும் பிளீச் பயன்படும். தயவு செய்து பாத்ரூம் கழுவ பயன்படும் பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி விடாதீர்கள். துணி வெளுக்கும் பிளீச் வேறு, பிளீச்சிங் பவுடர் வேறு.

- முனைவர். க. மணி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்