கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ளவேண்டாம்.  வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.

விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம். அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன. அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள்.

மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.

- முனைவர் க.மணி

Pin It