கொங்கு வேளாள கவுண்டர்களின் பண்பாட்டு வாழ்க்கையை சித்தரிக்கும் படைப்பிலக்கியங்களை படைத்த பெருமாள் முருகன் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் அடுத்த இலக்காக புலியூர் முருகேசன் ஆளாகியுள்ளார்.

                இப்படைப்புகளில் சித்தரிக்கப்படும் பாலியல் பண்பாட்டு செயற்பாடுகள் நடந்தவையும் நடந்து வருபவையும் ஆகும். இச்சாதியில் மட்டுமல்ல ஏனைய சாதி களிலும் நடந்தவையும் நடந்துவருபவையும் ஆகும். இல்லாவிடில் குறைந்தபட்சம் அதன் எச்ச சொச்சங்களாவது நீடிக்கின்றன.

                வேளாள கவுண்டர் சாதி வெறியர் களாலும் இந்து தேசியவாதிகளாலும் எதிர்க்கப்படும் மாதொருபாகன் என்ற நாவலானது 2010-ல் தமிழில் வெளிவந்தது. அதன் ஆங்கில பதிப்பானது 2014-ல் வெளி யானது. புலியூர் முருகேசனு டைய படைப் போ சென்ற டிசம்பரில்தான் வெளியானது.               

                ஏன் குறிப்பிட்ட ஒரு சாதியினரான வேளாள கவுண்டர்கள் இப்பொழுது இப்படைப்புகளை எதிர்க்கின்றனர்? ஏன் அவர்களுக்கு இந்து தேசியம் வழி காட்டுகின்றது? அல்லது ஏன் இவர்கள் இந்து தேசியத்தின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கின்றனர்? அல்லது ஏன் இவர்கள் இந்து தேசியத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்?

                மேற்கு தமிழ்நாட்டில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் முதன்மையாகவும் ஒரு சில அண்டை மாவட்டங்களில் குறை வாகவும் வசிக்கும் வேளாள கவுண்டர்கள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் பிற்பட்டோர்  பிரிவுகளில் சேர்க்கப்பட்டதையட்டி வளர்ந்த அவர்கள் எம்.ஜி.ஆரின் ஆட்சி யிலும் மேலும் வளர்ந்தனர். ஜெயலலிதா வின் ஆட்சியிலும் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றனர்.

                மேற்கு தமிழ்நாட்டில் நிலக்கிழார்க ளாகவும் உள்ள இவர்கள் மேற்சொன்ன காரணங்களாலும் மேற்சொன்ன இட ஒதுக்கீட்டினாலும் பலன்பெற்று மேற்கு தமிழ்நாட்டில் அரசு இயந்திரத்தில் முதன் மையாகவும் தமிழக அரசாங்க மட்டத் திலான அரசு இயந்திரத்தில் குறிப்பிட்ட அளவிற்கு இடம் பிடித்தனர். அடுத்ததாக மேற்கு தமிழ்நாட்டிலுள்ள வெவ்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் (கடன், விவசாயம், பால் முதலானவை) மற்றும் கிராமப்புற வங்கிகளின் மூலதனத்தை தமதாக்கியும் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

                கோவை கரிசல் பூமியாக இருப்பதன் காரணமாக பருத்தி விளைவிக்கப்பட்டதால் ஜவுளி தொழிற்துறை நன்கு வளர்ந்தது. கோவை என்றாலே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்டது. அத்துடன் பசுமைப் புரட்சியின் விளைவாக பணப் பயிர்கள் ஊக்குவிக்கப்பட்டதால் பருத்தி, தென்னை, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக ஏரி மற்றும் கால்வாய் பாசனத் திற்கு மாறாக கிணற்று பாசனம் ஊட்டி வளர்க்கப்பட்டது. இதை எளிதாக்கும வண்ணம் மோட்டார் மற்றும் பம்புசெட் தொழில் வளர்த்து அதையட்டி ரிக் (RIG) எனப்படும் ஆழ்துளை கிணறு தோண்டுதல் என இவ்விரண்டு தொழில்களும் பெரிய துறையாகவே வளர்ந்து அவை இந்தியா விலேயே மேற்கு தமிழ்நாடு செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு விரிவடைந்துள்ளன.

