வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
“அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே!
உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல் இவை மூன்றையும் சரிசமம் செய்து ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்கிறது.
எப்பொழுது மூளை, மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அவ்வேளையில் முன்னர் சேமிக்கப்பட்ட பதிவுகளை மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போது மனதில் சேமிக்கப்பட்ட மனக்கிளர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் இவற்றோடு குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி, ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மனத்திரைப்படமே கனவு எனப்படுகிறது. இனி கனவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.
வரலாறுகளில் கனவுகள் பற்றி:
பழங்காலங்களில் சில இன மரபுக் குழுக்கள் கனவுகளை ஆராய்ந்து அதில் தங்கள் குழு பற்றியும், மனிதர்கள் பற்றியும் புரிந்து கொள்ள முயன்றனர்.
கிரேக்கர்கள் கனவுகளைக் கொண்டு, நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் பல வழிமுறைகளை கண்டனர். இவர்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் மருத்துவமனைகளையே கட்டினர். அதனை அஸ்கிலாபியன் சாங்சுவரிஸ் (Asklepian Sanctuaries) என்று அழைத்தார்கள்.
19ம் நூற்றாண்டில் பல மேற் குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டனர். எவ்வாறு ஒலி, வாசனை போன்றவை ஒன்றினைந்து செயல்பட்டு கனவு களின் உட்பொருளை பாதிக்கின்றன என்பதனை விரிவாக ஆராய்ந்தனர்.
20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கு முக்கியத்துவம் உயர்ந்தது. முக்கியமாக ரெம் (REM) தூக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஆராய்ச்சிகள் வெகுவாக உயர்ந்தன.
கலாச்சாரமும் கனவும்:
பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடமிருந்து வரும் நற்செய்திகளாகவும் தீய சக்திகளிடமிருந்து வரும் கெட்ட செய்திகளாக வும் கருதுகின்றனர்.
அசீரியர்கள் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகளாக கனவுகளைக் கருதினர். கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கருதினர். மற்ற கனவுகளை ..ஆலோசனைகளாக நினைத்தனர்.
எகிப்தியர்கள் கனவுகளை கடவுள் தங்களுக்கு கூறும் செய்திகளாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் தீய காரியங்களுக்கு எச்சரிக்கைகளாகவும் கருதினர்.
கிரேக்கர்கள் எதிர்காலம் பற்றி கூறுவனவாக கனவுகள் அமைகின்றன என்கின்றனர். சில சமயம் நல்ல கனவுகள் மட்டும் வர வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை பின் பற்றினர். ரோமானியர்களும் இதனை யே நம்பினர்.
ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் களாகவும், தங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பதில்களைத் தருவதாகவும் கனவுகளைக் கருதினர்.
உறக்கம் - படிநிலைகள்:
கனவுகள் பற்றி விரிவாக காண்பதற்கு முன் உறக்கத்தின் படிநிலைகள் பற்றி அறிய வேண்டியது அவசியம்.
படிநிலை-1: இது விழிப்பு நிலையி லிருந்து தூக்க நிலைக்கு மாறும் போது உள்ள நடுநிலை. இது நான்-ரெம் (Non-REM--Non Rapid Eye Movement) வகையை சேர்ந்தது.
படிநிலை-2: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் உடலின் வெப்பநிலை குறைந்து, தசைகள் தளர்வடைந்து ஓய்வு நிலையில் இருக்கும்.
படிநிலை-3: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையே. இந்த நிலையில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம்.
படிநிலை-4: இந்த படிநிலை ரெம்(REM) வகையைச் சார்ந்ததாகும். இந்த நிலையில் நமது கண்கள் விரைவாகவும், அப்படியும், இப்படியும் அசைந்து கொண்டிருக்கும். நாம் காணும் பெரும்பாலான கனவுகள் இந்த நிலையிலேயே வருகின்றன. இவ்வேளையில் ஒருவரை எழுப்பினால் அவர் அப்போது கண்ட கனவுகளை தெளிவாக நினைவில் வைத்திருப்பார்.
