சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி தற்போதுள்ள இடம் ஹைடி பார்க் தோட்டம்(Hyde Park Garden). இது, மதராஸ் மாகாண பிரதமராக இருந்த பனகல் அரசருக்கு (1921 - 1926), சொந்தமான இடம். இந்த இடம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வருவதற்கு முன்பு இந்திய மருத்துவப் பள்ளியாக இயங்கியது. ஸ்டான்லி மருத்துவமனையை கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி என்பதுபோல், இது ஒரு நேரத்தில் இலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இந்த இடம் ஒரு காலத்தில் லண்டன்ஸ் தோட்டம் (Landon’s Garden) என்று அழைக்கப்பட்ட இடம் இதுவே. பிறகு இலண்டன் தொட்டி என மருவி அழைக்கப்பட்டது. (Madras Miscellany. P. 738)
இதன் ஒரு பகுதியில்தான் கிறித்துவ மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டு, பிறகு டெவ்டன் ஹவுஸ் என்ற தற்போது கல்லூரி உள்ள இடத்திற்கு 1916 - இல் மாற்றப்பட்டது. (Madras discovered, p. 380)
1925 - இல் இந்தியாவில் சுதேசி மருத்துவம் தழைத்திட இந்திய மருத்துவப் பள்ளி (School of Indian Medicine) தொடங்கப்பட்டு, 1929-இல் கேப்டன் டாக்டர் சீனிவாசமூர்த்தி முதல்வராக இருந்தபோது, சித்த மருத்துவர்கள் முருகேச முதலியார், கன்னையா நாயுடு, ஆயுர்வேத மருத்துவர்கள் மாதவமேனன், சங்குன்னி மேனன், அலோபதி பிரிவில் டாக்டர்கள் பி.வி.கிருஷ்ணாராவ், சத்திய நாராயண செட்டியார், பெர்னாண்டஸ் ஆகியோரும், மகப்பேறு மருத்துவப் பகுதியில் டாக்டர்கள் நாகராஜ அய்யரும், சக்கரபாணி அய்யங்காரும் பணியாற்றினர். இக்காலகட்டத்தில் மாணவர் விடுதி கட்டப்படாததால், பச்சையப்பன் கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கிப் படித்தனர்.
கேப்டன் டாக்டர் சீனிவாசமூர்த்தி ஓய்வு பெற்ற பின், டாக்டர் கிருஷ்ணாராவ் கல்லூரி முதல்வரானார். அவருக்குப் பின் டாக்டர் பராங்குசமும் அவரை அடுத்து டாக்டர் விசுவேசுவர சாஸ்திரியும் முதல் வராகப் பணியாற்றினார்கள்.
பள்ளி, கல்லூரியாகி, எல்.ஐ.எம்., ஜி.சி.ஐ.எம்., ஆனது
1946 - இல் சென்னை மாகாண முதல்வர் பிரகாசம், சுகாதார அமைச்சர் திருமதி ருக்மணி லஷ்மிபதியும், உஸ்மான் குழு, சோப்ரா குழு மற்றும் பண்டிட் குழு போன்ற ஆய்வுக் குழுக்களின் பரிந்துரை களைச் செயல்படுத்த தனி அலுவலரை நியமித்தனர். பின்னர் கல்லூரிக்கான பாடத் திட்டங்கள் உருவாக்கப் பட்டு, பள்ளி, கல்லூரி ஆகி, கல்லூரியின் பெயர் College of Integrated Medicine என்று மாற்றமடைந்தது.
1948-இல் இக்கல்லூரியின் பெயர் உள்ளூர் மருத்துவம் படிக்கும் கல்லூரி(College of Indigenous Medicine) என்று மாற்றப்பட்டு, ஜி.சி.ஐ.எம்., படிப்பில் சித்தா, ஆயுர்வேதம், யூனானி ஆகியவை களில் ஏதாவது ஒன்றை அலோபதி மருத்துவத்துடன் படிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் பாடத் திட்டங்களை உருவாக்கி, கல்லூரி வளர்ச்சிக்கு அக்கறையுடன் பணியாற்றியவர் அன்றைய நலவாழ்வுத் துறை அமைச்சர் திரு. ஏ.பி.ஷெட்டி.
