கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘தலித் முரசு’ தன் பாதை மாறாமல் தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ‘கீற்று’ இணையதளத்திற்காக நேர்காணல் வேண்டும் என்றபோது, நழுவிச் சென்றவரை தோழமையுடன் அவரது அலுவலகத்திலேயே மடக்கிப் பிடித்தோம். பூங்குழலி, நந்தன் மற்றும் மினர்வாவின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய குடும்பப் பின்னணி குறித்து...?

Punithapandianசாதாரண நடுத்தரக் குடும்பம் என்னுடையது. என்னுடைய அப்பாவுக்கு என்னை கலெக்டராக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. எனக்கும் கலெக்டர் ஆக விருப்பம்தான். ஆனால் பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்ததால் கனவு தகர்ந்தது.

பிளஸ்டூ தோல்வியால் ஒரு வருடம் வீட்டில் இருக்கும் போது அதிகநேரம் நூலகத்தில் செலவிட வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று பத்திரிக்கைகள், புத்தகங்கள் படிப்பது மூலம் சமூகம் சார்ந்த பார்வை வளர்ந்தது. அடிப்படையாகவே எனக்கு கல்வி முறை மீது ஒரு கோபம் இருந்தது. ஒரு வருட காலத்தில் படித்த படிப்பை வெறும் மூன்று மணிநேரம் எழுதும் தேர்வை வைத்து நிர்ணயிப்பது, வருடம் முழுவதும் படிக்காமல் கூட அந்த மூன்று மணிநேரம் மட்டும் நன்றாக எழுதிவிட்டால் தேர்வில் வெற்றி, முதல் மதிப்பெண் பெறுவது - ஆகியவை எல்லாம் எனக்கு பெரிய முரண்பாடுகளாகத் தோன்றியது.

பள்ளி படிப்பை முடித்ததும் வேலூர் ஊரிசுக் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தபின் பேராசிரியர் இளங்கோவன் எடுத்த முதல் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. என் சிந்தனையில் என்ன இருக்கிறதோ, அதை அவர் கேள்வியாக கேட்டார். சமூகம் சார்ந்து பல கருத்துகளை முன் வைத்தார். எங்கோ நான் தேடிக்கொண்டிருக்கின்ற விஷயம் அவர் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடைத்தது. அவருடன் அதிக நேரம் உரையாடுவேன். சமூகம், வாழ்க்கை என்பது என்ன? சமூகத்திற்கு பயன்படும் வகையில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிறைய சொல்வார்.

இளநிலை படிப்பு முடிந்ததும் முதுநிலை படிப்பை கத்தோலிக்க கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு படித்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. கல்லூரியில் மத வேறுபாடு, மொழி வேறுபாடு காட்டியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. அந்த சமயத்தில் கூடன்குளம் அணுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டம், ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிடுதல் போன்ற மாற்று விசயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

என் படிப்பு சார்ந்த துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அதைநோக்கி என் மனம் நாட்டம் கொள்ளவில்லை. பொதுவிசயங்கள் மீதே அதிக ஆர்வம் இருந்தது. செயல்முறை (project) தேர்வின் போது கூட, மற்ற மாணவர்கள் போல் இல்லாமல் இடஒதுக்கீடு பிரச்சனையைத் தேர்வு செய்தேன். இதற்கு என் கல்லூரி பேராசிரியர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுவிசயங்கள் போராட்டங்கள் போன்றவற்றிக்கு பேராசிரியர்களும், வீட்டில் உள்ளவர்களும் எதிர் கருத்துக்களையே தெரிவித்தார்கள். இவையெல்லாம் எனக்குப் பல கேள்விகளை எழுப்பியது. நாம் இந்த மாதிரி வட்டத்திற்குள் சிக்காமல் இருக்கவே என் சிந்தனை சென்றது. அதனால்தான் எந்த வேலைக்கும் போக நான் முயற்சி எடுக்கவில்லை. மனித உரிமை, சாதி ஒழிப்பு இவற்றிலேயே ஆர்வம் செலுத்தினேன்.

சாதிய வேறுபாட்டை உங்கள் வாழ்க்கையில் எப்போது உணந்தீர்கள்?

8, 9ம் வகுப்பு படிக்கும் போது சாதிய வேறுபாடுகளை நான் உணர ஆரம்பித்தேன். அதுவரை எனக்குத் தெரியவில்லை. சக மாணவர்கள் அனைவரும் எங்களை ‘சேரிப்பசங்க’ என்று தான் அழைப்பார்கள். எங்கள் ஊரில் கங்கை அம்மன் விழாதான் தலித்களுக்கு திருவிழா. கஸ்பா-விலிருந்து(சேரி) மிகப்பெரிய தேர் பறை மோளத்துடன் ஊர் சுற்றி வரும். பறைச்சத்தம் கேட்டாலே சாதி இந்துக்களுக்கு முகத்தில் வெந்நீர் ஊற்றியதுபோல் உணர்வார்கள். இத்தேர் ஊர் முழுவதும் சுற்றி வரும். ஆனால் ஒரு போதும் சாதிஇந்துக்கள் சாமியோ தேரோ எங்கள் சேரிக்கு வரவே வராது. இது ஒரு கட்டத்தில் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அடுத்து பள்ளியில் உதவித்தொகை(scholarship) தலித்மாணவர்களுக்கு கொடுக்கப்படும்போது வகுப்பறையில் வந்து பேர் வாசித்து கை தூக்கச் சொல்வார்கள். கைதூக்கவே அவமானமாக இருக்கும். அப்போது மற்ற மாணவர்கள் ஒருவித ஏளனப் பேச்சுடன் தலித்மாணவர்களை பார்ப்பார்கள். அது ஆயிரம் வன்கொடுமைக்குச் சமம். அதை நானே உணர்ந்து இருக்கிறேன். கஸ்பா மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் வார்த்தைகளால் வேறுபடுத்தியே இழிவாகப் பேசுவார்கள். ஆரம்பத்தில் இருந்தே இப்படி இருந்தாலும் ஒரு வயதிற்கு மேல்தான் இதை என்னால் உணரமுடிந்தது.

