20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்கள் சிலருள் சிந்தனையும் செயல்திறனும் மிக்க மிகச் சிறந்த அறிவார்ந்தவராகத் திகழ்ந்தவர் டாக்டர் அம்பேத்கர். படிப்பார்வம் மிக்கவர், புத்தகப் பிரியர், கருத்துச் செறிவும் ஆழமும் திட்பமும் உடைய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். புத்தரின் வாழ்வும், கபீரின் போதனைகளும், ஜோதிபாய் பூலேவின் போராட்டங்களும் அவரை ஈர்த்தன. அதனால் அம்பேத்கர் செயலூக்கம் பெற்று போற்றுதலுக்குரிய மாபெரும் மனிதரானார். அதே நேரத்தில் அவர் மிகுந்த விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியவராக இருந்தார்.
அம்பேத்கர் கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் அவர் புத்தரது போதனைகளில் தமது இதயத்தைப் பறிகொடுத்தவர். புத்தரின் மீது அவர் செலுத்திய ஈடுபாட்டால்தான் மும்பையிலிருந்த அவரது வீட்டிற்கு ‘இராஜகிருகம்’ எனப் பெயர் சூட்டினார். புத்தர் ஞானமடைந்து, முதல் பொழிவைக் காசியில் நிகழ்த்தினார். பிறகு அவர் தமது ஐந்து சீடர்களுடன் மகதநாட்டுத் தலைநகரான இராஜகிருகத்திற்குள் மன்னன் பிம்பிசாரன் வரவேற்க முதன் முதலாக அடியயடுத்து வைத்தார். அம்மகத நாட்டுத் தலைநகர் பெயரையே அம்பேத்கர் தமது இல்லத்திற்கு வைத்துக் கொண்டார். அம்பேத்கர் அறிவார்ந்த புத்தரை வரித்துக் கொண்டவர். ஆகவேதான் அவர்,
“எனக்கு எது அறிவூட்டுவதாக உள்ளதோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது”
எனப் புத்தகங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தார். பிற சிந்தனையாளர்கள் மலைக்கும் அளவுக்கு தமது வீட்டில் நூலகத்தை வைத்து இருந்தவர். அந்நூல்களையயல்லாம் சித்தார்த் கல்லூரிக்கு வழங்கிய பின்பும் தமது இறுதி நாள்கள் வரையும் நூல்களை வாங்கிக் கொண்டே இருந்தார். மீண்டும் மற்றொரு நூலகம் அம்பேத்கர் வீட்டில் உருவாயிற்று.
டாக்டர் அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் மகாராட்டிர மாநில அரசினர் நாம் அறிந்தவரை 37 தொகுதிகள் வெளியிட்டு இருக்கின்றனர். ஆங்கில மூலத்திலிருந்து தமிழ், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளில் அத்தொகுதிகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இத்தொகுதிகளுள் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் விளக்கங்களும் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து புத்தகங்களைப் பற்றித் தொடர்ச்சியாகவும், குழப்பம் இல்லாமலும் விளக்கமாக- துல்லியமாக வாசகர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.
பொதுவாக இந்த 37 தொகுதிகளுள் அம்பேத்கரின் அறிக்கைகள், மாநாட்டு மற்றும் கருத்தரங்கப் பேச்சுகள், சட்டமன்றப் பேச்சுகள், வட்டமேசை மாநாடு, அரசியல் நிர்ணய சபை உரைகள், கடிதங்கள், கட்டுரைகள், விவாதங்கள், உரையாடல்கள், அரசியல் நிகழ்ச்சிகள், அவை பற்றிய விளக்கங்கள் என நிரம்ப உள்ளன. கட்டுரைகள் சில முழுமை பெறாமல் இருக்கின்றன. அவை அப்படியே ஆவணமாகக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டு இருக்கின்றன. ஆனால் அம்பேத்கர் தாமாகவே முயன்று சில நூல்களை எழுதி வெளியிட வேண்டும் எனக் கருதி அதற்காகவும் அவர் உழைத்தார். அப்போது அவர் வெளியிட திட்டமிட்ட நூல்கள் எவை? எந்தெந்த நூல்களை அவர் முழுவதுமாக எழுதினார்? அது குறித்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவர் வாழ்நாளில் அவரது எண்ணம் - ஆசை ஈடேறியதா? - என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
டாக்டர் அம்பேத்கர் புத்தகங்களாக எழுத வேண்டும் எனத் திட்டமிடப்பட்டவை ஏழு தலைப்புகள். அவை 1. புத்தரும் அவரது தம்மமும் 2.புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் 5. இராமர் - கிருஷ்ணரின் புரட்டுகள் 6. திரிமூர்த்திகளின் புரட்டுகள் 7. மகளிரின் எதிர்ப் புரட்சிகள் என்பவையே.