இந்திய மருத்துவக் கல்லூரியில் 1953 - இல் ஜி.சி.ஐ.எம். (G.C.I.M - Graduate of the College of Integrated Medicine) என்ற 4 - 5 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு, பிறகு ஓர் ஆண்டு பயிற்சியும் அளிக்கப் பட்டது. முதலில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு, இது படிப்படியாக 125 மாணவர்களாக அனுமதி உயர்த்தப்பட்டது. இச்சமயத்தில் அரசு இக் கல்லூரியைச் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சித்தது. ஆனால் டாக்டர் ஏ.எல். முதலியாரை, துணைவேந்தராகக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம், அதற்கு இசைவளிக்கவில்லை. ஆனால், ஜி.சி.ஐ.எம். படித்தவர்கள் உள்ளூர் மருத்துவம் மற்றும் மேலை மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க அரசு இசைவளித்தது.
ஜி.சி.ஐ.எம். படிப்புக்கு இன்டர்மீடியட்டில் தமிழும் ஒரு பாடமாகப் படித்தவர்கள் சித்தா பிரிவிலும், வடமொழியைப் படித்தவர்கள் ஆயுர்வேதப் பிரிவிலும், இதுபோல உருதுவைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் யூனானி பிரிவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். மாணவர் சித்தா பிரிவில் 20, ஆயுர்வேதப் பிரிவில் 75, யூனானி பிரிவில் 5 பேர் என்று முதல் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்க்கப் பட்டனர். இதில் சித்த மருத்துவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும், ஆயுர்வேதத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மலையாளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், யூனானியில் உருது தெரிந்த இஸ்லாமியர்களும் படித்தனர்.
சித்தா பிரிவில் என்னென்ன பாடங்கள் கற்றுத் தரப்பட்டன?
முதல் ஆண்டில் பாடமாக சித்த மருத்துவப் பிரிவில் அடிப்படைக் கொள்கைகளுடன், மூலிகை மருத்துவ முறைகளும் மேலை மருத்துவ முறையில் கரிமவேதியல் (Organic Chemistry),, உடல் இயங்கியல், உடல்கூறு தாவரவியல் பாடங்களும் கற்பிக்கப் பட்டன. என்றாலும், இதற்கு முன் மருத்துவப் பாடங்களுக்கு முன்னோடியாக (Pre - Medical) தமிழ்நாட்டின் வரலாறு, லெமூரியா கண்டத்தி லிருந்து தமிழ்நாடு பிரிந்தமை, பதினெட்டு சித்தர்கள் வரலாறு ஆகியவைகளோடு திருமூலர் திருமந்திரம், சைவ சித்தாந்தம் போன்ற தத்துவப் பாடங்களும் போதிக்கப்பட்டன. (திருச்சி டாக்டர் பழனியாண்டி நேர்காணல்).
1953 ஜூலை மாதம் சென்னை மருத்துவக் கல்லூரியில் சட்ட மருத்துவப் பேராசிரியர் சீனிவாசலு நாயுடு ஓய்வு பெற்ற பிறகு, ஜி.சி.ஐ.எம். கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
மாணவர்களுக்குத் தங்கும் விடுதி இல்லாத குறையைக் களையும் பொருட்டு, 1929-இல் மாணவர் விடுதியும், 1930-இல் மாணவிகள் விடுதியும் வாலாஜாபாத் பகுதியில் திறக்கப்பட்டன.
இப்போது மருத்துவக் கல்லூரி இயக்குநரகமாகத் திகழும் இடமே முந்தைய மாணவர் விடுதியாக இருந்த இடம் என்பது நினைவு கூரத்தக்கது.
1960-இல் இந்திய மருத்துவக் கல்லூரி மூடப் பட்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பு தொடங்கப்பட்டது.
அந்நிலையில் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம் 1, 2 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடரவும், 3, 4, 5-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு டி.எம் & எஸ். படிக்கவும் வாய்ப்பு அளிக்கப் பட்டது.
சுருங்கச் சொன்னால், அலோபதி மருத்துவத் துறையினராக இவர்கள் மாற்றமடைந்தனர்.
