ambedkharr 450இராமனுடைய பிறப்பே அதிசயமாக உள்ளது. சிருங்க முனிவரும் கெளசல்யாவும் கணவன், மனைவி என்ற உறவு கொண்டிருக்க வில்லையாயினும் இந்த முனிவன் மூலம் தான் கெளசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் எனத் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மையை மூடி மறைப்பதற்காகவே சிருங்க முனிவன் பிடித்துக் கொடுத்த பிண்டத்தின் மூலம் கெளசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப் பட்டிருக்கலாம். இராமனுடைய பிறப்பில் களங்கம் எதுவுமில்லை என்று வாதிக்கப்பட்ட போதிலும், அவனது தோற்றம் இயற்கைக்கு முரணானது என்பது உறுதியாகின்றது.

இராமனுடைய பிறப்புத் தொடர்பான மறுக்க முடியாத அருவெறுப்பான வேறு பல நிகழ்ச்சிகளும் உள்ளன.

இராமாயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவ தரித்ததாக வால்மீகி கூறுகிறார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்க விருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக் கூடிய வல்லமை மிக்க துணைவர் கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.

இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமின்றி யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமின்றி முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்கு துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்.

இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக்கேடானது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக் குரியது. இராமன், சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பெளத்தர் களின் இராமயணத்தின்படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்கு பிறந்த மக்கள். பெளத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை.

வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்கு பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகை யிலேயே சீதை ஜனகனுக்கு மகளா னாள் என்றும் கூறப்பட்டிருப் பதால் வால்மீகி இராமா யணத்தின் படியே கூட சீதை, ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகிறது. எனவே பெளத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது.

அண்ணன் தங்கை உறவு டைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது.

இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்....

இனி இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தை காண்போம்

சுக்ரீவனும், அனுமானும் இராமனுக்காக திரட்டிய (வானர) சேனையோடு இலங்கை மீது இராமன் படையெடுக்கிறான். அப்போதும் வாலி-சுக்ரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக் கேவலமான வழிமுறையைத் தான் இராமன் கையாளுகிறான். பேரரசன் இராவணனையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணனுடைய தம்பி விபீஷணனை அரியணை ஏற்றுவதாய்ச் சொல்லி விபீஷ்ணனின் உதவியைப் பெறுகிறான். அதன்படி இராவண னையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகின்றான்.

போர் ஓய்ந்தபின் இராமன் செய்கிற முதற் காரியம் பேரரசன் இராவணனின் உடலை நல்லடக்கம் செய்வது தான். அதன் பின்னர் இராமனின் நோக்கமெல்லாம் விபீஷணனை அரியணையிலேற்று வதிலேயே இருந்தது. ஆட்சி அரங்கேறிய பின், தானும் இலட்சுமணன் சுக்ரீவன் ஆகியோரும் சுக மகிழ்வோடு இருப்பதாகவும் இராவணன் கொல்லப்பட்ட சேதியையும் அனுமான் மூலம் சீதைக்கு அனுப்புகிறான்.

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்ய வில்லை. சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்ப தாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டுபோய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன? மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23)

“உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற் கொள்ளவில்லை.”

இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ் செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக் கிறேன். இராவணன் உன்னைக்களங்கப் படுத்திருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”

இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தன மானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன்களங்கப் படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை-சிறைப் பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி- அதன் அடிப் படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-“நானே தற் கொலைச் செய்து என்னை மாய்த்துக் கொண்டி ருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.  இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.

தோழர் அம்பேத்கர் எழுதிய ‘இராமன் - கிருஷ்ணன்: ஒரு புதிர்’ நூலில் இருந்து

Pin It