இப்புத்தகங்களை எழுதுவதற்காக ஏராளமான குறிப்புகளை அம்பேத்கர் திரட்டினார். சிறிய நோட்டுப் புத்தகங்களிலும் உதிரி தாள்களிலும் அவை இடம்பெற்றிருந்தன. சில குறிப்புகள் தட்டச்சு செய்யப்பட்டும் இருந்தன. இத்தகைய குறிப்புகளை அம்பேத்கர் கோப்புகளிலும், காகித உறைகளிலும், தலைப்புகள் எழுதப்பட்டு எடுத்து வைத்து இருந்தார். இப்புத்தகங்களை ஒவ்வொன்றாக ஆனால் தொடர்ச்சியாக வெளியிட வேணடும் என அவர் விரும்பினார். அவருடைய இந்த விருப்பம் நிறைவேறவில்லை.
மேலே குறிப்பிட்ட ஏழு புத்தகங்களில் 1.புத்தரும் அவரது தம்மமும் 2. புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் ஆகிய நான்கையும் அவர் எழுதி முடித்து இருந்தார். அவர் எழுதியவற்றுள் ‘புத்தரும் அவரது தம்மமும்’ எனும் புத்தகத்தை முதலில் வெளியிட எண்ணங் கொண்டார். இப்பணியை 1951 ஆம் ஆண்டு தொடங்கினார். இப்புத்தகத்தை எழுதி முடிக்க அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆயிற்று, வெளியிடப் பணம் வேண்டுமே?
அம்பேத்கர் டாடா அறக்கட்டளைக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். அப்போது எம்.ஆர்.மசானி டாடா தொழிற்சாலைகளின் தலைவராக இருந்தார். (பின்னாளில் இராஜாஜி சுதந்திராக் கட்சியைத் தொடங்கியபோது அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக இருந்தவர் எம்.ஆர்.மசானி ) மசானிக்கும் ஒரு கடிதம் எழுதினார் அம்பேத்கர். அதில் படிக்க நெகிழ்ச்சி அடையும்படியாக அவர் எழுதியிருந்தார். “டாடா என் வேண்டுகோளை மறுத்துவிட்டால், என்னுடைய பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அடுத்த வாசலுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தார். டாடா நிறுவனத்தினர் ரூ.3000/- க்குரிய காசோலையை அம்பேத்கருக்கு அனுப்பி வைத்தனர்.
“புத்தரும் அவரது தம்மமும்” எனும் புத்தகத்தை அம்பேத்கர் எழுதத் தொடங்கிய அன்று - ஒரு ஞாயிற்றுக் கிழமை - நவ.2/1951 இல் காலைச் சிற்றுண்டியை முடித்தார். வீட்டில் உள்ள புத்தரின் உருவச் சிலையின் முன்னே மெழுகு வர்த்தியை ஏற்றினார். சாம்பிராணியைப் புகைக்கச் செய்தார். பிறகு வராந்தாவிற்குச் சென்று ஒரு கோப்பைத் தேநீரை அருந்தினார். பிறகு புத்தகப் பணியைத் தொடங்கினார். எத்தனையோ அரசியல், சமூகப் பிரச்சினைகள், குழுக்கள், சட்டச்சிக்கல்கள் பற்றி உரையைத் தயாரித்து நிகழ்த்திய அம்பேத்கர், உயர்வான புத்தரது தம்மத்தைப் பற்றி எழுதுகிறபோது ஒரு பணிவு அவரிடம் மிளிர்கிறது. இப்புத்தகம் ஜின்ஜி வாங் எழுதிய “புத்தர் : வாழ்க்கையும் போதனைகளும்”(Buddha - His Life and Teachings) என்கிற புத்தகத்தைப் போல வெளியிடவேண்டும் என்று அவர் விரும்பினார்.
