உலகையே உலுக்கியிருக்கிறது ஜம்முவில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியின் கோரக் கொலை. கூடாரமடித்து குதிரை மேய்க்கும் தொழிலைச் செய்யும் இஸ்லாமிய ‘பேக்கர்வால்’ சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா, ஜம்மு இந்து பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) கடத்தப்பட்டு, கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பிறகு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கான காரணம், ஜம்மு பகுதி ‘இந்து’க்களுக்கே சொந்தமானது; அங்கே இஸ்லாமிய நாடோடி சமூகம் கூடாரமடிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்குத்தான்.
ஜனவரி மாதம் நடந்த இந்தப் படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு பா.ஜ.க. தனது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையின் புலனாய்வுக் குழு தொடர்ந்து மிரட்டப்பட்டு, பலமுறை குழு மாற்றியமைக்கப்பட்டு, பிறகு தீபிக்காசிங் என்ற வழக்கறிஞர், நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த பொதுநல வழக்கிற்குப் பிறகுதான் நீதிமன்றம் தலையிட்டு, மிரட்டல்களை நிறுத்தியது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான ஐம்மு வழக்கறிஞர் சங்கம் மிரட்டி, இதற்குப் பண்டிட்டுகளின் இந்து (பார்ப்பனர்) உரிமைப் போராட்டமாக மதச் சாயம் பூசினர். மாநில கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சந்தர் பிரகாஷ் கங்கா மற்றும் சவுத்ரிலால் சிங் என்ற அமைச்சர்கள், பா.ஜ.க. தலைமையின் அனுமதியோடு குற்றவாளிகளைக் காப்பாற்றும் ‘போராட்டக்’ களத்தில் பங்கேற்றனர்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் ‘என்னுடைய மதம் நான் அணிந்திருக்கும் காக்கி சீருடைதான்’ என்று நெஞ்சு நிமிர்த்தி, மிரட்டிய பண்டிட்டுகளிடம் கூறி, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ள பெண் போலீஸ் அதிகாரி இரமேஷ் குமார் ஜல்லாவைப் பாராட்ட வேண்டும். (இவரும்கூட ஒரு பண்டிட்தான்)
அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கெட்டரஸ் - இந்த கொடூரத்தைக் கண்டிக்கும் நிலை உருவான பிறகே மோடி வாய்திறந்தார்; அமைச்சர்களையும் பதவி விலக வைத்துள்ளார்.
உ.பி.யில் உன்னாவில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சென்கரிடம் பரிந்துரைக்காக வந்த 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். மாவட்ட காவல்துறை ஒத்துழைப்புடன் கைதிலிருந்து தப்பினார். பெண்ணின் தந்தையை கைது செய்து சிறையில் சித்திரவதை செய்து அவரை சாகடிக்கும் எல்லை வரை உ.பி. பா.ஜ.க. மாநில அரசு குற்றத்தை மறைக்கவே அத்தனை முயற்சிகளையும் செய்தது. பாதிக்கப்பட்ட பெண், முதல்வர் வீட்டின் முன் தன்னை மாய்த்துக் கொள்ளும் போராட்டம் நடத்த முன்வந்த பிறகுதான் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்து சி.பி.அய்.க்கு வழக்கு மாற்றப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏதோ சில நபர்கள் செய்யும் குற்றத்துக்காக பா.ஜ.க. என்ற ஒரு அமைப்பையே குறை கூறக் கூடாது என்று வாதிடுகிறார்கள். நாம் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான். பா.ஜ.க. ஆட்சியும், அதன் அமைச்சர்களும் அதிகாரத்தைக் கொண்டு அந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது நியாயம் தானா?
பச்சிளம் சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதும்கூட இந்து ராஷ்டிரத்துக்கான போராட்டத்தின் வடிவம் தானா? பதில் சொல்லட்டும்!