                மேலே பார்த்த ஜவுளித் தொழில், மோட்டார் மற்றும் பம்புசெட் தொழிற் துறை, ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்கில் பொறியியல் தொழில் அவ்வட்டாரத்தில் மேலும் விரிவடைந்து மோட்டார் வாகன உதிரி பாகங்களான வார்ப்படங்கள், ஸ்டீயரிங் செல் ஆகியனவற்றை கணிச மான அளவிற்கு உற்பத்தியாகும் வண்ணம் வளர்த்துள்ளன. அத்துடன் ஜவுளித் தொழில் பல கிளைகளாக பிரிந்து வளர்ந்து நு£ற் பாலை, கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை என்பனவாக உருக்கொண்டது.

                இவ்வாறு வளர்ந்து வந்துள்ள மேற்கு தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவில் சுமார் 15 தொழிற்துறையில் செல்வாக்கு செலுத்திவருவதோடு ஓரளவுக்கு உலகச் சந்தையிலும் முக்கிய இடத்தைப் பிடித் துள்ளது.

 1. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நூற்பாலைகள் அதிகமுள்ளன. அவை எண்ணிக்கையில் சுமார் 2000, இவை மேற்கு தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளன.

 2. இலட்சக்கணக்கான கார்கள் உற்பத்தி யாகும் இந்தியாவில் அவற்றிற்கான ஸ்டீயரிங் வீல் என்ற உதிரிபாக உற்பத்தியில் 25 விழுக் காட்டை மேற்கு தமிழ்நாட்டிலிருந்து தமிழகப் பெரு முதலாளியாக வளர்ந்துள்ள சக்தி குழுமத்தின் சக்தி மோட்டார்ஸ் என்ற நிறுவனம் கொண்டுள்ளது.

 3. மோட்டார் மற்றும் பம்புசெட் தொழில் - இம்மூன்றும் கோவைப்பகுதி.

 4. வார்ப்படங்கள்

 5. வெட்கிரைண்டர்

 6. ஆயத்த ஆடை (திருப்பூரில் இத்துறை ஆண்டிற்கு சுமார் 20,000 கோடியை விற்று முதலாக (turn over) கொண்டுள்ளது.

 7. பேருந்து/லாரி போன்றவற்றின் பாடி பில்டிங் (இது முதன்மையாக கரூர், நாமக்கல் பகுதி)

 8. ரிக் தொழில் (இது முதன்மையாக திருச்செங்கோடு பகுதி, இப்பகுதியிலிருந்தே இந்தியாவெங்கும் ஆழ்துளை குழாய் கிணறுகளை தோன்றுவதற்கு தொழிலா ளர்கள் அதிகமாகச் செல்கின்றனர்.)

 9. லாரி சரக்குப் போக்குவரத்து (இதில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்கள் முதன்மையானவையாக பங்காற்றுகின்றன)

 10. முட்டை (இத்தொழிலில் நாமக்கல் மண்டலத்திலிருந்து இந்தியாவில் 90 விழுக்காடு முட்டை ஏற்றுமதியாகிறது)

 11. வீட்டு அலங்கார துணிகள் (இது கரூரில் முதன்மை யாக உள்ளது. 90விழுக்காடு ஏற்றுமதிக்கான உற்பத்தியே ஆகும்.

 12. மரவள்ளிக்கிழங்கு பயிரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி என்பன ஆடைகள் மற்றும் துணி களுக்கும், மருந்து உற்பத்தியிலும் இந்தியள வில் பங்காற்றுபவை.

 13. மேற்கு தமிழ்நாட்டிலுள்ள இலட்சக் கணக்கான விசைத்தறிகளின் மூலமாக இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கு ஜமுக் காளம், டவல், லுங்கி உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றன.

 14. தென்னை (தென்னை அதிகமாக விளையும் பகுதியான மேற்கு தமிழ்நாடு அதன் விளைபொருளான இளநீர் ஏற்று மதியை வெளிநாடுகளுக்கு மேற்கொள்கிறது.)

 15. கோழிப்பண்ணை (கோழிக் குஞ்சுகள், பிராய்லர் கோழிகள் இவ்வட்டாரத்தி லிருந்து முதன்மையாக நாமக்கல்லிலிருந்து கேரளா போன்றவற்றிற்கு அனுப்பப் படுகின்றன)

 16. கொசுவலை உற்பத்தியில் (கரூர் வட்டாரமானது இந்தியாவிலேயே 75 விழுக்காடு அளிக்கிறது)

 17. கல்வியானது இந்தியாவெங்கும் வணிகமயமானாலும் அது ஒரு பெரிய தொழிற்சாலைத் தன்மையில் பள்ளிக் கூடங்கள் மேற்குத் தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில் பெருவீத உற்பத்தி போன்று நடக்கிறது.

