இந்திய துணைக்கண்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் தொடங்க முயற்சிக்கப்பட்டது. 1920ல் அக். -17ல் சோவியத் நாட்டில் தாஷ்கண்ட் நகரில் “இந்திய கம்யூனிஸ்டு கட்சி” என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. எம்.என்.ராய் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவாக இருந்தது. முகமது ஷாபிக் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்குழுவிற்கு இந்தியாவின் விடுதலை இயக்கங்களுடனோ தொழிலாளர்&-விவசாயிகள் இயக்கத்துடனோ தொடர்பில்லாமல் இந்தியாவில் செயல்படவில்லை. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி இக்குழுவின் தொடக் கத்தையே இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடக்கமாக தீர்மானிக்கிறது

ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் பலகுழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. சென்னையில் சிங்காரவேலர் இந்துஸ்தான் தொழிலாளர்&விவசாயிகள் கட்சியை துவக்கி னார். இந்தியாவில் முதல் மே நாளும் சிங்கார வேலரால் 1923ல் சென்னையில் கொண்டாடப் பட்டது. பம்பாய், கல்கத்தா, லாகூர், கான்பூர் என்று பல இடங்களில் பல குழுக்கள் செயல்பட்டன.

1925 டிச. 25ல் கான்பூரில் நடந்த அமைப்பு மாநாட்டில் பலகுழுக்கள் கலந்துக் கொண்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.ஐ.) உருவாக்கப்பட்டது. சிங்கார வேலர் தலைவராகவும் எஸ்.வி. காட்டே செயலராகவும் இருந்தனர்.

இதையே பின்னர் 1959ஆம் ஆண்டில் இ.க.கட்சியின் செயற்குழுவானது கம்யூனிஸ்டு கட்சியின் துவக்கமாக அதிகாரபூர்வமாக வெளியிட்டது. தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த குழுக்கள் ஒருங்கிணைக்கப் பட்டதும், கட்சியாக ஒழுங்கமைக்கப்பட்டதும் அங்கீகரிப்பதற்கான காரணங்களாக சி.பி.ஐ -யால் முன்வைக்கப்பட்டது.

ஒரு பக்கம் தடை மறுபக்கம் சதி வழக்குகள், அடக்குமுறை என்று தொடர்ந்து கொண்டிருந்ததால் தொடர்ச்சியாக இதன் செயற்பாடுகள் தடைபட்டன. இருப்பினும் ஓரளவு தொடர்ச்சியாக தலைமை இயங்கியது. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை 1936-&38ம் ஆண்டுகளிலேயே கட்சி கட்டமைப்பு அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூன்றாம் கம்யூனிஸ்டு அகிலத்துடன் தொடர்பு கொண்டிருந்தது. கம்யூனிஸ்டு அகிலம் இந்தியக் கட்சிக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியது.

 அவையாவன.

 1. வெகுமக்கள் செல்வாக்கு பெற்று தேசிய இயக்கமாக உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து செயல்படுவது.

2.அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை கட்டுவது. காங்கிரஸ் கட்சியை இதில் செயல்பட வைப்பது.

3.தொழிலாளர்கள்&விவசாயிகளின் கூட்டை அடிப்படையாக கொண்ட வெகுமக்கள் கட்சி ஒன்றை கட்டுவது.

4.ஒருங்கிணைக்கப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவது போன்ற சில முக்கிய அம்சங்களை மூன்றாவது அகிலம் வழிகாட்டியது.

மேற்கண்டவற்றில்

1. காங்கிரசில் தொடர்ந்து செயல்பட்டனர்.

2. ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி கட்டப்படவில்லை.

3. பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், அய்க்கிய மாகாணங்களில் கட்டப்பட்டிருந்த தொழிலாளர்&-விவசாயிகள் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1928 டிசம்பரில் “முழுச் சுதந்திரம்”, “உழவனுக்கே நிலம் சொந்தம்”, “சைமன் கமிசனே! திரும்பிப் போ!” போன்ற முழக்கங்களுடன் அமைப்பு மாநாடு கல்கத்தாவில் நடந்தது. இதுவே அகில இந்திய தொழிலாளர்-&விவசாயிகள் கட்சியாக மாறியது.

ஆனால், அகிலம் தொழிலாளர்-விவசாயிகள் கட்சி நடைமுறையில் காங்கிரசுக்குள் இடது சாரி சக்தியாக இயங்குகிறதே தவிர தனியரு அரசியல் கட்சியாக செயல்படவில்லை என்று விமர்சித்தது.

1929 மார்ச்சில் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சியை தீவிரமாக கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

4.ஆனால், கம்யூனிஸ்டு கட்சியை ஒருங்கிணைத்து கட்டுவதில் திட்டவட்டமான செயல்பாடு இல்லை.

அதே சமயத்தில், காங்கிரசு -சோசலிஸ்டு கட்சியை சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து 1934ல் உருவாக்கினர். 1940ல் காங்கிரசு- சோசலிஸ்டு கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தென்னிந்தியாவில் இருந்த காங்கிரசு-சோசலிஸ்டு அமைப்புகள் கம்யூனிஸ்டு கட்சி கிளைகளாக மாற்றம் பெற்றன.

கம்யூனிஸ்டு கட்சியின் மீதான தடை நீங்கிய பிறகு அனைத்திந்திய முதல் பேராயம் (காங்கிரசு) 1943ல் நடைபெற்றது. இதன் பிறகு கட்சியின் கட்டமைப்பானது ஒழுங்குபடுத்தப் பட்டதாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் 1945 டிசம்பரில் அதன் நிர்வாகக் கமிட்டியால் வெளியேற்றப்பட்டனர். இதன் பிறகே கம்யூனிஸ்டுக் கட்சியின் செயல்பாடுகள் தனித்ததாக மாறியது. உலக அளவில் இட்லர் அணியை எதிர்த்து பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டப்பட்டது. இ.க.கட்சி இதை தவறாக புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தியது. பலவித தொழிலாளர் & -விவசாயிகள் போராட்டங்கள் நாடெங்கும் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போதிலும் இரண்டாம் உலக யுத்த காலக் கட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை கூர்மைப்படுத்தவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை காங்கிரசு கட்சி பயன்படுத்திக் கொண்டு கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகிகள் என்று குற்றஞ்சாட்டியது.

