ஜாதியின் உறுப்பினர்களாக உள்ள மக்களை ஒரு சமூகமாக மாற்ற வேண்டிய அடிப்படைத் தேவையைக் கூட புறந்தள்ளிவிட்டு, பெருங்கதையாடல்கள் மூலம் உணர்வூட்டப்படும் ஒரு கற்பனையான தேசியம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. தேசம் என்பது சுற்றளவையும் பர‌ப்பளவையும் மட்டும் கொண்டது அல்ல; அது மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சுதந்திர‌ம், சமத்துவம் மற்றும் சகோதர‌த்துவம் ஆகியவை வெற்று முழக்கங்களாக இல்லாமல் அவை மக்களின் உணர்வுகளாக மாறி அதன் மீது எழுவதுதான் தேசிய உணர்வு.

"ஒவ்வொரு மனிதனும் தனது சமூகத்திற்கு மட்டும் உரியவனாக இருக்கவே ஏங்குகிறான்; வேறு எந்த சமூகத்திற்கும் உரியவனாகிவிடக் கூடாது எனவும் ஏங்குகிறான்" என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். தேசியத்திற்கான அடிப்படையை எவரும் இவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது. மொழி மட்டுமே தேசியத்திற்கான அடிப்படைக்கூறாக இருக்க முடியாது. மொழியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டாலும் அனைவருக்கும் 'பொதுவான மொழி' என்ற ஒன்று இன்னும் கட்டமைக்கப்படவே இல்லை. ஜாதிக்கொரு மொழிதான் உள்ளது. அதனால்தான் பெரியார் 'தமிழ் ஜாதி காப்பாற்றும் மொழி' என்றார்.

ஆக, ஜாதி நீங்கிய, பால் வேறுபாடுகள் நீங்கிய, ஆதிக்க உணர்வு, மத உணர்வு நீங்கிய மொழியாக தமிழ் மாறிய பின்பு, தமிழ் பேசுபவர்கள் ஜாதியற்ற மனிதர்களாக மாறிய பிறகு தான் – மக்கள் அனைவருக்கும் பொதுவான பண்பாடு, பொதுவான மொழி என பண்பு மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் – ஜாதி உறுப்பினர்களாக உள்ள மக்கள் கூட்டம் ஒரே சமூகமாக மாற முடியும். ஒற்றைச் சமூகம்தான் தேசியத்தைக் கோர‌ முடியும். இதன் அடிப்படையில் எழுவதுதான் உண்மையான தமிழ்த் தேசியமாக இருக்க முடியும். இதுபோன்ற எவ்விதப் புரிதல்களுமின்றி, தமிழ்த் தேசியம் மலரும் பொழுது ஜாதி மறைந்து போகும் என்று – ஜாதியை அழித்தொழிக்க முன்வராமல் – அதைக் கடந்து செல்வது ஜாதி அமைப்பை வலுப் படுத்தவே வழிவகுக்கும்.

எனவேதான் 'தமிழ்த் தேசிய'த்தை அதன் உண்மையான பொருளில் விளக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசம் மற்றும் தேசியம் குறித்து ஆழமான பார்வையைக் கொண்டிருக்கும் திரு. ஞான.அலாய்சியஸ் அவர்கள், "எதை நோக்கி தமிழ்த் தேசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்கு மிகவும் பொருத்தமானவர். திருச்சியில் பிறந்த இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருடன் இணைந்து, தனி மாநில கோரிக்கைக்காகப் போராடியவர். 1500 பக்கங்கள் கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளைத் தொகுத்தளித்தவர். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் இவர் மேற்கொண்ட ஆய்வுதான் 'Nationalism without a Nation in India' என்ற நூலாக வெளிவந்தது. மேலும் 'Critical Quest' என்ற பதிப்பகத்தின் மூலம் சமூகச் செயல்பாட்டிற்கு அடித்தளமான சிந்தனைகளைத் தூண்டும் பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கருத்துகளையும் சிறு நூல்களாக வெளியிட்டு நாடெங்கும் பர‌ப்புரை செய்து வருகிறார்.

தமிழ்த் தேசியக் கருத்தியலின் மீது ஆர்வம் உள்ளவர்கள், தேசம் மற்றும் தேசியம் என்பதன் உண்மைப் பொருளை அறிய விரும்புபவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் என அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது. கேள்வி – பதில் மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெறும்.

நாள்: 23.08.2014 சனிக்கிழமை

நேர‌ம்: காலை 10 மணி முதல் 4 மணி வரை

இடம்:பெரியார் ஈ.வெ.ரா. – நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை,
எண். 277/2, குப்பம்,
அம்பத்தூர் – ஆவடி நெடுஞ்சாலை,
அம்பத்தூர், சென்னை 600 058
(அம்பத்தூர்தொலைபேசி இணைப்பகம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில்)

ஒருங்கிணைப்பு: தலித் முர‌சு மற்றும் பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம் (PASUMAI)

தேநீர் மற்றும் நண்பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்கொடை (குறைந்தது) ரூ. 50

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் கண்டிப்பாக முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவுக்கு : 94444 52877, 94441 54881

Pin It