“தமிழனுக்குத் தெளிவான இலக்கியமோ, வரலாறோ இல்லை. இன்று இருக்கும் இலக்கியங் களிலும் கூட கலப்பற்ற “தமிழர் பண்பாடு” என்பது காணமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது. அவைகளில் பெரிதும் ஆரியக்கடவுள், மதம், சாதிப் பழக்க வழக்கங்கள் கொண்ட கருத்துக்களே பரவலாகக் காணக்கிடக்கின்றன” என்பது தமிழர்தம் ஒரே பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மேடைகளில் இலட்சக்கணக்கான மக்கள் முன்பு எடுத்து உரைத்துவரும் கருத்துக்களாகும்.

இக்கருத்துக்களுக்குத் சான்று பகர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். திராவிடர் கழகத்துக் காரர்களுக்கு அதாவது சுயமரியாதைக்காரர்களுக்கு மக்கள் அறிவு வளர்ச்சி பற்றி நாட்டங்கொள்வதே முக்கியம் அன்றி, அறிவைத்தடை செய்யும் வகையில் மொழிப் பற்றோ, இலக்கியப் பற்றோ, நாட்டுப் பற்றோ மற்றும் எந்தப்பற்றோ தேவை இல்லை என்பதே கொள்கையாகும். பகுத்தறிவு உணர்ச்சி யுடன் சுயமரியாதைக் கண்ணோட்டத்துடனுமே சங்க இலக்கியங்களின் தன்மை இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டு இருக்கிறது.

நம் தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் வர்ணாசிரமக் கோட்பாடுகளும் பன்னெடு நாட்களுக்கு முன்னரேயே புகுந்தவிட்டது எனலாம். அகத்தியர் போன்ற ஆரிய முனிவர் தமிழகம் போந்து, தமிழ் கற்று அதன் மூலம் தங்களது நச்சுக் கருத்துக்களை எல்லாம் புகுத்தி இருக்கின்றனர். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட நூலாகிய தொல்காப்பியத்தில் கூடப் பார்ப்பனர்தம் வர்ணாசிரமக் கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகள் நான்கும் தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பெயரில் காணப்படுகின்றன. இதனைப் தமிழ்ப்புலவர்கள் “அது எப்படி வர்ணாசிரமப் பிரிவுகளாகும் ! தொல் காப்பியர் கூறும் இந்த நான்கு பிரிவுகளும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டனவே அல்லாது வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல” என்று வாதிடுகின்றனர்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியலில்,

“அறுவகைப் பட்ட பார்ப்பனர் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் ”

(74ம் சூத்திரம்)

என வரும் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த இளம்பூரணர் கருத்தினை ஈண்டு காண்போம்.

அறுவகைபட்ட பார்ப்பனர் பக்கம் : அவையாவன : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.

ஐவகை மரபின் அரசர் பக்கம் : ஓதலும், வேட்டலும், ஈதலும், படை வழங்குதலும், குடி ஓம்புதலும் ஆகும்.

வணிகருக்குரிய அறு பக்கமாவன : ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வணிகம், நிரை யோம்பல்

வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்கமாவக : உழவு, உழவு ஒழிந்த மற்ற தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தரல், ஏனைய மூவர் வழிபாடு வேதம் ஒழிந்த கல்வி

என்று கூறியுள்ளார்.

பார்ப்பன உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்பதற்கு ஓதலும், வேட்டலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வணிகப் பக்கமும் என்றும் வேதம் ஒழிந்த ஓதலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும், வழிபாடும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வேளாளர் பக்கமும் என்றும் கூறுகின்றனர்.

இதிலிருந்து, நான்காம் வருணத்தனாகிய சூத்திரனுடைய தொழில் பார்ப்பானுக்குத் தொண்டூழியம் செய்வது என்பதைத் தான் உரையாசிரியர்கள் வழிபாடு என்ற பெயரில் குறிப்பிடு கின்றார்கள் என்பதையும், சூத்திரன் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று மனு நீதி கூறுவது போலவே இவர்கள் நான்காம் பிரிவினரான வேளாளன் வேதம் ஒழிந்த கல்வியைத்தான் கற்க அருகதை உடையவர் என்று கூறவதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

பண்டிதர்கள் கூறலாம் உரையாசிரியர்கள் செய்த குற்றத்திற்கு நாம் எப்படி தொல்காப்பியத்தையே குறை கூறுவது என்று!

“ மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே ”

என்ற சூத்திரத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கும் உரியகாரணம் (சடங்குகள்) கீழோர்களாகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் இருந்தது என்று குறிக்கின்றார்.

இது மட்டும் அல்ல : தொல்காப்பியத்தில் சிறு தெய்வ வணக்கங்கள், யூபம் நட்ட வேள்வி, அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை போன்ற ஆரியக் கருத்துக்கள் மலிந்துள்ளதை வேறு தனிக் கட்டுரையில் காண்போம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலமாகிய கடைச் சங்க காலத்திலும், இந்த வர்ணாசிரமக் கொள்கை தமிழகத்தில் நன்கு வேர் ஊன்றி இருந்திருக்கின்றது. அவன் பாடிய புறநானூற்றுப் பாடலிலே,

“ வேற்றுமை தெரிந்த நாற்

பாலுள்ளும்      

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவன்

அவன்  கட்படுமே”

எனக்குறிப்பிட்டுள்ளான். மேலும் கபிலர் போன்ற பார்ப்பனப் புலவர்கள்,

“ யானோ மன்னும் அந்தணன் ” என்று இறுமாப்புடன் கூறிக்கொள்கின்றனர்.

சங்க காலத்தில் இறுதியில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அடுத்த படியாக நோக்குவோம்.

கோவலன், கண்ணகியையும் கவுந்தி அடிகளையும் புறஞ்சேரியில் வைத்துவிட்டுத் தான்மட்டும் மதுரை நகர் வீதிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்து திரும்புவதைக் கூறும் ஊர்காண் காதையில், மதுரை வீதிகளில் விற்கப்படும் ஒன்பது வகை மணிகளைப் பற்றிக் கூறும் பகுதியில் இளங்கோவடிகள் ஒன்பது வகை மணிகளில் ஒன்றான வைரத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிள்றார்.

“ காக பாதமும் களங்கமும் விந்துவும்

 ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா

 நூலவர் நொடிந்த நுழை நுண்கொடி

 நுால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ”  

இதற்கு உரை எழுத வந்த உரையாசிரியர்கள் எல்லாம் நால்வகை வருணத்து ஒளியினைக் குறிக்க

“ அந்தணன் வெள்ளை அரசன் சிவப்பு

 வந்த வைசியன் பச்சை சூத்திரன்

 அந்தமில் கருமை என்றறைந்தனர் புலவர் ”

எனவரும் பரஞ்சோதி முனவரின் திருவிளையாடற்புராணத்துத் திருவாலவாய்ப் படலத்தின் (25) செய்யுளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்துடன் மட்டும் விட்டர்களா? இல்லை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இந்நான்கு வருணத்தாரும் தத்தமது வருணத்திற்கு உரிய மணிகளையே அணிய வேண்டும்; அப்படி அணிந்தால்தான் பலவித நன்மைகள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

அந்தணர்க்கு ஒப்பான வெள்ளை நிறம் உள்ள வைரத்தை அணிவோர் ஏழ் பிறப்பும் அந்தணராகவே பிறப்பார்களாம்.

“ மறையோர் அணியின் மறையோராகிப்

   பிறப்பேழும் பிறந்து வாழகுவரே ” என்றும்

மன்னர்க்கு ஒப்பாகக் கூறப்படும் சிவப்புநிற வைரத்தை அணிந்தால் அரசர்களுக்கெல்லாம் பேரரசனாக ஏழு பிறப்பும் பிறப்பான்.  

“ மன்னவ ரணியின் மன்னவர் சூழ  

   இந் நில வேந்தவராவர் எழு பிறப்பும் ”  என்றும்

வணிகர்க்கு ஒப்பாகக் கூறப்படும் பச்சை நிற வைரத்தை அணிந்தவர் சிறந்த செல்வராக உலகினில் வாழ்வர்.

“ வணிகர் அணியின் மனிப்பொன் மலிந்து  

  தணி வற வடைந்து தரணியில் வாழ்வர் ”  என்றும்

சூத்திரர்க்கு ஒப்பாகக் கூறப்படும் கறுப்புநிற வைரத்தை அணிந்தால் சிறந்த மனைவி,பொன், நெல், நல்வாழ்வு முதலியன பெற்று இவ்வுலகின்கண் நீடு வாழ்வர்.  