1946ல் நடந்த தேர்தலில் பங்கு பெற்றது. இரண்டு முக்கிய கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்தது. 1.வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை. 2.ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பரிபூரண சுதந்திரம் பெற்ற அரசியல் நிர்ணய சபை ஏற்பட வேண்டும் என்ற கொள்கைகளை முன்வைத்தது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சி தேசிய சுயநிர்ணய உரிமையையே முன்வைத்திருந்தது. ஆனால், பிளவிற்கு பின்னர் தேசிய இனச்சிக்கலில் மோசமான முதலாளித்துவ கண்ணோட்டத்தை கெண்டிருந்தது என்பதை பின்னர் பார்ப்போம்.

1947ல் கடும் போராட்ட அலைகளுக்கு பயந்து அதாவது தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்களின் போராட்ட எழுச்சியைக் கண்டு அஞ்சிய பிரிட்டிசார் இங்குள்ள பெரு முதலாளிகளிடம் அதிகாரத்தை சமாதான பூர்வமாக மாற்றித் தந்தனர்.

கருத்து வேறுபாடுகளும் பிளவும்

1946ல் இருந்த நேரு தலைமையிலான ஆட்சியே மீண்டும் தொடர்ந்தது. அன்றைய கம்யூனிஸ்டுக் கட்சியின் ஜோசி தலைமை நேரு அரசாங்கத்தை நிபந்தனையின்றி ஆதரித்தது. இதை அன்றைய கட்சி மையக்குழு கடுமையாக எதிர்த்தது.

இன்றைய கட்டத்தில் 1948- பிப்ரவரியில் இரண்டாவது அகில இந்திய பேராயம் நடைபெற்றது. பி.டி.ரணதிவே பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது பேராயம் முடிந்த உடனேயே கம்யூனிஸ்டுகள் மீது அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவியது. அறிவிக்கப்படாத தடை தொடர்ந்தது.

மேலும், புரட்சிக்கான கட்டம், புரட்சிக்கான பாதை பற்றி கட்சிக்குள் நெருக்கடிகள் உருவாயின. ஆந்திரத் தோழர்கள் “தெலங்கானா பாதையே” இந்திய புரட்சிக்கான பாதை என்று கூறினர். பி.டி. இரணதிவே இதை நிராகரித்து இரஷ்யப் பாதையை முன்வைத்தார். மக்கள் எழுச்சியை உருவாக்குவது என்பதே இதன் மையமான கருத்தாகும்.

பி.டி.ரணதிவே வழி ஏற்றுக் கொள்ளப் பட்டு இரயில்வே பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது. இது மாபெரும் தோல்வியில் முடிந்தது. கடும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பலர் கைது செய்யப் பட்டனர். கட்சியின் மையக்குழு உறுப்பினர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுக் கட்சி கடும் பின்னடைவுக்குள்ளானது.

கம்யூனிஸ்டுக் கட்சியானவை பலத்தை புரிந்து கொள்ளவில்லை. இரயில்வே தொழிலாளர் களுக்கான பொருளாதார போராட்டம் அதிகாரத்திற்கான கண்ணியாக தலைமையால் பார்க்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் இந்திய சமூகச் சூழல் புரிந்துக் கொள்ளப்படவில்லை. இதனால் பி.டி.ரணதிவேயின் இடது வழி தோல்வியைத் தழுவியது.

இதனால், தெலங்கானா தோழர்களின் அழுத்தம் முன்னுக்கு வந்தது. இவர்களுக்கு உதவிகரமாக தோழர்களின் சர்வதேசச் செய்திப் பிரிவான “கோமின் பார்ம்” இன் இதழில் வந்த தலையங்கத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கு சீனப் பாதையே சரியானது என்று குறிப் பிட்டிருந்தது.

மையக்குழு உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்ததால் மீதமுள்ளவர்கள் கூடினர். ஆந்திரத் தோழர்களின் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்திய புரட்சிக்கான சீனப் பாதையின் முக்கிய அம்சங்களாக முதலில் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் உள்நாட்டு ஏஜெண்டுகளுக்கும் எதிராக வலுவான அய்க்கிய முன்னணி கட்டவேண்டும்; இரண்டாவதாக, கிராமப்புறங்களில் ஆயுதம் தாங்கிய கெரில்லா யுத்தத்தை நடத்துவது, மூன்றாவதாக, விடுதலை பிரதேசங்களையும் விடுதலைப் படையையும் உருவாக்குவது, இறுதியில் நாடு முழுவதிலும் அதிகாரத்தை கைப்பற்றுவது என மையக்குழு கூறியது.

சிறையில் இருந்த அஜாய் கோஷ், டாங்கே, காட்டே ஆகிய மூவரும் மையக்குழுவின் முடிவை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட போதிலும் சில விமர்சனங்களை முன் வைத்தனர். இந்தியா முழுக்க மாறுபட்ட இயக்க வளர்ச்சியை சுட்டிக் காட்டினர்.

மேலும், தெலங்கானா போராட்டத்தை தொடருவதிலும் சீனப்பாதை பற்றியும் பல்வேறு கருத்துக்கள் கட்சிக்குள் நிலவத் தொடங்கின. இது கட்சிக்குள் நெருக்கடியை உருவாக்கியது.

இதனால், 1950 டிசம்பரில் கூடிய மையக் குழு கூட்டம் கட்சிக்குள் அடிப்படை விசியங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளதை அங்கீகரித்தது. எனவே, கட்சியை அமைப்பு ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் ஒருமைப்படுத்த முடிவு செய்தது. இதற்கு இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது.

முதலாவதாக, ஒரு முழுமையான உட்கட்சி விவாதத்தை நடத்துவது; கீழிருந்து மேல் வரை அமைப்பு மாநாடுகளை நடத்துவது; இறுதியாக பேராயத்தை நடத்துவது என்றும் இரண்டாவதாக, கட்சிக்குள் இருக்கும் அடிப்படை விசியங்கள் பற்றிய வேறுபாடுகளை பற்றி சகோதர கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பெறுவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.