                மேலே பார்த்த 17 தொழிற்துறை களில் லட்சக்கணக்கில் நுண்/சிறு/நடுத்தர தொழிற் நிறுவனங்கள் உருவாகி சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் வட்டாரத்திற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் மேற்கு தமிழ்நாட்டுப் பகுதி வளர்ந்து நிற்கிறது.

                தவிர, மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தனி நிறுவனங்கள் இந்திய/உலக அளவில் சந்தை/உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளன.

 1. மேலே பார்த்த சக்தி குழுமம் (இது சக்தி மோட்டார்ஸ், சக்தி பேப்பர்ஸ், சக்தி சுகர்ஸ், ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட வற்றை கொண்டது. கர்னாடகாவிலும் உற்பத்தி மையங்களை உடையது. வேளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்தவருடையது)

 2. LMW (இது பழமையான லட்சுமி மில்ஸ் குழுமத்திற்கு உட்பட்டது. இந் நிறுவனமானது சீனாவிலும் உற்பத்தி மையத்தை கொண்டுள்ளது. உலகிலேயே இந்நிறுவனம்தான் ஜவுளித் தொழிலில் அனைத்து வகையான இயந்திரங்களையும் உற்பத்தி செய்கிறது. கம்மா நாயுடு சாதியைச் சேர்ந்தவருடையது)

 3. சுகுணா ஹாட்சரீஸ் (இது இந்தியா விலேயே முதல் மூன்று இடங்களில் வரும் முட்டை உற்பத்தி நிறுவனம் ஆகும். கம்மா நாயுடு சாதியைச் சேர்ந்தவருடையது. இது போன்ற பெரிய நிறுவனங்களின் இந்திய/உலகச் சந்தை மற்றும் அவற்றின் உற்பத்தி மையங்களுக்கான சங்கிலித் தொடர் விளைவாகவும் மேற்கு தமிழ்நாட்டுப் பொருளாதாரம் முக்கிய இடத்தில் உள்ளது.

 மேலே பார்த்த 17 தொழிற்துறைகளில் உள்ள இலட்சக்கணக்கான நுண்/சிறு/நடுத்தர ரக தொழில் நிறுவனங்கள் பின் வரும் சிக்கல்களை கடந்த பல ஆண்டு களாக அதிலும் குறிப்பாக சில ஆண்டு களாக சந்தித்து வருகின்றன. அவையாவன:

 1.மின்வெட்டு/மின் கட்டண உயர்வு

 2.தண்ணீர் பற்றாக்குறை

 3.மூலப் பொருளின் விலை உயர்வு

 4.மாசுபடுதல்

 5.வட இந்திய தொழிலதிபர்களின் போட்டி

 6. கடன்

 7.நாணய மதிப்பின் ஏற்ற இறக்கம்

மின்வெட்டு

சென்ற திமுக ஆட்சியில் அமல்படுத்தப் பட்ட மின்வெட்டு 6ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் தொழிற்துறையில் இந்திய பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு நுண்/சிறு/நடுத்தர ரக தொழிற்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலை நடத்த முடியாமல் கஷ்டப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் பொருட்களை உற்பத்தி செய்து உரிய இடத்திற்கு அனுப்பி வைக்க முடியாமல் போகிறது. விளைவாய் ஜவுளித்துறையைச் சேர்ந்த சில நிறுவனங் கள் வேறு வழியில்லாமல் குஜராத் போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சப் காண்டிராக்ட் செய்து வருவதோடு இப்போது குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்னாடகா போன்ற மின்வெட்டு இல்லாத பகுதிகளுக்கு இந்நிறுவனங்கள் இடம் மாறுகின்றன.

தண்ணீர் பற்றாக்குறை

 மேற்கு தமிழ்நாடு ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதி என்பதனாலும் நொய்யல், பவானி ஆகிய ஆறுகள் மாசு பட்டுவிட்டதாலும் ஆழ்துளை குழாய் கிணற்று பாசனத்தினாலும் அதே போல தண்ணீர் அதிகம் தேவைப்படும் முட்டை உற்பத்தியினாலும் (சுகாதார முறையில் கோழிகள் வளர்ப்பு, அவற்றிற்கான தீவனம், மருந்து உற்பத்தி ஆகியவற்றிற்கு தேவைப் படும் தண்ணீரின் அளவை கருத்தில் கொள்ளும் Virtual water என்ற கருத்தாக்கத் தின்படி) தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது.

