2015-2016 ஆண்டுகளில் மதுரைக்கு மிக அருகில் வைகைக் கரையில் கீழடி என்னும் சிற்றூரில் இந்தியத் தொல்லாய்வுத் துறையின் தென்மாநிலங்களின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் 2 ஆண்டுக் காலம் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தடயப் பொருட்கள் அறிவியல் ரீதியில் காலக்கணிப்புச் செய்யப்படுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுப் பெற்ற முடிவுகளின்படி அவை 2160+30 மற்றும் 2200+30 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.
வைகை ஆற்றின் இருமருங்கிலும் 300க்கு மேற்பட்ட தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், 20 ஆண்டு காலத்திற்கு இந்த ஆய்வு நடைபெற்றால் மேலும் புதிய வரலாற்று உண்மைகள் வெளிவரும் எனவும் அமர்நாத் இராமகிருட்டிணன் அறிவித்த போது தமிழர்கள் மட்டுமல்ல, வரலாற்று அறிஞர்கள் பலரும் வரவேற்றுப் பாராட்டினர்.
2015ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த அகழாய்வின் விளைவாக 7,500க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களும், சுவர் அமைப்புகளும், கிணறுகளும், கழிவு நீரை வெளியேற்றும் மண் குழாய்களும் கண்டறியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள படி நகர்ப்புற நாகரிகத்தின் தடயங்களாக இவை விளங்குவதாய் அறிஞர்கள் கூறுகின்றனர். கீழடி நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அது சமயச் சார்பற்றது என்பதாகும். இங்கு கிடைத்த ஆயிரக்கணக்கான தொன்மைப் பொருட்களில் சமயச் சின்னங்களோ அல்லது சமயச் சடங்குகள் குறித்த பொருட்களோ கிடைக்கவில்லை.
“கீழடியில் தமிழி எழுத்துக்கள் அல்லது கிறுக்கல்களைக் கொண்ட ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை வரலாற்று முதன்மை வாய்ந்தவையாகும். சிந்து சமவெளி முத்திரைகளுக்கும், தமிழி எழுத்துகளுக்கும் இடையேயான இணைப்புச் சங்கிலியாகக் கீழடி பானைக் கீறல்களை நாம் பார்க்க முடியும்.
இந்தப் பானைக் கீறல்கள் சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்த பானைக் கீறல்களை ஒத்திருக்கின்றன. ஆகவே சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக கீழடி நாகரிகத்தை நாம் பார்க்க வேண்டும். இதே மாதிரியான கீறல்களைக் கொண்ட பானை ஓடுகள் இந்தியாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. ஆனால் பானைக் கீறல்களில் 75% தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கொற்கை, அழகன்குளம் ஆகியவற்றிலும் கிடைத்திருக்கின்றன. கீழடியில் தமிழி பொறிப்புகள் கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்துள்ளன. ஆகவே இவை தமிழி எழுத்துகளுக்கு முந்தியவையாகும்” என சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருட்டிணன் கூறியுள்ளார்.
கீழடியில் குதிரை இல்லை
கீழடியில் 70க்கு மேற்பட்ட எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. இவற்றைப் பகுப்பாய்வு செய்த போது திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப் பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களின் எலும்புகள் என அடையாளம் காணப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை, சிந்து சமவெளி நாகரிகத்திலும் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை. எனவே, இந்த இரு நாகரிகங்களும் ஆரியர் தொடர்பற்ற பூர்விகக் குடிகளின் நாகரிகமே என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே குதிரை அறிமுகமானது. மோசமான வானிலை மாற்றம். நதிகளின் போக்கு மாறியது அல்லது வெள்ளம், நீர் வற்றியது, அளவுக்கு அதிகமான பயன்பாட்டின் விளைவாக மண்ணின் வளம் குறைந்தது போன்ற இயற்கை விளைவுகளால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து 1000 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது கி.மு. 1900 ஆண்டிற்குப் பிறகே ஆரியர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தனர் என வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
கீழடி மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் மற்றும் பொருட்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மிகச் சிறப்பாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. மீன் சின்னம் பாண்டியர்களின் சின்னம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கீழடி சங்க கால மதுரையாகவோ அல்லது மதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்ததாகவோ இருக்க வேண்டும்.
தமிழர்களின் தொன்மையை நிலைநிறுத்தக் கூடிய இச்சான்றுகள் மற்றொரு உண்மையையும் வெளிப்படுத்தின. சங்ககால இலக்கியங்களான மதுரைக் காஞ்சி பழைய மதுரையின் சிறப்புகளையும், பட்டினப்பாலை பூம்புகார் நகரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறுகின்றன. சங்கமருவிய காலத்து இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மதுரை, பூம்புகார், வஞ்சி ஆகிய மூவேந்தர்களின் தலைநகரங்கள் குறித்து விளக்கமாகக் கூறுகின்றன. ஆனால் இலக்கியங்கள் கூறும் இந்த நகர்ப்புற நாகரிகங்கள் வெறும் கற்பனையே என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதினர். ஏனெனில் தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் சான்றுகள்
சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்புகள் செங்கற்களால் அமைக்கப்பட்ட தளங்கள், சுவர்கள், உறைக்கிணறு, வீட்டின் ஒரு பகுதி போன்றவை கண்டறியப்பட்டன. சிந்து நாகரிகக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் கண்டறியப்பட்ட மிகத் தொன்மையான நகர நாகரிகம் கீழடி தமிழர் நாகரிகம் என்ற மாபெரும் உண்மையைத் தனது அயராத உழைப்பினாலும் விடாமுயற்சினாலும் கண்டறிந்த அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் உடனடியாகத் தொலைத்தூரத்தில் உள்ள அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்து நடுவண் அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததைக் கண்ட இந்திய அரசு மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் துணைக் கண்காணிப்பாளர் சிறிராமன் என்பவரை அனுப்பி அவசர அவசரமாக ஒரே ஒரு குழியை மட்டும் தோண்டச் செய்து வேறு எந்தப் பொருளும் புதிதாகக் கிடைக்கவில்லை என அறிவிக்கச் செய்து கீழடி ஆய்வை முடிவுக்குக் கொண்டுவந்தது.