இப்புத்தகத்தை மத்திய அரசு நூலகங்களுக்கு 500 படிகள் வாங்கினால் உதவியாக இருக்கும் என்று அப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவர்கலால் நேருவுக்குக் கடிதம் எழுதினார் - அம்பேத்கர். அச்சமயத்தில் புத்தரின் 2500 ஆம் பிறந்தநாள் விழாவுக்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது. அக்குழுவின் தலைவராக டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் இருந்தார். நேரு, அம்பேத்கர் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதி இருந்தார். அதில் அவர் மத்திய அரசு புத்தகங்கள் வாங்க அய்யமுள்ளது என்று எழுதியதோடு அம்பேத்கரின் கடிதத்தை டாக்டர் இராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் டாக்டர் இராதாகிருஷ்ணனோ தாம் எதுவும் இவ்வியத்தில் செய்ய முடியாது என்பதை டாக்டர் அம்பேத்கருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டார்.
அம்பேத்கர் எழுத எண்ணிய புத்தகங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எழுதப்பட்டவையாகும். அவர் புத்த மதத்தில் இணைந்ததும் குடிஅரசுக் கட்சியைத் தொடங்க எண்ணியதும்கூட அவரது கடைசிக் காலத்தில்தான்! அம்பேத்கரின் ‘புத்தரும் கார்ல் மார்க்சும்’ எனும் புத்தகம் 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை எழுதி முடிக்கப்படவில்லை. மார்க்சின் ‘மூலதனத்திலிருந்து’ சிலவற்றை அந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சேர்க்கப்படவிருந்தது. இந்த அத்தியாயத்தில்தான் அவர், சிந்தனைக் கிளர்ச்சியூட்டும் தமது எண்ணங்களை முக்கியமாகச் சேர்த்து வெளிப்படுத்தி இருந்தார். பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்புத் தொகுதி 7 - பகுதி - 2 இல் ‘புத்தரா, கார்ல்மார்க்சா?’ எனும் தலைப்பில் சிறுநூல் அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது.
‘புத்தரும் கார்ல் மார்க்சும்’ எனும் நூலும், தொகுதி 7 இல் இணைக்கப்பட்டுள்ள ‘புத்தரா கார்ல்மார்க்சா ?’ என்பதும் ஒரே உள்ளடக்கத்தைப் பெற்று இருப்பவையா என்பதைக் கண்டறிய முடியவில்லை. ‘புத்தரா, கார்ல் மார்க்சா ?’ கட்டுரைக்குப் பதிப்பாசிரியர்கள் வழங்கியுள்ள குறிப்பில் அந்நூலும் இதுவும் ஒன்று என்றோ, இல்லை என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. இணைக்கப்பட்டுள்ள கட்டுரையும் முழுமையாக இல்லை. இடையிடையே தொடர்ச்சி விடுபட்டு இருக்கிறது. கிடைத்துள்ளவரை படித்ததில் அம்பேத்கரின் வாதத்திறமையும், அவர் மேற்கோள்களைத் தகுந்த இடத்தில் எடுத்து வைப்பதும் அவர் எடுத்துக் கொண்ட பொருளுக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. அக்கட்டுரை - சிறுநூல் முழுமையாகக் கிடைக்கவில்லையே என்கிற ‘ஏக்கம்’ படிக்கிற ஒவ்வொருவருக்கும் உண்டாகும்.
டாக்டர் அம்பேத்கரின் ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்’ எனும் நூல் மிகச் சிறந்த நூலாகும். பகுத்தறிவு வாதத்திலிருந்து நாத்திகத்தை நோக்கிச் செல்லுகிற ஒவ்வொருவர்க்கும் மிகப் பயன்பாடு உள்ள நூலாகும். அம்பேத்கர் நூல் வரிசையில் தொகுப்பு - 7 இல் பகுதி ஒன்று முழுவதும் இந்நூலே இடம் பெற்று இருக்கிறது. மொத்தம் இந்நூலில் 13 இயல்கள் இடம் பெற்று இருக்கின்றன. இந்நூலின் சிறப்புக்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் கூற விரும்புகின்றோம்,
1. “(இந்து மதத்தில்) 128 ஸ்மிருதிகள் இருக்கின்றன.”
2. “ஆரியர் சூதாடுவதை ஒரு கெளரவமாகவே கருதினர். சூதாட அழைப்பதை ஏற்க மறுப்பது, மானம், மரியாதைக்கு இழுக்கு என்றே கருதினர்.”
