சனாதனத்தையே தங்களின் பிழைப்பாக கொண்ட பிற்போக்கு கும்பல் எந்த எல்லைக்கும் சென்று தங்களை அரசியல் களத்தில் நிலைபடுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. அவர்களிடம் எந்த மனித விழுமியங்களும் கிடையாது. அவர்கள் பல ஆண்டுகளாக தலித்துகளின் உயிர்கள் புழு பூச்சிகளைவிட இழிவானவை, அவர்கள் இந்த மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள் எனச் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை தலித்துகள் அனைவரும் அவர்களுக்கு எதிரிகள். முன்பின் தெரிந்த தலித்துகள் மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் சந்தித்திராத தலித்துகள் கூட அவர்களின் எதிரிகள்தான். தலித் எதிர்ப்பை தங்களின் வாழ்க்கை முறையாகவே அவர்கள் கடைபிடிக்கின்றார்கள். அது ஒரு சமூக கருத்தியலாக சில சில்லரை அரசியல்வாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

சாதிய முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி முனை மழுங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் காலாகாலத்திற்கும் அரசியலில் நக்கிப் பிழைக்கவும், அதன் மூலம் தங்கள் குடும்பங்களின் வளத்தை பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களால் முடிகின்றது.

சமூகம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியால் நாகரீகப்பட்டாலும், சாதிய சிந்தனைகள் இன்னும் அவர்களை அநாகரிக காலத்திலேயே வாழும்படி செய்கின்றது. உலகில் பல நாடுகள் மரண தண்டனையைக் கூட ஒழித்துவிட்டு தங்களை நாகரீக சமூகமாக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில், நாம் சாதிவெறி தலைக்கேறி ஆண்ட பரம்பரை கதைகளைப் பேசி வெட்டிக் கொண்டும், குத்திக் கொண்டும் செத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்று தமிழ்ச் சமூகம் சாதிவெறியால் சீரழிந்து கொண்டிருப்பதற்கும், அநாகரிக காலகட்டத்திற்கு தள்ளப்படுவதற்கும் அரசியல்வாதி என்ற போர்வையில் இருக்கும் சாதிவெறியர்கள்தான் காரணமாக இருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பெரிய மாங்காவும், சின்ன மாங்காவும். இருவரும் பெரிய படிப்பு படித்திருந்தாலும் அவர்கள் செயல் முழுவதும் சாதிவெறியைத் தூண்டிவிட்டு குறிப்பாக 'தலித் எதிர் சூத்திரசாதி' என்று கட்டமைப்பதன் மூலம் தலித்துகளை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்குத் தள்ளி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதுதான்.

‘சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு’ என்ற போர்வையில் தலித்துகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய அணிச்சேர்க்கையும், அதன் மூலம் அவர்கள் விதைத்த நச்சும்தான் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து தலித்துகளை பலி எடுத்துக் கொண்டு இருக்கின்றது.

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோகனூர் கிராமத்தில் கடந்த புதன்கிழமை (7-ஏப்ரல்-2021) மாலை நடந்த சாதிய மோதலில் 23 வயதான அர்ஜுனன் என்ற இளைஞரும், 24 வயதான சூர்யா என்ற இளைஞரும் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மேலும் மதன், சௌந்தர் என்ற இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சூர்யாவுக்குத் திருமணமாகி, மனைவியும் குழந்தையும் உள்ளனர். அர்ஜுனனுக்கு திருமணமாகி பத்து நாட்களே ஆகின்றது.

arakkonam victimநடந்த கொலைக்குக் காரணம் சாதியோ, தேர்தல் அரசியலோ இல்லை என்று மாங்காய்களும், அவரது அடிபொடிகளும் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். ஆனால் கொலையில் ஈடுபட்ட அனைவரும் வன்னியர்கள் என்பதையும், கொலை செய்யப்பட்ட, படுகாயப்படுத்தப்பட்ட அனைவரும் தலித்துகள் என்பதையும் பார்க்கும் போது இது எப்படி சாதிரீதியான தாக்குதலாக இல்லாமல் போகும்? பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த வன்னிய சாதிவெறியர்களால் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக மாறி வருகின்றன. இளவரசன் மர்மமான முறையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டதும், கோகுல்ராஜ் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டதும் நமக்கு வெவ்வேறு சம்பவங்களாக தனித்தனியே தெரிந்தாலும் அவை அனைத்துக்குமே காரணம் பெரிய மாங்கா முன்னெடுத்த 'தலித் எதிர் சூத்திர சாதி' அரசியல்தான்.

தலித்துகளின் மீதான தாக்குதலாக இருந்தாலும், சாதி ஆணவப் படுகொலைகளாக இருந்தாலும் அனைத்துக்கும் பின்னாலே இருப்பது ஆதிக்க சாதி வெறியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது என்ன ஆதிக்க சாதி வெறி? 'சோத்துக்கு வழி இல்லை என்றாலும், அடிமையாக வாழ்ந்தாலும் மீசையை முறுக்கி தன்னை ஆதிக்க சாதியாக காட்டிக் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு கிடைத்தால்தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தாலும், தன்னை சத்ரிய குலம் என்று சொல்ல வேண்டும்' - இதுதான் ஆதிக்க சாதிவெறியர்களின் அரசியல்.