மையக்குழுவின் முடிவின்படி இராஜேஸ்வரராவ், பசவபுன்னய்யா, அஜாய் கோஷ், டாங்கே ஆகியோர் அடங்கிய குழுவொன்று சோவியத் கம்யூனிஸ்டு கட்சியை சந்தித்தது. தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் குழு இந்திய குழுவுடன் விவாதித்தது. காங்கிரஸ் பற்றிய வர்க்க மதிப்பீடு, புரட்சியின் கட்டம், புரட்சியின் மூல உத்தி (strategy) வர்க்க அணிசேர்க்கை, புரட்சியின் பாதை என்று கட்சி திட்டம் மற்றும் மூல உத்தி பற்றி விவாதிக்கப் பட்டது. இதன் விளைவாக கட்சியின் திட்டமும் (நகல்) கொள்கை அறிக்கை (நகல்) தயாரிக்கப்பட்டது.

“சகோதர கட்சிகள் சில ஆலோசனைகளை வழங்கமுடியும். ஆனால், தங்களது நேரடி அனுபவத்தின் மூலம் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அந்தந்த நாட்டவரே. இந்திய புரட்சி குறித்த முடிவு எடுக்க வேண்டியது இந்திய கம்யூனிஸ்டுகளே! இந்திய நிலை குறித்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் அவர்களே” என்பதை ஸ்டாலின் உணர்த்தியிருக்கிறார்.

1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இரண்டு ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த ஆவணங்கள் சுட்டியது என்னவென்றால்,

1. இந்தியாவிற்கு முழுச்சுதந்திரம் கிடைக்கவில்லை

2. இந்தியப் புரட்சியின் இன்றைய கட்டம் மக்கள் சனநாயகப் புரட்சி.

3. இந்திய புரட்சிக்கான பாதை இரசிய, சீன வகைப்பட்டது அல்ல என்றும் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும் என்றும் முடிவு செய்தது.

1953 டிசம்பர் இறுதியில் மதுரையில் மூன்றாவது அகில இந்திய பேராயம் நடைபெற்றது. இப்பேராயம் “ஜனநாயக அய்க்கிய அரசு” எனும் முழக்கத்தை முன்வைத்தது.

அதாவது, ஒரு குறைந்த பட்ச திட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு சனநாயக கட்சிகளின், குழுக்களின் கூட்டணியால் உருவாக்கப்படும் அரசாகும்.

அரசு அமைப்பது அல்லது அரசில் பங்கு பெறுவது என்ற மயக்கம் பலமாகவே எழுந்தது. சுருக்கமாக சொல்வோமானால் நேரு தலைமை யிலான காங்கிரசு அரசை ஆதரிப்பது அல்லது அதில் பங்கு கொள்வது என்ற கருத்து மேலோங்கியது.

இதற்கு மாற்றாக காங்கிரசை எதிர்த்து சனநாயக முன்னணியை உருவாக்கி போராட வேண்டும் என்ற கருத்தும் உருவானது.

1951ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் நடைமுறையற்றதாக்கப்பட்டு பல்வேறு கருத்துக்கள் கட்சிக்குள் முட்டி மோதின. எதிலும் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை வந்தது. எடுக்கப்பட்ட முடிவுகளும் ஒட்டுப் போடப்பட்டவையாகவே இருந்தன.

இச்சமயத்தில் ஸ்டாலின் மறைவிற்கு (1953) பிறகு சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் 20வது பேராயம் 1956 துவக்கத்தில் நடந்தது. இப்பேராயத்தில் குருசேவ் தலைமையால் முன்வைக்கப்பட்ட அறிக்கை அமைதி வழி மாற்றம் பற்றி பேசியது. இதனால், நாடாளுமன்றத்தின் மூலமாகவே சமாதானமாக சோசலிசத்தை எட்ட இயலும் என்றும் சமாதான சகவாழ்வை வெளியுறவு கொள்கையாகவும் முன்வைத்தது. மேலும், தோழர் ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் முன்வைக்கப்பட்டன.

1956ல் ஏப்ரலில் நான்காவது அகில இந்திய பேராயம் நடைபெற்றது. இப்பேராயத்தில் சோவியத் மாநாட்டிற்கு சென்றுவந்த அஜாய் கோஷ் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் நாடாளுமன்றத்தின் மூலம் சமாதான மாற்றம் என்ற பாதையை ஏற்றுக் கொண்டிருந்தார்.

1960 -ஏப்ரலில் சீனக் கம்யூனிஸ்டு கட்சி சோவியத்தின் நிலைபாடுகளை மறைமுகமாக விமர்சித்தது. “லெனினியம் நீடுழி வாழ்க” என்ற கட்டுரையை வெளியிட்டது.

இதே ஆண்டு நவம்பரில் மாஸ்கோவில் 81 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. இதில் சமரசத்துடன் அதே சமயத்தில் சில புரட்சிகர கோட்பாடுகளை உயர்த்தி பிடித்து அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், இம்மாநாட்டில் இ.க.க. சார்பில் கலந்து கொண்டு திரும்பிய பிரதிநிதிகளால் ஒருமித்த அறிக்கையை முன்வைக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1961 ஏப்ரலில் அதாவது அகில இந்திய பேராயம் விஜயவாடாவில் நடைபெற்றது. இப்பேராயத்திற்கான ஆவணங்களை தயாரிக்க முடியவில்லை. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எவற்றின் மீதும் ஒத்த கருத்து வரவில்லை.

இதற்கு பிறகு இந்திய-&சீன எல்லை மோதல் உருவானது. இதை ஒட்டியும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. டாங்கே தலைமை முழுமையாக இந்திய அரசை ஆதரித்தது. மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்கள் காங்கிரசு அரசால் கைது செய்யப்பட்டனர். டாங்கே தலைமை இந்த கைதுகளுக்கெதிராக எந்த இயக்கத்தையும் மேற்கொள்ளவில்லை.