3. “சோமபானம் அருந்துவது ஆரம்பகாலத்தில் பிராமணர், த்திரியர், வைசியர் ஆகியோருக்கு மட்டுமே உரியது. பின்னர் அந்த உரிமை பிராமணர், த்திரியர் ஆகியோருக்கு மட்டுமே உரிமையாயிற்று.”
4.”சோமபானம் தயாரிக்கும் முறை பிராமணர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகக் காப்பாற்றப்பட்டது.”
5.”கிருஷ்ணனும் அர்ச்சுனனும் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததொரு சந்தர்ப்பத்தை மகாபாரதம் குறிப்பிடுகிறது.”
6. “புத்தரைப்போல நாத்திகராக வாழ்ந்தவரும் இல்லை, கடவுள்போல மதிக்கப்பட்டவரும் இல்லை.”
7. “பிராமணீயம் ஏன் இடிபாடுகளிலிருந்து மீண்டும் எழுந்தது? பெளத்தம் ஏன் அவ்வாறு எழ முடியவில்லை? பெளத்தத்தைவிட பிராமணீயத்தில் ஏதோ ஒரு மேலான தன்மை இருப்பது இதற்குக் காரணம் அல்ல. மாறாக இந்த இரண்டு சமயங்களின் பிரத்தியேக இயல்புகளில்தான் இதற்கான காரணம் பொதிந்து உள்ளது எனலாம். பெளத்தம் மடிந்தது என்றால் ஆயிரம் ஆயிரமாக பெளத்தர்கள் மடிந்ததுதான் அதற்குக் காரணம். இப்படி மறைந்து போனவர்களை எப்படி உயிர்ப்பிக்க முடியும்? பெளத்தம் அடித்து நொறுக்கப்பட்டாலும் அது அடியோடு அழிந்துவிடவில்லை. உயிரோடு இருந்த ஒவ்வொரு பிராமணனும் புரோகிதனானான். மடிந்து போன ஒவ்வொரு பிராமணப் புரோகிதன் இடத்தையும் அவன் நிரப்பினான்.”
8. “ஏழாம் நூற்றாண்டு, இந்தியாவில் சமயக் கொடுமைகள் நிறைந்த நூற்றாண்டு என்று ஸ்மித் கூறுகிறார்.”
9. “இந்த 7 ஆம் நூற்றாண்டில்தான் தென்னிந்தியாவில் சமணர்களைக் கொடூரமாகக் கொன்றனர்.”
10. “பெளத்தத்தின் அழிவுக்கு பிராமணீயமே காரணமாயிருந்தது என்பது தெளிவு”
இப்படி விவரங்களின் குவியலாக அம்பேத்கரின் ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ எனும் நூல் திகழுகிறது.
“இந்து மதத்தின் புரட்டுகள்” எனும் புத்தகத்தை அவர் 1954 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் எழுதத் தொடங்கினார். அப்புத்தகம் எழுதும் பணி 1955 நவம்பரில் முடிந்தது. இது அச்சிட நான்கு படிகள் எடுக்கப்பட்டன. படிகள் எடுக்கப்பட்ட தாள்கள் கனமானதாகவும் உயர்ந்த தாளாகவும் இருந்தன. அச்சுப்பணி தொடங்கும் தருவாயில் தடைபட்டது. அம்பேத்கர் அப்புத்தகத்தில் இரண்டு முக்கியப் படங்களைச் சேர்க்க விரும்பினார். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத் காசிக்குச் சென்று அங்குள்ள பார்ப்பனர்களை வணங்கியதோடு அவர்களின் பாதங்களைக் கழுவிக் குடித்தார். இக்காட்சியைப் படமாகப் புத்தகத்தில் அம்பேத்கர் இணைக்க விரும்பினார். அடுத்த படம் டெல்லியில் 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ஜவகர்லால் நேரு பதவி ஏற்பதற்கு முன்பு, காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்களால் யாகம் வளர்க்கப்பட்டது. அதன் அருகே பண்டித நேரு அமர்ந்து இருந்தார். அவரிடம் காசிப் பார்ப்பனர்கள் இராஜதண்டத்தை வழங்கினார்கள். எடுத்து வந்திருந்த கங்கையின் நீரை நேருவுக்குத் தந்து அருந்தச் செய்தார்கள். இதற்கான படத்தையும் இப்புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இராஜேந்திர பிரசாத் பற்றிய படம் கிடைத்தது. நேருவின் ‘யாகப் படம்’ கிடைக்கவில்லை. தேட வேண்டியதாகிவிட்டது.