கீழடியில் கண்டறியப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்து புகழ்பெற்ற இந்திய வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் ”தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவையாகும். இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றையே திருத்தி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழர் தொன்மையை மறைக்க முயற்சி
அதே காலக்கட்டத்தில், அதாவது 2016 டிசம்பரில் அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைப்பதற்காக 150 கோடி ரூபாய்களை ஒதுக்கிய இந்திய அரசு கீழடியில் 3ஆம் கட்ட ஆய்வு நடத்துவதற்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாயை மட்டுமே ஒதுக்கியது. தமிழரின் வரலாற்றுத் தொன்மையைக் குறித்த இந்திய அரசின் அலட்சியப் போக்கையே இது காட்டுகிறது.
மீண்டும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கீழடி அகழாய்வினைத் தொடர்ந்து நடத்தினால் தமிழர்களின் தொன்மை வரலாறு வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய அரசு அதைத் தொடர விரும்பவில்லை எனத் தமிழர்கள் கருதினர். குசராத் மாநிலத் தோலா வீரா, லோத்தல் ஆகிய இடங்களில் 13 ஆண்டுகளும், ஆந்திர மாநிலத்தில் நாகார்ச்சுன கொண்டா என்ற இடத்தில் 10 ஆண்டுகளும், உத்திர பிரதேசத்தில் அதிசுசித்ரா என்னும் இடத்தில் 6 ஆண்டுகளும், அகழாய்வைத் தொடர்ந்து நடத்த அனுமதியும் அதற்கான நிதியும் ஒதுக்கிய இந்திய அரசு கீழடியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டிய அகழாய்வினை 2 ஆண்டுகள் மட்டும் நடத்தி அவசர அவசரமாக முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டும், தமிழரின் தொன்மை வரலாற்றினை வெளிப்படுத்திய தொல்லாய்வுத் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை இடமாற்றம் செய்தும் ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் துணைக் கண்காணிப்பாளர் தகுதியில் ஒருவரை நியமித்து புதிய தடயம் எதுவும் இனி கிடைக்க வழியில்லை என்று கூறி கீழடி அகழாய்வினை முடிவுக்குக் கொண்டுவந்தது ஏன்?
அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிசிசு ஆய்வு நிறுவனத்திற்குத் தொல்லியல் தடயங்கள் அனுப்பப்பட்டு ஆராயப்படுவது வழக்கமாகும். அகழாய்வில் கிடைக்கும் பொருட்களில் எத்தனைப் பொருட்களின் மூலக்கூறுகளின் மாதிரிகளை கார்பன்-14 பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்தியத் தொல்லியல் துறைதான் முடிவு செய்கிறது.
இராசசுதான் மாநிலத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவற்றுள் 28 பொருட்களின் மாதிரிகளும், குசராத் மாநிலத்தில் கிடைத்தவற்றில் 20 பொருட்களின் மாதிரிகளும், உத்திரபிரதேசத்தில் கிடைத்தவற்றில் 15 மாதிரிப் பொருட்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், கீழடியில் கிடைத்த மூலப்பொருட்களில் குறைந்தளவு 10 பொருட்களையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்து இரண்டே இரண்டு பொருட்கள் மட்டுமே ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு மத்தியத் தொல்லாய்வு துறையால் அனுப்பி வைக்கப்பட்டன.
இரும்புக் காலத்தில் தொடங்கி வரலாற்று ரீதியில் முதன்மையான ஆதாரங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ள இடம் கீழடியாகும். இந்த ஆதாரங்களின் மாதிரிகள் கார்பன்-14 முறையில் பகுப்பாய்வு செய்யப்படும் போதுதான் கீழடி நாகரிகத்தின் கால வளர்ச்சியை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நிறுவ முடியும். தமிழர்களின் தொன்மையான நாகரிகம் அவ்வாறு நிறுவப்படுவதை இந்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் கீழடியில் கிடைத்தவற்றுள் அதிகமான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப மறுத்திருப்பதின் மூலம் அவர்களின் திட்டமிட்ட உள்நோக்கம் வெளிப்படுகிறது.
தமிழர் நகர்ப்புற நாகரிகத்தின் தொன்மையை முதன் முதலாக வெளிப்படுத்திய இடம் கீழடியாகும். வரலாற்று ரீதியில் மிக முதன்மைப் பெற்ற இந்த ஆய்வினைத் தொடர்ந்து நடத்தி முழுமையான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் யாராக இருந்தாலும் கருதுவார்கள். ஆனால் இந்தியாவின் முதன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை மறைத்து ஆரிய நாகரிகத்தை முதன்மைப்படுத்தப் பலவற்றாலும் முயலும் இந்திய அரசிடமிருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.