மேலும், சோவியத்-&சீன கட்சிகளிடையான மாபெரும் விவாதத்தில் டாங்கே தலைமை முழுமையாக சோவியத் கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்தது. இதனால் சிறையிலிருந்து வெளியில் வந்தவர்கள் விரிவான, முறையான உட்கட்சி விவாதத்தை நடத்தி அதன்மூலம் முடிவுக்கு வரவேண்டும் என்று கோரினர். ஆனால், டாங்கே தலைமை இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இச்சமயத்தில், டாங்கே சிறையில் இருந்த பொழுது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஊழியம் செய்வதாக எழுதி கொடுத்த கடிதம் வெளியானது. இது பெரும் பிரச்சினையை கிளப்பியது. இது பற்றி முறையாக விசாரிக்க டாங்கே ஒத்துழைக்க மறுத்ததை ஒட்டி மேற்குறிப்பிட்ட பிரிவினர் வெளியேறினர்.

சில ஆண்டுகளாக கட்சிக்குள் நிலவிக் கொண்டிருந்த அரசியல் மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரண்டு கட்சிகளாக பிளவுற்றன. மார்க்சிஸ்ட் கட்சி 1964ல் உருவானது.

இ.க.க.(மார்க்சிஸ்ட்) 1967ல் மேற்கு வங்கத்தில் கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெற்றது. ஜோதிபாசு துணை முதல்வராக இருந்தார். அக்காலகட்டத்தில் நக்சல்பாரி கிராமத்தில் தொடங்கிய ஆயுதந்தாங்கிய விவசாயிகள் கிளர்ச்சியை கூட்டணி அரசு கொடூரமாக ஒடுக்கியது.

மார்க்சிஸ்ட் கட்சியும் இ.க.கட்சியைப் போலவே நாடாளுமன்ற பாதையை தொடர்ந்தது.

மேலும், சர்வதேச சிக்கலான சோவியத்&-சீன முரண்பாடுகளைப் பற்றி எந்த விதமுடிவும் எடுக்காமல் ஒரு மையவாத நிலைப்பாட்டையே மார்க்சிஸ்ட் கட்சி எடுத்தது.

மேற்கண்ட காரணங்களினால் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து இ.க.க.(மார்க்சிஸ்ட்&லெனினிஸ்ட்) 1969 ஏப்ரலில் உருவானது. இதுவும் 70களில் பல குழுக்களாக பிரிந்து போனது. இப்போக்கு இன்றும் இணைந்தும் பிரிந்தும் நிலவிக் கொண்டிருக்கிறது.

சி.பி.எம்மின் கட்சி திட்டம்

பொது திட்டமானது புறநிலை எதார்த்தங்கள் மீது மார்க்சிய தத்துவம் செலுத்தப்பட்டு வந்தடையும் குறிக்கோள் களாகும். மேலும், திட்டமானது சமூகத்தின் உற்பத்தியை அலசி ஆராய்கிறது. இதன் மூலம் பொருளாதார கட்டுமானத்தை சொல்கிறது. அரசு கட்டமைப்பை சுட்டுகிறது. அடிப்படை முரண்பாடுகளை வகுக்கிறது.

சி.பி. எம்மின் திட்டத்தில் புரட்சியின் கட்டம் மக்கள் சனநாயகப் புரட்சி என்று சரியாக தீர்மானித்துள்ளது. அரசு கட்டமைப்பு பற்றியும் திட்ட குறிக்கோள்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஆனால், சமூக உற்பத்தி முறை பற்றிய ஆய்வு இல்லை. அடிப்படை முரண்பாடுகள் குறிப்பிடப்படவில்லை.

இதனால், இந்தியாவில் நிலவும் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளான அரை தொல்குடி, சாதி-அரைநிலவுடமை, முதலாளிய உற்பத்தி முறைகளைப்பற்றிய ஆழமான பார்வை இல்லை. அடிப்படை முரண்பாடுகளை வகுக்காததால் வர்க்கங்களின் மோதல், முரண்பாடுகளின் வளர்ச்சிகளை கணிக்க முடியாத திறனற்றதாக சி.பி.எம். கட்சி உள்ளது.

மேலும், திட்டத்தை எடுத்துக் கொள்வோம், இந்திய துணைக் கண்டத்தை பற்றி சரியான பருண்மையான ஆய்வை சி.பி.எம். மேற்கொண்டிருந்தால் இந்தியா முழுவதும் ஒரே திட்டத்தை முன் வைக்காது. அதாவது, இந்தியாவில் ஒரே சமூக உற்பத்தி முறை நிலவவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகள் நிலவுகின்றன.

இந்திய துணைக்கண்டமானது மொழிவழித் தேசிய இனங்கள், பழங்குடித் தேசங்களைக் கொண்டது. மொழிவழித் தேசிய இனங்கள் சாதி, மதத்தை உள்ளீடாக கொண்டது என்ற பருண்மையான உண்மைகள் புலப்பட்டிருக்கும். எனவே, இந்தியாவிற்கான ஒரு திட்டத்தை வைத்திருக்காது. மொழிவழித் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளுக்கான தனித்தனி திட்டங்களை முன்வைத்திருக்கும். சி.பி.எம்மின் இந்தியாவை பற்றியே மேம்போக்கான பார்வையே ஒரே திட்டம் என்ற முன்வைப்பாகும்.

அடுத்து, இலக்குகளான (Targets) ஆளும் வர்க்கங்களைப் பற்றி பார்ப்போம்!

இந்திய முதலாளிய வர்க்கத்தை பெருமுதலாளிகள் என்றும் ஏகபோகங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஏகாதிபத்தி யத்துடன் சமரசம் செய்துக் கொள்வதாக குறிப்பிடுகின்றனர்.

பெரு முதலாளிகள் என்பது அளவை (குவாண்டிட்டி) குறிக்கும் சொல்லே தவிர முதலாளித்துவத்தின் தன்மையை (கேரக்டர்) குறிக்கும் சொல்லல்ல, சி.பி.ஐ. போன்று தேசிய முதலாளிகள் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், தேசிய முதலாளிகளாக இவர்களை கருதுவதில் தீராத மயக்கம் இன்றவும் உண்டு. இந்த தெளிவின்மைகளே இவர்களின் நடைமுறையில் பெரு முதலாளிகளின் கட்சிகளுடான உறவில் எதிரொலிக்கின்றன.

மேலும் பெரு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ஆன உறவில் முரண்பாடுகளை மட்டுமே மிகைப்படுத்தி பார்க்கின்றனர். இவர்களின் கூட்டு+சார்பு பற்றி திட்டவட்டமான முடிவு இல்லை.