புத்தகத்தை அச்சிட, பதிப்பாளருக்கு அனுப்புவதற்கு முன்பு அம்பேத்கர் பிரதிகளைச் சரி பார்த்தார். அவருக்கு நிறைவு ஏற்பட்டது. அச்சில் - புத்தக வடிவில் நமது எண்ணங்களைப் பார்க்கப் போகின்றோம் என்பதால் அம்பேத்கர் பெருமகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் அதற்குள் அவர் தயாரித்த இப்புத்தகத்தின் நான்கு பிரதிகளும் காணாமல் போயிருந்தன. அம்பேத்கர் அவரது வாழ்நாளில் அவர் எழுத எண்ணிய புத்தகங்களைப் புத்தக வடிவில் பார்க்கவே இல்லை.
டாக்டர் அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் 37 ஆண்டுகள் படிப்பது எழுதுவது போராடுவது என்று மரணம் அடையும் வரையும் உழைத்துக் கொண்டே இருந்தார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை தூக்கத்திலேயே மரணமடைந்துவிட்டார் - அம்பேத்கர். டிசம்பர் 4 ஆம் தேதி மாநிலங்கள் அவையில் அமர்ந்து இருந்தார். பிறகு மாநிலங்கள் அவையின் வெளிக்கூடத்தில் (ஸிலிணுணுதீ) அமர்ந்து அம்பேத்கர் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தார். மரணம் நெருங்கிவிட்டது என்று யார்தான் உணரமுடியும்? நீரழிவு நோய் உபாதைகளோடு இயல்பாக அவரது பணிகளைச் செய்து கொண்டே இருந்தார்.
டிசம்பர் 5 ஆம் தேதி காலை 8 3/4 மணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுந்தார் - அம்பேத்கர். நண்பகல் 1 1/2 மணிக்கு குடும்ப மருத்துவரான டாக்டர் மெளலங்கருடன் அம்பேத்கரின் மனைவி சவீதா அம்பேத்கர் சில பொருள்களை வாங்கச் சென்றிருந்தார். மனைவி கடையிலிருந்து வந்ததும் சினந்தார். மாலை அவரது தனிச் செயலாளர் ஞானக் சந்த் ராட்டுவை அழைத்துச் சிலவற்றைத் தட்டச்சு செய்யச் சொன்னார். அம்பேத்கருக்கு இரவு சினம் தணிந்திருந்தது.
சமணத் துறவிகள் குழு ஒன்று அம்பேத்கரைச் சந்தித்துத் திரும்பியது. இக்குழுவினரே அம்பேத்கரைக் கடைசியாகச் சந்தித்தவர்கள். அன்றிரவு டாக்டர் மெளலங்கர் அம்பேத்கரிடம் பம்பாய் செல்வதற்கு விடை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அம்பேத்கர் சில பாடல்களைக் கண்களை மூடிய வண்ணம் பாடிக் கொண்டு இருந்தார். ‘புத்தம் சரணம்’ என்ற வரிகளையும் அவர் பாடினார். தனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ‘கிராமபோனில்’ போடச் சொன்னார். அந்தப் பாடலைப் பக்தி உணர்வோடு அவர் கேட்டார். அப்போது சமையற்காரர் சுதாமா இரவு உணவு தயாராகிவிட்டதை வந்து கூறினார். கொஞ்சம் சோறுதவிர வேறெதுவும் வேண்டாம் என்று கூறித் தனிச்செயலாளரின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சாப்பாட்டு அறைக்குச் செல்வதற்காக எழுந்தார். நேரே நூலக அறைக்குப் போனார். சில நூல்களை எடுத்தார்.அங்கிருந்த நூல்களை எல்லாம் ஒரு முறை பார்த்தார். கையில் எடுத்த நூல்களைப் படுக்கை அறை மேசைமேல் வைக்குமாறு உதவியாளரிடம் கூறிவிட்டு உண்ணும் அறைக்குச் சென்று சிறிதளவே சாப்பிட்டார்.