“ சூத்திரர் அணியின் தோகையர் கனக நெல்

   வாய்ப்ப மன்றி மகிழந்து வாழ்கு வரே ”  

என்றும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சிலப்பதிகாரம் அழற்பட்டு காதையில் மதுரை மாநகரில் அந்தணர், சாதிப்பூதம், அரசர் சாதிப் பூதம், வணிகர் சாதிப்பூதம், வேளாளர் சாதிப்பூதம், என்பதாக நான்கு பூதங்கள் இருந்தனவாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அந்தணப் பூதமாவது: பசுமையான முத்துவடம் அணிந்த நிலவு போல் விளங்கும். மிக்க ஒளியினை யுடைய நான்குமுகன் யாகத்திற்கென உரைத்த வகுப்புகளோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய அந்தணக் கடவுளும்,

“ நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி

  முத்தீ வாழக்கை முறைமையின் வழா அ

    வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் ” என்றும்

அரச பூதத்தை: செவ்விய ஒளியினையுடைய பவளம் போலத் திகழ்கின்ற ஒளியினைப் பொருந்திய மேனியை உடையனாய், ஆழந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரசமும், வெண் கொற்றக் குடையும், கவரியும், கொடியும், புகழமைந்த தோட்டியும், வடித்த வேலும், வடிகயிறும் எனப்படும் இயைபினனாய் அளிவிடற்கரிய சிறப்புக்களையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து இந்நிலத்தை தனதாக்கிக்கொண்டு செங்கோலோச்சிக் கொடிய செயல்களை நீக்கி நீதியினை மேற்கொண்டு தன்பெயரை நிறுத்துதற்குரிய புகழினை மிகுந்து உலகின்கண் காக்கின்ற உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் எனும் பாண்டியனை ஒத்த அதிக வரியினையுடைய அரச பூதமாகிய கடவுளும்

“ பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்

ஆழக்கடல் ஞாலமாள் வோன் தன்னின்

முரைசோடு வெண்குடை கவரி நெடுங்கொடி

உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு

என இவைபிடித்த கையினன் ஆகி

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி

மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக்

கொடுந் தொழில் கடிந்து கொற்றங் கொண்டு

நெடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்

உரைசால் சிறப்பின் நெடி யோன் அன்ன

அரச பூதத்து அருந்திறற் கடவுளும்  ” என்றும்

வணிக பூதத்தை: சிவந்த நிறமுடைய பொன்னை ஒத்த மேனியையுடையனாய் நிலை பொருந்திய சிறப்பினையும் மறம் பொந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமையமைந்த முடிதவிர மற்றையன பூண்ட கலன்களையுடையனாய், வாணிகம் செய்யும் முறையானே பெரிய உலகினை காத்துக் கலப்பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினையுடையனாய் உழவுத் தொழிலானே உலகுக் குதவும் குற்றமற்ற வாழக்கைக்குரியோன் எனப்படுவோனாகிய விளங்கும் ஒளியினையுடைய தலை மீது குழவித்திங்களையணிந்த இறைவனது திருவடி போலும் ஒளிமிளிரும் மிகப்பெரிய  வணிக பூதமாகிய கடவுளும்,

“ செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமதந்த பூணினன்

வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்

உழவுத் தொழிலுதவும் பழுதில் வாழக்கைக்

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியன்

இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர்

விளங் கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்” எனவும்

வேளாள பூதத்தை: கழுவப்பட்ட நீலமணி போன்ற மேனியனாய் ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்ந உடையினனாய் , உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்திப் புலவர் பாடுதற் கேற்ற ஈகைத்துறை பலவற்றிலும் முடியச் சென்ற ஆரவாரம் மிக்க கூடற்கண்ணே (மதுரையின் கண்) பலியினைப் பெறும் பூத்த தலைவனென்னும் வேளாண் பூதமும்,

“ மண்ணுற திருமேணி புரையும் மேனியன்

ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்

ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்

பாடற் கமைந்த பலதுறை போகிப்  

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்  

தலை னென்போன் தானுந் தோன்றி ”

என்றும் கூறியுள்ளார்.

சீவக சிந்தாமணியின் நான்கு வருணப் பாம்புகள்:

கி.பி 9ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சிந்தாமணியில் பாம்புகளில் கூட நால்வகை வருணங்கள் உண்டென்று கூறப்பட்டுள்ளது. இந்நூலில் சூத்திரர் என்ற சொல்லே வெளிப்படையாக எடுத்தாளப்பட்டிருக்கின்றது.

