பெரியார் கன்னடர் (தமிழர் அல்லாதவர்) என்றும், அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்கள்.
பெரியார் தனது 95 வயது வரையிலும் சமூக சமத்துவத்திற்காகவே தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பேசினார்; போராடினார். சமூகத்தில் நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் நேரடியாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி சாடினார் பெரியார். பெரியாரின் 60 ஆண்டுகால சமூகப் பணியின் முக்கிய கூறுகளாக பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுக்கலாம்.
அவர் ஓர் ஆணாக இருந்தபோதும், அக்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் சிந்திக்காத, பேசாத அளவிற்கு அதிகமாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். அவரது 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் இன்றளவிலும் பெண்ணிய சிந்தனைகளுக்கு ஓர் அடிப்படை ஆவணமாக திகழ்கிறது. அக்காலத்தில் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களான கணவனை இழந்தவர்கள், 'தாசிகள் என்று தங்களை கருதிக் கொள்பவர்கள்' போன்றவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கவும் அவர்களும் சமூகத்தில் இயல்பாக வாழவுமான தன்னம்பிக்கையை அளிப்பதற்காக அவர் தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொண்டார். இன்று இந்தியச் சூழலில் பேசப்படுகிற பெண்ணிய கருத்துக்களுக்கு முன்னோடி பெரியார் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண் விடுதலைக்காக அவர் ஆற்றி வந்த பணிகளுக்காக பெண்கள் திரண்டு அவருக்கு சூட்டிய பெயர்தான் 'பெரியார்'. பெண் விடுதலைக்கான கருத்துக்களை பெண்கள்தான் பேச வேண்டும், பேச முடியும் என்பது உண்மையே. ஆனால் நேர்மையாக பெண்களின் சிக்கல்களைப் புரிந்து அவர்கள் விடுதலை பெறத் தேவையான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக பெரியாரின் கருத்துக்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின் அதனால் இழப்பு பெண்களுக்கே.
சாதியின் பெயரால் சமூகத்தில் இழிநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவைப் போக்கி, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க சாதி ஒழிப்பே முதன்மையான வழி என வரையறுத்தவர் பெரியார். இந்து மத ஒழிப்பு என்பது, அது கட்டமைத்திருக்கும் சாதியை ஒழிப்பதும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள படிநிலை சமூகத்தைத் தகர்த்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவதுமே. இந்து மதமும் சாதியும் ஒழிந்தால் மட்டுமே தமிழ்ச் சமூகம் சமத்துவ சமூகமாக மலரும் என்பதை அவர் உறுதிபடக் கூறினார். அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வலியுறுத்திய கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற அனைத்தும் அடிப்படையில் சாதி ஒழிப்பையும் மதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் விடிவையும் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. மூட நம்பிக்கைகளிலேயே பெரும் மூட நம்பிக்கையாக அவர் சாதியைப் பார்த்தார்.
சமூகத்தின் வளங்களைச் சுரண்டி கொழிக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களுக்குரிய பங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற சாதி ஒழிப்பே சரியான வழி எனக் கூறினார். ஆதிக்க சாதியினர் ஒரு போதும் சாதி ஒழிப்பை விரும்பியதில்லை. இந்து மதம் காப்பாற்றப் படுவது என்பது ஆதிக்க சாதியினரின் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் வலுப்படுத்துவதும் ஆகும். ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படும் ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருந்தவர்களுக்கு இழப்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவும் ஏற்படும் என்பது நியதி. ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்திருந்த போதும் பெரியார் சாதி ஒழிப்பையே முதன்மைப்படுத்தினார். அவர் ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற காரணத்தைக் கூறி அவரது சாதி ஒழிப்புக் கருத்துக்களை புறந்தள்ளுவது சமூக இழப்பையே ஏற்படுத்தும்.
