இன்று ஆளுநர்கள் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில், மாநில மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் அரசாங்கத் திற்கு நிருவாகச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசாங்கத்தின் ஆளும் கட்சிகளாக இல்லாத மாற்று கட்சிகளின் ஆளும் கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஒன்றிய பகுதிகளான டெல்லி, புதுச்சேரி ஆகியவை அடங்கும்.

ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் அமைச்சர் அவையால் பரிந்துரையில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர். ஒன்றிய அரசு என்பது பெரும்பான்மை மக்களவை உறுப்பினர் களால் ஒரு கட்சியோ பல கட்சிகளோ சேர்ந்து நடத்தப்படுவது. ஆளுநர் பதவி எப்படி வருகின்றது என்பதைப் பார்த்து விட்டோம்.

இவர் மாநிலங்களின் நிருவாக தலைவராக இருப்பதற்கு வழிவகை செய்வது நமது அரசியல் அமைப்புச் சட்டமே. இப்படி ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசாங்கத்தை செயல்படாமல் மோதல் போக்கை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கின்றது என்பது நாம் அனைவரும் பார்க்கும் நிகழ்வு.

இதை விளங்கிக் கொள்வது இதை புரிந்து கொள்வதற்கும், ஏன் அரசியல் அமைப்பு மாநிலங்களுக்கானதாக இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமானால் மொழி வழி தேசியத்திற்கு இல்லாமல், அனைத்து தேசிய இனங்களின் ஒன்றியமாக விளங்க வேண்டிய ஒன்றியத்திற்கு சர்வ அதிகாரங்களையும் கொண்ட அரசியலமைப்பாக நம் இந்திய அரசியலமைப்பு உள்ளது? இந்தியக் கூட்டமைப்பு அழிக்க முடியாத ஒன்று என்பதாலேயே ஒன்றியம் என்று அழைக்கப்படும் - டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன அமைப்பு விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் நமது அமைப்பை வரைந்தவர்கள் ஒன்றியம் என்ற சொல்லை ஏன் பயன் படுத்தினார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இந்தியா ஒரு கூட்டாட்சிதான் என்பதை அவர்கள் விரும்பினாலும், அந்தக் கூட்டாட்சி, பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாகப் பல நாடுகள் இணையப் பெற்று இந்தியக் கூட்டாட்சி உருவாகாததால், இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடிய உரிமை எந்த மாநிலத்திற்கும் இல்லை. அது அழிக்க முடியாத ஒரு கூட்டாட்சி என்பதால், அது ஒன்றியம் எனப்படுகிறது. நிர்வாக வசதியை உத்தேசித்து இந்த நாடும், அதன் மக்களும், பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தாலும், இந்தியா நாடு ஒன்றாகக் கலந்து விட்ட முழுமையான ஒரு நாடு. அதன் மக்கள் - ஒரே மூலத்திலிருந்து பிறந்த தனித்தவோர் ஆட்சிப் பீடத்தின் கீழ் வாழ்ந்து வருகிற ஒரே மக்கள். அமெரிக்க மக்கள் தங்களது கூட்டாட்சியை அழிக்க முடியாத கூட்டாட்சி என்று நிலை நாட்டுவதற்கும் அதிலிருந்து எந்த மாநிலமும் பிரிந்து போவதற்கு உரிமை கொண்டவையல்ல என்பதை நிலை நாட்டுவதற்காகவும் ஓர் உள்நாட்டுப்போரையே நடத்த வேண்டிய தாயிற்று. ”

“பின்னால் அது யூகத்திற்குரிய ஒரு சிக்கலாகவும் விட்டு வைக்காமல், அவைகளை இப்போதே தெளிவாக்கி விடுவது சிறந்ததாகும் என்றே நமது வரைவுக் குழுவும் கருதிற்று. ”

மேலே குறிப்பிட்டவை டாக்டர் அம்பேத்கர் அவர்களால் அரசியல் அமைப்பு குறித்த விவாதத்தின்போது குறிப்பிட்டவை (CAD-VII P 43) ஆங்கில மூலம் கட்டுரை முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை மலர்க மாநில சுயாட்சி 416 - 17 பக்கங்களில் ஆசிரியர் வழக்கறிஞர் கு. ச. ஆனந்தம் 1975 அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்காணும் விவாதத்தில் ஒன்றியம் அதாவது கூட்டமைப்பல்ல என்ற கருத்தாக்கத் திற்கு பல நாடுகளை மேற்கோள் காட்டிய டாக்டர் அம்பேத்கர் தனது சமகாலத்து சோசலிச நாடான சோவியத் ரஷ்யாவை விட்டுவிடுவது என்பது தற்செயலானதல்ல. வரைவுக் குழுவின் கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

அவர் விவரிக்கும்போது இந்தியா நாடு ஒரே மூலத்திலிருந்து என்ற சொல்லிற்கு விடை காண வேண்டி அவரது ரூபாயின் பிரச்சனை அதன் தோற்றமும் அதற்கான தீர்வும் குறித்த கட்டுரைகள் வழியே பயணிக்கும்போது டாக்டரின் வரலாற்று வழிதேடல்களை கட்டுரையில் பதித்துச் செல்லலாம். அவர் நாணய செலாவணி குறித்த கட்டுரையில் குறிப்பிடுபவை.