இந்த நான்கு படிநிலைகளும் சுழற்சி முறையில், தூங்கும் போது மாறிக்கொண்டே இருக்கும். இவற்றில் முதல் 3 படிநிலைகளை விட 4ஆம் படிநிலையில் தான் அதிக நேரம் தூங்குகிறோம். என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கனவுகளின் இயக்கவியல்:
நாம் கனவு கண்டு கொண்டி ருக்கும் போது கவனிக்கத் தக்க மாறுதல்கள் உடலில் ஏற்படுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தான் மிகவும் வலுவிழந்த இதயம் கொண்டவர்கள் இந்த மாற்றங்களைத் தாங்க முடியாமல் தூக்கத்தோடு தூக்கமாக உயிரை விட்டு விடுகின்றனர்.
நாம் நன்றாக உறங்க ஆரம்பித்து 30லிருந்து 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் ஆரம்பிக் கின்றன. ஓரு இரவில் 4லிருந்து 7 முறைகள் வரை ரெம் படிநிலை வருகிறது. இந்த வேலையிலும் உடலும் உடற் தசைகளும் முழுமையான ஓய்வு எடுக்கின்றன. ஆனால் ரெம் படிநிலையில் மனம் முழு செயல் பாட்டில் இருக்கும்.
வேதியியல் மாற்றங்கள்:
கனவுகளின் போது மூளையில் நார்-அட்ரீனலின் மற்றும் செரடோனின் அளவுகள் வீழ்ச்சியடைகின்றன. இதனால்தான் கனவுகளை நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
கனவு -வகைகள்:
கனவுகளை பல விதங்களாக பிரிக்கின்றனர். இங்கு முக்கியமான வகைகளை மட்டும் காண்போம்.
1. பகல் கனவுகள்
2. தெளிவுநிலை கனவுகள் (Lucid dreams)
3. கொடுங்கனவுகள் (Nightmares)
4. அடிக்கடி வரும் கனவுகள் (Recurring dreams)
5. எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (prophetic dreams)
6. இதிகாசக்கனவுகள் (Epic dreams)
7. நோய்நீக்கும்கனவுகள் (healing dreams)
8. பொய் விழிப்பு கனவுகள் (False Awakening dreams)
1.பகல் கனவுகள்
உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே உள்ள உணர்வு நிலையைத்தான் பகற்கனவு என்கிறோம். ஆராய்ச்சிகளில் ஒரு மனிதர் ஒரு நாளில் சராசரியாக 70-120 நிமிடங்கள் பகற் கனவுகளில் செல விடுகிறார்கள் என கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது நமது கற்பனை குதிரையை ஓடவிடும் வேளையே பகல் கனவு.
2. தெளிவு நிலை கனவு:
இந்த நிலையில் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்திருப்போம். சிலர் அப்படியே ஆனந்தமாக கனவை தொடர்ந்து கொண்டிருப்பர். பெரும் பாலும் இந்த வகை கனவு களில், கனவு காண்பவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார்.
3.கொடுங் கனவு:
இதனை சிறு வயதுப் பிள்ளை களிடம் அதிகமாகக் காணலாம். தூங்கும் போது பயங்கரமான கனவுகள் தோன்றி திடீரென்று படபடப்புடனும், பயத்துடனும் எழ வைக்கும் கனவுகளையே கொடுங் கனவு என்கிறோம். சில சமயங்களில் வாழ்வில் நடக்கும் விபத்துக்கள் அல்லது மோசமான சூழ்நிலைகளாலும் இத்தகைய கனவுகள் வரலாம். இந்த கனவுகளை போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் நைட் மேர் என்று அழைக்கிறார்கள்.
சிலருக்கு இக்கனவுகள் தோன்றுவது வழக்கமாகவே இருக்கும். இது பரம்பரையில் யாருக்காவது மனப் பிரச்சனைகள் இருந்திருந்தாலோ அல்லது அந்நபரின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ ஏற்படும். ஆழ் மனதில் உள்ள பயங்களை சுட்டிக் காட்டுபவையாக இக் கனவுகள் அமைகின்றன.