பெரு முதலாளிகளைப் பொருத்தவரை சுயத்தன்மையுள்ள தேசிய முதலாளிகள் இல்லை. எந்த தேசிய இனத்தையும் அடிப்படையாக கொண்டவர்கள் இல்லை. அதே போல் சார்பு முதலாளிகளும் இல்லை. அதாவது பொருளாதாரத்தில் சார்பு, அரசியலில் சுதந்திரம் என்ற இரட்டைத் தன்மை வாய்ந்தவர்கள் இல்லை.

இவர்கள் இந்திய பிராந்திய சந்தையின் வணிக மூலதன பலத்திலே வளர்ந்தவர்கள். தங்களது நலனுக்கான ஏகாதிபத்தியத்துடன் கூட்டு+சார்பு என்ற தன்மை கொண்டவர்கள். இதனால் இவர்களை “இந்திய பிராந்திய பெருமுதலாளிகள்” என்ற தனித்தன்மையில் அழைக்கிறோம்.

மேலும், இவர்கள் இன்று வளரும் ஏகாதிபத்தியமாக வளர்ந்துள்ளனர். இந்த வளர்ச்சியையும் சி.பி.எம். காண மறுக்கின்றது.

நிலவுடமையை பொருத்தவரை அரைநிலப் பிரபுத்துவம், நிலப்பிரபுத்துவம் போன்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. எந்த வகையான நிலப்பிரபுத்துவம் என்பது பற்றி ஆய்வு இல்லை.

உண்மையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனக்கு எதிரான நிலக்கிழார்களை அழித்து விட்டு தனக்கான புதிய நிலக் கிழார்களை உருவாக்கியது. இவர்கள் நேரிடையாக ஏகாதிபத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு சேவகனாகவும் கிராமப்புற எஜமானர்களாகவும் இரட்டைத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் மூலதனம் மற்றும் சாதி-நிலவுடமை என்ற இரண்டு உற்பத்தி முறைகளிலும் உறவு கொண்டிருந்தார்கள். எனவே, இவர்களே மூலதன&-சாதி-& நிலக்கிழார்கள் ஆவர். சுதந்திரத்திற்கு பின் பெரு முதலாளிகளுக்கு சேவகர்களாக மாறினர்.

ஆனால் சி.பி.எம். சாதி-&அரைநிலவுடமை பற்றியோ, மூலதன&-சாதி&-நிலக்கிழார்கள் பற்றியோ கண்ணோட்டம் கொண்டிருக்க வில்லை.

பெரு முதலாளிகள் சுதந்திரத்திற்கு பின் அமெரிக்கா மற்றும் சோவியத் இரஷ்யா என்ற இரண்டு முகாம்களையும் பயன்படுத்திக் கொண்டனர். இறக்குமதி சட்டங்கள் மூலம் தங்களை காத்துக் கொண்டனர். வெளியாருக்கு மூலதன-க் கட்டுப் பாட்டுச் சட்டங்கள் மூலம் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

தேசிய நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தம்மை பலமாக வளர்த்துக் கொண்டனர். இவற்றை ஏற்றுக் கொள்ளும் சி.பி.எம், அரசு மூலதனம் ஏகபோகமாக வளர்ந்தது என்பது பற்றியோ இதை நிர்வகிக்கும் அதிகார வர்க்க முதலாளிகள் (அரசியல்வாதிகள்+அதிகாரிகள்) பற்றியோ பார்க்க மறுக்கின்றது.

அரசு மூலதனத்தின் வர்க்கத் தன்மையை புரிந்துக் கொள்வதில் உள்ள குறைபாடுகள்தான் பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றிய சி.பி.எம்மின் மயக்கத்திற்கு காரணமாகும்.

மேலும், இவர்கள் ஆட்சி காலங்களில் இவர்களே அதிகார வர்க்க முதலாளிகளாக செயற்படுகின்றனர். (நக்சல்பாரி, நந்திகிராம், சிங்கூர், லால்கர் என்று பல எடுத்துக் காட்டுகளை சொல்லலாம்)

அரசு கட்டமைப்பு

“இன்றைய இந்திய அரசு என்பது பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ&நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும்.” என்று சி.பி.எம். கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

சுதந்திரத்திற்கு பின் பிரிட்டிசாரிடமிருந்து இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் சமாதான பூர்வமாகவே அரசியல் அதிகாரத்தை பெற்றனர். அதிகாரத்தை பெற்றதும் நிலக்கிழார்களின் அதிகாரத்தை ஒழித்து இந்தியாவிலிருந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் இந்திய அரசில் இணைத்தனர். 1950ல் அறிவிக்கப்பட்ட குடியரசு உண்மையில் பெரு முதலாளிகளின் சர்வாதிகார அரசு என்பதேயாகும்.

சி.பி.எம். குறிப்பிடுகிற பெரு முதலாளிகள்+ நிலப்பிரபுக்களின் கூட்டு சர்வாதிகாரம் என்பது இரட்டை ஆட்சிமுறை இருப்பதாக பொருள் தருகிறது. அதாவது, முதலாளித்துவ அதிகாரம் நிலப்பிரபுத்துவ அதிகாரம் இரண்டும் இருப்பதாக பொருள் தருகிறது, இது தவறாகும். இந்திய அரசு இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் அதிகாரத்தை முதலாளித்துவ அரசு எந்திரங்கள் மூலம் செலுத்தி வருகிறது. நிலவுடமை அதிகாரம் முதலாளித்துவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டே இருக்கிறது. எனவே, இங்கு இரட்டை அதிகாரம் கிடையாது.

அடுத்ததாக, இந்திய அரசின் அதிகார வடிவங்களாக இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உள்ளன. ஒன்றிய அரசு அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசாகவே செயல்படுகிறது. முக்கியமாக இந்திய அரசுக்கட்டமைப்பு மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக் கூடமாக உள்ளது. இதை முற்றிலுமாக சி.பி.எம். கணக்கிலெடுக்க மறுக்கிறது.

தனது திட்டத்தில் அதிகார வடிவங்களாக படுபிற்போக்கான இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களவை, சட்ட அவையை முன் வைக்கிறது. இந்த அளவிற்கு மோசமான மாற்றை இந்தியாவில் எந்த கம்யூனிஸ்டு கட்சிகளோ, அமைப்புகளோ முன்வைக்கவில்லை.