இந்திய அரசின் இச்செயலுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உருவான எதிர்ப்பின் விளைவாக மத்திய கலாசாரத் துறையின் இணையமைச்சர் மகேசுவர்மா, மத்திய வணிக-தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் இராகேசு திவாரி ஆகியோர் 28-04-2017 அன்று கீழடி வந்து பார்வையிட்டனர். கீழடி ஆய்வு மேலும் 3 ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் அறிவித்தனர். ஆனால் வெறும் அறிவிப்போடு அது நின்று விட்டது.
கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தொல்லியல் மேட்டில் வெறும் 15%க்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வை நடத்தினால் எத்தகைய முடிவையும் நிறுவுதல் இயலாத ஒன்றாகும். எனவேதான் இத்தகைய நெருக்கடியை ஆய்வாளரான அமர்நாத் இராமகிருட்டிணனுக்கு அளித்து அவர் அறிக்கை அளிக்கவில்லை என்ற பழியைச் சுமத்தி கீழடி அகழாய்வினை முடிவுக்குக் கொண்டுவர இந்தியத் தொல்லியல் துறை துடித்தது. ஏன் இந்தத் துடிப்பு? என்பது போன்ற கேள்விகளையும், ஐயப்பாடுகளையும், தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களும், கட்சித் தலைவர்களும், எழுப்பிய பிறகு இந்திய அரசு பணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
21-09-2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கனிமொழி மதி என்னும் வழக்கறிஞர் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் எனத் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான எம். சுந்தரேசு, என். சதிசு குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்து இருவரும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வினைப் பார்வையிட்டனர்.
அவர்கள் தொடுத்த பல்வேறு கேள்விகளுக்குச் சரியான விடைகளைச் சொல்ல முடியாமல் துணைக் கண்காணிப்பாளர் சிறிராமன் மழுப்பினார். அதன் பின் கீழடி அகழாய்வினைத் தொடர்ந்து நடத்துவதற்கு மத்தியத் தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். தமிழக அரசு அதை ஏற்றுச் செயல்படத் தொடங்கியது அனைத்துப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது.
இதைக் கூட அறியாமல் தி.மு.கவைச்சேர்ந்த கனிமொழி இந்த வழக்கைத் தொடுத்ததாகக் குற்றம் சாட்டி இந்து வெறியர்கள் பரப்புரை செய்கின்றனர். அவருக்கும் வழக்குத்தொடுத்த கனிமொழி மதி என்னும் வழக்கறிஞருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என வழக்குத் தொடுத்து வெற்றிக் கண்ட பெருமை இவ்வழக்கறிஞருக்கு மட்டுமே உரியது.
தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. 2018ஆம் ஆண்டில் கீழடியில் நடைபெற்ற 5ஆம், 6ஆம் கட்டங்களின் அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனைக்கு அனுப்பபட்டு அவை 2,580 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று அங்கு கணித்துக் கூறியுள்ளனர்.
அதாவது கீழடியின் நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டது. முதல் இரு கட்ட கீழடி ஆய்வுகளின் மூலம் கிடைத்தப் பொருட்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு உரியவை என்பது வெளிப்பட்டது. கீழடியில் 4ஆம், 5ஆம் கட்டங்களின் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்பட்டது.
வைகைக்கரை நகர நாகரிகம், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து ஆகியவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் ஆனவை என்பது தெள்ளத் தெளிவாக நிலைநிறுத்தப்பெற்றது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாகத் திகழ்ந்துள்ளனர் என்பதும் தமிழ்மொழியின் தொன்மை குறித்து அறிஞர் சிலர் கூறிவரும் கருதுகோள்கள் உண்மையானவை என்பதற்குக் கீழடி ஆய்வின் முடிவு சான்றாக அமைந்துள்ளது எனத் தொல்லியல் துறை அறிஞரான கா. இராசன் கூறியுள்ளார்.
தமிழரும் சமயமும்
தமிழர் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்திய கீழடியின் அகழாய்வினைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த இந்து வெறியாளர்களும் அவர்களின் கொத்தடிமைகளாகத் திகழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் தங்களின் கோபத்தினை அமர்நாத் இராமகிருட்டிணன் மீது திருப்பியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாறு, தமிழர் வரலாறு ஆகியவை குறித்து சிறிதளவுக் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை.
கீழடி ஆய்வில் கிடைத்த சான்றுகளின்படி, கீழடியில் வாழ்ந்த தமிழர்களுக்கு இறைவழிபாடில்லை, மத நம்பிக்கையில்லை, எனவே தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பது போன்ற கருத்துக்களை கீழடி ஆய்வாளர்கள் வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி தங்களது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர். மதவெறி கண்ணோட்டத்துடன் எந்தப் பிரச்சனையும் அணுகுபவர்கள் கீழடி ஆய்வினையும் அதே கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள்.
சங்க கால இலக்கியங்களில் சமயம் அல்லது மதம் என்ற சொல்லாட்சியே கிடையாது. சமயம் என்னும் சொல்லாட்சி முதன் முதலாக 3ஆம் நூற்றாண்டுக் காலத்திய மணிமேகலையில்தான் காணப்படுகிறது.
“மூதூர் அகத்து
அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு”
“உன்னிய பொருளுரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனன்”
“நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்
செவ்விது அன்மையிற் சிந்தையின் வைத்திலேன்”
சங்க இலக்கியத்தை அடுத்து 8ஆம் நூற்றாண்டு காலத்திய மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் சமயம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.