“ அந்தணண் நாறும் ஆண்பா

லவியினை அலர்ந்த காலை

நந்தியா வட்டம் நாறும்

நகைமுடி அரசனாயின்

தந்துயா முரைப்பிற் றாழைத்

தடமலர் வணிகன் நாறும்

பந்தியாப் பழுப்பு நாறின்

சூத்திரன் பால தென்றான் ”

(பதுமையார் அலம்பகம் 1294-ம் செய்யுள்)

இதன் பொருள்: பாம்பு கடித்த இடத்தில் பசுவின் பாலின் ஆவியின் வாடை நாறினால் அது பார்ப்பனச்சாதிப் பாம்பாகும். நந்தியா வட்டச் செடி மலர்ந்த காலத்தில் நாறும் மணத்தினை வீசுமாயின் அது அரசசாதிப் பாம்பாகும். தாழைமலர் மணம் நாறுமாயின் அது வணிக சாதிப் பாம்பாகும். மற்றொன்றும் கூறாத அரிதாரம் நாறுமானால் அது சூத்திரச் சாதிப் பாம்பாகும் என்று கூறியுள்ளது.

வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்) கூறும் வர்ணாசிரமம்  

உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், வல்லெழுத்துக்கள் ஆறும் பார்ப்பன வருணம் என்றும்; த, ந, ய, ர, ப, ம இவ்வாறு மெய்யும் அரச வருணம் என்றும்;  ல, வ, ற, ன இந்நான்கும் வணிக வருணம் என்றும்; தமிழுக்கே சிறப்பெழுத்துக்கள் எனப்பெருமையாகக் கூறப்படும் ழ, ள இவ்விரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நான் முன்பு திருவிளையாடற் புராணத்தில் பார்ப்பான் நிறம் வெண்மை, அரசன் - செம்மை, வணிகன் - பச்சை, சூத்திரன் -கறுப்பு என்று கூறியிருப்பதாகக் கூறினோம். அதுபோலவே இந்நூலிலும் பாக்களுக்கு கூட நிறம் கூறப்பட்டுள்ளது.

வெண்பா - வெண்மை,  ஆசிரியப்பா - செம்மை,  கலிப்பா- பொன்மை, வஞ்சிப்பா - கருமை  

என்று கூறுகின்றது. மேலும் வெண்பா - பிராமண குலமென்றும், ஆசிரியப்பா - சத்திரிய குலமென்றும், கலிப்பா - வைசிய குலமென்றும், வஞ்சிப்பா - சூத்திர குலமென்றும் குலப் பொருத்தங்கள் கூறுகின்றது. அத்துடன் விட்டதா? இல்லை. வெண்பாவால் அந்தணனைப் பாடவேண்டுமாம். ஆசிரியப் பாவால் அரசனைப் பாடவேண்டுமாம். கலிப்பாவால் வைசியனைப் பாடவேண்டுமாம். வஞ்சிப்பாவால் சூத்திரனைப் பாடவேண்டுமாம்.

கலம்பகம் பாடவும் நிபந்தனை:

ஒருவன் கலம்பகம் என்ற நூல் செய்ய விரும்பினால் தேவருக்கு நூறு பாட்டும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்து  பாட்டும்,  அரசர்களுக்குத் தொண்ணூறு பாட்டும், அமைச்சருக்கு எழுபது பாட்டும், வணிகருக்கு ஐம்பதும், சூத்திரனுக்கு முப்பதுமாக பாட வேண்டுமாம். என்னே இக்கால வர்ணா சிரமத்தின் கொடுமை !          

சங்க இலக்கியங்களில் பார்ப்பனரும், வேத வேள்விகளும்

சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் பார்ப்பனர்களைப் பற்றிய செய்திகள் வந்துள்ளனவற்றைக் காண்போம்.

சங்ககாலம் எனப்படுவது இன்றைக்கு சற்றேறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். .இந்தக் காலப்பகுதிகளில் எழுந்த இலக்கியங்களில் எல்லாம் ஆரியர்களின் வடமொழி வேத வேள்விகள், வைதீகநெறிகள், பண்பாடுகள் இன்ன பிறவும் காணப்படுகின்றன.