உலகில் வளர்ந்த சனநாயக வடிவங்களை நடைமுறைப்படுத்திய சோவியத் யூனியனில் இருந்து எந்த அறிவையும் பெற்றதாக தெரியவில்லை.

மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங்குடி தேசங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான சுதந்திரமான குடியரசுகளை அமைத்துக் கொள்வதும், மக்களின் விருப்பத்துடன் (பொது வாக்கெடுப்பு) கூட்டரசில் இணைவதும் என்பதே தீர்வாக இருக்க முடியும்.

சி.பி.எம். குறிப்பிடுகின்ற மாநில சுயாட்சி அல்லது படுபிற்போக்கான நாடாளுமன்ற, மாநிலங்களவையோ தீர்வாக இருக்கமுடியாது.

தொழிற்துறை+விவசாயப் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி சக்திகளின் விரைவான வளர்ச்சி அவசியமாகிறது என்று சி.பி.எம். திட்டம் குறிப்பிடுகிறது.

மூலதனம் மையப்படுதல், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, கனரக எந்திரங்கள் உற்பத்தி, பெரிய தொழிற்சாலைகள் என்பதெல்லாம் முதலாளித்துவ பண்புகளாகும். உற்பத்தி சக்திகளின் கோட்பாட்டை தோழர் மாவோ மிக கடுமையாக விமர்சிக்கிறார்.

கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, இலகுரக & இடைரக எந்திரங்கள் உற்பத்தி, கூட்டுறவுகள் போன்ற பரவலாக்கும் பொருளாதாரமே சிறந்தது.

சி.பி.எம்மின் திட்டத்தில் தொழில் துறையில் சிறு தொழில்கள், கூட்டுறவுகளை பற்றி ஒரு வார்த்தை கிடையாது. இதுதான் இவர்கள் ஆட்சிகளிலும் எதிரொலித்தது, மாற்றுப் பொருளாதாரத்தை இவர்கள் வெற்றிகரமாக கட்டியமைக்கவில்லை. வர்க்கப் பார்வையற்று பொதுத்துறையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தை பொருத்தவரை மிக முக்கியமாக கூட்டுப்பண்ணைகளை பற்றி குறிப்பிடவில்லை.

இந்தியாவில் 80% மேல் நிலத்தின் உடைமை சிறு, குறு நடுத்தர விவசாயிகளிடமே உள்ளது. நிலச் சிக்கலில் இவர்களின் சிக்கலின் தீர்வே மிக முக்கியமானது ஆகும். அது கூட்டு பண்ணைகளே ஆகும். ஆனால் இதைப் பற்றி தெளிவான கண்ணோட்டம் இல்லாதவர்களாக உள்ளனர்.

இவர்களது ஆட்சி காலங்களிலும், மாநிலங்களிலும் கூட்டுப்பண்ணைக்கான முயற்சிகள் என்ன என்பது கேள்விக்குறியே! “உழவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம் இவர்களைப் பொருத்தவரை மறந்து போன முழக்கமாயிற்று. உழவர்களை திரட்டுவதற்கான எந்த தனி செயல் திட்டமும் இவர்களிடம் கிடையாது.

மக்கள் சனநாயக முன்னணி

சி.பி.எம். திட்டத்தில் உள்ள ஒரு சிறப்பான அம்சம் மக்கள் சனநாயக முன்னணி கட்ட வேண்டும் என்ற பகுதி ஆகும். ஆனால், இதற்காக சி.பி.எம். கட்சி இது நாள் வரை சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பதே உண்மையாகும்.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் சனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும்” என்று திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. தொழிற்சங்கத்திலும் விவசாய சங்கத்திலும் ஆயிரக்கணக்காகத் திரட்டப்பட்டும் ம.ஜ.முன்னணி கட்டப்பட வில்லை. இது சி.பி.எம். தலைமையின் தெளிவின்மையே காட்டுகிறது.

இந்தியாவில் தொழிலாளர்+விவசாயிகள் வெகுசன கட்சி கட்டப்பட வேண்டும் என்று மூன்றாவது அகிலத்தால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தோழர் ஸ்டாலினும் அறிவுறுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சில மாநிலங்களில் கட்டப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டு கம்யூனிஸ்டுக் கட்சியாக மாற்றப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின் வெகுசன கட்சி பற்றி எந்த பேச்சும் இல்லை. சி.பி.எம். தனது திட்டத்தில் ம.ஜ.மு. என்பதை முன்வைத்தது. ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை அனைத்து பாத்திரத்தையும் கம்யூனிஸ்டு கட்சியே (சி.பி.எம்.) ஆற்றுகிறது. வெகுசன அமைப்புகள் கூட அரசியல் பாத்திரமற்றுதான் உள்ளன. இறுதியாக நாடாளுமன்ற கட்சியாக சீரழிந்து எல்லாம் தேர்தலுக்காக என்ற நிலையில்தான் இன்று சி.பி.எம் உள்ளது.

மக்கள் சனநாயக புரட்சி என்பது அய்க்கிய முன்னணி புரட்சியாகும். பாட்டாளி வர்க்கம் வேறு வர்க்கங்களையும் பிரிவினரையும் அய்க்கியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளது. எனவே, இங்கு துவக்கத்தில் இருந்தே அய்க்கிய முன்னணி அணிதிரட்டல் தேவையாகும்.

சி.பி.எம்மும் தனது திட்டத்தில் ம.ஜ.முன்னணிக்கு திரட்ட வேண்டிய சக்திகளை பற்றி குறிப்பிடுகிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகளின் பல்தட்டு வர்க்கங்கள், குட்டி முதலாளி வர்க்கம், பெரு முதலாளிகள் இல்லாத முதலாளி வர்க்கம் என்று குறிப்பிடுகிறது. இவர்களுக்கான வெகுசன அமைப்புகளைக் கூட கட்டியுள்ளது.