மூலப் பொருட்களின் விலை உயர்வு

 மேலே பார்த்தவற்றில் சில தொழில்களுக் கான மூலப்பொருட்களின் (பஞ்சு, நூல், இரும்பு முதலான கனிமங்கள் போன்றவை) விலை உயர்வானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இம்மூலப் பொருட்கள் இந்தியச் சந்தைக்கு இல்லாமல் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுவதால் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.

சுற்றுச் சூழல் மாசுபடுதல்

 மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நுண்/சிறு சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை நொய்யல், பவானி ஆகிய ஆறு களிலும் மற்றபடியும் வெளியேற்றி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன எனக்கூறி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீதிமன்றங்கள் ஆகியன அவற்றை மூடுமாறு உத்தரவிடுகின்றன. இத்தகைய நுண்/சிறு தொழில் நிறுவனங்களுக்கு சுத்திகரிப்பு செய்வதற்கு நிதி நிலைமை இடம் அளிப்ப தில்லை. விளைவாய் நட்டத்தில் தொழிலை நடத்தி மூடிவிடுகின்றன.

வட இந்திய தொழிலதிபர்களின் போட்டி/ஆதிக்கம்

 ஜவுளி, ஸடார்ச், ஜவ்வரிசி ஆகிய துறை களில் ஏற்கனவே இருந்த சந்தையையும் குறிப்பிட்ட அளவிற்கு வடஇந்தியாவில் உள்ள தொழிலதிபர்களிடம் இழந்து வருகின்றன மேற்காணும் தொழில்களில் உள்ள நுண்/சிறு ரக தொழிற் நிறுவனங்கள்.

கடன்

 பல சிறு/நுண் நடுத்தர ரக தொழிற் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளவாறு எளிய தவணை, குறைந்த வட்டி, மானியம் இல்லாமை போன்றவற்றால் கஷ்டப்பட்டு வருவதோடு மின்வெட்டு, சுற்றுச்சூழல் நெருக்கடி, மூலப் பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளினாலும் நெருக் கடிக்கு ஆளாகி மேலும் கடன் வசதி பெற முடியாமல் தொழிலை நடத்த முடியாமல் போகின்றன.

நாணய மதிப்பின் ஏற்ற இறக்கம்

 ரூ.20,000 கோடி மதிப்பிலான திருப்பூரில் ஆயத்த ஆடை தொழிலானது முதன்மை யாக ஏற்றுமதி தொழிலாக இருப்பதால் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எதிர் கொண்டது. மேலும் மூலப் பொருட்களின் இறக்குமதியும் அதிகமான விலைக்கு ரூபாய் நாணய மதிப்பில் மேற்கொள்ள வேண்டி யுள்ளது.

 வேளாள கவுண்டர்களின் சாதியைச் சேர்ந்த நுண்/சிறு/நடுத்தர ரக தொழிலதிபர் கள் மேலே கண்ட பொருளாதார சிக்கல் களிலிருந்து வெளிவரவும் அனைத்திந்திய சந்தையில் திடப்படவும் விரிவாக்கவும் அரசியல் தளத்தில் சில முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

 ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் அதிமுக அரசாங்கத்தை பயன்படுத்த முனைகி றார்கள். ஆனால் திட்டவட்டமான பலன் ஏதும் இல்லை. அதிமுகவின் நடப்பு அமைச்சரவையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அச்சாதியைச் சேர்ந் தோர் அமைச்சர்கள் இருந்தும் இது தான் நிலைமை.

 வேறொரு மட்டத்தில் மூலதன அளவுக் கேற்ப மணிகண்டன், ஈஸ்வரன், பெஸ்ட் ராமசாமி ஆகியோர் தலைமையில் முறையே தனித்தனியாக சாதிச்சங்கங்களாக அணிதிரண்டனர். அடுத்து அவற்றை அரசியல் கட்சிகளாக்கி சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். ஆனாலும் மேற்கு தமிழ்நாட்டில் ஏகப் பெரும்பான்மை யான இடங்களில் அதிமுகவே வென்றது. வேளாள கவுண்டர் சாதி நலனுக்காகவே இருக்கும் கொங்கு பெயரிலான கட்சி களுக்கு அவ்வட்டாரத்தில் வசிக்கும் ஏனைய சாதிகளைச் சேர்ந்த வெகு மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை என்பது இயல்பானதே.