4. அடிக்கடி வரும் கனவுகள்:
இவை பெரும்பாலும் கொடுங் கனவு வகை கருத்துருவையே கொண்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் இருக்கும். சில சமயம் நல்ல கனவுகளாகவும் இருக்கும். இக் கனவுகள் வாழ்வில் சரி செய்யப்படாத சில பிரச்சனைகளால் வருகிறது. அப்பிரச்சனைகளுக்கு விடை கண்டு தீர்த்து விட்டால் மீண்டும் வருவது நின்று விடலாம்.
5.எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள்:
இக்கனவின் போது ஒரு கோட்பாடாக மனது பல கருத்துக்களையும், நுண்காட்சிப் படிவுகளையும் பொருள் தரும்படியான திரை ஓட்டமாக மாற்றுகிறது. இதனால் எதிர் காலத்தில் என்ன நடக்கலாம் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும்.
6. காவியக் கனவுகள்:
இவை மிகவும் அழகாக, பிரம் மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக் கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உண்மையிலேயே உள்ளது போலத் தோன்றும். இக் கனவு முடிந்து துயில் எழும்போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.
7.நோய் நீக்கும் கனவு: இவ் வகைக் கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சி களில் ஆஸ்த்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற நோய் உடையவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது நமது உடல் உயிர் மற்றும் மனம், ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால் இது சாத்தியமாகிறது என்கின்றனர். இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமின்றி, அந்நோயை எவ்வாறு சரி செய்வது என்று கூட ஆலோசனையும் வழங்குவதுண்டு என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
8. பொய் விழிப்பு கனவுகள்:
நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939)
சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.
இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.
நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.
மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.
1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு
2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை
3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது.
நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.
இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட விடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.
எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.
ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.
1. மாற்றி அமைத்தல் (Displacemஎன்ட்): கனவில் வரும் ஒரு பொருளின் கருத்தை வேறொரு பொருளில் திணித்து விடுவது.
2. வெளிப்படை (Projection):
கனவில் தன்னுடைய ஆசைகள், உணர்வுகள் மாற்றமின்றி அப்படியே வருவது ஆகும்.
3. குறியீடு (Symbolisation):
அடக்கப்பட்ட உணர்ச்சிகளும் ஆசைகளும் உருவக வடிவில் கனவாக வரும். இதில் ஒரு செயல் அல்லது எண்ணம் அப்படியே வரும்.
4. சுருக்குதல் (Condensation):
இச்செயல் கனவில் நமது உணர்வுகளையும, விருப்புகளையும், சுருக்கித் தொகுத்து வழங்குகிறது. அதனால் கனவின் பொருளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. கனவில் வரும் ஒரு பொருளானது பல உணர்வுகள், எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.
5.கோர்வை (Rationalisation): இச்செயல் கனவுகளை வரிசைப்படுத்தி இறுதியாக ஒரு பொருள் பொதிந்த கனவுகளை கோர்வையாகத் தருகிறது.
கார்ல் ஜங்க் (Carlo jung)- (1875-1960) என்பவர், மரு. ப்ராய்ட் இடம் பயிற்சி பெற்றவர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டவர். இவரும் ப்ராய்டு போன்றே ஆழ் மனது தான் கனவுகளைக் கட்டுப்படுத்துகிறது என நம்பினார். ஆழ் மனது, மிருகத்தன்மை உடையது, உள்ளுணர்வு மிகுந்தது, பாலுணர்ச்சி கொண்டது போன்ற ப்ராய்டின் கருத்துக்களை ஏற்கவில்லை.