கல்லூரியில் பயிலும் சமயத்தில் நீங்கள் ஈழப்பிரச்சினை சார்பாக செயல்பட்டீர்கள். ஈழப்பிரச்சினை தாக்கம் மாணவர்களிடையே எப்படி இருந்தது?

பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிடர் கழகம் போன்ற சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்.

எந்த கட்டத்தில் பத்திரிக்கை ஆரம்பிப்பது பற்றி யோசித்தீர்கள்? அதற்குக் காரணம் என்ன?

ஈழப்போராட்டம்தான் அதற்குக் காரணம். வேலூர் கல்லூரியில் படிக்கும்போதே ஈழம் சம்பந்தமான விசயங்களை சேகரிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அவர்கள் வெளியிடக்கூடிய பத்திரிக்கைகள், துண்டறிக்கைகள், இனப்படுகொலை புகைப்படங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்து இருந்தேன். அந்த விசயத்தில் ஆர்வமாக இருந்ததால் அங்கு இருக்கிற திராவிட கழகத் தோழர்கள், ஈழம் தொடர்பாக எது நடந்தாலும் என்னிடம் தெரிவிப்பார்கள். துண்டறிக்கைகள் பத்திரிக்கைகள் கொடுப்பார்கள். அந்த பத்திரிக்கைகள் பார்த்தவுடன் கவரக்கூடியதாக, அப்பிரச்சினைகளைப் பற்றி தெளிவாக சொல்லக்கூடியதாக இருந்தன. பத்திரிக்கை ஆரம்பிப்பதற்கு அதுதான் எனக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது.

கல்லூரி முடிந்ததும் சென்னை வந்தபின் அம்னஸ்டி அமைப்பினருடன் என்னை இணைத்துக் கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து மொழிபெயர்ப்பது, துண்டறிக்கை வெளியிடுவது என இருந்தேன். இடஒதுக்கீடு பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் திடல் சென்று அங்குள்ள நூல்களை வாசித்தேன். அதேசமயம் தலித் மக்களின் பிரச்சினை மனத்துக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதுபற்றி தெரிந்துகொள்ள பெரியார், அம்பேத்கரைப் படித்தேன். தலித் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஏதேனும் பத்திரிக்கை வருகிறதா எனப் பார்க்கும் போது தலித் வாய்ஸ் இதழ் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஏன் மற்ற பத்திரிக்கைகள் தலித் பிரச்சினை பற்றி பேசுவதில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்தது. மனித உரிமை, சுற்றுச்சூழல், தலித் பிரச்சினை என எல்லாப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் தலித் முரசு.

பொதுவாகவே தலித்துகளின் பிரச்சனையை வெகுஜன பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. அப்படியே எழுதினாலும் உத்திரப்பிரதேசத்தின் பிரச்சினையை தமிழகப் பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. தமிழகத்திலேயே ஒவ்வொரு பத்திரிகைக்கும் நான்கைந்து பதிப்புகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பிரச்சனை சென்னைப் பதிப்பிலோ, புதுவை பதிப்பிலோ வருவதில்லை.

அதனால் தான் பத்திரிகை நடத்துவதை ஒரு இயக்கமாகவே நான் பார்க்கிறேன். தலித் மக்களுக்கு என்று இயக்கங்கள், தலைவர்கள், தன்னார்வ நிறுவனங்கள் என எல்லாம் இருந்தும் இந்த மக்களுக்கு என ஒரு பத்திரிகை கூட கிடையாது என்பது உண்மையாகத்தானே இருந்தது?

உங்கள் பத்திரிகை தலித் மக்களுக்கானதா அல்லது தலித் மக்களைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கானதா? தலித் மக்களுக்கு என்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை. அப்படியே பெற்றவர்களும் தலித் முரசு போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்களாக இல்லை. இந்த நிலைமையில் நீங்கள் யாருக்காக பத்திரிகை நடத்துகிறீர்கள்?

ஒடுக்கப்பட்ட மக்கள் எடுத்த எடுப்பிலேயே தலித் முரசு மாதிரியான பத்திரிக்கைகளைப் படிப்பார்கள் என்று கருதி இதை நான் ஆரம்பிக்கவில்லை. அவர்களை அவ்வாறு படிக்கும்படியான சூழலில் வணிக ஊடகங்கள் வைத்திருக்கவில்லை. நான் அந்த ஊடகங்களுக்குப் போட்டியாகத்தான் பத்திரிக்கையைத் தொடங்கினேன். ஆனால் 12 வருடங்களாக இந்தப் பத்திரிகை பத்தாயிரம் பிரதிகள் விற்கிறதென்றால் அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். அவர்களை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கை இப்போது வெளிவருகிறது.

பதினோரு வருடங்களாக நடத்தப்படும் தலித் முரசு பத்திரிக்கை, தலித் மக்களின் சமூக முன்னேற்றத்தில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறது?

இதற்கு நேரடியாக பதில் கூறமுடியும் என்று தோன்றவில்லை. பெரியார் 95 வருடங்களாக இந்த சமூக மாற்றத்திற்காகப் போராடினார், அதனால் சமூகம் எந்த அளவுக்கு மாறிவிட்டது என்று கேட்டால் பெரிதாக பதில் எதுவும் கூறிவிட முடியாது. அதற்காக மாற்றம் இல்லையென்றும் கூறிவிட முடியாது.

நம் தமிழ்நாட்டில் இன்று தெருவுக்குத் தெரு பத்து கோயில்கள் இருக்கின்றன. பெரியார் 75 வருடங்களாகப் போராடினார், கடவுள் இல்லையென்று தொடர்ந்து பேசிவந்தார், அவர் வாழ்ந்த மண்ணில் இன்று இத்தனை கோயில்கள் இருக்கின்றனவே என்று கேட்டால் அது பெரியாருக்குக் கிடைத்த தோல்வியாகி விடாது. மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்றுதான் அர்த்தம்.