சமயம் என்ற சொல்லாட்சியே நமது சங்க இலக்கியங்களில் காணப்படாத போது பழந்தமிழர்களிடம் சமய உணர்வுகள் இருந்தன எனக் கூறுவது வரலாற்று அறியாமையின் வெளிப்பாடாகும்.
சங்க இலக்கியத்தில் கடவுள், தெய்வம் என்னும் இரண்டு சொற்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் வழிபட்ட அனைத்தையும் குறிப்பிடுவதாக இச்சொற்கள் அமைந்துள்ளன. கடவுள் என்னும் சொல்லுக்கு தெய்வம் என்னும் சொல்லோடு மேன்மை, சான்றோர், துறவிகள், நடுகல் வீரர்கள் என்ற பொருள்களும் கூறப்பட்டன.
இனக்குழுக்களாகத் தமிழர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்தில் மன்றம் என்ற பெயரிலான அமைப்பு நிலவியது. இது குறித்து தமிழறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் பின்வருமாறு கூறியுள்ளார்.
மன்றம் என்பது ஊருக்கு வரும் கலைஞர்கள் தங்கும் இடமாகவும் சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் பயன்பட்டுள்ளது. அத்துடன் வழிபடும் இடமாகவும் இது விளங்கியுள்ளது. மேல்நிலை ஆவியத்தின் வளர்ச்சி நிலையாக, தெய்வம் உறைவதாக நம்பி மரங்களை இங்கு வழிபட்டதன் அடையாளமாக “மன்ற” என்னும் அடைமொழியிட்டு மன்ற வேம்பு, மன்றப் பலவு, மன்றப் பெண்ணை (நற்றிணை 303), மன்ற வேங்கை (குறுந்தொகை 241; அகநானூறு 232) என்ற சொல்லாட்சியைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. அத்துடன் கோவில் போன்ற அமைப்பு மன்றத்தில் இருந்ததையும் அணங்கு, சூர், முருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உருவமற்ற தெய்வங்களை வணங்கும் செயல் தொடங்கி விட்டதையும் அறிய முடிகிறது.
நடுகல்லிலும் ”கள்ளி நிழலிலும்” மர வடிவில் மன்றங்களிலும் அணங்கு என்ற பெயரில் பல்வேறு பொருள்களிலும் உறைவதாக நம்பி வழிபட்ட தொல் கடவுளர்களுக்கு மாற்றாகக் கட்டட வடிவிலான கோயில்களில் புதிய கடவுளர்கள் இடம்பெறத் தொடங்கினர். திணைச் சமூகத்தின் அழிவு, திணைக்குரிய தெய்வங்களின் அழிவுக்கு இட்டுச் சென்றது. புதியதாக உருவான சிறப்புக் கடவுளர் உறைய “கோட்டம்” என்ற பெயரிலான கோவில்கள் உருவாயின. அரசன் வாழும் அரண்மனையும் தெய்வம் உறைவதாக நம்பும் கோட்டமும் கோவில் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்பட்டன. கோவில், இறை என்ற கடவுளுடன் தொடர்புடைய இருசொற்களும் மன்னனுடன் தொடர்புபடுத்தப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.
ஊரிலுள்ள மன்றத்தில் சுவர் எழுப்பியும், அதில் விட்டங்கள் வைத்தும், கூரை வேய்ந்தும் கோவில் உருவாக்கப்பட்டதையும் அதில் ஓவியமாகக் கடவுள் வடிவம் வரையப்பட்டிருந்ததையும், அவ்வுருவின் முன் “இட்டிகை” என்ற பெயரில் பலிபீடம் அமைத்துப் பலி கொடுத்ததையும் அகநானூறு பின்வருமாறு விரிவாகக் குறிப்பிடுகிறது.(137:9-20):
”கொடுவில் ஆடவர் படபகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர்எடு முதுபாழ்
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்திணைப்
பால் நாய் துள்ளிய மறைக்கட் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே”
மனித சமூக வளர்ச்சியில் தொடக்க கால நுண்கலையாக ஓவியம் அமைகிறது என்பதன் அடிப்படையில் நோக்கினால், ஆவி என்ற ஆற்றலுக்கு உருவம் அமைக்கும் முயற்சியினை இப்பாடல் செய்தி உணர்த்துகிறது. மானிடவியலாளரின் நோக்கில் கடவுளுக்கு மனித உருவேற்றம் (Anthropomorphic) வழங்கும் நிகழ்ச்சியின் வெளிப்பாடாக இதைக் கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளனர்.
எனவே பழந்தமிழர்களிடையே சமய உணர்வோ அல்லது சமயவழி தெய்வ வழிபாடோ இருக்கவில்லை. திணைவழித் தெய்வவழிபாடுகள் நிலவின. குறிஞ்சி நிலத்திற்கு முருகனும், முல்லை நிலத்திற்கு மாயோனும், மருத நிலத்திற்கு வேந்தனும், நெய்தல் நிலத்திற்கு வருணனும், பாலை நிலத்திற்குக் கொற்றவையும் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். இத்தெய்வங்கள் எச்சமயத்தையும் சேர்ந்தவையல்ல. அந்தந்த நிலங்களுக்குரிய தெய்வங்களாகத் திகழ்ந்தன. இதற்குப்பிறகு உருவமற்ற அணங்கு, சூர், முருகு போன்ற தெய்வங்கள் உறையும் இடங்கள் கோட்டங்கள் என அழைக்கப்பட்டன. இவற்றின் வளர்ச்சி நிலையை சங்கப் பிற்கால இலக்கியமான சிலப்பதிகாரம் விரிவாகக் கூறுகிறது.
