தேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம்; அது தனிமனித உரிமைகளை காலில் போட்டு கசக்குவதற்குத் தயங்காது என்று இந்திய குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி குறிப்பிட்டுள்ளார். ஊரக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு ஆய்வு மையம் ஏற்பாடு செய்த - சீக்கிய சமய நிறுவனர் குருநானக் தேவ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஹமீது அன்சாரி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
சமய நம்பிக்கைகளை உருவாக்கியவர்கள் மதத்தன்மையை உருவாக்கவில்லை. ஆனால், தத்துவங்களை, நெறி முறைகளை நீர்க்கச் செய்து, அவற்றை திரிப்பவர்கள் ‘மதத்தன்மை’ என்ற ஒன்று உருவாக்கி விடுகிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன்பாக, மகாகவி ரவீந்திரநாத் தாகூர் ‘தேசிய வாதத்தை ஒரு பேரச்சுறுத்தல்’ என்றும் ‘மனிதன் கண்டுபிடித்த சக்திவாய்ந்த மயக்க மருந்து’ என்றும் வர்ணித்தார், மேலும் அவர், தேசத்தை வழிபடும் போக்கிற்கு எதிராகவே தன்னை நிலை நிறுத்தினார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தேசியவாதத்தை ஒரு ‘குழந்தைப் பருவ நோய்’ என்று கூறினார். நாட்டுப்பற்று என்பது பண்பாட்டு ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அவசிய மான ஒன்று. புனிதமான உணர்வுகளை அது ஊக்குவிக்கிறது. ஆனால் இதுவும் வெறித்தனமாகக் கூடாது அப்படியாகி விட்டால் ஒரு நாடு எந்த மதிப்பீடுகளைக் காக்க வேண்டும் என்று போராடுகிறதோ அதையே குலைத்து விடும்.
தேசியவாதத்தை அதிகாரத்துக்கான ஆசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. தேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம். அது தனிமனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கவும் தயங்காதது. தேசியவாதம் என்பது ஒரேநாடு என்பதுடன் அடையாளப்படுத்திக் கொள்ளப்படுவதாகும். அதனாலேயே நன்மை, தீமை, சரி, தவறு ஆகியவற்றுக்கு அப்பால் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. தனிநபர் முடிவுகளை, கருத்துகளை நீக்கிவிட்டு தன்னுடைய நலன்களைத் தவிர வேறு இல்லை என்ற ரீதியில் செல்கிறது. தேசியவாதம், நாட்டுப்பற்றுடன் எப்போதும் குழப்பிக் கொள்ளப்படுகிறது. இரண்டையும் ஒன்றே என்பது போல், பரஸ்பரம் ஒன்றின் இடத்தில் மற்றொன்றை பதிலீடு செய்து புரிந்து கொள்கின்றனர். இரண்டு சொற்களுமே நிலையற்ற மற்றும் பொதிந்து கிடக்கும் அர்த்த தளங்கள் கொண்டவை. எனவேதான் இரண்டையும் கையாள்வதில் எச்சரிக்கை தேவை.
ஏனெனில் இரண்டுமே உள்ளடக்கம் மற்றும் அர்த்த அளவில் வேறு வேறானவை. கடும் தேசியவாதம், தீவிர மதத்தன்மை இரண்டும் விரும்பத்தகாதது. இதற்கான மாற்று மனிதன் எட்டிவிடக்கூடிய தூரத்தில் தான் உள்ளது. மனித சமூகத்தின் அந்த விடிவானது மகிழ்ச்சி, அமைதி, சமாதானம் என்பதில்தான் உள்ளது. சகிப்புத் தன்மை, உரையாடல், அனுசரிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்றினால் அந்த விடிவை எட்டலாம். இவற்றைப் போதிக்கும் மத, ஆன்மிகத் தலைவர்களின் உபதேச தர்க்கங் களையும் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஹமீது அன்சாரி பேசியுள்ளார்.