கார்ல் ஜங்க், கனவுகளை புரிந்து கொள்ள உதவும் கருவியாக ஆழ்மனது இருக்கிறது என்று கூறினார். ஆழ்மனதினை தெய்வீகத் தன்மை மிகுந்தது என்றும், கனவுகள் ஆழ்மனதின் சன்னல்கள் என்றும் கூறினார்.
ஜங்கியன் உள நிலைப் பகுப்பாய்வில் (Classical Jungian Psycho analysis) கனவுகளை ஆய்வது மிக முக்கியம் ஆகும். மனம் என்பது தன்னைத் தானே ஆளும் சக்தி கொண்டது. இந்த மனமானது உணர்வு நிலையின் பண்புகளை, உணர்வற்ற நிலையில் எதிர் மறை பண்புகள் கொண்டு சமன் செய்கிறது.
ஒவ்வொருவரும் தனித் தன்மை உடையவர் என்பதால் ஒருவரின் சூழலை அறிந்து அதற்கேற்ப அம் மனிதனின் கனவை பகுத்தறிய வேண்டுமே தவிர பொதுப்படையான குறியீட்டு மொழியினை உபயோகித்து பகுத்தறிவது உபயோகமற்றது.
எவ்வாறு மனம் விழிப்பு நிலையில் பல மொழிகளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறதோ அதே போல் விழிப்பற்ற நிலையிலும் கனவுகளின் மூலம் பல உணர்வுகளை மனம் வெளிப்படுத்துகிறது.
நாம் நமது வாழ்வில் சந்திக்கும் பல சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகள், கனவுகளில் குறியீட்டு மொழியில் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு நாம் நம்மை உலகிற்கு உருவகப்படுத்துகிறோம் என்பதே ஈகோ என்கிறார் ஜங்க்.
எந்த ஒரு விஷயத்தையும் நேர்-எதிர் மறை ஜோடிகளாக விவரிக்கலாம் என்கிறார். உதாரணமாக நல்லது, தீயது; ஆண்,பெண்; விருப்பு, வெறுப்பு....... ..இவ்வாறு வருபவை.நாம் பிறரிடம் வெளிப்படுத்தாத அல்லது அடக்கி வைத்துள்ளவற்றை நிழல் என்று குறிப்பிடுகிறார். இது பெரும்பாலும் நாகரீகமற்ற, முதிர்ச்சியற்ற, பண்பற்ற, அடிப்படை உணர்வுகளாகவே உள்ளன.
ஆல்பிரட் ஆட்லர் (1870-1937):
வாழ்க்கையை வெற்றிகரமாக இட்டுச் செல்ல கனவுகளை புரிந்து கொள்வது மிக அவசியம் என்று நம்பினார். இவர், கனவுகளை சிக்கல் தீர்க்கும் கருவிகளாகக் கருதினார். விழிப்பற்ற நிலையில் வரும் கனவுகளை விழிப்பு நிலையில் நினைவு கொண்டு ஆராய்ந்தால் பல சிக்கல்களுக்கு எளிதாக தீர்வு கண்டு விடலாம் என்கிறார்.
ஒருவர் நிறைய கனவு காண்பவராக இருப்பாராயின் அவரது வாழ்வில் பல பிரச்சனைகளை கொண்டவராக இருக்கலாம். அதே போல் குறைந்த அளவு கனவு காண்பவருக்கு குறைந்த அளவே பிரச்சனைகள் இருக்கலாம் என்கிறார்.
ப்ராய்டு பாலுணர்வே ஒருவரது நடத்தையை தீர்மானிக்கிறது என்று கூறும் வேளையில் ஒருவரது ஆற்றல், கட்டுப்பாடு, போன்றவையே ஒருவரது நடத்தையை தீர்மானிக்கிறது என்கிறார் இவர். விழிப்பு நிலை மற்றும் விழிப்பற்ற நிலை இரண்டுமே எதிர்மறையாக செயல்படுகின்றன என்னும் கூற்றை எதிர்த்தார். இரண்டும் எதிர்மறையாக செயல்படுவதற்கு பதிலாக ஒரே நோக்குடன் இயங்குகிறது என்றார்.
நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களை உள்ளது உள்ளபடியே காட்டுவது கனவு என்கிறார் ஆட்லர். நமது வாழ்வில் நிறைவேறாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள், கனவுகளில் நிறைவேற்றப்பட்டு மன நிறைவினைத் தருகிறது என்கிறார்.
உதாரணமாக ஒருவர் வாழ்வில் தனது முதலாளியை விட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் உண்மையில் சாத்தியம் குறைவாக இருந்தாலும் கனவில் அவர் எண்ணியதை எந்த ஒரு பயமுமின்றியும், கடின உழைப்பும் இன்றியும் எளிதாக அடைந்து விடலாம். இவ்வாறு கனவுகள் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காதவாறும், அவருக்கு ஒரு மன நிறைவையும் அளித்து வாழ்வை மேம்படுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனையும், அவனுக்குள் இருக்கும் மியாசம் எனும் நோயை உண்டாக்கும் காரணி, அவனை பல வகைகளில் பாதிக்கிறது. ஒரு மனிதனின் மனப் போக்கும், மியாசத்தின் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது. ஒரு சில சமயங்களில், கனவுகள், நோயாளியின் மியாசத்தை கண்டுபிடிக்க பெரும் உதவி புரிகிறது.
முதலில் ஒவ்வொரு மியாசத் திலும் கனவுகள் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை காண்போம்.
சோராவின் கனவுகள்:
சோரா மனிதர்கள் பெரும்பாலும் சுறுசுறுப்பாகவும், சகல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பவர்கள் என்பதால் அவரது கனவுகள் எதிர்பார்ப்பு மிகுந்தவைகளாக வரும். அவர்களின் மனதில் உள்ள கருத்துகளும் நிறைவேறாத ஆசைகளும் கனவுகளாக வரும். சோகம், அன்பு, பொறாமை, பயம் ஆகியவை சோராவின் கனவுகளில் மேலோங்கி இருக்கும்.
சைகோட்டிக் கனவுகள்:
இவர்களின் கனவுகள் மிகை உணர்வுகள் கொண்டதாக இருக்கும். இவர்கள் ஞாபகசக்தி குறைபாடு உடையவர்களாக இருப் பதால் அவர்களால் எளிதில் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. தோல்வி, நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை மற்றும் மரணம் நிகழ்வது போன்ற அடிப்படையில் கனவுகள் தோன்றும்.
டியுபர்குலர் மியாசக்கனவுகள்:
இந்த மியாசம் உள்ள மனிதர்கள் மனதளவில் மிகவும் சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும் இருப்பர். ஆனால் உடல் எளிதில் சோர்ந்து விடும். இதனால் வேலை களில் ஏமாற்றமும் மனக்கசப்பும் அதிகரிக்கும். நீண்ட பயணங்களை விரும்புபவர்கள் என்பதால் பயணங்கள் மேற்கொள்வது போல் கனவுகள் வரும். மாற்றத்தை விரும்புபவர்கள் என்பதனை இந்த கனவு உணர்த்துவதாக உள்ளது. இவர்களது கனவுகள் பாலுணர்வு அல்லது காதல் மிகுந்ததாக இருக்கும்.
பல சமயங்களில் இவர்களது கனவுகள் தூக்கத்தை கலைத்து விடுகின்றன. இதனால் அன்று புத்துணர்ச்சி இன்றி காணப்படுவர். மறுபுறம் சிலர் குட்டித் தூக்கத் திலேயே மிகுந்த புத்துணர்ச்சி பெறுகின்றனர். இந்த மியாசம் மேலும் விரிவடையும் போது கனவுகளைத் தாண்டி திரிபுக் காட்சி அல்லது உணர்வு மருட்சி போன்றவை ஏற்படலாம்.