அப்படித்தான் தலித் முரசு என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்டால் நேரடியாக பதில் சொல்வது கடினம். ஆறரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் தலித்துகளாக இருப்பார்கள். அதில் பத்தாயிரம் பிரதிகள் விற்கிற தலித்முரசு அத்தனை பேரையும் சென்றடைய முடியாது. ஆனால் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் சொல்ல முடியாது.

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று நாங்கள் நடத்திய பிரச்சாரப் பயணத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. பல்லாவரத்தில் ஒரு தெருமுனைக் கூட்டத்தில் பேசும்போது தலித் முரசு என்றவுடன் கைதட்டுகிறார்கள். இதெல்லாம் தான் எனக்குக் கிடைத்திருக்கிற அல்லது இந்த பத்திரிகைக்குக் கிடைத்திருக்கிற வெற்றி.

சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடியவர்கள் கட்சியில் சேர்ந்தோ, தனித்தோ, அமைப்பு ரீதியாகவோ அல்லது அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு தனியாகவோ இயங்குகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறோம்.

அம்பேத்கர் வெறும் படமாக இருந்த நம் சமூகத்தில் அம்பேத்கரின் ‘மதமாற்றம் தான் சரியான வழி’ என்கிற முக்கியமான அஜெண்டாவை இங்கு பதிய வைத்தது தலித் முரசு தான். பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு பவுத்தம் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைக்கு அது பெரிய விவாதமாகியிருக்கிறது. இதற்கு தலித் முரசு மட்டும் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தலித் முரசும் ஒரு முக்கிய காரணம்.

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களிடம் மட்டும் தானே சென்றிருக்கிறீர்கள்...

அறிவுத்தளம் தானே முக்கியம்.

அறிவுத்தளம் தான் முக்கியம் என்கிறீர்கள். ஆனால் செயல்தளம் தானே மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது.

கருத்தியல் தான் சமூகத்தை உந்தித்தள்ளுகிறது. செயல் மட்டுமே எதையும் செய்து விட முடியாது.

இன்றைய தலித் அரசியல் சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா? அரசியல் ரீதியாக செயல்படாத தலித் அமைப்புகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களது பாதை குறித்து?

தேர்தலுக்கான அரசியல் கட்சிகளைத் தவிர வேறெதையும் அரசியல் என்று எப்படி சொல்கிறீர்கள்? தேர்தலில் நிற்பது, அரசை ஒட்டி இயங்குவது இதுதான் அரசியலாக இருக்க முடியும். தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை ஒரு அமைப்பு நடத்தினால் அது தீண்டாமைக்கெதிரான அரசியல் என்று எப்படி கூற முடியும்? அது தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டம் அவ்வளவு தான். அதையேன் தலித் அரசியல் என்று சொல்கிறீர்கள்? அதற்கும் தலித் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அப்படியானால் தலித் அரசியல் என்பது என்ன?

திருமாவளவன் ஒரு கட்சி நடத்துகிறார், தேர்தலில் நிற்கிறார், எம்.எல்.ஏ.சீட் வாங்குகிறார். சட்டமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்துப் பேசுகிறார். தலித் பிரச்சனை அரசியல் ஆக்கப்படுகிறது. அதுதான் தலித் அரசியல். எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள். அது இட ஒதுக்கீடு போராட்டம் அவ்வளவுதான். ஆனால் நீங்கள் அதை இடஒதுக்கீடு அரசியல் என்று கூறுகிறீர்கள்.

சாதி ஒழிப்பு தான் நம் லட்சியம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு என்னுடைய சாதியை நான் ஒழித்து விட்டேன் என்றால், இதில் அரசியல் எங்கிருந்து வருகிறது?

இப்போது தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடக்கிறது. அதில் ஒரு சட்டத்தை செயல்படுத்தக் கோரி அரசிடம் கேட்கிறீர்கள். அந்தப் போராட்டத்திற்கு அரசின் காவல்துறை வருகிறது. அது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவு இருக்கிறது. இப்படி அரசுடன் தொடர்புடைய விஷயங்களை அரசியல் என்று சொல்வதில் என்ன தவறு?

பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம், வைக்கம் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதற்காக பெரியாரை அரசியல்வாதி என்று கூறுவீர்களா? தேர்தலில் கலந்து கொள்ளாத எல்லாப் போராட்டங்களையும் அரசியல் என்கிறீர்கள். எல்லாப் போராட்டங்களையும் நடத்திய பெரியாரை அரசியல்வாதி இல்லையென்றும் கூறுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

தலித்களின் பிரச்சனை ஒன்றாக இருக்க, அரசியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே பிரச்சனையை திசைதிருப்பி விட்டார்கள். தலித் விடுதலைக்காகப் போராடக் கூடிய அனைவருமே இதை அரசியல் கட்சியை நோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். தலித்களுக்கான அரசியல் கட்சியை ஏற்படுத்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் திருமாவளவன் தான். அவருக்கு முன்னரே இந்திய குடியரசுக் கட்சி, இளைய பெருமாள் தலைமையிலான கட்சிகள் இருந்தும் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியும் திருமாவளவன் தலித் விடுதலைக்காக என்ன செய்தார்? இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை அவரது கட்சி வைத்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான். அடுத்த தேர்தலில் அவர் ஆட்சியையே பிடித்தாலும் கூட அதனால் தலித்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா?

தலித் மக்கள் என்று அரசியல் சக்தியாக மாறுகிறார்களோ, அன்று அவர்களது பிரச்சனை தீர்ந்து விடும் என்று தொடர்ச்சியாக திருமாவளவன் பேசி வருகிறார். இன்றைக்கு தலித்துகள் அரசியல் சக்தி தானே. ஏன் அவர்களது பிரச்சனை தீரவில்லை. மாயாவதி எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதல்வர் பதவியில் அமர்ந்தும் கூட தலித் பிரச்சனை என்பது இன்னமும் தீரவில்லையே!

தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? சில போராட்டங்களில் இந்த கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் தலித் பிரச்சனை தீரப் போவதில்லை.

இதற்கு நீங்கள் என்னதான் தீர்வு சொல்கிறீர்கள்?

தலித் பிரச்சனை என்பது சரியாக புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் நான் கூற வருவது. இதுகுறித்து அம்பேத்கர் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். ‘தலித்களின் பிரச்சனை என்பது இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது.’ அரசோடு பிரச்சனை இல்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தனிநாடு கேட்டோ, பொருளாதார வளங்களை அபகரிக்கவோ போராடவில்லை. சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களோடும் இணைந்து வாழ்வதற்கே அவர்கள் போராடுகிறார்கள். இந்த சமூகத்தில் ஒரு மனிதனாக எங்களையும் மதிக்கக்கூடாதா என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி வந்தால் உடனடியாக நமக்கு சொல்லப்படும் எளிதான பதில் அரசியல் தான்.

என் கருத்துப்படி அரசியலை விட சமூகம் தான் இந்த இடத்தில் முதன்மையானது. சமூக, பண்பாட்டு ரீதியாக தலித் மக்கள் கீழானவர்களாக நடத்தப்படுவதால் தான் அவர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்கப்படவில்லை. இந்த நாட்டின் பண்பாடு, மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. அந்த பண்பாடு தான் அவர்களை கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது.

பண்பாட்டு ரீதியாக மேலே வருவதற்கு இந்து மதம் அனுமதிப்பதில்லை. எனவே அரசியல் ரீதியாகவாவது நாங்கள் மேலே வருகிறோம் என்று தலித் அமைப்புகள் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

அரசியல் ரீதியாக வந்தாலும் நாங்கள் யாராக அடையாளப்படுத்தப்படுகிறோம்? திருமாவளவன் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அவர் அவரது சாதியின் பெயரால் தானே அடையாளப்படுத்தப்படுகிறார்?

நான் என்ன சாதியாக இருந்தாலும், நான் அதிகாரத்தில் இருக்கும்போது சாதியைச் சொல்லி என்னை யாரும் அவமானப்படுத்த முடியாது என்று தானே அவர்கள் சொல்கிறார்கள்?

இப்படித் தான் எல்லா தலித் இயக்கங்களும் நம்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தன்னை இந்து அல்ல என்று ஒவ்வொரு தலித்தும் காட்டிக் கொள்ளாதவரை அவன் மேல் உள்ள இழிவை அவனால் போக்கிக் கொள்ள முடியாது.

இந்து மதத்தில் இருந்து வெளியே வந்து விட்டாலும் அவர்கள் மதம் மாறிய தலித்துகள் என்று தானே சொல்லப்படுகிறார்கள்?

சீக்கியர்கள் முந்நூறு வருடங்களுக்கு முன்பு இந்துக்களாகத் தான் இருந்தார்கள். இன்று அவர்கள் சீக்கியர்களாக தங்களது அரசியல் உரிமையைப் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான்.

சீக்கிய மதத்திற்குள்ளும் சாதிகள் இருக்கத்தானே செய்கிறது?

சீக்கிய மதத்தில் இன்னும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளில் சாதிகள் நிச்சயம் மறைந்து விடும்.

மதம் மாறினாலும் தங்களது சலுகைகளைப் பெறுவதற்கு தலித்தாகத் தானே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது?

இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, சீக்கியனாகவோ இருந்து சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் இந்துவாக இருந்து சந்திக்கும் பிரச்சனைகளை விட குறைவாக இருக்கிறது. மதம் மாறாமல் இந்துவாகவே இருக்கக்கூடிய தலித்துகள் தான் இன்று மிகக் கொடூரமான வன்முறைகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அம்பேத்கர் முன்வைத்த பவுத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே தான் அங்கீகரிக்கப்படுகிறது?

இதில் நாம் சட்டப்படி மாற்றங்களை செய்ய வேண்டியது தான் அவசியமாகிறதே தவிர, மதமாற்றம் தவறு என்று சொல்லிவிட முடியாது.

கயர்லாஞ்சியில் கொடுமை நடைபெற்றது ஒரு பவுத்தக் குடும்பத்திற்கு தான். அவர்கள் மதம் மாறிய பின்பும் அவர்கள் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது எந்த மதத்திற்கு மாறினாலும் நீ தாழ்த்தப்பட்டவன் என்று ஆதிக்க சாதிகள் கூறுவதாகத் தானே அர்த்தம்?

தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது.

தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்.

பொருளாதாரமோ, படிப்போ, பதவியோ பிறவி இழிவை நீக்கப்போவதில்லை. இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அதிகம் படித்தவர், நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர், முப்படைகளுக்கும் தலைவர். ஆனாலும் நூறு வருடம் கழித்து அவர் ஒரு தலித் என்று தானே வரலாறு சொல்லும். ஏனெனில் அவர் இந்துவாகப் பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மறைந்தார்.

கிறிஸ்தவனாக மாறினால், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு கண்டிப்பாக சாதி மறைவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. இந்துவாகவே இருந்தால் கே.ஆர்.நாராயணன் போல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு தலித்தாகத் தான் அறியப்படுவீர்கள்.

Punithapandianகருணாநிதி ஐந்துமுறை தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர். ஆனாலும் சூத்திரர் தானே. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் சூத்திரத் தன்மை போய்விடுமா? இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அத்தனை முதல்வர்களும் பார்ப்பனர் அல்லாதவர் தான். தலித் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக இருக்குமானால், அவர்கள் ஏன் ஒரு சட்டத்தைப் போட்டு தன்னுடைய சூத்திரத் தன்மையை போக்கிக் கொள்ளக்கூடாது? கருணாநிதி சூத்திரனாகத்தான் சாவார். இதுதானே பிறவி இழிவு? இந்த பிறவி இழிவை நீக்குவதற்கு நீங்கள் சொல்லக்கூடிய எந்தத் திட்டத்திலும் இடமில்லையே.

