இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு நபர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகிறார். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் மாரடைப்பு நோயினால் பலர் முடங்கிப் போய்விடுகின்றனர். மூளை செல்கள் சேதமடைந்து போவதால் இந்த முடக்கம் ஏற்படுகிறது.

மாரடைப்பு நோயினால் சேதமைடைந்த மூளையின் திசுக்கள் ஸ்டெம் செல்களால் சீரமைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக விவாதிக்கப்பட்டு வருகிறது. லண்டன் கிங் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மைக் மோடோ என்பவரும் அவருடைய குழுவினரும் இதுபற்றி ஆராய்ந்து வருகின்றனர். மாரடைப்பினால் சேதப்படுத்தப்பட்ட மூளை செல்கள் ஸ்டெம் செல்கள் உதவியால் ஏழு நாட்களுக்குள் புனரமைக்கப்படுவதை இந்தக்குழு மெய்ப்பித்துள்ளது.

மாரடைப்பின்போது மூளை செல்கள் இறப்பதால் வெற்றிடம் ஏற்படுகிறது. இறந்துபோன மூளை திசுக்களை மீண்டும் உருவாக்குவதில்தான் இந்த ஆய்வின் முக்கியத்துவம் இருக்கிறது. ஸ்டெம் செல்களை தாங்கிப் பிடிப்பதற்கான ஒரு தற்காலிக தாங்குதளமாக தானாகவே சிதைவடையக்கூடிய PLGA என்ற பாலிமரை விஞ்ஞானிகள் பயன்படுத்தி இந்த சாதனையை எலிகளில் நிகழ்த்தியுள்ளனர்.

ஸ்டெம் செல்களால் நிரப்பப்பட்ட PLGA துகள்களை மிக நுண்ணிய ஊசிகள் மூலம் மூளைசெல்கள் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு செலுத்துகிறார்கள். தொடக்கத்தில் இந்த ஸ்டெம் செல்கள் வெற்றிடத்தை நிரப்புகின்றன. பின்னர் அருகில் உள்ள செல்களில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு திசுக்களாக உருவெடுக்கின்றன. சில நாட்களில் இந்த திசுக்கள் மூளை செல்களுடன் தொடர்புகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. தாங்குதளமாக பயன்பட்ட PLGA துகள்கள் சிதைவடையத் தொடங்கியதும் அந்த இடத்தை இரத்தக்குழாய்களும், நார்ப்பொருளும் நிரப்பிவிடுகின்றன.

ஸ்டெம் செல் மருத்துவத்துறையில் இன்னும் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போது மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கும் முயற்சி வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆய்வு இன்னும் பல படிகளைக்கடந்த பிறகுதான் மனிதர்களுக்கு பயன்படுமாறு செய்யமுடியும்.

-மு.குருமூர்த்தி

Pin It