ஆனால், ம.ஜ.முன்னணியை கட்டவில்லை. இது முரணாக உள்ளது. மக்கள் திரள் அரங்குகளில் அணிதிரட்ட முடிந்த தொழிலாளர், விவசாயிகள் மற்றும் சனநாயக சக்திகளை ஏன் ம.ஜ.முன்னணிக்கு திரட்டமுடியாது என்ற கேள்வி பூதாகரமாக நிற்கிறது.

இதற்கான பதிலாக நாம் பார்க்க முடிவது என்னவென்றால், மக்கள் சனநாயக புரட்சியின் முதன்மை அமைப்பு வடிவமாக ம.ஜ.முன்னணியை முன்னிறுத்த வேண்டிய புரிதல் சி.பி.எம். தலைமைக்கு இல்லை. மாறாக நாடாளுமன்ற செயல்பாடுகளே (நாடாளு மன்றவாதம்) மேலோங்கி உள்ளது என்பதுதான்.

அரசியல் மூல உத்தி - செயல் உத்திகள் (Strategy Tactics)

கட்சி திட்டம் என்பது புறநிலையை ஆய்வு செய்வது என்றால் மூல உத்தி என்பது அகநிலை சக்திகளின் தயாரிப்பை முடிவு செய்கிறது. அதாவது, அணிதிரட்ட வேண்டிய இயக்குசக்திகளின் (Motive Forces)) அணி வரிசைக்கான திட்டமும், வீழ்த்த வேண்டிய இலக்குகளைப் ((Targets) பற்றிய திட்டமும் அரசியல் மூலஉத்தி ஆகும்.

திட்டம், புரட்சியின் கட்டம், அடிப்படை முரண்பாடுகள் இவைகளுடன் நேரிடையாக உறவு கொண்டது மூல உத்தி ஆகும். இவைகளைப் போன்றே மூல உத்தியும் இப்புரட்சியின் கட்டம் முழுவதும் மாறாது.

புரட்சியின் கட்டத்தில் இடை இடையே ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களின் மாற்றங்களுக் கேற்ப அமைப்பு வடிவம், போராட்ட வடிவங்கள், உடனடி கோரிக்கைகள், முழக்கங்களை அல்லது குறிப்பான திட்டத்தை முன்வைப்பதே செயல் உத்தியாகும்.

குறிப்பான திட்டம், புரட்சியின் இடைக்கட்டம், முதன்மை முரண்பாடு இவைகளுடன் செயல் உத்திகளுக்கு நேரிடையாக உறவு உண்டு. இவைகளைப் போன்றே செயல் உத்தியும் புரட்சியின் கட்டத்தில் பலமுறை மாறிக் கொண்டே இருக்கும்.

சி.பி.எம்மை பொருத்தவரை மூல உத்திக்கான ஆவணம் இருப்பதாக தெரியவில்லை. மூலஉத்தியை பற்றி திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டி உள்ளது. அரசியல் மூல உத்தியாக மக்கள் ஜனநாயக முன்னணியை குறிப்பிடுவதாக கருதலாம்.

  சி.பி.எம். திட்டத்தில் ம.ஜ.முன்னணி தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை

“இந்திய புரட்சியின் அடிப்படையான கடமைகளை முழுமையாகவும் முழு நிறைவாகவும் பூர்த்தி செய்வதற்கு இப்போதுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் சனநாயக அரசை நிறுவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்”

“இது பழைய பாணி முதலாளித்துவ சனநாயக புரட்சி அல்ல. மாறாக தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி நடத்தப்படும் புதிய வகையிலான மக்கள் சனநாயகப் புரட்சி ஆகும்.”

“தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் நமது புரட்சியின் தன்மையானது நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு மற்றும் ஜனநாயகரீதியானதாக இருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது.

மேலும், இத்தலைப்பில்,

“தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணி தான் மக்கள் சனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும்.”

“விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை கூட்டாளிகளாக இருப்பார்கள்.”

“நடுத்தர விவசாயிகள் மக்கள் சனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.”

“பணக்கார விவசாயிகளிடம் ஊசலாட்ட குணம் உள்ள போதும் சில தருணங்களில் அவர்களையும் மக்கள் சனநாயக முன்னணியில் கொண்டு வரமுடியும்.”

“குட்டி முதலாளிய பிரிவினர்களான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில் முறையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர், ஆகியோர் ம.ஜ.முன்னணியின் கூட்டாளிகளாக இருக்க வைக்க முடியும்.”

“ஏகபோகம் அல்லாத முதலாளிகள் ஊசலாட்ட தன்மை கொண்டவர்களாக இருப்பினும் திட்டவட்டமான நிலைமைகளை பொருத்தே வருவர்.”

மேற்கண்டவைகள் சி.பி.எம். கட்சி திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் (இது 1964ல் நிறைவேற்றப்பட்டது) இன்று வரை 50 ஆண்டுகள் கடந்தும் ஒரு துரும்பைக்கூட ம.ஜ.முன்னணிக்காக கிள்ளிப்போடவில்லை.  சி.பி.எம். தலைமைகள் மறந்து போய் அப்படி எப்பொழுதாவாது குறிப்பிட்டாலும் நீண்ட காலம் கழித்து செய்யப்படும் என்றே குறிப்பிடுகின்றனர்.  

மாவோயிஸ்டுகள் தளப்பகுதிகளில் தான் அதாவது மக்கள் அதிகாரம் கட்டமைக்கப்படும் பொழுதுதான் அய்க்கிய முன்னணி சாத்தியம் என்று வரட்டுத்தனமாக குறிப்பிடுவதை போன்றதுதான், சி.பி.எம்மின் இறுதியில் தான் மக்கள் சனநாயக முன்னணிக்கான நடைமுறைகள் என்பதும் ஆகும்.

முதன்மை வடிவமாக மக்கள் சனநாயக முன்னணியே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ம.ஜ.மு. கட்டப்படாமலேயே அதன் வர்க்க சக்திகள் தேர்தல் ஓட்டுக்காக சி.பி.எம்மால் அணிதிரட்டப்படுகிறார்கள்.

இடது மற்றும் சனநாயக முன்னணி

ம.ஜ.மு. கட்டப்படாத சூழ்நிலையிலேயே 10வது பேராயத்தில் இடது மற்றும் சனநாயக முன்னணி முன்வைக்கப்பட்டது. இது கேரளாவில் அமைந்த கூட்டணி அரசின் பெயராகும். ஆனால் இது தேர்தல் கூட்டணி அல்ல என்று சொல்லப்படுகிறது.