மதமாற்றத்தை தீவிரமாக ஆதரித்த பெரியார் ஒரு காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தை ஆதரித்தார். இஸ்லாம் மதத்திற்கு மாறியதன் மூலம் ஒரு நொடியில் சாதியை ஒழித்து விட்டேன் என்று தலித் முரசு இதழில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா கூறியிருந்தார். ஆனால் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு இஸ்லாத்தில் போதிய சுதந்திரம் இல்லை. அங்கு செல்வதன் மூலம் பெண்களின் நிலை இந்து மதத்தில் இருந்ததை விட மோசமாகி விடாதா?

ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது.

பெண்ணாக இருப்பதாலேயே இழிவாக நடத்தக்கூடிய நம் சமூகத்தில் அந்தப் பெண் தலித்தாகவும் பிறந்து விட்டால் கூடுதல் துன்பங்களை சந்திக்கிறாள். நீங்கள் சாதியை ஒழித்து, பிறவி இழிவை நீக்கி விட்டதாக வைத்துக் கொள்வோம். இங்கு பெண்களுக்கான இடம் என்ன?

இந்து மதம் பெண்களை இழிவாக வைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதனால் தான் பெண்களின் நிலை இன்றும் இழிவாக இருக்கிறது. இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதன் மூலம் பெண்களின் இழிவும் போக்கப்படுகிறது. புத்தர், “எல்லாப் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும்” என்று கூறினார்.

அதுதான் சரியான பண்பாடு. பவுத்தத்திற்கு மாறுவதன் மூலம் பண்பாட்டை சீர்ப்படுத்தினால் அது பெண்களுக்கும் சேர்ந்த தீர்வு தானே? பெரியாரும் இதைத்தான் சொன்னார். “இந்த மதம் தான் பெண்களை இழிவாக வைத்திருக்கிறது. பெண்கள் தங்கள் இழிவை போக்கிக் கொள்ள மதத்திற்கு எதிராக போராட வேண்டும்”.

பிறவி இழிவைப் பற்றி நாங்கள் பேசுவது பெண்களுக்கும் சேர்த்து தானே. இந்து மதத்தில் உள்ள ஆண்களை மட்டும் நாங்கள் வெளியேறச் சொல்லவில்லையே? தலித் விடுதலை என்பது தலித்துகள் விடுதலை பெறுவது மட்டுமல்ல; எல்லா அடிமைத்தனங்களுக்கும் எதிராகக் கேள்வி கேட்பது தான். என்னை அடிமையாக வைத்திருப்பதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்பது தலித் விடுதலை.

என் வீட்டில் குழந்தைத் தொழிலாளரை நான் வைத்திருந்தால் அது எனக்குத்தான் அவமானம். அந்தக் குழந்தை தொழிலாளருக்கு அதனால் எந்த அவமானமும் இல்லையே?

தன்னையும் விடுதலை செய்து கொண்டு சமூகத்தையும் விடுதலை செய்வது தான் உண்மையான விடுதலை. இந்து மதத்தை ஒழிக்காமல் தமிழ்த்தேசியம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, ஊழல் என எதையும் நாம் பேசிவிட முடியாது. ஊழலுக்கும் இந்து மதத்திற்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

தலித் கலைகள், தலித் பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பறை இசை சிறப்பு வாய்ந்த இசையாக பேசப்படுகிறது. சிறு தெய்வ வழிபாடு கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

90க்குப் பிறகு அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பண்பாடு என்பதை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பறை இசையே அல்ல என்று இசை மேதைகள் கூறுவதால், பறைதான் சிறந்த இசை எனவும், நீ ராமனை வழிபட வேண்டும் என்று சொன்னால் இல்லை நாங்கள் சிறு தெய்வங்களைத் தான் வழிபடுவோம் என்றும் சொல்கிறார்கள். இதை தலித் பண்பாட்டு விழா என கொண்டாடவும் செய்கிறார்கள்.

தலித் பண்பாடு என்பது பறையடிப்பது, சிறுதெய்வ வழிபாடு என்பதாக சுருங்கி விட்டது. தலித் என்பதற்கான விளக்கமே இங்கு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால் தான் தலித் என்பதும் ஒரு சாதிப் பெயராக இன்று மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகத் தான் எனக்குப் படுகிறது.

அம்பேத்கர் யார் என்று கேட்டால் அவர் ஒரு தலித் தலைவர் அவ்வளவுதான். இது ஒரு திட்டமிட்ட சதி என்று அம்பேத்கரே குறிப்பிடுகிறார். ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது.

பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது.

மற்ற சாதிகள் தலித்துகள் மீது நடத்திய தொடர் வன்முறை காரணமாக தலித்துகளுக்கு மற்றவர்கள் மீது ஒரு அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் நாம் மட்டும் தான் தலித்துகள் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும், நம்முடைய எழுத்தை நாம் தான் எழுத வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தலித் என்ற வார்த்தைக்கான அர்த்தமும் சுருக்கப்பட்டு அது ஒரு சாதிக்குரியதாக மாற்றப்பட்டு விட்டது.

தலித் என்றால் இந்த சமூகத்தை அடியோடு மாற்றக்கூடியவன், சாதியை ஒழிக்கக்கூடியவன், சமத்துவத்தை வலியுறுத்தக்கூடியவன் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. இந்த விளக்கங்கள் கொடுக்கப்படாததால் தான் பறையடிப்பது தலித் பண்பாடாகி விட்டது. தலித் பண்பாடு என்பது சாதியை வேரோடு களைந்து புதிய சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடு. இந்துப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கக்கூடியது தான் தலித் பண்பாடு.