வேத வேள்விகள்

வடநூல்களில் கூறப்பட்ட வேதமுறைப்படியே தமிழக மன்னர்கள் வேள்விகள் இயற்றியிருக் கின்றனர்.ஒரு பாண்டிய மன்னன் வடநூல் முறைப்படிப் பலயாகங்கள் இயற்றியமையின் காரணமாக பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான்.  மற்றும் ஒரு சோழமன்னன் இராஜசூய யாகம் செய்து அதன் காரணமாக இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றுள்ளான்.

பண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியானவன் வேதநெறிப்படி யாகங்கள் பல நடத்தியவன். பொரி, சமித்து முதலியவற்றில் நெய்யைச் சொரிந்து வேள்விகள் இயற்றிய யூபஸ்தம்பம் ( யாக ஸ்தம்பம்) பல நட்டுள்ளான். இவனை நெட்டிமையார் என்னும் புலவர் பாடிய 15-ம் புறநானூற்றுப் பாடலில் இச்செயதி தெளிவாக குறிக்கப்படுகின்றது.

“ நற்பனுவ னால் வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப்பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி

யூபம் நட்டவியன்களம் பலகொல் ”

இந்த யூபஸ்தம்பம் நடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் புகுந்துவிட்டது. தொல்காப்பியர் சூத்திரத்திலேயே “ யூபம் நட்டவியன் வேள்வி ” என்று வருகின்றது.

யாக சாலையின் அமைப்பானது வட்ட வடிவு உடையதாகவும் பல மதில்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். அதன் நடுவில் பருந்து விழுங்குவது போன்று செய்யப்பட்ட இடத்தில் யூப ஸ்தம்பம் நட வேண்டும்.

இப்படிப் பருந்து வடிவமாகச் செய்யப்படுவதற்குக் கருட சயனம் என்று கூறுவர் வடநூலார். கரிகாற்பெருவளத்தான் இறந்துபடவே கையறு நிலையால் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடிய 224-ம் புறப்பாட்டில் இச்செய்தி காணப்படுகிறது.

“ பருதி யுருவில் பல்படைப் புரிசை  

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் ”

பா: 224: 7 - 9.

இப்படி யூபஸ்தம்பம் நட்டு வேள்வி செய்யும் செய்தி சோழன் நலங்கிள்ளியைப் போற்றி கோவூர்க்கிழார் பாடிய 400-ம் புறப்பபாட்டில் வந்துள்ளது.

“ வேள்வி தலிந்த வேள்வித் தூணத்

திருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் ”

பா: 400: 19, 20.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் “பாப்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் ஆறங்கள் களாலும் உணரப்பட்ட வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோர்களாகிய புறச்சமயத் தார் (புத்தர், சமணர்) களின் மிகுதியை வீழ்த்தவேண்டியும், அவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்காமல் இருக்கவும் செய்ய இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறைவின்றிச் செய்து முடித்தவர்களின் மரபில் வந்தவன் என்று கூறப்படுகின்றான்.

“ ஆறுணர்ந்த ஒருமுது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீ இ

மூவேழ் துறையும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக ”   

புறம் 166, 4. 9

இதில் கூறப்படும் ஆறங்கங்கள் வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சிட்சை, கற்பக மென்னும் வடமொழி ஆறங்கங்களேயாகும். 21 வேள்விகள் என்ன என்றால், இந்த யாக நூல்கள் உணர்த்தும் சோம யக்ஞம் ஏழு, ஹவிர் யக்ஞம் ஏழு, பாக யக்ஞம் ஏழு ஆக இருபத்து ஒன்றாகும். (யக்ஞம் என்றால் யாகம் ஆகும்)

“ புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவற்பூண்ஞான் மிசைப் பொலிய

மருங்கடித்த அருங்கற்பின்

அறம் புகழ்நத வலை சூடிச்  

சிறு நுதற்பே ரகலல் குற்  

சில சொல்லிற் பல கூந்தனின்

நிலைக் கொத்தநின்  றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில்  ”   

புறம் 166, 11, 18

மற்றும் பார்ப்பனர்கள் வடநூல்கள் கூறும் ஆகவனியம், காருகபத்தியம், தென்றிசையங்கி என்னும் முத்தீக்களை வளர்த்த வேள்விகள்.  அந்திக் காலங்களில் செய்யப்படும் கடன்கள் செய்தல் ஆகிய செய்திகள் சங்க நூல்களில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன.

