முள்ளிவாய்க்கால் குருதி நாற்றம் இன்னும் நம் மூக்கைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. உலகில் எந்த இனமும் சந்தித்திராத இனப்பேரழிப்பை நாம்தான் எதிர்கொண்டோம்.

ஓராண்டிற்குப் பிறகு இப்போதுதான் ஐக்கிய நாடுகள் அவை அந்தப் பக்கத்தில் கண்திறந்து பார்த்திருக்கிறது. ஈழத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து அறிக்கை தர வேண்டியது அக்குழுவிற்கு இடப்பட்டுள்ள பணி. அக்குழுவினருக்கு விசா தரமாட்டோம் என்று கொக்கரித்தது இலங்கை அரசு. ஐ.நா அவைக்கு இப்படி ஓர் அவமானம் இதற்கு முன் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை. ஐ.நா அவை என்பது, உலக நாடுகளின் அவையே என்பதால், அமெரிக்கா முதலான வல்லரசுகள் தொடங்கி உலகின் கடைசி அரசு வரையில் அனைவருக்கும் இது ஓர் அவமானம். ஆனாலும், ஐ.நா வோ, உலக நாடுகளோ இதைக் கேட்டுக் கொதித்தெழவில்லை.

சில நாட்களுக்கு முன்பு இன்னொரு அட்டூழியமும் கொழும்பில் அரங்கேறியுள்ளது. இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஓர் அடாவடிக் கும்பல், கொழும்பில் உள்ள ஐ.நா அவை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது. அவ்வலுவலகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் எவரையும் உள்ளே போக விடாமல் தடுத்தும், உள்ளே இருந்தவர்களை வெளியேற விடாமல் தடைப்படுத்தியும் தன் அரக்கத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளது. காவல்துறையினர் அந்த அடாவடித்தனத்திற்கு அரணாக இருந்துள்ளனர்.

ஒரே ஒரு ஆறுதல், இத்தனைக்குப் பிறகும் குழுவை அனுப்புவதில் எந்த மாற்றமும் இல்லை என, ஐ.நா அவையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியுள்ள செய்தி மட்டும்தான். இந்த ஆறுதலும் தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதி கூறிவிட முடியாது. இலட்சக்கணக்கான மக்களை இரண்டே நாட்களில் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேயும், கூட்டாளிகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படும் நாளே, குறைந்தபட்சம் காலம் கடந்தாவது நீதி தன் கடமையைச் செய்யும் என்று நம்பக் கூடிய நாளாக இருக்கும்.

நந்திக் கடல் பகுதியிலும், முள்ளி வாய்க்கால் பகுதியிலும் தடைசெய்யப்பட்ட இராசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் கிடைக்கக்கூடும் என்றே கூறுகின்றனர். தடய அறிவியல் துறையின் வளர்ச்சி அதற்கான வாய்ப்புகளைக் கொண்டதாக உள்ளது. எனவே ஐ.நா. குழுவினர் தங்களோடு பல்வேறு ஆய்வுக் குழுவினர்களையும் அழைத்துச் செல்லுவதே பயனுடையதாக இருக்கும். இப்போது செல்லவிருக்கின்ற குழுவினர், வெறும் ஆய்வறிக்கை கொடுக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம். அதற்கே சிங்கள இனவெறி அரசு இத்தனை தடைகளை ஏற்படுத்துகிறது. இதிலிருந்தே அவர்கள் குற்றம் இழைத்துள்ளனர் என்பதை மறைமுகமாக உலகுக்குத் தெரிவித்து விட்டனர் என்று கொள்ளலாம். இனிமேல் உலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

உலகம் ஒருபுறம் இருக்கட்டும், இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதே அதற்கும் முந்திய ஆயிரம் டாலர் கேள்வியாக இருக்கிறது. எப்போதும் போல் இப்போதும் இந்தியா எந்தமிழ் மக்களுக்குத் துரோகம்தான் செய்யும் என்பது பெரும்பான்மைக் கருத்தாக இருப்பதை அறிய முடிகிறது. கடந்த காலங்களில் இழைத்த ஆயிரம் துரோகங்களைத் தாண்டி இப்போதேனும் இந்திய அரசு, ஐ.நா குழுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்குமானால், காலகாலமாக இந்தியாவின் மீது நேசமும், நம்பிக்கையும் வைத்திருந்த ஈழ மக்களுக்குச் சின்ன ஆறுதலாவது கிடைக்கும்.

..............................................................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..........................................................

பேரவையின் இரண்டாவது மலர்

அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலரை அடுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இரண்டாவது மலர் அறிவியல் மலராக மலர்கிறது. அறிவியல் செய்திகளை எளிமையானதாக மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்வதும், பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதும் இம்மலரின் நோக்கம்.

இம்மலர் வரும் செப்டம்பர் 25 ஆம் நாள் சென்னையில் வெளியிடப்பட உள்ளது.

- சுப.வீரபாண்டியன்

Pin It