அதைப் போலவே, பெரியாரின் தாய் மொழி, சரியாகச் சொல்வதென்றால் அவரது முன்னோர்களின் தாய்மொழி தமிழாக இல்லாதபோதும், அவர் தனது வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காகவே உழைத்ததோடு, தமிழராகவே வாழ்ந்தார். தனது செயற்களமாக தமிழ்ப் பேசும் பகுதிகளையே கொண்டும் இருந்தார். பார்ப்பன பனியா ஆதிக்கத்திலிருந்த இந்திய தேசியத்தின் கீழ் தமிழர்களுக்கு விடிவில்லை என்பதோடு, சாதி ஒழிப்பிற்கும் சமத்துவ சமூகத்திற்கும் அது தடையும் கூட என்பதை உணர்ந்திருந்த அவர், அதிலிருந்து தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து முதன் முதலில் பேசியவர் பெரியாரே. 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முதன் முதலில் முன் வைத்தவரும் அதற்காக போராட்டங்கள் நடத்தியவரும் பெரியாரே. அக்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய பல தலைவர்களும் சாதிக்குள்ளோ அல்லது இந்திய தேசியத்தைத் தாண்டாமலோ பேசியபோது இந்திய தேசியத்திலிருந்து வேறான, சாதி ஒழிந்த, சமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்குமான சமத்துவமான தமிழ்த் தேசியத்தை பேசியவர் பெரியார் மட்டுமே.
எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் மீண்டும் ஓர் ஆதிக்கத்தை நோக்கியதாக இருக்குமாயின் அந்த விடுதலைப் போராட்டத்தில் பொருளே இல்லை. அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஆதிக்கங்களையும் களைந்ததான விடுதலை மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். அதனால்தான் சாதிய ஒடுக்குமுறைகள் நீடிக்கும் நிலையில் இந்திய விடுதலை வெறுமனே ஓர் அதிகார மாற்றமே என்று கூறினார் பெரியார். அதைப் போலவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், வர்க்க ஆதிக்கம் ஆகியவற்றையும் நீக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலை நிலைத்திருக்க முடியும் என்பதை வலியுறுத்தியவர் பெரியார்.
பெரியாரின் இந்த பணிகள் அனைத்தும் சமூக மேம்பாட்டிற்கானதே அன்றி அவரது சொந்த நலன்களுக்கானது அல்ல. அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்: "ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்." - நான் யார் - 1973
நாம் அவரை 'தமிழர் தலைவராக' ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போராடவில்லை. மக்கள் மீது, மானுடத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு மானுடத்தின் மேம்பாட்டிற்காக தனக்கு சரியெனப் பட்டவற்றிற்காக போராடினாரே ஒழிய யாருடைய பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அல்ல. எங்கோ மாடு மேய்த்துக் கொண்டும், களைப் பறித்துக் கொண்டும், கல்லை வணங்கிக் கொண்டும் இருந்திருக்க வேண்டிய நாம் இன்று மானமும் அறிவும் உள்ள மக்களாக, கற்றறிந்தவர்களாக இப்படி வாதிட்டுக் கொண்டு இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் அவர்.
ஓடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்குமான அவரது கருத்துக்களையும் பணிகளையும் அவரையும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கே. ஏற்றுக் கொண்டவர்கள் பயனடைவார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நட்டமடைவார்கள். உண்மையில் - பெரியார் ஒரு ஆண், ஆதிக்க சாதியாளர், கன்னடர் - இப்படியான தரமற்ற அடிப்படையற்ற வாதங்களை முன் வைப்பவர்கள் தங்கள் அறியாமையையே வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
சொல்லப் போனால், இப்படியான பொருத்தமற்றக் காரணங்களைக் கூறி பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்களின் வறட்டு கெளரவத்திற்கும், வீம்பிற்கும் பலியாகப் போவது தமிழர்களின் நலனே அன்றி பெரியாரின் பெருமை அல்ல.
- பூங்குழலி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன?
- விவரங்கள்
- பூங்குழலி
- பிரிவு: சிறப்புக் கட்டுரை