தமிழரின் இயற்கை நெறி
கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் வடநாட்டைச் சேர்ந்த வைதிகம், சமணம், பெளத்தம் போன்ற சமயங்கள் தமிழ்நாட்டில் புகுந்தன என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இச்சமயங்கள் தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வரைத் தமிழக மக்களிடையே சமயக் கோட்பாடுகளோ, சமயவழி வழிபாடுகளோ இருக்கவில்லை.
கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் கால் கொண்ட பிறகு வடபுல ஆரியர்களின் குடியேற்றமும் கோயில்களில் அவர்கள் நுழைவும் தமிழர்களின் தொல்வழிபாட்டு முறையைச் சிதைத்தது. ஆனாலும் தொல் தமிழர்களின் தெய்வங்கள் இன்றும் நாட்டார் தெய்வங்கள் எனப் போற்றி வணங்கப்படுகின்றன. இன்றும் குலதெய்வம் என்ற பெயரில் தமிழர்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் போன்றவற்றுக்கு குலதெய்வக் கோயிலில் முதலில் வழிபட்ட பிறகே மற்றவற்றைச் செய்யும் பழக்கம் நீடிக்கிறது.
சங்க காலத் தமிழகத்தில் இயற்கை நெறி போற்றப்பட்ட காலத்தில் வடநாட்டில் சமயநெறி போற்றப்பட்டது. தமிழர் வாழ்வில் சமயம் முக்கிய இடம் பெறவில்லை. ஆனால், வடக்கே வைதிகம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்களும் அவற்றுக்கிடையே சச்சரவுகளும் பரவியிருந்தன. வட நாட்டிலிருந்து இந்தச் சமயங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாகத் தமிழர் வாழ்வில் ஆன்மீக ஈடேற்றம் என்பது வாழ்வின் நோக்கமாக அமையவில்லை.
வரலாற்றுத் திரிபு
இத்தகைய வரலாற்று உண்மைகளை அறியாதவர்கள் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ஆர்.எசு.எசு. அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான பாரதிய விசார கேந்திரம் என்ற அமைப்பு கேரள மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் கேசரி என்னும் இதழிலும் பா.ச.க.வின் இதழான விசய வாணி என்னும் இதழிலும் கீழடி ஆய்வுகள் குறித்து முற்றிலும் பொய்யானதும் ஆதாரமற்றதுமான கட்டுக்கதைகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றையே தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து வெறியர்கள் சிலரும் இங்கு பரப்புகிறார்கள்.
வரலாற்றைப் திரித்தலிலும் முற்றிலும் பொய்மையான வரலாற்றை எழுதுவதிலும் இந்து வெறியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியரின் இந்திய வருகைக்கு முற்பட்ட நாகரிகம் என்பது இந்திய மற்றும் உலக வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். ஐரோப்பிய கிறித்துவ அறிஞர்கள் திட்டமிட்டுப் பரப்பும் கட்டுக்கதை இது என இந்து வெறியர்கள் தொடர்ந்துக் கூறிவருகிறார்கள்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் பெயரையே சரசுவதி நாகரிகம் என மாற்ற முயலுகிறார்கள். ரிக் வேதத்தில் சரசுவதி நதி குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர இந்தியாவில் எந்தப் பகுதியிலும் சரசுவதி நதி ஓடவில்லை. ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. இல்லாத சரசுவதிநதியின் பெயரால் ஆரிய நாகரிகத்தை சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது சுமத்த இடைவிடாது முயற்சி செய்கிறார்கள்.
11-07-1999 அன்று என்.எசு. இராசாராம் முனைவர் நட்பர் சா ஆகிய இருவர் பரப்பரப்பான ஒரு செய்தியை வெளியிட்டார்கள். சிந்து சமவெளி முத்திரைகள் சொல்லும் செய்தியைத் தாங்கள் கண்டறிந்து விட்டதாகப் பின்வருமாறு கூறினார்கள். “ஆர்வர்டு பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சி அறிஞரான ரிச்சர்டு மீடோ என்பவர் கண்டெடுத்த பானை ஓடு ஒன்றில் சில சின்னங்கள் குறிக்கப்பட்டு இருந்தன. அவை கூறுவது என்ன என்பதை எங்களது ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி நதியையே இது குறிக்கிறது” என அறிவித்தார்கள்.
இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் பொய்யானது என்பது விரைவில் வெளியாகி விட்டது. ரிக் வேதம் தோன்றிய காலத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் இந்தப் பானை ஓடு. இந்த உண்மையை மறைத்து அவர்கள் கூறிய பொய் அம்பலமானது. ரிக் வேதம் தோன்றாத காலத்திலேயே அதைப் பற்றிய குறிப்பு சிந்து சமவெளிப் பானை ஓட்டில் உள்ளது என்று அவர்கள் கூறியதைக் கேட்டு வரலாற்று அறிஞர்கள் நகைத்தார்கள்.
மற்றொரு அப்பட்டமான பொய்யையும் சற்றும் கூசாது அவர்கள் கூறினார்கள். ரிக் வேதம் குதிரைகளையும், ரதங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் குதிரையைப் பற்றிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி நாகரிகம் இயற்கைக் காரணங்களினால் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஆரியர்கள் குதிரைகளை ஓட்டிக் கொண்டு இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தார்கள் என்பது வரலாறாகும். இந்த உண்மையை மறைப்பதற்காக குதிரையின் எலும்பு சிந்து சமவெளியில் கிடைத்தது என்று கூறுவதின் மூலம் அந்நாகரிகத்தையே ஆரிய நாகரிகமாகக் காட்டுவதற்குத் திட்டமிட்டு பொய்யான தடயங்களை உருவாக்கினார்கள். சிந்து சமவெளி முத்திரைகளில் குதிரையைக் குறிக்கும் முத்திரை ஒன்று உள்ளது என்று கூறி அதன் படத்தையும் வெளியிட்டார்கள்.