அந்தி அந்தணரருங்கடனிறுக்கும் முத்தீ - புறம் 2; 22 - 23

ஒன்று புரிந் தடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரைய - புறம் 367: 12-13

மூன்று வகைக் குறித்த முத்தீச்செல்வத் திருபிறப்பாளர் - திருமுருகாற்றுப்படை  181-182

அறம்புரி அருமறை நவின்ற நாவின்

திறம்புரி கொள்கை அந்தணர் - அய்ங்குநூறு 387

கேள்வி அந்தணர் கடவும்

வேள்வி ஆவயின் உயிர்க்கும் என்நெஞ்செ - கலி 36

அந்தி அந்தணர் எதிர்கொள் - கலி 119

ஒதுடை அந்தணன் எரிவலம் செய்வான் போல - கலி 69

விரிநூல் அந்தணன் விழவு தொடங்கிய

புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப - பரிபாடல் 11

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒருபெயர் அந்தணர் - பரி : 14

ஒருமுகம்

மந்திரவிதியின் மரபுளிவழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே   - திருமுறுகாற்றுப்படை 94 -96

பார்ப்பனர்களுக்கு பொன் பொருள் தாரை வார்த்து அளித்தல்

தாரைவார்த்தல், தாராமுகூர்த்தம் என்பனவல்லாம் வடநூல் முறைமைகளேயாகும். ஆனால் பண்டைக் காலத்து மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னும் பொருளும் வடநூல் முறைமைப்படித் தாரை வார்த்து அளித்திருக்கின்றனர்.

“ ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”

புறம் 367 : 4-5

“ கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு

அருங்கலம் நீரொடு சிதறி ”

புறம் 361 : 4-5

எனக் கூறப்பட்டுள்ளன. மற்றும் அரசன் பார்ப்பனனுக்கு நிலமும் பசுவும் அளித்தல் பதிற்றுப் பத்து (பா 6: 45) போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது.

இப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைத் தம்வயப்படுத்திக் கொண்டு அவர்கள் மனங்குளிரும் படிப் புகழ்ந்து பொன்னும் பொருளும் பெற்றதோடு மேல்நிலையும் அடைந்து வாழ்ந்திருக்கின்றனர்.

மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வருத்தம் தரும்படியான செயலைச் செய்ய அஞ்சியிருக்கின்றனர்.

‘ ஆர்புனை தெரியல் நின்முன்னோ ரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் ’     

புறம் 43: 13-14

‘ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருத் சிதைத்தோருக்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள ’

புறம் கா 34

இப்புறப்பாடலில் ஆண்முலை அறுத்தல், மகளிர் கருச்சித்ைதல் போன்றே பாப்பனர்க்குத் துன்பம் விளைவிப்பதும் கொடிய குற்றம் என்ற எண்ணத்தை சங்க காலத்தில் வேரூன்றச் செய்து விட்டனர்.

மன்னன் வேற்று நாட்டுமீது படை எடுத்துச் செல்லுங்கால் முதலாவதாக பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளிகள், பிள்ளை இல்லாதவர்கள் ஆகியவர்களை போருக்கு முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுவிடும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் இவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளன. இங்கும் பார்ப்பனர்களுக்கு நோவன செய்யலாகாது என்ற கருத்தை அரணாக அமைத்துக் கொண்டனர்.

ஆவும் ஆன் இயல் பார்ப்பன

மாக்களும்

பெண்டிரும் பிணி

யுடையீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு

அரும் கடன் இறுக்கும்

பொன் போல் புதல்வர்ப

பெறா அதீரும்

எம் அம்பு கஎவிடுதும் நும்

அரண்சேர்மின்

புறம்: பா. 9

இப்பாடல் வடநூல்படி யாகம் பல செய்தவனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டியமையார் என்னும் புலவர் பாடியதாகும்.

பண்டைக்காலத்திலேயே பாப்பனர்கள் மக்களோடு கலந்து பழகாமல் தனித்து இருந்து ஆச்சார அனுஷ்டானங்களைக் கையாண்டு ஒழுகி வந்திருக்கின்றனர். இச்செய்தி பரிபாடல் பாட்டு ஒன்றால் உணரக் கிடக்கின்றது.

