மகாத்மா காந்தியடிகளைப் படுகொலை செய்த "நாதுராம் கோட்சேவுக்குத் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் சிலை நிறுவிட இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!" என அகில பாரத இந்து மகா சபா கட்சி சவால் விடுத்துள்ளது. சாதி, மதம் கடந்து மனச்சாட்சியோடு சிந்திக்கும் நடுநிலையாளர்களே, இது நியாயம்தானா? சிந்தீப்பீர் !

யார் இந்த நாதுராம் கோட்சே? (19 மே 1910 -15 நவம்பர் 1949) அகிலபாரத இந்து மகாசபாவின் முக்கிய உறுப்பினர்தான் நாதுராம் கோட்சே. 1930-ல் இவ்வமைப்பில் சேர்ந்த கோட்சே, காந்தியடிகளின் எந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் ஒருங்கிணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனும் காந்தியாரின் கொள்கையை முற்றிலும் கோட்சே நிராகரித்தார். மேலும் முஸ்லீம்களுக்குத் தனிநாடு தருவதையும் கோட்சே ஒப்புக் கொள்ளவில்லை. கோட்சேவின் இந்து மகா சபா 1942-ல் இந்தியா முழுவதும் எழுச்சியோடு நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் பங்களிப்புப் பற்றி கோட்சேவுக்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை என்பதோடு, இந்து மகா சபா, ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவே இல்லை என வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

காந்தியார் அனைவரையும் இந்தியராகக் கருதினார். ஆனால் கோட்சே கும்பல், இந்துக்கள்தான் இந்தியர்கள் எனப் பிரகடனப்படுத்தினார். இதன் விளைவாக, 1948 ஜனவரி 30ஆம் நாள் மகாத்மா காந்தியடிகளைத் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுப் படுகொலை செய்தார். கோட்சே, வயிற்றுக்குக் கீழேயும், இதயத்திற்குக் கீழேயும் குண்டு துளைத்த காரணத்தால், பரிதாபமாக மகாத்மா உயிரிழந்தார். ஆனால் இந்து மதவெறி சக்திகள் " காந்தியாரைச் சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லீம்" என்ற வதந்தியைத் திட்டமிட்டுக் கிளப்பி விட்டனர். இப்பொய்ச்செய்தி ஒரு சில நிமிடங்களிலேயே காட்டுத்தீ போல பரவி, பல இடங்களில் முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தவுடன், டில்லி உட்படப் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இனிப்பு வழங்கிக் கொண்டாடியது. (ஆதாரம் - காந்தியாரின் உதவியாளர் பியாரிலால் எழுதிய Mahathma Gandhi -The Last Phase எனும் நூல்) காந்தியடிகளின் படுகொலை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப்பட்டு, சாவர்கரின் சீடர்களான கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பைப் படிக்கும்பொழுது, குற்றவாளிகள் " ஹிந்து தர்ம கி ஜெய், " ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் எனக் கூக்குரலிட்டுக் கொண்டேயிருந்தனர்.

"இந்திய யூனியன் மதச்சார்பற்றது. ஆதலால் கோவில் நிர்வாகம், செப்பனிடுதல் ஆகிய செயல்களுக்கு அரசுப் பணத்தைச் செலவிடக் கூடாது" என 7.12.1947 " ஹரிஜன் " இதழில் எழுதிய 53 ஆம் நாள் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட கோட்சேவைத்தான் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாக்´ மகராஜ் என்பவர், " தேசபக்தர்" என்றும், "தேசியவாதி" என்றும் புகழாரம் சூட்டுகிறார். தவிரவும், உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இந்து மகாசபையின் தேசியத்தலைவர் சந்திரபிரகாஷ் கெளசிக், துணைத்தலைவர் ராஜீவ்ரஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் குழு டிசம்பர் 25 ஆம் நாள் கோட்சேவுக்குக் கோயில் கட்ட, உத்தரபிரதேசத்தில் மீரட் நகரில் பூமி பூஜையும் போட்டு விட்டது. மேலும் கோட்சேவுக்குச் சிலை அமைக்க டெல்லியில் நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. இவ்வளவு குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி இவை எதனையும் கண்டிக்காமல், கள்ள மெளனம் சாதித்து வருகிறார்.
நாட்டின் சுதேசிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு, காப்பீட்டுத்துறையில் 49% அந்நிய முதலீட்டிற்கு மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார்மயம் -தாராளமயத்தை ஊக்குவித்து நாட்டின் தற்சார்புத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

"வெளிநாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டே தீருவோம்" என வீரவசனம் பேசியவர்கள் இப்பொழுது "அப்படி நாங்கள் கூறவேயில்லை" என மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர். தவிரவும், சமஸ்கிருதத் திணிப்பு - இந்தித்திணிப்பு - பகவத்கீதையைத் தேசிய நூலாக்கும் முயற்சி - இராமர் கோயில் கட்டும் முயற்சி இட ஒதுக்கீடு ஒழிப்பு எனப் பல்வேறு நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த அவசரங்காட்டுகின்றனர். மேலும் "பாரதீய சனதா கட்சிக்கு ஓட்டுப் போடாதவர்கள், வேசிகளின் பிள்ளைகள்" என மக்களவையில் அமைச்சரே பேசும் அவலநிலை உருவாகியுள்ளது. தேசிய இனங்களின் தனித்தன்மை, அதன் விழுமியங்கள் ஆகியவற்றையும், நாட்டின் பன்முகக் கலாசாரத்தையும் தகர்த்தெறிந்து விட்டு, இந்துத்துவம் எனும் ஒற்றை அடையாளத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், கோட்சேவுக்குச் சிலை அமைக்கும் முயற்சியாகும். இந்தப் பேரபாயத்தை மக்கள் உணர்ந்து, எழுச்சி பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஜனவரி 24 / 2015 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9 மணி வரை மல்லிகை அரங்கம், மையப்பேருந்து நிலையம், ஈரோடு.

gandhi erode

gandhi erode

gandhi erode

 

 

Pin It