சிபிலிடிக் கனவுகள்:
இவர்கள் மிகவும் சோர்ந்து சக்தியிழந்து காணப்படுவர். இவர்கள் முரண்பாடான செயல்களைச் செய்வர். இதனால் சிறிது காலத்தில் வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர். இது மனதில் தற்கொலை எண்ணங்களை வளர்த்து விடுகிறது.ஆகவே இவர்களது கனவுகள் கொலையுணர்வு, தற்கொலை போன்றவையாக இருக்கும். சுருக்கமாக சொல்வதென்றால் அழிக்கும் தன்மை இவர்களது கனவின் அடிப்படையாக இருக்கும்.
இவ்வாறு கனவுகளை ஆராயும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்.
கனவுகள் நோயாளியின் நோய்க்குறிகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பதே மருத்துவரின் முக்கிய வேலையாகும். இது போன்ற கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, எல்லா கனவுகளையும் கொண்டு குழம்பி விடக் கூடாது.
ஒரு கனவு அவரை மிகவும் பாதிக்கிறது அல்லது தொடர்ந்து வருகிறது என்றால் அவரின் வாழ்வில் எந்த நிகழ்விற்குப் பின், எந்த பிரச்சனைக்குப் பின் அந்தக் கனவு முதன்முதலில் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பல சமயங்களில் எதார்த்தமாக நடக்கும் சாதாரண நிகழ்வுகள் கூட கனவுகளின் மையமாக அமையலாம். இந்த கருத்துக்களை மனதில் கொண்டு கனவுகளை ஆராய்ந்தால் நாம் சரியான மருந்தை தேர்வு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
இப்போது நம் மெட்டீரியா மெடிக்காவில் உள்ள சில கனவுகளைக் காண்போமா?
சல்பர்:
இம்மருந்து சோரா எதிர்ப்பு மருந்துகளின் அரசன் என்பதை அறிவோம். இவர்களின் கனவுகள், கற்பனைக்கு அப்பாற்பட்டதாக, பதட்டமும் பயமும் கலந்ததாக, கோரமான அருவருப்பானதாக, நெருப்பினால் அபாயங்கள் நிகழ்வது போல, நாய்கள் தன்னை கடிப்பது போல, வீழ்வது போல, மறுநாள் வேலைகள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிமயமான கனவுகள்.
உயிரோட்டமுள்ள அழகான, மகிழ்ச்சி நிறைந்த கனவுகளால் காலையில் பாட்டு பாடிக் கொண்டே எழுதல், சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுவது போல, நிஜ வாழ்வில் தொட முடியாதவற்றை தொட முயல்வது போல, சல்பர் மருந்தின் கனவுகள் இருக்கும்.
பிரையோனியா ஆல்பா:
குழப்பம் நிறைந்த கனவுகளால் நிம்மதியற்ற தூக்கம், எண்ண அலை ஒட்டங்கள் நிறைந்தது, தோல்வியால் வெறுப் படைந்திருப்பது போன்ற அடிப்படையில் நம்பமுடியாத கனவுகள், வழக்கமான நிகழ்வுகளின் உயிரோட்டமுள்ள கனவுகள் பிரையோனியாவில் இருக்கும்.
காஃபியா:
அதீத மகிழ்ச்சியால் தூக்கமின்மை, மகிழ்ச்சி நிறைந்த கனவுகள், நெருங்கிய நண்பர்கள் இறந்தது போன்ற கனவுகள், இத்தகைய கனவுகள் வந்த போதும், எதுவுமே நடவாதது போல் அதாவது எந்த ஒரு துக்கமும், கலக்கமும் இன்றி அப்படியே சமநிலையில் இருப்பர்.
ரஸ்டாக்ஸ்:
தூக்கக் கலக்கத்தில், மன அழுத்தம் நிறைந்த தொடர்ச்சியற்ற கனவுகள். பதட்டமும் பயமும் கலந்த கனவுகள், உயிரோட்டம் நிறைந்த தொழில் சம்பந்தப்பட்ட கனவுகள். கனவு காணும்போது பிதற்றுதல். உலகமே நெருப்பில் எரிவது போன்ற கனவுகள். நடப்பது, நீந்துவது, படகில் செல்வது போலவும், மலை ஏறுவது போலவும், கடினமாக உழைப்பது போன்றும் கனவுகள்.