ஜி.சி.ஐ.எம். படிப்பு முடித்து வெளியேறியவர் களுக்கு, ஒரு வாய்ப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால டி.எம். & எஸ். படிப்பும் அதை முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால எம்.பி.பி.எஸ். படிப்பும் படிக்க அரசு அனுமதி அளித்தது. (என் வாழ்க்கைப் பாதையும் பயணமும், 2015).
இதன்படி உள்ளூர் மருத்துவம், மேலை மருத்துவம் ஆகிய இரு மருத்துவங்களிலும் ஆலோசனை வழங்க, தொடங்கப்பட்ட மருத்துவப் படிப்பு மேலை மருத்துவ மோகம் காரணமாக இவர்கள் அனைவரும் மேலை மருத்துவம் படித்த மருத்துவரானார்கள். இதன்படி, நாட்டு மருத்துவ முறையுடன் மேலை மருத்துவத்தையும் இணைத்துப் படிக்கும் வாய்ப்பைத் தமிழ்நாடு இழந்தது. இது நீடித்திருந்தால், சுதேசி மருத்துவம் விஞ்ஞான அடிப் படையில் ஆய்வுகளுடன் வளர உதவி இருக்கக் கூடும். அண்ணா நகரில் 1970-இல் திறக்கப்பட்டு, தற்பொழுது சுதேசி மருத்துவமுறை சித்தர், யூனானி, யூனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவங்கள் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் மட்டுமே போதிக்கப்படுகிறது.
1965-இல் கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய இந்திய மருத்துவக் கல்லூரி, மகளிர் மருத்துவக் கல்லூரியாக மாறி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 1967இல் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு தனிக் கல்லூரி தேவை இல்லை, ஆண்களுடன் சேர்ந்து படிக்க விரும்புவதாகப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, 1967- இலேயே ஆண்களும் இக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
20-11-1956இல் ஜி.சி.ஐ.எம். மருத்துவர்கள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியவும் மேனாட்டு மருத்துவ முறையைப் பயன்படுத்தவும் சென்னை அரசு ஒரு சட்டம் இயற்றி, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு இம்மருத்துவர்கள் அரசு மாவட்டத் தலைநகர் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளில் பணியாற்ற ஏதுவாயிற்று.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நினைவுச் சின்னங்களாக டாக்டர் வைத்திய ரத்தினம், கேப்டன் சீனிவாசமூர்த்தியின் உருவச்சிலையை திருமதி ருக்மணி லக்ஷ்மிபதி 1947இல் திறந்து வைத்தார். இக்கல்லூரி இடத்தை பனகல் அரசர் அன்பளிப்பாகக் கொடுத்ததை நினைவுகூரும் வகையில் பனகல் ஹால் என்று அறிவுசார் கூட்டங்கள் நடத்தும் கூடம் உள்ளது. மேலும் இவ்வளாகத்தில் நூறு ஆண்டுகளைக் கடந்த ஓர் ஆலமரமும் நிழல் தந்து கொண்டிருக்கிறது.
சுதேசி மருத்துவத்தை வளர்க்க அரசின் இருமனப் போக்கு
20 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய ஆதிக்கத்தில் கிராமப்புறங்கள் மேலை மருத்துவம் பெறாது வசதியற்றே இருந்தன. ஏதோ இங்குமங்கும் சில கிராமங்கள் இவ்வசதி பெற்று இருந்தாலும், அதைத் தங்கள் கலாச்சாரத்திற்கு எதிர்ச்சார்பானது என எண்ணியதாலும், மருத்துவ ஆலோசனைக் கட்டணமும் மருந்தின் விலையும் கூடுதல் என்பதாலும் பெரும்பான்மையோர் சுதேசி மருத்துவத்தையே நம்பினர், நாடினர். ஆனால், சுதேசி மருத்துவர்கள் பலர் தகுந்த பயிற்சியற்றவர்கள், சிலர் பரம்பரை மருத்துவர்கள். இவர்களுக்கெல்லாம் மேலாகப் பலர் போலி மருத்துவர்கள். இந்தியாவில் மேலை மருத்துவம் தழைத்த பிறகும், படித்தவர்களும், உயர்குடி மக்களும் சுதேசி மருத்துவத்தையே நாடினர். அவர்கள் போக்கிடம் பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவமாகவோ அல்லது சித்த மருத்துவமாகவோ இருந்தது. ஆகவேதான் சட்டமன்றத்தில் சுதேசி மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், நாட்டம் கொண்டவர்கள் திரும்பத் திரும்ப இத்துறை மேம்பாட்டிற்குக் குரல் கொடுத்தனர். ஆனாலும் இவ்வுறுப்பினர் தீர்மானங்களுக்கு அரசு உடன் படாதவாறு சுதேசி மருத்துவத்தை ஒரு தனிப்பட்ட மருத்துவத் துறையாக ஏற்க மறுத்தது.