வைகையாற்றில் தண்ணீருடன் ஈக்கள் மொய்க்கும்படியான மது கலந்து வருகின்றது என்றும் ஆற்றில் ஆடவர்களும் பெண்டிர்களும் நீராடுங்கால் அவர்கள் மீது பூசியுள்ள மணப் பொடிகள் எல்லாம் ஆற்றில் அடித்து வரப்படுகின்றன என்றும் எண்ணி, பார்ப்பனர்கள் வைகையாற்றில் குளிப்பதை யொழித்தனர். மேலும் வைகையாற்றுத் தண்ணீரில் தேன் கலந்து வருவதாகவும் அது வழுவழுப்புற்றது என்றும் எண்ணிப் பார்ப்பனர்கள் அதில் வாய்கூடக் கழுவுவதில்லையாம்.

“ ஈப்பாயக் அடுநறாக் கொண்டது இவ்யாறு எனப்

பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று

அந்தணர் தோயலர் ஆறு

வையை தேம்வேவ வழுப்புற்றென

அய்யர் வாய்பூசுறார் ஆறு.  

பரிபாடல் திரட்டு 2 : 58,63

இச்செய்திகள் ஒருக்கால் கற்பனையாகவும் இருக்கக்கூடும் என்றாலும் அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் வைதீக ஆசாரம் உடைய மனப்பான்மையினராக வாழ்ந்திருந்தனர் என்பதை இவ்வடிகள் காட்டுகின்றன அல்லவா?

பார்ப்பனர்கள் தங்கள் சாதி உயர்வைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றே அணிந்து கொள்ளும் சாதிக்குறியாகிய பூணூலைச் சங்ககாலத்தில் கூட அணிந்துகொண்டு பெருமை பாராட்டி இருந்திருக் கின்றனர். பார்ப்பனர்கள் உபநயனத்துக்கு முன் அதாவது பூணூல் தரித்துக் கொள்வதற்கு முன் ஒரு பிறப்பும் உபநயனத்திற்குப் பிறகு ஒரு பிறப்புமாக இருபிறப்பினை உடையவர்கள் என்று வடநூல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் தங்களை இருபிறப்பாளர்கள் என்று இன்றும் பெருமை யாகக் கூறிக்கொள்வதைக் காண்கிறோம். உபநயனுத்துக்கு முன் பார்ப்பான் பார்ப்பனத்தன்மை உடையவன் ஆகமாட்டான் என்றும், உபநயனத்துக்குப் பின்பே அவன் பார்ப்பனத்தன்மை அடைகிறான் என்றும் இப்படி உபநயனக் காலத்திற்குப் பின்புதான் அவன் வேதமந்திரங்கள் ஜபிக்கவும் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு உரியவனாகவும் ஆகின்றான் என்றும் கூறப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கைள் சங்க காலத்திலேயே நன்கு வேரூன்றிவிட்டன என்று சொல்லாம்.

“ ஒன்று புரிந்தடங்கிய இருபிறப்பாளர் ”  

புறம் 367 : 12

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒரு பெயர் அந்தணர்

பரிபாடல் 14

இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல

திருமுருகு 182

என்று பார்ப்பனர்களின் இருபிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

மற்றும் பார்ப்பனர்கள்  சாதிக் குறியாகிய பூணூலைத் தோளில் அணிந்திருந்தார்கள் என்றும் அந்தப் பூணூல் ஒன்பது நூல்களால் மூன்று புரிகளாக ஆக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.

‘ ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் ’

திருமுருகு : 183

‘ புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப ’

பரிபாடல் 11

இதுவரை மேலே எடுத்துக் காட்டிய செய்திகளால் சங்க காலத்திலேயே தமிழர்களுக்குப் புறம்பான பார்ப்பனரும் அவர்தம் வேத வேள்விகளும் மற்ற பண்பாடுகளும் புகுந்துவிட்டன என்பதை ஓரளவுக்குக் கண்டோம். அடுத்த கட்டுரையில் சங்க இலக்கியங்களில் புராணக்கதைகள் என்ற தலைப்பில் ஓர் பகுதி காண்போம். இந்தக் கட்டுரைகளின் கருத்தே பார்ப்பனர் வேறு, நாம் வேறு, நம் பண்பாடு வேறு என்பவற்றை தெளிவுபடுத்தவது என்பதே ஆகும்.

‘உண்மை’  14.02.1970, 14.03.1970, - தொடரும்

 

Pin It