பிறகு கபீரின் பாடல் ஒன்றை பாடிக்கொண்டே படுக்கை அறைக்குச் சென்றார். அம்பேத்கர் படுக்கையில் அமர்ந்ததும் தாம் கொண்டு வந்த நூல்களைச் சிறிது நேரம் புரட்டிக் கொண்டே இருந்தார். தனி உதவியாளர் ராட்டு வீட்டுக்குச் செல்வதற்கு அம்பேத்கரிடம் விடைபெற்றார். மிதிவண்டியில் அவர் வீட்டை அடைவதற்குள் அம்பேத்கரின் பணியாள் சுதாமா ‘அவர்’ அழைத்து வரச் சொன்னதாகக் கூறினார். அம்பேத்கரின் படுக்கையறைக்கு ராட்டு வந்தார்.
“புத்தரும் அவருடைய தம்மமும்” எனும் புத்தகத்திற்கு அம்பேத்கர் எழுதிய முன்னுரை மற்றும் அறிமுக உரை, தட்டச்சு செய்யப்பட்ட நகல்கள், ஆச்சாரியா அட்ரே, எஸ்.எம்.ஜோ´ ஆகிய இருவர்க்கும் எழுதியுள்ள கடிதங்கள், பர்மா அரசுக்கு எழுதியுள்ள கடிதம் ஆகியவற்றை எடுத்து வந்து அவருடைய மேசைமீது வைக்குமாறு ராட்டுவிடம் சொன்னார் - அம்பேத்கர். ராட்டுவும் படுக்கை அருகேயுள்ள மேசை மீது அவற்றையயல்லாம் எடுத்து வந்து வைத்தார். இரவு இவற்றை எல்லாம் படித்துப் பார்ப்பேன் என்று ராட்டுவிடம் கூறினார் அம்பேத்கர். பணியாள் சுதாமா பிளாஸ்கில் காபியையும் சில இனிப்புப்பண்டங்களைக் கொண்ட பாத்திரத்தையும் படுக்கையருகே வைத்துவிட்டுச் சென்றார்.
அம்பேத்கர் இரவு எதையும் படித்ததாகத் தெரியவில்லை. புத்தக் அறிமுக உரைகளையும் கடிதங்களையும் மீண்டும் பார்த்ததாகவும் தெரியவில்லை. காபியையும் அருந்தவில்லை. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு, சவீதா அம்பேத்கர் வழக்கம்போல் எழுந்தார். அம்பேத்கரின் படுக்கையின் மீது பார்வையைச் செலுத்தினார். கால்கள் திண்டு மீது இருப்பதைப் பார்த்தார். வழக்கம் போல் தோட்டத்தைச் சுற்றி வந்து அம்பேத்கரை எழுப்பினார். ஆனால் அவரோ உறக்கத்திலேயே மரணம் அடைந்துவிட்டார்.
நாம் இங்கே கவனிக்க வேண்டியது அறிவார்ந்த தலைவரான அம்பேத்கர் ஏழு புத்தகங்கள் எழுதி வெளியிட பேராவல் கொண்டார். அவற்றில் நான்கை மட்டும் எழுதி முடித்து வைத்து இருந்தார். அந்த 4 புத்தகங்ளையும் அவரது மரணத்திற்கு முன் வெளிவந்து அவரால் பார்க்க முடியவில்லை என்பதுதானே! அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் பல தொகுப்புகளாக மகாராட்டிர அரசினர் வெளியிட்டுள்ளதில் அவரால் எழுதி முடிக்கப்பட்ட நான்கு புத்தகங்களில் ‘புத்தரும் கார்ல் மார்க்சும்’, ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும்’ என இரண்டு புத்தகங்களை மட்டுமே படிக்க முடிந்தது. மகாராட்டிர அரசின் விற்பனைக்கு வந்த 37 தொகுப்புகளில் 22 ஆம் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்கவில்லை. அதில் என்ன உள்ளடக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை.
படிப்பார்வமும் சிந்தனை வளமும் உடைய அம்பேத்கர் அவர் எழுதிய புத்தகங்களைப் பார்க்காமலேயே இறந்துவிட்டார். மரணத் தருவாயிலும் புத்தகத்தை வெளியிடுவதில் அந்த அறிஞருக்கு இருந்த இலட்சிய வெறியை யார்தான் மறக்க முடியும்?
- க.திருநாவுக்கரசு