விராட்ரம் ஆல்பம்:
பதட்டம் நிறைந்த கனவுகள், நாய் கடிப்பது போலவும் அதனிடமிருந்து தப்பிக்க முடியாதது போலவும் கனவுகள், தன்னை யாரோ வேட்டையாடுவது போல, திருடர்கள் வருவது போல, தகராறு செய்வது போன்ற கனவுகள், பயத்துடன் தூக்கம் கலைந்து கனவில் நடந்தது உண்மை சம்பவம் போன்ற எண்ணம்
தூஜா:
சைகோடிக் எதிர்ப்பு மருந்துகளின் தலைவன் தூஜாவின் கனவுகள்; அபாயம் நிறைந்த மன அழுத்தம் தரக்கூடிய பதட்டம் நிறைந்த கனவுகள், உறங்கிய சிறிது நேரத்திலேயே உயரத்தில் இருந்து விழுவது போல, திடீரென்று திடுக்கிட்டு அழுகையுடன் எழுவர். அதுவும் முக்கியமாக வலது புறம் சாய்ந்து படுத்திருக்கும் போது, சிற்றின்பம் சார்ந்த கனவுகள், விந்து வெளியேறாது ஆனால் எழும்போது விரைப்புடன் வலியும் இருக்கும். இறந்த நபர்களை தெளிவாகக் காண்பது போல உணர்வார், அந்த நபர்களுடன் உரையாடுவது போன்ற கனவுகள்.
மெடோரினம்:
துன்பம் நிறைந்த வலி தரக்கூடிய சோர்வடையச் செய்யக் கூடிய கனவுகள், நடந்து கொண்டிருப்பது போல எதையோ அருந்திக் கொண்டிருப்பது போல, இறந்தவர்கள் வருவது போலவும், தீயசக்திகள் பேய்கள் இருப்பது போன்ற கனவுகள் வரும்.
மெர்க்குரியஸ்:
பதட்டமுள்ள சகிக்க முடியாத கனவுகள், வரலாறு சம்பந்தப்பட்ட கனவுகள், திருடர்கள் பற்றிய கனவுகள், நாய்கள் கடிப்பது போல, தொழிலில் தனக்கு மூத்தவர்களை வெளிப்படையாக எதிர்ப்பது போல, புரட்சி செய்வது போல, துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை கனவில் காண்பது, வெள்ளம் ஏற்படுவது போல, கொலை சம்பந்தப்பட்ட கனவுகள் வரும்.
ஆரம் மெட்டாலிகம்:
அமைதியற்ற தூக்கத்தில் பதட்டம் நிறைந்த கனவுகள், வாய்த்தகராறு செய்வது போல, தான் இறப்பது பற்றி பல கனவுகள், இறந்தவர்கள், சடலங்கள் நிறைந்த கனவுகள் வரும்..
அகோனைட் நேபில்லஸ்:
பதட்டம் நிறைந்த கனவால், பிதற்றிக் கொண்டும், அசைந்து கொண்டும் இருத்தல், கொடுங் கனவுகள், தனது எதிர்காலம் பற்றிய கனவுகள் வரும். இவ்வாறு குழப்பம் நிறைந்த நோயாளிகளின் கனவுகளைக் கொண்டும் கூட குணப்படுத்தி விட ஹோமியோபதி மருந்துகள் ஏராளமாக உள்ளன.
என்ன வாசகர்களே இந்தக்கட்டுரை மூலமாக கனவுகள் பற்றியும், ஹோமியோபதியில் மருந்துகள் தேர்வு செய்ய கனவுகளை உபயோகிக்கப்படுவது பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஹோமியோபதி மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து தக்க சமயத்தில் ஹோமியோபதி மருத்துவரை அணுகிப் பயன் பெறுங்கள்.
(ஹோமியோ முரசு செப்டம்பர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)