புறச்சூழல் செல்வாக்கினால் மனபாதிப்படையும் மனிதர்களுக்கு Dr.எட்வர்டு பாட்ச் அக்ரிமோனி, சென்டாரி, வால்நாட், ஹால்லி ஆகிய நான்கு மருந்துகளை சிபாரிசு செய்கிறார். இப்போது நாம் வால்நாட் (Walnut) மலர்மருந்து புறச்சூழல் செல்வாக்கில் பாதிப்புக்குள்ளாகும் எம்மாதிரியான மனநிலையை சீராக்குகிறது என்பதை அறிவோம்.

 சூழ்நிலை மாற்றத்தை ஏற்க இயலாத மனநிலை.

 பழகிய விசயங்கள், பழகிய மனிதர்களை, பழகிய இடங்களைவிட்டுப் பிரிய முடியாத தவிப்பு.

 சூழ்நிலை மாற்றங்களைப் போலவே உடலில் ஏற்படும் பருவ வளர்ச்சி மாற்றங்களால் பாதிப்படைதல்.

 தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகளில் மூழ்கி கிடத்தல்.

பல ஆண்டுகள் ஒரு தெருவில் குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்து விட்டு அடுத்த ஊருக்கு மாற்றுதலாகி வீட்டை காலி செய்து விட்டு போகும்போது அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்களை விட்டு, பழகிய நபர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உள்ளதே என்று மனங்கலங்குபவர்கள்.

புதிய வீட்டில் புதியதொரு சூழலில் அங்குள்ள நிலைமையை ஏற்றுக் கொள்ளாத மனநிலை ஏற்படும்போதும் வழக்கமாக தூங்கிய இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்தில் படுத்திருப்பதால் தூக்கமின்றி தவிப்போர்கள், ஒரு சில நாட்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். புதிய நீர் ஒத்துக்கொள்ளாமல் தொண்டை அலர்ஜி போன்ற உடல் உபாதைகள் தோன்றும் போது வால்நாட் சில உருண்டைகளை சில வேளைகள் சுவைத்து சாப்பிடும்போது புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகும் மனநிலை உருவாகும். பெண்ணை திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீடு அனுப்பும் போது பெற்றோர், உடன்பிறந்தோர்களுக்கு ஏற்படும் மனதவிப்புக்கும், பெற்றோர், உற்றோரையும் பிரிந்து செல்கிறோமே என்று புதுமணப் பெண்ணுக்கு ஏற்படும் தாங்க முடியாத பிரிவின் தவிப்பிற்கு வால்நட் வரப்பிரசாதம்.

பழகிய பழைய காதலை, காதலியை மறக்க முடியாமல் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா. பழகத் தெரிய உயிரே உனக்கு விலக தெரியாதா? என்ற பாடலுக்கு பொருத்தமான மனநிலையை சீர் செய்ய வால்நாட் உதவும்.

சிலருக்கு வாழ்க்கை சூழல் அலுவலக பணியின் தன்மை காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது தங்குமிடம், அங்குள்ள உணவு முறைகள், தண்ணீர் போன்றவை ஒத்துக்கொள்ளாமல் உடல் ரீதியாக ஏற்படும் கோளாறுகளுக்கு வால்நட் பயன்படும்.

புதிதாக திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு அங்குள்ள சூழ்நிலையோடு ஒத்துப் போகவும், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை எளிதில் புரிந்து கொண்டு புதிய குடும்பச் சூழ்நிலையோடு சகஜமாக கூச்சமின்றி பழகி ஒன்றினைய வால்நட் உதவும். எனவே புதுமணப் பெண்ணுக்கு சீர்வரிசைகளுடன் வால்நட் கொடுத்தனுப்புவது நல்லது.

சூழ்நிலை மாற்றங்களைப் ஏற்காத மனநிலையைப் போலவே உடலின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் மாற்றத்தின் போதும் வால்நட் உதவும். பிறந்த குழந்தை குப்புறப் புரண்டு படுக்கும்போதும், தவழ்ந்து, எழுந்து நிற்க, நடக்க, முயற்சிக்கிறபோது, பல்முளைக்கும் போதும், பள்ளி செல்லும் வயதில் தினம்தோறும் விரும்பி பள்ளி செல்ல தயார் ஆகவும்,  lass="contentpane">பெண்பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறுகிறபோது, உடலளவில், மனதளவில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்திடும் அற்புத மலர் மருந்து வால்நட்.

குமரியாக இருந்தவள் மனைவியாக, குடும்பத் தலைவியாக, கர்ப்பிணியாக தாய்மையடைந்து, குழந்தைக்கு பாலூட்டும் போதும் மாதவிடாய் நிற்கும்காலத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வால்நட். ஆண்களுக்கும் வாலிபப் பருவத்திலும், திருமணமானபின்பு குடும்பத் தலைவராக பொறுப்பேற்று குடும்பத்தை வழிநடத்துகிறபோதும் புதிய, புதிய சூழ்நிலைகளை சிந்தனை தெளிவுடன் சமாளித்திட வால்நட் பயன்படும்.

தவறான தீய பழக்க வழக்கங்களை மாற்றியமைத்திடவும் நெடுநாள் பழகிய விசயங்கள் தவறானது என்று தெரிந்தும் விடமுடியாமல் தவிப்போர்கள், திருமணமானபின்பும் பல பெண்களுடன் பாலியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளாமலிருப்பவர்கள் மற்றும் சுயஇன்ப பழக்கத்திலிருந்து விடுபட இயலாமையால் மனம் வாடுவோர்க்கும் கைசூம்பும் பழக்கமுள்ள குழந்தைகள், தாய்பாலை மறக்காமல் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகள், மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் இதர  போதைப் பழக்கங்களை கைவிட முடியாமல் தவிப்போர்களுக்கு வால்நட் நல்வழி காட்டும்.

மலர் மருந்துகளை எந்தவிதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்பவர்களும் சாப்பிடலாம். பத்தியங்கள், பின்விளைவுகள் ஏதுமில்லை. மலர் மருந்துகள் மூலம் மனதில் படியும் மாசுக்களை துடைத்து... மனம் மலர்ச்சி பெற்று வாழ்க்கையை மணம் வீசச் செய்யலாம்.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It