இந்துப் பண்பாடு பறையடிப்பதை இழிவாகச் சொல்கிறது. அதற்கு மாற்றாகத்தானே தலித்துகள் பறையடிப்பதை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இது ஒரு சரியான எதிர்வினை தானே?

இந்துப் பண்பாடு என்ன சொல்கிறது? நீ பறையடிச்சாலும் பறையன், பறையடிக்கலைன்னாலும் நீ பறையன். புதிரை வண்ணார்களின் கேள்வியே இதுதான்.

“நாங்கதான் வண்ணார் தொழில் செய்யலையே, எங்களை ஏன் புதிரை வண்ணார்னு சொல்றீங்க” என்று கேட்டால், “நீ வண்ணார் தொழில் செய்தாலும், செய்யலைன்னாலும் நாங்க அப்படித்தான் உன்னைப் பார்ப்போம்” என்று ஆதிக்க சாதி திமிரோடு பேசுகிறார்கள். இட ஒதுக்கிட்டுக்காக சாதிச்சான்றிதழ் கேட்கப் போனால் அங்கு, ‘நீ தான் தங்கச் சங்கிலி போட்டுருக்கியே, உன் வீட்டுல தான் கழுதை இல்லியே, அப்புறம் எப்படி நீ புதிரை வண்ணாரா இருக்க முடியும்?’ என்று கேட்கிறார்கள்.

பவுத்தம் என்பது தொடர்ச்சியாக இந்து மதத்தை மறுதலித்து வருகிறது. இந்து மதத்தின் எல்லா விஷயங்களையும் எதிர்க்கிறது. ஆனாலும் ஒரு சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்கள் பவுத்தத்தையும் இந்து மதம் ஆக்கிவிட்டார்கள். இதை மாற்றுவதற்குத் தான் அம்பேத்கர் போராடினார். கடைசியாக அவர் சொல்கிறார், “நான் ஒரு உதிரியாக பயன்படுத்தப்பட்டேன்.”

இந்து மதம் தொடர்ச்சியாக இப்படித்தான் செயல்படுகிறது. நீ கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும் நீ இந்துதான். அந்த வகையில் பெரியாரும் ஓர் இந்துதான். அதனால் தான் மதமாற்றம் மட்டுமே ஒரே தீர்வு என்றார் அம்பேத்கர். அவருடைய தேர்வு பவுத்தம். பவுத்தமும் அரசியல் சட்டப்படி இந்து மதம் தான் என்றால் கிறிஸ்தவத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மதம் மாறிவிடலாம். அதிலும் ஒரு தடை போட்டுள்ளார்கள். மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்று. எனவே தலித் பண்பாடு என்ற பெயரில் சிறு தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தால், பவுத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொன்னவன் சிறுதெய்வ வழிபாடும் இந்துப் பண்பாடு தான் என்று சொல்லப் போகிறான்.

சிறுதெய்வ ஸ்பெஷலிஸ்டுகள் ஒண்டிவீரன் முதல் மேலவளவு முருகேசன் வரை அனைவரையும் சிறுதெய்வமாக வழிபடலாம் என்று சொல்கிறார்கள். இப்படி வணங்குதலே பவுத்தத்திற்கு நேர் எதிரானது. எனவே தலித் பண்பாட்டை இப்படி சுருக்கி விடாமல் பெரும் போராட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

குழந்தை பிறந்ததில் இருந்து என்னென்ன சடங்குகள் செய்வது, என்ன பெயர் வைப்பது, என்ன உணவு உண்பது, எந்தத் திசையில் வீடு கட்டுவது, எந்த நாளில் உடலுறவு வைத்துக் கொள்வது, எந்த நாளில் திருமணம் செய்வது என எல்லாவற்றையும் இந்த பண்பாடு தான் தீர்மானிக்கிறது.

எனவே வெறும் ஆட்டத்தை விட்டுவிட்டு எல்லாவற்றையும் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். பொட்டு வைப்பது தான் இந்துப்பண்பாடு எனில் பொட்டு வைப்பதை மறுக்க வேண்டும். அவன் கடவுளைக் கும்பிட்டால் நான் கும்பிட மறுக்க வேண்டும். அவன் வெள்ளைப்புடவை கட்டக்கூடாது என்று சொன்னால் நான் கட்ட வேண்டும். அவன் கறுப்பு அமங்கலம் என்று சொன்னால் நான் கறுப்பைத்தான் என்னுடைய பண்பாடாக முன்னிறுத்த வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு பறையடிப்பது மட்டும் சரியாக இருக்க முடியாது.

நம்முடைய பண்பாடு என்பது புத்தர் சொல்வது போல், சமத்துவத்தைப் போதித்து இந்த சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது. இந்துப்பண்பாட்டிற்கு எதிராக ஒரு சமத்துவப் பண்பாட்டை முன்னிறுத்த வேண்டும்.

பறையடிப்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. இங்கு சாதி அமைப்பு பிரமிடு வடிவில் உள்ளது. அதில் தலித்துகள் கடைசி செங்கல்லாக உள்ளார்கள். அந்த கடைசி செங்கல்லை மட்டும் பெயர்த்து எடுத்து விடுதலையாகி விட முடியும் என்பது நடக்காது. பிற்படுத்தப்பட்டவர் ஒரு செங்கல்லை எடுத்து வெளியேறி விடவும் முடியாது. இதைத்தான் அம்பேத்கர், “இந்த ஒட்டுமொத்த வடிவத்தையும் வெடிவைத்து தகர்க்க வேண்டும்” என்கிறார்.

தலித் விடுதலைக்காக பாடுபடுபவர்களில் ஒரு பிரிவினர், ‘பார்ப்பனர்கள் நம்முடைய எதிரிகள் அல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள் தான் நம்முடைய எதிரிகள், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களோடு தான் நேரடியாக மோத வேண்டியிருக்கிறது’ என்று கூறுகிறார்களே?