ம.ஜ.முன்னணியின் வர்க்கங்களையே அணிதிரட்டுவது தான் இதன் நோக்கம் என்றும் அதற்கு இடை அமைப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், 10வது பேராயம் காங்கிரஸ் மற்றும் ஜனதாவில் உள்ள சனநாயக சக்திகள், தி.மு.க., அ.தி.மு.க., அகாலிதளம் போன்ற சனநாயக சக்திகளையும் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் எப்படி ஜனநாயக சக்திகளாக முடியும்? ஜனநாயக சக்திகளுக்கு வர்க்க அடிப்படை கிடையாதா? இவர்கள் ஆளும் வர்க்க கட்சிகளைச் சேர்ந்தவர்கள். தி.மு.க., அ.தி.மு.க., அகாலிதளம் போன்ற கட்சிகள் ஆளும் வர்க்க கட்சிகளே. இப்படி இருக்கும் பொழுது இவர்கள் எப்படி ஜனநாயக சக்திகளாக முடியும்? இ.ஜ. முன்னணி என்பதை அறிவித்து சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதில் ஒருவரையாவது வென்றெடுக்க முடிந்ததா என்றால் ஒருவரும் இல்லை. அப்படி என்றால் சி.பி.எம். தலைமையின் மதிப்பீடு என்ன? வர்க்க சமரசம் தான் முழுமையான இத்தவறுக்கு காரணம் ஆகும்.

மதச்சார்பற்ற கூட்டணி

காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கூட்டணி நடைமுறையில் சாத்தியப்படவில்லை. இதற்கு பிராந்திய கட்சிகள் தான் காரணம் என்று சி.பி.எம். தலைமை கூறுகிறது.

 ஆனால், அதே சமயத்தில் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணியாக ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு என்று மாநில தேர்தல்களை சந்தித்தது. இது 17ஆம் பேராயத்தின் (2002) முடிவுக்கு முரணானது என்று மீளாய்வு செய்கிறது.

தொழிலாளர்+விவசாயிகள் வெகுசன அடித்தளமே மதச்சார்பற்ற அணிக்கு அடித்தளமாகும். ஆனால், இவர்கள் இந்துத்துவா பயங்கரவாதத்திற்கெதிராக அணிதிரட்டப்படவில்லை. இதற்கு சி.பி.எம். தலைமை எந்த முயற்சியையும் மேற்கொள்ள  வில்லை. ஆனால், வெற்றுக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது அணி

மூன்றாவது அணி என்றால் என்ன? அது எதற்கு? காங்கிரசு, பி.ஜே.பிக்கு மாற்று அணி என்றால் என்ன வர்க்கத்தன்மை கொண்டது? என்பது பற்றி எல்லாம் எந்த அக்கறையும் சி.பி.எம். தலைமைக்கு இல்லை. பிராந்திய கட்சிகள் தான் மூன்றாவது அணி என்கிறது.

சி.பி.எம். தலைமையின் வர்க்கமற்ற பார்வை என்பது தொடர்ச்சியாக அதன் அனைத்து செயற்பாடுகளிலும் பார்க்கலாம். ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இவைகளுக்கான உறவுகள், அரசியல் கட்சிகளின் முதலாளித்துவ வர்க்கத்தன்மை இவைபற்றி சி.பி.எம். தலைமைக்கு தெளிவில்லை. அதிலும் பிராந்திய கட்சிகளைப் பற்றிய ஒருவித மயக்கமே உண்டு. இவர்களை பெருமுதலாளிகளின் பிரதிநிதி களாக ஒருபோதும் பார்ப்பதில்லை.

இவர்களின் மீளாய்வில் கூட பிராந்திய கட்சிகள் புதிய தாராளமய கொள்கைகளை ஆதரிக்கிறார்கள்; காங்கிரசு -பி.ஜே.பியுடன் மையத்தில் கூட்டு சேருகிறார்கள் என்றுதான் பார்க்கிறார்களே தவிர, பிராந்திய கட்சிகள் தங்களின் வர்க்க நலனிலிருந்தே இப் போக்குகளை வெளிப்படுத்துகிறார்கள்; தங்கள் எசமானர்களுக்கு (பெரு முதலாளிக்கு) விசுவாசமாக உள்ளனர் என்ற வர்க்கப் பார்வை கிடையாது.

ஒட்டு மொத்தத்தில் சி.பி.எம். தலைமை யானது மூல உத்தியான அடிப்படை வர்க்கங்களை அணிதிரட்டுவதில் அக்கறையற்றும் அதே சமயத்தில் செயல் உத்தி என்ற பெயரில் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினருக்காக ஏங்கி காத்திருப்பதும் பின்னர் ஏமாந்து புலம்புவது மாகவே உள்ளனர்.

கட்சியால் வகுக்கப்படும் செயலுத்திகள் மூலஉத்திக்கு சேவை செய்வதாகவே அமையவேண்டும் என்ற கோட்பாட்டு புரிதலிலிருந்து முற்றிலும் சி.பி.எம். தலைமை விலகியே நிற்கிறது.

இவர்களின் புதிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் வார்த்தைகளில் சொல்வ தென்றால்,

“அனைத்து நடைமுறை உத்திகளும் மற்றும் போர்த்தந்திரம் இல்லாமையும் All tactics and no strategy)திருத்தல்வாதத்திற்கு இட்டு செல்லும்.” என்று குறிப்பிடுகிறார்.(மார்க்சிஸ்ட் தமிழ்-அக்டோபர் 2014)  இதன்படி இவர்களின் மூல உத்தியற்ற செயலுத்திக்கான செயல்பாடுகள் திருத்தல்வாதமே ஆகும்.

 குறிப்பு: திட்டம், மூல உத்தி-& செயல் உத்திகள் போன்ற அடிப்படைகளை இந்த இதழில் பார்த்தோம். சாதியம், தேசிய இனச் சிக்கல், சர்வதேசிய நிலைபாடு போன்ற முக்கிய குறிப்பான தலைப்புகளை அடுத்த இதழில் பார்ப்போம்!   

Pin It