காலனி அரசு, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, உள்நாட்டு மருந்தகங்கள் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவப் பள்ளிகளைப் பற்றி சரிவரப் புரியாதவாறே இருந்தனர். மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்பொழுது கூட தனிப்பட்ட நிதியை எந்த மருத்துவத்துறைக்கு எனக் கூறாது பொதுவாகவே ஒதுக்கி வந்தனர்.
ஆனால், மதராஸ் மாநகராட்சியும் மற்றும் சில தனிப்பட்டவர்களும் இதழ்களும் இடைவிடாது தெரிவித்த சுதேசி மருத்துவ மேம்பாட்டிற்கான கோரிக்கைகளே, சுதேசி மருத்துவம் என்ற ஒரு தனிப்பட்ட மருத்துவமுறை இந்நாட்டில் உள்ளது என்பதைக் காலனி அரசை உணர வைத்தது.
சில சமயம் இத்துறைக்கு நல்கை ஒதுக்கீடு செய்யும்போது ஒருசில விதிவிலக்குக்கு உட்பட்டே நிதியும் வழங்கப்பட்டது. ஆனாலும், சிறிது சிறிதாக இம்மருத்துவம் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிப்பதைக் குறைத்துக்கொண்டது. ஏனெனில் மேலை மருத்துவம் கற்றவர்களே தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்ற சுதேசி மருத்துவம் பார்க்கும் அனைவரும் போலி மருத்துவர்களே என எண்ணியது. வேலையில் உள்ளவர்களுக்கு ரூ. 120/- ஊதியமாக வழங்கப்பட்டது. பொப்பிலி அரசு குறைந்த சம்பளமே கொடுத்தது, அதை மற்ற படிப்பு படித்தவர்களின் சம்பளத்திற்கு ஏற்றவாறு திருமதி ருக்மணி லக்ஷ்மிபதி உயர்த்தினார் (1947). போர் (Bhore) கமிட்டியின் பரிந்துரைப்படி, சுதேசி மருத்துவர்களை மதராஸ் மெடிக்கல் கவுன்சில் ‘டாக்டர்’ என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ள அனுமதிக்கவில்லை. ஆனால், அமைச்சர் ஏ.பி. ஷெட்டி பரிந்துரைக்குப் பின்னரே அவ்வாறு போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
1925-இல் மதராசில் தொடங்கப்பட்ட அரசு இந்திய மருத்துவப் பள்ளி நான்கு வெவ்வேறான மருத்துவப் பட்டப் படிப்புகளைக் கற்றுக்கொடுத் தாலும், அத்துடன் உடல்கூறு, உடல் இயக்கம், வேதியியல் போன்ற நவீன பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. இதில் வெற்றி பெறாது என நினைத்த அரசின் கருத்திற்கு மாறாக இப்பள்ளியில் வெற்றிகரமாக சுதேசி மருத்துவத்துடன் மேலை மருத்துவமும் இணைந்து கற்றுக்கொடுக்கப்பட்டது. பிறகு, ஒரு தனிப்பட்ட மருத்துவமனை கட்ட அனுமதி கேட்கப் பட்டபோது, மறுக்கப்பட்டு, அப்பள்ளியுடன் இணைந்து மருத்துவமனையை அமைக்க இசை வளித்தது. இதுபோன்ற ஒரு அலைபாயும் இருமனப் போக்குடனே காலனி அரசு நடந்துகொண்டது. சுதேசி மருத்துவத்தை வளர்க்க நினைத்தாலும், பிறகு கைவிடப்பட்டது என்பதே உண்மை.