சூரத் ருபாய் மொகர் முன்னது வெள்ளி பின்னது தங்கம் இவை பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்தது, ஆற்காடு ரூபாய் ஸ்டார் பக்கோடா முன்னது வெள்ளி பின்னது தங்கம் இவை சென்னை மாகாணம். வங்காளம், பீஹார் ஒரிஸ்ஸா கட்டாக் இவற்றில் வங்கம் சிஸ்ஸா வெள்ளி மொகர் தங்கம் சூரியன் வெள்ளி மேலும் பிரிந்த மாகாணங்கள் லக்னோவில் புர்ருகாபாத் ரூபாய் வெள்ளி கைப்பற்றப்பட்ட மாகாணம் காசி சிஸ்ஸா (45 சூரியன்) பெனாரஸ் ருபாய் முச்லீதர் வெள்ளி நாணயங்கள். இவை இல்லாமல் புழக்கத்தில் இருந்த நாணயங்களும் உண்டு பதிவுகளில் வருவதில்லை.

1833ல் இந்தியாவின் மூன்று மாகாணங்களுக்கிடையில் உள்ள நிருவாக உறவுகளில் ஒரு முக்கியமான அரசியல் - சட்ட ரீதியான மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டு (ஆங்கில) பார்லிமெண்ட் காமன் சபை நிறைவேற்றிய சட்டத்தின்படி, இந்தியா முழுவதிலும் எல்லாச் சட்டம் இயற்றும் சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட, மையப் படுத்திய இம்பீரியல் (imperial) நிர்வாக அமைப்பு நிறுவப்பட்டது.

அது இந்தியா முழுவதற்கும் பொதுவான தாகவும் அதன் அரசியல் ஆதிக்கத்தை எடுத்துக்கூறுவதாகவும் இருக்கும். இம்பீரியல் சர்க்காரின் ஒரு சட்டத்தின்படி (1835 ஆம் ஆண்டு XVII சட்டம்) ஒரே சட்ட ரீதியான சாதனமாக இந்தியா முழுவதும் ஒரு பொதுவான செலாவணியை புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் காலத்தில் இந்திய மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அத்தகையவற்றில் பண்ட மாற்றுப் பொருளாதாரம், பணப் பொருளாதாரமாக மாறியதாகும். ஆங்கிலேயன் தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு முன்பு ஆட்சிபுரிந்த மன்னர்கள் தங்கள் ஆட்சி நிருவாகத்தில் பணிபுரிந்தவர் களுக்கு பணத்திற்கு பதிலாக நிலங்களை மானியமாக ஒதுக்கியுள்ளனர். மேலும் வரலாற்றில் காசு பணம் வரியாகவும் வசூலாகியுள்ளது. குழப்பமான ஆட்சி நிருவாகம் நிலவிய சூழலிலேயே குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்திய கம்பெனி மூலமாக ஆங்கிலேயன் கைகளுக்கு ஆட்சி செல்கிறதை நமது வரலாறு காட்டுகின்றது. ஆங்கிலேயன் ஆட்சியில் பணப் பொருளாதாரமே சமூகத்தின் இயக்கப் போக்காக மாறுவதையும் தன் வணிக நலன்களுக்கு தனது இந்திய ஆட்சிப்பரப்பான மதராஸ் வங்கம் பம்பாய் ஆகிய மாகாணங்களில் மாற்றங்கள், பின்பு மதராஸ் ராஜதானியில் நீதிக் கட்சியும் இதற்கு நடுவே மக்கள் பல்வேறு வகையில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து தங்களது நலன் களைப் பெற்றுக்கொண்டு வந்ததே வரலாறு. இங்கிருந்தே வெள்ளைக்கார ஆங்கிலேயன் தனது ஏகாதிபத்தியத்தை கட்டி அமைத்தான்.

இதன் வரலாற்றை இந்தக் கோணத்தில் இருந்து விளங்கிக் கொள்வது அவசியம். இத்துணைக் கண்டத்தில் மொழிவழி தேசியம் உருவாகாமல் ஆங்கிலேயன் உருவாக்கிய மரபுவழி அரசியல் எப்படி உருவாகியது என்பதையும்; நாடு இரண்டாகப் பிரிந்ததும், இந்திய ஒன்றியம் என்ற பெயரில் தேசிய இனச் சிறைக்கூடமாக விளங்கும் தற்கால இந்தியாவும் யாருடைய நலன்களுக்காக எப்படி உருவானது என்பதை இனிப் பார்ப்போம்.

முத்துமுருகன்

Pin It