பிரமிடு என்கிற அமைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சாதி அமைப்பு தான் ஒட்டுமொத்த சீரழிவிற்கும் காரணம். இந்த அமைப்பை விட்டு தனிநபர்கள் வெளியே சென்று விடலாம். அதனால் இந்த அமைப்பு எந்தவிதத்திலும் பாதிப்படையாது. ஆனால் சமூகம் அப்படிப் போக முடியாது.

தலித்துகள் தனக்கு மேலே இருக்கிறவனை எதிர்த்தால் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். முடியாது. அவனுக்கும் மேலே ஒருவன் இருக்கிறான். அப்படியானால் இந்த அமைப்பை எப்படி உடைப்பது? இந்த பிரமிடு வடிவ அமைப்பை விட்டு ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டும் அதுதான் மதமாற்றம். இந்த பிரமிடு அமைப்பிற்குள் இருந்து கொண்டு எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இதற்குள் இருக்கிறவரை கீழே இருக்கிறவனை எட்டி உதைத்துக் கொண்டு மேலே இருக்கிறவனுக்கு சலாம் அடிக்கும் ஒரு சமூகமாகத் தான் இருக்க முடியும்.

இந்துப் பண்பாட்டால் கட்டப்பட்ட இந்த அமைப்பை உடைக்க வேண்டும். அது மிகவும் வலிமையாக கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Physical structure அல்ல. அது சிந்தனைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாம் கருத்தியல் தளத்திற்குள் தான் செல்ல வேண்டியிருக்கிறது.

அதனால் தான் அம்பேத்கர் கூறுகிறார், “இந்து மதத்தை புனரமைப்பதோ, சீர்திருத்துவதோ உங்கள் வேலை கிடையாது. அதை உன்னால் செய்யவும் முடியாது. அதை விட்டு வெளியேறுவது தான் சரியாக இருக்கமுடியும். இந்த சாதிப் பிரமிடு அமைப்பிற்குள் இருக்கிறவரை எனக்குக் கீழே ஒருவன் இருக்கிறான், எனக்கு மேலேயும் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். இது ஒருவித மனநோய்” என்கிறார் அம்பேத்கர்.

மேலே இருப்பவன் தன்னை அடிப்பதாக கீழே இருப்பவன் புலம்புவதும், இந்த அமைப்பிற்குள் அப்படி அடித்துக்கொள்வது தான் சரி என்று மேலே இருப்பவன் நினைத்துக் கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அரசு உருவாக்கிய வார்த்தை. பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்பது மநுதர்மம் உருவாக்கிய சொல்லாடல்கள். தலித்துகள், தலித் அல்லாதவர் என்பது நவீன தலித் இயக்கங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய வார்த்தை.

முதலில் அனைவரும் இந்த சமூகம் ஒரு சமத்துவமற்ற சமூகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் முன்னோடிகளை நாம் படிக்க வேண்டும். நம்முடைய கல்விமுறை இதை போதிப்பதில்லை. நான் சமூகவியலில் முதுநிலைப்பட்டம் வாங்கியவன். எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடத்திட்டம் போலியானது. இந்தச் சமூகத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள அது உதவவில்லை.

ஒரு கட்டிடம் கட்ட வரும் பொறியாளர் செங்கல் வைச்சா கட்டிடம் வந்துடப்போகுது. எதுக்காக ஆழமாத் தோண்டறீங்க, கடைக்கால் எல்லாம் போடறீங்கன்னு கேட்டா எவ்வளவு முட்டாள்தனமா இருக்குமோ அவ்வளவு முட்டாள்தனமானது நம் சமூகம். இப்பல்லாம் யாரும் சாதி பார்க்கிறதில்லை, அப்படியே ஆரம்பிச்சு இயங்க வேண்டியது தான் என்ற முட்டாள்தனமான புரிதலோடு தான் இன்றைக்கு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சமூகம் நம் ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்ய வேண்டும். நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும்.

இந்த சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம் முன்னோடிகளான அம்பேத்கர், புலே, பெரியார் போன்றவர்களையெல்லாம் படிக்க வேண்டும். அவர்களின் தத்துவ வழிகாட்டுதலின்படிதான் இந்த சமூகத்தை சீர்திருத்த முனைய வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்.

இந்த சாதியாலான சமூகத்தை சமத்துவமிக்க ஜனநாயகப்பூர்வமான பண்பாடுள்ள சமூகமாக (அது பவுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதார்த்தத்தில் அது பவுத்தமாகத் தான் இருக்கிறது) மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

பவுத்தத்தில் பார்ப்பனரையும் இணைத்துக் கொண்டீர்களே என்ற கேள்விக்கு புத்தர், பவுத்தத்தில் வந்த பிறகு பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பிரிவே கிடையாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நமக்கு அதிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. பார்ப்பனர்கள் அங்கு போய் பவுத்தத்தையும் சீர்குலைத்து விட்டனர். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது.

எனவே பார்ப்பனர் அல்லாத அனைவரையும் இணைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத ஆறாயிரம் சாதியினர் வசிக்கின்றனர். இவர்களால் தான் இந்த பிரமிடு அமைப்பு வலுவாக உள்ளது. அதை விட்டு வெளியேறுவதன் மூலம் தான் இந்த அமைப்பை தகர்க்க முடியும்.

மதமாற்றத்திற்கு தலித்துகள் ஒத்துக்கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்ற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தானே?