 கொங்கு என்ற பெயரில் கட்சிகளின் பெயர்களை வைத்து கொங்கு நாடு என்ற தனி மாநிலக் கோரிக்கையை இவை முன்னெடுத்தாலும் இதுதான் நிலைமை, கொங்கு நாடு என்று பெயரில் தனி மாநிலம் அமைந்தால் தமது பொருளாதார தளத்தின் சிக்கல்களை தீர்க்கும் முகமாக வளங்களை பொருளாதார/அரசியல் தளங்களில் திருப்பிவிடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

 இம் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படு வதால் மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்து தேசியத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டால் தமது சந்தைச் சிக்கல் தீரும் என எண்ணி பண்பாட்டுத் தளச் சிக்கலை கையிலெடுத்து அரசியல் தளத்தில் இந்து தேசியத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டு பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியும் என்பதால் பெருமாள் முருகனுடைய நாவலையும் இப்போது புலியூர் முருகேசனுடைய சிறுகதை தொகுப் பையும் இலக்காக்குகின்றனர்.

 இதற்கு முன்மாதிரியாக அச்சாதியைச் சேர்ந்த பொள்ளாச்சி மகாலிங்கம் இருந்தார். அவர் கவுண்டர், தமிழ் சாதி, இந்து தேசியம் என்று மூன்று அடையாளங்களை மேற் கொண்டு தமது பொருளாதார நலன்களை முன்னகர்த்தினார்.

 கவுண்டர் சாதி வெகு மக்களையும் மலிவான உற்பத்திக்காக அச்சாதியைச் சேர்ந்த நுண்/சிறு/நடுத்தர ரக தொழிலதிபர்களையும் திரட்டி மேலும் பெரு முதலாளியாக வளருவதற்கு கவுண்டர் சாதி அடையாள அரசியலை அவர் மேற் கொண்டார். அடுத்து, மேற்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்து வந்த/இருந்து வரும் கம்மா நாயுடு என்ற தெலுங்கு சாதியின் ஆதீக்கச் சக்திகளுடனான தனது (அ) தம்மைப் போன்றவர்களின் முரண் பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ்ச் சாதி என்ற அரசியலை 1990களின் மத்தியில் மேற்கொண்டு 1995ல் திருப்பூரில் தமிழ்ச் சாதி ஒற்றுமை மாநாடு நடைபெற்ற போது அதில் பெருஞ்சித்திரனார், நகைமுகன் முதலானோரோடு கலந்து கொண்டார். முன்பை விட இப்போது தெலுங்கு சாதி எதிர்ப்பு அடிப்படையிலான தமிழ்ச் சாதி என்ற அரசியல் வளர்ந்திருப்பது இதனு டைய தொடர்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியாக இந்து தேசியம் என்ற அரசியலையும் மேற்கொண்டு தனது இந்திய சந்தை விரிவாக்கத்தை திடப்படுத் தினார். அவரது சக்தி மோட்டார்ஸ் என்ற தொழிற்நிறுவனமானது இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களுக்கான ஸ்டியரிங் வீல் என்ற உதிரி பாகத்திற்கு 25 விழுக்காடு சந்தையைப் பெற்றுள்ளது. அவரது சக்தி சுகர்ஸ், சக்தி பேப்பர் மில்ஸ் போன்றவை கர்னாடகாவில் கால் பதிந்து காவிரியாற்று நீரை பயன்படுத்துவதால் நடுவர் மன்றத்திற்கு பதிலாக பேச்சு வார்த்தையின் மூலம் காவிரியாற்று நீர்ச்சிக்கலை தீர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனையை தெரிவித்தார். சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்குமாறு கோரினார். கோவையில் முஸ்லிம் விரோத இந்துப் பாசிச கும்பலின் கொலை வெறியாட்டங்களுக்கு நிதியுதவியை செய்தவர்.

 இன்று வேளாள கவுண்டர்களின் இந்து தேசிய/கவுண்டர் சாதிய செயற்பாட்டிற் கான முன்னுதாரணமாக ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பொள்ளாச்சி மகாலிங்கத்தை கொள்ள லாம். ஆனால் அச்சாதியின் லட்சக்கணக் கான நுண்/சிறு/நடுத்தர ரக தொழிலதிபர் களும் வணிகர்களும் வெகு மக்களும் பொள்ளாச்சி மகாலிங்கம் போல் பெரு முதலாளியாக ஆக முடியாது. ஒரு சிலரால் தான் அவ்வாறு ஆக முடியும். அவர்களின் இன்றைய வாழ்வாதாரச் சிக்கலுக்கு காரணமான இந்து தேசியத்திடம் சரணடைவது தீர்வாகாது.

Pin It