விவசாயிகளுக்கு
‘வாய்க்கரிசி’ போடுவதுதான்
புதிய இந்தியா

நெசவாளர்களுக்கு
‘சவத்துணி’ நெய்வதுதான்
புதிய இந்தியா

சில்லறை வணிகர்களுக்கு
‘நெற்றிக்காசு’ வைப்பதுதான்
புதிய இந்தியா

மாட்டுக்கறி உண்பவரைக்
கொன்று
கொன்று
‘மனிதக்கறி’ உண்பதுதான்
புதிய இந்தியா

இல்லாதவனின்
‘கோவணத்தைப் பிடுங்கி’
இருக்கிறவனுக்கு
கம்பளம் விரிப்பதுதான்
புதிய இந்தியா

மருத்துவமனைகளில்
‘மழலைகளின் மூச்சறுத்து’
வீடுகளில்
‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான்
புதிய இந்தியா

மாநிலக் கல்வி உரிமை பறித்து
சமூகநீதி புத்தகம் ‘கிழித்து’
உலக மூலதனத்துக்கு
விசிறி விடுவதுதான்
புதிய இந்தியா

பெண்களின் ‘தீட்டுத்துணிக்கும்’
வரிவிதித்து
பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து
சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான்
புதிய இந்தியா

செத்துச் செத்துப் பிறக்கிறது
புதிய இந்தியா
பிறந்து பிறந்து சாகிறது
புதிய இந்தியா.

Pin It