ஒரு பக்கம் இட ஒதுக்கீடு கேட்பதும், இன்னொரு பக்கம் தான் ஆண்ட பரம்பரை என்று சொல்லி தலித்துகள் மீது வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் கேடுகெட்ட இழிவான அரசியலாகும். பெரிய மாங்காவும், சின்ன மாங்காவும் அப்படியான அரசியலையே தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகின்றனர். பதவி சுகத்துக்கும், பண சுகத்துக்கும் பழக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் அம்மணத்தை காட்டிக் கொள்ள ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

இன்று இரண்டு தலித்துகளை படுகொலை செய்தவர்களின் நோக்கம் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை விடவும் தங்களின் சாதி கெளரவத்தை நிலைநாட்டுவதே ஆகும். 

சோத்துகே வழியில்லாமல் கூலி வேலை செய்து ஜீவனம் செய்து கொண்டிருக்கும் சாமானிய சூத்திர சாதி மக்களிடம் “நீ சோத்துக்கு இல்லாமல் இருந்தாலும் ஆண்ட பரம்பரை என்பதை மறந்துவிடாதே” எனத் திரும்ப திரும்ப சாதிவெறியர்களால் கற்பிக்கப்பட்டு, அதனால் உத்வேகம் அடைந்தவர்கள் தங்களைப் போலவே உழைத்து ஜீவனம் செய்து கொண்டிருக்கும் சாமானிய தலித் மக்களை பகையாகக் கருதி அவர்களோடு மோதல் போக்கைக் கடைபிடிக்கின்றார்கள். அது ஒரு கட்டத்தில் இது போன்று படுகொலையிலும் முடிந்து விடுகின்றது. தமிழ்நாட்டில் சாதி வெறியர்களால் நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களின் பின்னாலும் 'மாங்கா'க்கள் கட்டமைத்த தலித் எதிர் சூத்திர சாதி அரசியல் இருக்கின்றது.

இப்போது சிறை செல்லப் போவது யார்? உங்களுக்கு ஆண்ட பரம்பரை கதைகளைச் சொல்லி கொம்பு சீவிவிட்ட சாதிவெறி பிடித்த ஓநாய்களா? நிச்சயம் இல்லை. இது போன்ற கிரிமினல்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்ட அப்பாவி இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை இனி சிறையில் கழிக்கப் போகின்றார்கள்.

சாதிவெறி பிடித்த ஓநாய்களும் அவர்களை அண்டிப் பிழைக்கும் சில பிழைப்புவாதக் கும்பலும் இது போன்ற படுகொலைகளை வைத்து தங்கள் சாதி மக்கள் எல்லாம் தங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள், தாங்கள் யாரை கொல்லச் சொல்கின்றோமோ, யாரை அடித்து கை கால்களை உடைக்கச் சொல்கின்றோமோ, யாரின் குடிசைகளை கொளுத்தச் சொல்கின்றோமோ அதை மறுக்காமல் செய்வார்கள் எனச் சொல்லி, சில எம்எல்ஏ சீட்டுகளையும், எம்பி சீட்டுகளையும், சில பெட்டிகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் சாமானிய உழைக்கும் சூத்திர சாதி மக்களுக்கு இதனால் என்ன கிடைக்கப் போகின்றது?.ஜெயிலை தவிர வேறேதுவுமில்லை.

ஆண்ட பரம்பரை கதைகளைப் பேசி சாமானிய சூத்திர சாதி மக்களை கொலைகாரர்களாக, ரவுடிகளாக மாற்றிய கிரிமினல் பேர்வழிகள் இன்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்தக் கிரிமினல் பேர்வழிகளுக்காக தங்களின் வாழ்கையை அர்ப்பணித்த மக்கள் உண்ண நல்ல உணவின்றி, உடுக்க நல்ல ஆடையின்றி, இருக்க நல்ல இடமின்றி வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்று நம்முன்னால் இருக்கும் பெரும் பணி உழைக்கும் சாமானிய மக்களிடம் மண்டிக் கிடக்கும் சாதிவெறியை அகற்ற களப்பணி ஆற்றுவதுதான். கார்ப்ரேட் கட்சிகள் இதை ஒரு போதும் செய்யப் போவது கிடையாது. அவர்களுக்கு எல்லாமே ஓட்டுதான். எவன் தாலியை அறுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளையடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி அவர்களிடம் எந்தச் சிந்தனையும் கிடையாது. அதனால் இன்னும் எத்தனை கொலைகள் நடந்தாலும் அவர்களின் பதில் மெளனம்தான்.

இப்படியான சாதியப் படுகொலைகள்  நடக்கும் போது அதை தீவிரமாகக் கண்டிப்பதும் அதற்கு எதிராக தீவிரமான பரப்புரை செய்வதும் மட்டுமே அத்தகைய சம்பவங்கள் மேலும் நடக்காமல் தடுக்க உதவும். உழைக்கும் மக்களிடம் சரியான கருத்துக்கள் சென்று சேரும்பொழுது அதை நிச்சயம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

'சாதிவெறியை சமூகத்தில் பரப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் சில்லரைப் பயல்களும், பெட்டிக்காக விலைபோகும் தரகர்களும் கழிசடைகள், கேடிகள்' என்பதை நாம் எப்போது சாமானிய சூத்திர சாதி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோமோ, அப்போதுதான் இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்களின் சதிவலையில் சாமானிய உழைக்கும் மக்கள் மாட்டிக் கொள்ளாமல் தடுக்க முடியும். சாதிவெறியைத் தூண்டி பிழைப்பு நடத்தும் அனைவரும் மனிதர்கள் கிடையாது, நக்கிப் பிழைக்கும் நாய்கள் என்பதையும் புரிய வைக்க முடியும்.

- செ.கார்கி

Pin It