பெரியார் தான் இதை சரியாகச் சொன்னார். பஞ்சமர் பட்டம் பறையனை விட்டுப் போகாதவரை சூத்திரர் பட்டம் உன்னை விட்டுப்போகாது என்றார். பார்ப்பான் தலையில் பிறந்தான், அவன் காலில் பிறந்தான்னு மநுதர்மம் பிரிக்கிறது. பெரியார் சொன்னார், ‘பறையனும் பள்ளனும் தான் சரியாக அம்மா, அப்பாவுக்கு பொறக்க வேண்டிய இடத்தில் பொறந்திருக்கான். சூத்திரன் எல்லாம் விபச்சாரிக்கு பொறந்திருக்கான்’ என்று தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியும், ஆதிக்க சாதிகளைப் பார்த்து ‘நீ இந்த சாதியில் பிறந்ததற்காய் வெட்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார். பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் சூத்திரர் என்று சொல்வதற்கு அர்த்தம் இதுதான். ‘உன் சாதியைச் சொல்லி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை, நீ விபச்சாரிக்குப் பிறந்தவன்’ என்று சொல்கிறார்.

பெரியார் ஒருபோதும் தலித் மக்களை திட்டினவர் கிடையாது. ஆதாரமே இல்லாமல் சிலர் அவரை தலித் விரோதியாக காட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர் மீண்டும் மீண்டும், ‘இந்துவாக இருக்காதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே!’ என்றுதான் சொன்னார். அதை நிர்வாணத் தன்மையோடு ‘சூத்திரர்களே’ என்று சொன்னார். அதை இவர்கள் ‘கௌரவம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார். இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.

‘இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும், தொழில் தொடங்குவார்கள், பணம் கிடைக்கும் எல்லாம் சரி என்னுடைய சூத்திரத் தன்மை எப்போது நீங்கும்?’ என்ற கேள்வியைத் தான் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

‘தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட வன்கொடுமைகளை எதிர்த்தால் போதும், மதத்தைத் தொடவேண்டியதில்லை’ என்ற கருத்தின் அடிப்படையில் சில முற்போக்கு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றனவே?

ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏழையாகப் பிறந்ததால் நான் கீழ்சாதி இல்லை. என்னுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதால் நான் கீழ்ச்சாதி ஆக்கப்படவில்லை. நான் கீழ்ச்சாதியில் பிறந்ததால் தான் என்னுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

‘இந்த இரட்டை டம்ளர் ஒற்றை டம்ளராகி விடுகிறது. கோவிலில் நுழையும் உரிமை கிடைத்து விட்டது’ என்றே வைத்துக் கொள்வோம். இதனால் எப்படி சாதி ஒழிந்து விட முடியும்? கோவிலில் நுழையும் உரிமை ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா?

உரிமைகளைக் கொடுத்து விட்டால் தலித்துகள் மேல்சாதி ஆகிவிடுவார்கள் என்றுதான் எல்லா இயக்கவாதிகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கே.ஆர்.நாராயணனுக்கு எல்லா உரிமைகளும் இருந்தது. இப்போதும் அவரை பறையன் என்றுதானே சொல்கிறார்கள்? இதற்கு என்ன பதில் என்றுதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

இன்றைக்கு பார்ப்பனர்களை விட பிற்படுத்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா? அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரன். அவன் ஒரு முதலாளி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். அவன் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் ஒரு சூத்திரனாகத் தான் சாகப்போகிறான், அதில் ஒரு பெருமையும் இல்லை என்கிறேன் நான். இதுதான் கம்யூனிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் உள்ள வேறுபாடு.

‘சாதி ஒழிப்பு என்பது இமயமலையில் தலையில் கல்லை வைத்துக் கொண்டு தலைகீழாக ஏறுவது’ என்று பெரியார் குறிப்பிடுவார். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு இங்கு இயக்கவாதிகள் தயாராக இல்லை.

இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டு பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்று பேசித் திரிகிறார்கள். அம்பேத்கர் அதைத்தான் கேட்டார், “பாட்டாளிகள் எந்த அடிப்படையில் ஒன்று சேர்வார்கள்? கூப்பிட்டவுடன் இணைந்து வந்துவிடுவார்களா?” என்று. எல்லாருமே சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்போது புரட்சிக்கு மட்டும் எப்படி ஒன்று சேர்ந்து விடுவார்கள்?

இந்துப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதை தவிர வேறு வழியே இல்லை. அதை இவர்கள் யாரும் செய்யவே இல்லை. ‘நான் இந்துவாகவும் இருப்பேன், கோவிலுக்கும் போவேன், பார்ப்பானை வைத்து எல்லா பூஜை, புனஸ்காரங்களையும் செய்து கொள்வேன். நீ என்னை பிற்படுத்தப்பட்டவன் என்றோ, தலித் என்றோ சொல்லக்கூடாது’ என்பது அப்பட்டமான முரண்பாடு.

இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தால் ஆறு லட்சம் சேரிகளும் இருக்கின்றன. தலித்துகளின் உடல் உழைப்பு தொடர்ந்து தேவைப்படுவதால் அவனை அறியாமையிலேயே வைத்திருக்கிறார்கள். அவன் விழிப்புணர்வு பெற்று விட்டால் பிள்ளையாரை யார் தூக்குவது? அதனால் நீயும் இந்து தான் என்று கூறிக் கொள்கிறார்கள்.

பெரியார் இந்து மதத்தைக் கேள்வி கேட்டார். அதே நேரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று கடைசிவரை போராடினார். இது முரண்பாடாக இல்லையா?

கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. அதை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கலாம், மறுப்பவர்களும் இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கான உரிமை வேண்டும் என்பது தான் பெரியார் கேட்டது.

பெரியார் திராவிடர் கழகத்தினர் கடவுள், இந்துமதம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே கோவில் நுழையும் உரிமையை கேட்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்டுகள் இந்து மதத்தையோ, கடவுளையோ, சாதியையோ கேள்வி கேட்பதில்லை. கோவில் நுழைவுப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை மட்டும் நடத்துகிறார்கள். அது எந்தக் காலத்திலும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

இந்து மதம், இந்துப் பண்பாடு இவற்றிற்கு எதிராகப் போராடுவதும், இவற்றை ஒழிப்பதுவுமே அனைத்து மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வழியாகும். 

புனிதபாண்டியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.