இதன் விளைவாகப் பெரும் குழப்பம் உருவாயிற்று ஆர்வர்டு பல்கலைக்கழக சமற்கிருதப் பேராசிரியரான மைக்கேல் விட்செல் அவர்களும் மற்றும் சில ஆய்வாளர்களும் இராசாராம் கூறிய குதிரை முத்திரை குறித்த உண்மையைக் கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒற்றைக் கொம்புடைய காளை சின்னம் பொறிக்கப்பட்ட உடைந்த முத்திரையின் படம் ஒன்றைக் கணினி மூலம் திரித்து குதிரை என அவர் மோசடிச் செய்திருப்பதைக் கண்டுப்பிடித்து அம்பலப்படுத்தினார்கள்.
சிந்து சமவெளி மக்கள் பேசிய மொழி வேதகாலச் சமற்கிருதம் என இராசாராம் கூறியிருந்தார். இக்கூற்றினை சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ந்த பல அறிஞர்கள் ஆதாரத்துடன் மறுத்தனர். தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் பொய்யானவை, முற்றிலும் தவறானவை என ஆராய்ச்சி அறிஞர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டாலும் அவர் அது குறித்து வெட்கப்படவில்லை. தான் எழுதிய “சரசுவதி நதியிலிருந்து சிந்து எழுத்துக்கள் வரை என்னும் நூலை ஆங்கிலத்திலும் இந்தியாவில் உள்ள 13 மொழிகளிலும் வெளியிட பா.ச.க அரசு முன்வந்திருப்பதாக" அவர் கூறிக் கொண்டார்.
வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் “இந்துத்துவாவும் வரலாறும்” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஆரியர்கள் அன்னிய படையெடுப்பாளர்கள் என்பதை மறைக்க இந்துத்துவாதிகள் விரும்புகிறார்கள். இந்து என்பவன் இந்தியாவைத் தனது பித்ரு பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் ஏற்றுக்கொண்டவன் என இந்துத்துவாத் தத்துவத்தை உருவாக்கிய சாவர்க்கார் கூறியுள்ளார்.
எனவே, அன்னிய படைப்பாளரிடமிருந்து ஒரு இந்து தோன்றியிருக்க முடியாது. ஆரிய கலாசாரப் பாரம்பரியத்திலிருந்து இந்துக்கள் தோன்றியதாகக் கூற வேண்டுமானால், ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். எனவே அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றும் அதற்கு முற்பட்டு அல்லது அந்த நாகரிகக் காலத்தில் பிறந்தது ரிக் வேதம் என்றும் சாதிக்க விரும்புகிறார்கள். இதற்காகவே சிந்து சமவெளி நாகரிகத்தில் குதிரை இருந்ததென்றும், அம்மக்கள் சமற்கிருதம் பேசினார்கள் என்றும் பச்சைப் பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள்.
ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய வந்தேறிகள் என்ற வரலாற்று உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்தால் வேறுசில கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியிருக்கும். ஆரியர்களின் மொழியும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களின் பல்வேறு மக்களின் மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஆரியர்கள் வெளியிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தால் ஐரோப்பிய நாட்டு மக்கள் இந்தியாவிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் எனக் கருத வேண்டியிருக்கும். இதைப்போல மேலும் பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்ல நேரும் எனக் கூறினார்.
பா.ச.க. அரசின் சுற்றுலா - கலாசாரத் துறையமைச்சராகயிருந்த சக்மோகன் என்பவர் சரசுவதி நதி குறித்து அகழ்வாராய்ச்சி செய்யக் குழுவை அமைத்து நிதியும் ஒதுக்கினார். இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தலைமை இயக்குநராகயிருந்த லால் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு “அரியானா- பஞ்சாபில் ஓடி சர்சா என்னும் இடத்தில் வற்றிப் போன காகர் நதிதான் சரசுவதி நதி” எனப் பொய்யான கட்டுக்கதையை வெளியிட்டது.
புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி அறிஞரான சூரசுவான் என்பவர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆப்கானிசுதானில் உள்ள ஆரக்வதி நதியே ஆகும். என்பதை எடுத்துக் கூறி சரசுவதி நதிப் பொய்மையை உடைத்தெறிந்தார். இப்படித் தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து மூக்குடைப்பட்டு வரும் இந்து வெறியர்கள் கீழடி நாகரிகத்தையும் திரித்து கூற முற்பட்டுள்ளனர்.
சேரன் முசிறி
கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் என்னும் இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அறியப்பட்ட முடிவுகளும் கீழடி முடிவுகளும் ஒன்றாக அமைந்துள்ளன என பி.செ. செரியன் என்னும் ஆய்வாளர் தெரிவித்தார். பட்டணம் என்பது பண்டைய சேர நாட்டு முசிறித் துறைமுகமாகும். கிரேக்கம், ரோமாபுரி போன்ற மேற்கு நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பினை முசிறித் துறைமுகத்தின் மூலம் அந்த நாளில் செய்து வந்தனர். எனவே அங்கு அகழாய்வில் கிடைத்த தடயங்களும், கீழடித் தடயங்களும் ஒரே மாதிரியாக இருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. இது வரலாற்று அடிப்படையிலான உண்மையாகும். இதைக்கூட இந்து வெறியர்கள் திரித்துக் கூற முற்பட்டுள்ளனர். (பண்டைய சேரநாடு தமிழ் பேசும் நாடாக விளங்கியது. கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.)
அறியாமையின் உச்சக்கட்டம்
இயேசு கிறித்துவின் சீடரான தாமசு முசிறியில் வந்து இறங்கி கிறித்துவ மதத்தைப் பரப்புரைச் செய்தார் என்பதை நிலைநாட்டுவதற்காக செரியன் போன்ற கிறித்துவர்கள் முயற்சி செய்வதாக நகைப்புக்கு இடமான செய்தியை இந்து வெறியர்கள் பரப்புகின்றனர். கீழடி மற்றும் முசிறி ஆகியவற்றின் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டாகும். அதாவது இயேசு கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என்பதைக் கூட உணராமல் மதவெறியில் எதை எதையோ உளறிக்கொட்டித் தங்களின் அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கீழடி, முசிறி ஆகிய இடங்களில் கிடைத்த தடயங்களின் மூலம் இந்தியாவைப் பிளவுப்படுத்த சதி நடைபெறுவதாக இந்து வெறியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திராவிடக் கட்சிகள் கீழடி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்றும், இந்து வெறியர்கள் பாரத நாகரிகம் என்றும் திரித்துக் கூற முற்படுகின்றனர். வரலாற்று அறிவு குறைந்தளவுக்குக் கூட இவர்களுக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் திருஞானசம்பந்தரைப் பற்றி கூறும் போது திராவிட சிசு எனக் குறிப்பிட்டார். முதன் முதலாக திராவிடம் என்னும் சொல் அப்போதுதான் குறிப்பிடப்படுகிறது. இதற்கு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி தமிழர் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று சொல்வது அறியாமையின் உச்சக் கட்டமாகும். அதைப் போல பாரத நாகரிகம் எனக் கூறுவதும் தவறாகும். பாரதம் என்னும் சொல் மகாபாரதக் காலத்திற்கு பிறகே வழக்குக்கு வந்த சொல்லாகும். இந்தியா என்ற சொல்லோ ஆங்கிலேயர் வரவுக்குப் பிறகு அவர்கள் காலத்தில் கூறப்பட்ட பெயராகும். இதற்கெல்லாம் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்களின் உண்மையான நாகரிகத்தை இந்திய நாகரிகம் என்று இவர்கள் கருதுவது உண்மையானால், அதை மூடி மறைக்க முயலுவது ஏன்?
மரபியல் மேலாண்மை
கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் குறித்து தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் துணைப் பேராசிரியர் வீ. செல்வகுமார் “நமது மரபியல் மேலாண்மை பாதுகாக்கப்பட வேண்டும், அகழ்வது மட்டும் போதுமானது அல்ல. அதன்மூலம் அறியப்படும் தரவுகளைப் பாதுகாத்து அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டியது முதன்மையானதாகும். நமது பண்பாட்டுப் பெருமையைச் சொல்லும் தரவுகளை வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் அழகாகக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு நாம் இன்னும் செயல்படவில்லை.
”தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கங்கைகொண்ட சோழபுரம், அழகன்குளம், அரிக்கமேடு, கீழடி போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு மக்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொல்லியல் இடங்களில் அகழாய்வுகள் செய்ய முடியும். இவற்றிற்குத் தேவையான நிதியை யுனெசுகோ போன்ற அமைப்புகளிடமிருந்து பெற முடியும். இவ்வாறு அமைக்கப்படும் அருங்காட்சியகங்களில் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் வரலாற்று பாடத்தில் தொல்லியலையும் சேர்க்க வேண்டும். இதன்மூலம் நமது மரபையே நமக்கான வளமாகக் கொள்ள முடியும். இவற்றைத் திறம்படச் செய்து முடிப்பதற்குத் தொல்லியல் துறை, அருங்காட்சியகத் துறை, அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, உயர்கல்வித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து மரபியல் மேலாண்மை முறைமையை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளதைச் செயற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
மறைப்பு-1 - கொடுமணம்
தற்போது உள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமணம் அமைந்துள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் துறையைச் சேர்ந்த புலவர் செ. இராசு 1985ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இங்கு மேற்கொண்ட அகழாய்வில், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையும் சென்னைப் பல்கலைக் கழக ஆய்வுத் துறையும் பங்கு கொண்டன. கொடுமணம் அகழாய்வு பெருங்கற்படை சின்னங்களிலிருந்தும், பானை ஓடுகளிலிருந்தும் கிடைத்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துகளாகும். இதிலிருந்து பல செய்திகள் கிடைத்துள்ளன.
பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ள கொடுமணம் என்ற ஊரே தற்போது கொடுமணல் என வழங்கப்படுகிறது என்பதும் தெரிகிறது. தன்னைப் பாடிய புலவர்களுக்குக் கொடுமணத்தில் செய்யப்பட்ட அணிகலன்களைச் சேர மன்னன் பரிசாக அளித்தான் என்பது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வூரில் ரோமாபுரி நாணயங்களும் மேலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கருப்பு-சிவப்பு மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
இவை கி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இப்போதைய கரூருக்கு மிக அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள பாடியூர், ரோம் அரசுடன் மிக அதிகமான வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. படிகப் பச்சை, படிகக் கல், சூதுபவளம், நீலம் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அணிகலன்கள் இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
கரூருக்கு அருகே இருக்கக் கூடிய அமராவதி ஆற்றில் கடந்த நூறாண்டு காலமாக ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொடுமணம், பாடியூர் ஆகிய ஊர்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த சங்க காலச் சேரர்களின் தலைநகராக இருந்த கருவூர் இப்போதைய கரூர் நகரத்தின் அருகில்தான் அமைந்திருக்க வேண்டும். அதை அகழ்வாராய்ச்சின் மூலம் தேடிக் கண்டறியும் பணியினை மத்திய தொல்லாய்வுய்த் துறை இதுவரை மேற்கொள்ளவில்லை. தமிழரின் தொன்மையான நாகரிகம் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்கான மறைப்பு வேலையே இதுவாகும்.
மறைப்பு-2 - ஆதிச்சநல்லூர்
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கொற்கையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
1876ஆம் ஆண்டு முனைவர் சாகர் என்னும் ஜெர்மானியரும் 1904ஆம் ஆண்டு லூயிஸ் லேபிக்யூ என்னும் பிரெஞ்சுக்காரரும் முதன் முதலாக இங்கு அகழாய்வு செய்த போது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்று விட்டனர்.
1889 முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு நடத்தி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இதற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இடமும் கிடையாது என அறிவித்தார். இவருடைய முயற்சியில் 4000த்திற்கும் மேற்பட்ட பழம்பொருட்களைக் கண்டெடுத்தார். இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாத்திரங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், தங்க நகைகள், பல்வேறு வகையான மணிகள், மாவு அரைக்கும் கல் இயந்திரங்கள், விளக்குகள் போன்றவற்றைக் கண்டெடுத்தார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் போது 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் அவற்றுக்குள் மனித எலும்புகளும் கிடைத்தன. 144 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள். இவை 3,800 ஆண்டிற்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இவற்றில் தமிழ் பிராமி எழுத்தில் குறியீடுகளும் இருந்தன. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கருகே மக்கள் வாழ்ந்த நகரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடரவில்லை.
இங்கு பணியாற்றிய தொல்லியல் அதிகாரி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் தான் செய்த அகழ்வாராய்ச்சிகள் குறித்த அறிக்கையினை அவர் கொடுக்காமலேயே சென்று விட்டாரா? அல்லது கொடுத்தும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டு விட்டதா? மேற்கண்ட அதிகாரி அதைக் கொடுக்க வில்லை என்றால் அவர் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
முன்னாள் அதிகாரி அறிக்கையைக் கொடுக்காமல் சென்றிருந்தால் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட அதிகாரிகளைக் கொண்டு அந்த அறிக்கையை மத்தியத் தொல்லியல் துறை உருவாக்கியிருக்க வேண்டும். பின்னர் அதை வெளியிட்டும் இருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட எதுவுமே செய்யப்படாதது பல்வேறு கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் இடமளிக்கிறது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மறைக்கும் முயற்சியே இதுவாகும்.
மறைப்பு-3 - பூம்புகார்
சங்க இலக்கியங்களிலும், சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்படும் சோழர் தலைநகரமான பூம்புகார் கடல் கோளில் அழிந்து போனது.
1991ஆம் ஆண்டில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் புகழ்பெற்ற பூம்புகார் நகரக் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடற்பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் தரங்கம்பாடி வரை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கற்களால் ஆன ட வடிவக் கட்டிடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் 23 அடி ஆழத்தில் 85 அடி நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் ஒரு பெரிய நகரம் மூழ்கிக் கிடக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தின. ஆனால், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தனது ஆய்வினைப் பாதியில் நிறுத்தி விட்டது.
2001ஆம் ஆண்டில் பூம்புகார் கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஆன்காக் என்பவர் தீவிரமாக ஆராய்ந்து கடலுக்கு அருகில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதைக் கண்டறிந்தார். இதனுடைய காலம் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார். அந்நகரம் சுமார் 75 அடி ஆழத்தில் புதைந்து கிடப்பதைக் கண்டறிந்தார். பூம்புகார் நகர நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் அவர் கூறினார்.
இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. சங்க காலப் படகுத்துறை, புத்த விகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டிடங்கள், பழங்காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றும் அதற்குள் 10க்கும் மேற்பட்ட சிறுசிறு கலயங்களும் கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு கலயத்தில் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். கருப்பு, சிவப்பு நிறம் என்பது கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது.
ஆனாலும், கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறவில்லை. கிரகாம் ஆன்காக்கின் ஆய்விற்குப் பிறகு இந்த ஆழ்கடல் ஆய்வு இந்திய அரசால் தொடரப்படவில்லை.
ஆனால், பாரதகால கிருட்டிணனின் தலைநகரமாக விளங்கியதாகக் கூறப்படும் துவாரகா நகரம் கடலுள் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தேடிக் கண்டறியும் பணியில் மத்திய அரசின் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் பூம்புகாரில் கடலுள் 75 அடி ஆழத்தில் மூழ்கிய நகரம் ஒன்றின் தடயங்களை மேனாட்டு அறிஞர் கண்டுபிடித்து அதற்கான சான்றுகளுடன் கூறிய பிறகும் கூட அந்த ஆய்வினைத் தொடர்ந்து நடத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழரின் தொன்மை வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்கான தொடர் மறைப்பு முயற்சியே இதுவாகும்.
- பழ. நெடுமாறன்